மொட்டவிழ்ந்த தேனரும்பே -13

அத்தியாயம் -13

காலையில் கண் விழித்ததிலிருந்து கணவனை கண்டிருக்கவில்லை சிவரஞ்சனி. முன் நேரமாகவே எழுந்து சென்றிருப்பான் போலும்.

அவனை எதிர் பார்த்துக் கொண்டே வேலைகளை முடித்து குளித்து புறப்பட்டும் விட்டாள்.

“நேத்து ராத்திரி நடந்தது எல்லாம் கனவா என்ன? இப்படியா ஒரு மனுஷன் கண்டுக்காம எந்திரிச்சு ஓடுவாரு, ஒரு வேளை என்னை பார்க்க வெட்க பட்டுட்டு போயிட்டாரோ” என புலம்பிக் கொண்டிருந்தாள்.

“ஆமாம், நாணி கோணி புருஷன் பொறுமைய சோதிச்சவளை அடக்கி ஆண்டுட்டேன்னு எனக்கு வெட்கம் வர வேண்டியதுதான் புள்ள” என சொல்லிக் கொண்டே அவளின் முன் வந்து நின்றான் ருத்ரன்.

அந்த வெட்கம் எல்லாம் அவளுக்கு இரவில் மட்டும்தான் போலும். இப்போது அவனது கண்களை பார்த்து, “அப்ப எதுக்கு காலைல காணாம போனீங்க? வெளிச்சம் பார்த்தா என் புருஷருக்கு அலர்ஜியா?” எனக் கேட்டு வைத்தாள்.

முதலில் விழித்து பின் சாதாரணம் ஆகி விட்டான்.  “உனக்கு நேரம் ஆச்சு போல புள்ள, இதோ வந்திட்டேன்” என்றவன் துண்டை கையில் எடுத்துக் கொண்டு குளிக்க ஓடிச் சென்றான்.

‘குளிக்காமலே வெளில போயிருந்தாரா என்ன?’ என நினைத்துக் கொண்டவள் கீழே செல்லாமல் அவன் வருவதற்காக  அங்கேயே காத்திருந்தாள்.

ஐந்து நிமிடங்களில் வந்து விட்டவன், “சாப்பிட போகலையா நீ?” எனக் கேட்டான்.

இடுப்பில் கை வைத்து முறைத்தவள், “ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம், இப்பவும் பறக்குறீங்க, எனக்குதானே லேட் ஆகும், நான் பார்த்துக்குவேன்” என்றாள்.

“தூங்கிட்டு இருக்கவள எதுக்கு எழுப்பன்னுதான் போயிட்டேன், என்ன இப்போ?” என அவன் கேட்டுக் கொண்டிருக்க, வேகமாக அவனிடம் வந்து கட்டியணைத்துக் கொண்டாள்.

“உடம்ப சரியா கூட துவட்டல, நீ போட்ருக்க துணி ஈரமாவ போவுது” என சொன்னாலும் அவளை அணைத்துக் கொண்டான்.

அவனை நிமிர்ந்து பார்த்து மெலிதாக சிரித்தவள், “நல்லா சில்லுன்னு இருக்கீங்க” என சொல்லி,  மீண்டும் அவனது மார்பில் தலை வைத்துக்கொண்டாள்.

காலையே குளித்து விட்டுத்தான் வயலுக்கு சென்றிருக்கிறான், முன்னரே வீடு திரும்பியிருந்தான். மாரி அன்று வராத காரணத்தால் மாடுகளுக்கு வைக்கோல், தீவனம் எல்லாம் வைத்து விட்டு மாடிக்கு வர தாமதமாகி விட்டதாம்.

 அதை அவளிடம் சொன்னவன், “போஸ்ட் ஆஃபிசுக்கு டைம் ஆவுது பாரு?” என்றான்.

“ம்ம்… சீக்கிரம் வாங்க” என சொல்லி விலகினாள். வேகமாக அவளை இழுத்து அணைத்து முத்தமிட்டே விடுவித்தவன், “சீக்கிரம் கீழ ஓடிப் போ, இல்லைனா சரி வராது” என்றான்.

 அவனை செல்லமாக முறைத்துக் கொண்டேதான் கீழே சென்றாள்.

வழியில் செல்லும் போதுதான் வழக்கத்தை விட தன்னை நெருங்கி அமர்ந்திருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.

“இப்படி உரசினா புல்லட்டு வீட்டு பக்கம் திரும்பிடும்டி” என்றான்.

“எங்க திருப்புங்க பார்ப்போம்” என சவால் விடுவது போல சொன்னாள்.

“வாயாடிக் கழுதை!” என அவளை வசை பாடினான்.

“இவரு வாய் பேசாத கோட்டான்”

“இப்படிலாம் ஊர்ல ஒரு பய என்கிட்ட பேசிட்டு நிக்க முடியாது தெரியுமா?”

“தாலி வாங்கிகிட்டவ நாந்தானே?” என்றவள், அவன் காதில் ரகசியமாக, “இன்னிக்கு நைட்டு காட்டுறேன் இன்னும் என்னெல்லாம் உரிமை எனக்கு உங்ககிட்ட இருக்குன்னு” என்றாள்.

“எப்படி நேத்து நைட்டு மாதிரியா? என்னை படுத்தி வச்சதெல்லாம் நெனப்பு இருக்கா உனக்கு?”

“அது… நேத்துதானே எல்லாம் விளங்குச்சு, நீங்க கூடத்தான் பயந்து போயிட்டீங்க? உங்களுக்கு மட்டும் எல்லாம் தெரிஞ்சுதா? அப்ப…” என ஏதோ அவள் சொல்லும் போதே வண்டியை நிறுத்தி விட்டான்.

“என்னாச்சுங்க?” என அவள் கேட்க, “ஒப்புரானா சத்தியமா சொல்றேன், புல்லட்லேருந்து உருட்டி விட்ருவேன், வேற பேசுடி” என பொய்யாக அவளை கடிந்து கொண்டான்.

“சரி சரி… பொழைச்சி போங்க” என்றவள் அந்தப் பேச்சை விட்டாலும் பேசுவதை விடவில்லை.

வழியெல்லாம் அவனை வம்பிழுத்து பேசிக் கொண்டேதான் இருந்தாள். சட்டென இறங்கும் இடம் வந்து விட்டது.

“அதுக்குள்ளாற வந்திட்டோமா?” என சந்தேகமாக கேட்டாள். வண்டியை நிறுத்தப் போனவன் அவளது கேள்வியில் சின்ன புன்னகையுடன் நிறுத்தாமல் திருப்பி விட்டான்.

“ஹையோ எங்க போறீங்க, விளையாடாதீங்க, வீட்டுக்கு விடுறீங்களா? தெரியாம பேசிட்டேன், திருப்புங்க வண்டியை” பதறினாள் சிவா.

அஞ்சலகம் இருந்த தெருவை விட்டு வெளியில் வந்தவன், வீடு செல்லும் பக்கம் விடாமல் எதிர்ப்பக்கத்தில்தான் வண்டியை செலுத்தினான்.

 “இன்னும் பத்து நிமிஷம் நேரம் இருக்குதானே? கரெக்ட் டைமுக்கு கொண்டாந்து விடுறேன், இப்ப துள்ளாம இரு” என்றான்.

“அதை சொல்லிட்டு செய்யலாம்ல?” எனக் கேட்டவள் அந்த சாலையில் ஆட்கள் இல்லாததால் உரிமையாக அவனது தோளில் கை வைத்து பிடித்துக்கொண்டாள்.

வயல்வெளிகள் அதிகம் நிறைந்த பகுதி அது. மனம் நல்ல நிலையில் இருக்கும் போது காண்பது அனைத்துமே குளிர்ச்சியாக தெரியும், அழகான இடம் இன்னும் எப்படி உணர வைக்கும்?

தூய காற்று முகத்தில் மோத, இதமான சூரியன் வெது வெதுப்பை பரப்ப, மனைவியோடு சேர்ந்து தானும் அந்த இனிமையை அனுபவித்து மகிழ்ந்து கொண்டான்.

குறுகிய நேரப் பயணம்தான், சில சமயங்களில் சில நொடி செயல் அந்த நாள் முழுவதையும் உற்சாகத்தோடு வலம் வரவைத்து விடும். அப்படித்தான் அந்த பயணமும்.

 சரியான நேரத்துக்கு அவளை அஞ்சலகத்தில் இறக்கி விட்டான்.

திரும்ப செல்லும் போதும் ருத்ரனின் உள்ளம் மனைவியை நினைத்து ஒரு விதமான பரவச நிலையிலையேதான் இருந்தது.

தன் உணர்வுகளை அதிகமாக முகத்தில் பிரதிபலிக்க விடமாட்டான் ருத்ரன். ஆனாலும் மகனிடம் உண்டான வித்தியாசத்தை வள்ளியால் தெரிந்து கொள்ள முடிந்தது. மாலையில் மகன் மருமகள் இருவரையும் சேர்த்து அமர வைத்து திருஷ்டி சுற்றி போட்டார்.

கூட்டுக் குடும்பம் என்றாலும் அந்த இளம் தம்பதியினருக்கு தனிமை கிடைப்பதில் எந்தக் குறையும் இல்லை.

மாடிக்கு அவர்களை தவிர யாருமே வருவதில்லை. அங்கே முழுக்க முழுக்க அவர்களின் ராஜாங்கம்தான்.

சில சமயம் கணவனின் தோள் சாய்ந்து கதை பேசுவாள் அவள், சில சமயம் மனைவியின் மடி சாய்ந்து உறக்கம் கொள்வான் அவன்.

எப்போதாவது வெளி வேலைகள் கொடுக்கும் பதற்றத்தில் மனைவியிடம் சுள் என பேசி விடுவான். தான் பேசியதை மறந்து விட்டு இரவில்   சாதாரணமாக பேச வருவான்.