“ம்ஹூம்… இந்த ஊருக்கே உங்களைப் பத்தி தெரியும்போது, உங்களுக்கு பிறந்த எனக்குத் தெரியாமப் போகுமா? இன்னும் கொஞ்ச நேரத்துல சபேசன் மாமாவுக்கு நான் ஃபோன் பண்ணலைன்னா, முழு போலீஸ் படையோட இங்க வந்துருவாரு… யாருகிட்ட?” எத்தனைப் படங்களில் இப்படியொரு காட்சியைப் பார்த்திருப்பான் ஜெகத்ரட்சகன். இப்போதைய சூழ்நிலைக்கு தகுந்தவாறு அதை அடித்துவிட, சற்றே நிதானித்தார் வைரவமூர்த்தி.
“என்னடா, மிரட்டுறியா?”
“இல்ல, உங்களால எங்களை ஒன்னும் செய்ய முடியாதுன்னு சொல்லுறேன்.”
“அப்போ, எம்புள்ள வாழ்க்கையில நான் தலையிடக்கூடாதுன்னு சொல்லுறியா?”
“ஆமா… நீங்களோ, நானோ அக்கா வாழ்க்கையில தலையிட வேண்டாம், அவங்களே அவங்க வாழ்க்கையை தீர்மானம் செய்யட்டும்.” என்றவன் கைபேசியை எடுத்து சபேசனுக்கு அழைத்து,
“ஒன்னும் பிரச்சினை இல்ல மாமா. இல்ல… இல்ல… வேண்டாம். இதோ, இன்னும் கொஞ்ச நேரத்தில பாட்டி வீட்டுக்கு கிளம்பிடுவோம். அங்க போய்ட்டு மறுபடியும் உங்களுக்கு கூப்பிடுறேன்.” என்று பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டான். எதிர்முனையில் இருந்த சபேசன் முதலில் குழம்பினாலும், சட்டென்று புரிந்துகொண்டு ஜெகனுக்கு இயைந்தாற்போல பேசியிருந்தான்.
“நான் இங்க தான் உக்காந்திருப்பேன், இரண்டுபேரும் போய் உங்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் இப்போ எடுத்து வாங்க. இன்னொரு தடவை நானே வந்து எல்லாத்தையும் எடுத்துட்டு வரேன்.” அம்மாவையும் அக்காவையும் பார்த்து சொன்னவன் ஹாலில் சட்டமாக அமர்ந்து கொள்ள, தாயும் மகளும் தங்களது அறையை நோக்கி செல்ல ஆரம்பித்தார்கள்.
“ஏய் லக்ஷ்மி… நீ எங்க டி போற?” அதிர்ந்து போனவராக மனைவியிடம் கேட்டிருந்தார் வைரவமூர்த்தி.
“எங்க அம்மா வீட்டுக்கு.” உடனடியாக பதில் வந்திருந்தது லக்ஷ்மியிடமிருந்து.
“அம்மா வீட்டுக்கா?!”
“ஆமா… எந்த மகளுக்காக உங்க வாழ்க்கைக்குள்ள வந்தேனோ, அதே மகளோட வாழ்க்கைக்காக இப்போ உங்க வாழ்க்கையிலிருந்து நான் வெளியப் போறேன்.” கணவனின் முகத்தைப் பார்த்து நிறுத்தி நிதானமாக வார்த்தைகளை உச்சரித்தார் லக்ஷ்மி.
“என்னடி சொல்லுற?” அதட்டினார் வைரவமூர்த்தி.
“இவ்வளவு பெரிய முடிவை நான் எடுத்துருக்கேன்னா, அதுக்கு முழுகாரணமும் நீங்க தான். உங்களோட போராடிப் போராடி எனக்கு அலுத்துப் போச்சு. போதும், இதோட உங்க வாழ்க்கையில இருந்து நான் விலகிக்கிறேன். தயவுசெய்து இதுக்கு மேல என்னை தொந்தரவு செய்யாதீங்க. இப்பிடியே நம்ம பிரிவு தொடர்ந்தாலும் சரிதான், இல்ல சட்டப்படி வேணும்னு நீங்க நினைச்சாலும், அதையும் நான் தந்துடுறேன்.”
சோர்ந்து போன குரலில் சொல்லிவிட்டு லக்ஷ்மி அறைக்குள் நுழைந்து கொள்ள, உள்ளத்தின் கோபம் அத்தனையையும் முகத்தில் எதிரொலித்தபடி, அப்படியே உக்கார்ந்து விட்டார் வைரவமூர்த்தி.
அடுத்த ஒரு மணி நேரத்தில், எல்லோரும் ஞானவல்லி வீட்டிலிருந்தார்கள். முதல்வேலையாக பேத்தியின் திருமணத்திற்கான நாளையும் குறித்துவிட்டு தான் ஓய்ந்தார் அந்த மூதாட்டி.
நந்தினியின் வழிகாட்டுதலின் பெயரில் சபேசன், ஜெகத்ரட்சகன் இருவருமே தனித்தனியாக பாலகிருஷ்ணன் மற்றும் வைரவமூர்த்தி மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்கள்.
‘நடக்க இருக்கும் கலப்பு திருமணத்தால், மணமக்கள் உயிருக்கு இன்னாரால் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.’ இதுதான் அவர்களது புகாரின் சாராம்சம்.
எஸ்பி அலுவலகத்தில் புகார் பதிவு செய்யப்படவும், விசாரணைக்காக வைரவமூர்த்திக்கும் அவரது மகனுக்கும் அழைப்பு விடப்பட்டது. இது எல்லா வழக்குகளிலும் கடைபிடிக்கப்படும் சாதாரணமான நடைமுறை தான்.
ஆனால் எஸ்பி அலுவலகத்திலிருந்து தகவலை வீட்டுக்கு கொண்டு வந்திருந்த காவலரிடம், தாம்தூம் என்று முரட்டுத்தனமாக குதித்திருந்தான் பாலகிருஷ்ணன்.
அழைக்கப்பட்ட நேரத்தில் எஸ்பி அலுவலகத்திற்கு செல்லாதவர்கள், அடுத்து வந்த நாட்களிலும் செல்லாமல் இருக்க, “ஒழுங்கு மரியாதையா விசாரணைக்கு ஆபீஸுக்கு வந்துட்டு போகச் சொல்லுங்க. இல்லைன்னா அரெஸ்ட் வாரெண்டோட நான் அங்க வரவேண்டி இருக்கும்.” என்ற தகவலை அனுப்பியிருந்தாள் நந்தினி.
அப்படி உடனே காவல் நிலையத்துக்கு சென்று விட்டால் அவர்களுடைய கெத்து என்னாவது? எனவே தங்களுடைய வழக்கறிஞர் அய்யாசாமியை வீட்டுக்கு அழைத்து விஷயத்தைச் சொல்லி, முன்ஜாமீன் எடுக்க சொன்னார்கள். அவரோ,
“விசாரணைக்கு தானே கூப்பிட்டுருக்காங்க. இதுக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல, தவறான புகார்னு போய் விளக்கம் குடுத்துட்டு வந்துட்டோம்னா விஷயம் சின்னதா போய்டும். அதைவிட்டுட்டு முன்ஜாமீன் அது இதுன்னு போனா, விஷயமும் வேறமாதிரி மூவ் ஆகுறதுக்கு வாய்ப்புகள் இருக்குது. நானும் உங்கூட வர்றேன், வாங்க எஸ்பி ஆஃபீஸுக்கு போய்ட்டு வந்துடலாம்.” என்றார்.
“இதைச்சொல்ல, வக்கீலுன்னு நீ எதுக்குயா?” தங்களுக்கு சாதகமாக பேசவில்லை என்றானதும், வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் குதித்தான் பாலகிருஷ்ணன்.
“உங்களுக்காக மட்டும் தான் சர் பாக்குறேன், இல்லைன்னா உங்க மகன் பேசுறதுக்கு உதறி போட்டுட்டு போய்ட்டே இருப்பேன். உங்க மகனைக் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லுங்க, அவரோட கோபம் உங்களை தேவையில்லாத பிரச்சினையில கொண்டு நிறுத்தப்போகுது.” எச்சரித்த வழக்கறிஞர்,
“இரண்டாவது திருமணம், அதுவும் கலப்பு திருமணம். முதலமைச்சர் சிறப்பு பிரிவுக்கு வரை புகார் போயிடிச்சின்னு சொல்லுறாங்க. அதனால இந்த கல்யாணம் எல்லாருடைய கவனத்துக்கும் உரியதா மாறியிருக்குது. இப்போ சம்மந்தப்பட்டவங்க தடுக்கி விழுந்து அடிபட்டா கூட, நீங்க தான் காரணம்னு ஆகிப்போகும். சோ, நீங்க அமைதியா போறது தான் உங்களுக்கு நல்லது. நான் சொல்லுற மாதிரி செய்யுங்க, விஷயம் கொஞ்சம் ஈஸியா முடிஞ்சிடும். இல்லையா, கொஞ்சநாளைக்கு இரண்டு பேருமே தலைமறைவா இருங்க. அந்த கேப்ல நான் முன்ஜாமீன் எடுத்துடுவேன்.” முடிவாக சொல்லியிருந்தார்.
கண்ணனின் சீனியர் வழக்கறிஞர் தானே அய்யாச்சாமி. எனவே நீதிமன்ற வளாகத்தில் கண்ணனை அவர் பார்த்த போது,
“எப்பிடின்னாலும் இந்த கல்யாணம் நடக்கத்தான் போகுது. அதனால இவ்வளவு தீவிரமா கேஸ்ல தலையிட வேண்டாம்னு உன் மனைவிகிட்ட சொல்லி வைய்யா.” என்றும் சொல்லியிருந்தார். எல்லாம் ஒரு அக்கறை நிமித்தமாக வந்திருந்த வார்த்தைகளே அன்றி வேறெந்த உள்நோக்கமும் அதில் இல்லை.
இந்த வழக்கில் முழுமூச்சாக இறங்கி வேலை பார்க்கும் மனைவியிடம் தன்னுடைய சீனியர் சொல்லியதை கூற கண்ணனுக்கும் ஆசை தான். ஆனால் மனைவி தன்னுடைய வார்த்தைகளை முதலில் ஏற்றுக் கொள்வாளா என்பதே சந்தேகம் தான்.
அதோடு அவனுக்குமே சபேசன் பூங்கோதை திருமணம் எந்த பிரச்சினையும் இல்லாமல் நல்லபடியாக நடந்துவிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எனவே,
“வைரவமூர்த்தியை ரொம்ப சாதாரணமா எடை போட்டுறாத நந்து. அந்த கல்யாணம் முடியுற வரைக்கும் நீயும் கொஞ்சம் கவனமா இருந்துக்கோ.” இரவில் தங்களுக்கான தனிமையில் மனைவியை தன் கை அணைப்பிற்குள் வைத்துக்கொண்டு சொன்னான்.
“பரவாயில்லையே… என்னோட அயித்தான் திருந்திட்டாங்க போலவே! இது தேவையில்லாத ஆணி, புடுங்காத ங்குற தன்னோட ட்ரேட் மார்க் டயலாக்கை விட்டுட்டு, வேற டயலாக் எல்லாம் பேசுறாங்களே ப்பா.” கணவனின் மூக்கைப் பிடித்து ஆட்டியபடியே கேலி பேசினாள் அவன் மனைவி.
“வேறவழி… பேய்க்கு வாழ்க்கைப்பட்டா புளியமரம் ஏறத் தெரியணும்ல?” கேலியாகவே பதில் சொன்னவனின் இதழ்கள் மனைவியின் கன்னத்தை தழுவி மீண்டிருந்தது.
“அப்போ என்னை பேய்னு சொல்லுறீங்களா?” நந்தினி சிலிர்த்துக் கொள்ள,
“சீச்சீ… அப்பிடி சொல்லுவேனா? என்னோட பொண்டாட்டி நந்தினி அழகி… பேரழகி… ஆனா, அந்த எஸ்பி நந்தினி இருக்கால்ல, அவ தான்…” வார்த்தைகளை முடிக்காமல் வேண்டுமென்றே இழுத்தான்.
“புரிஞ்சிடிச்சி… நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரிஞ்சிடிச்சி, இதுக்கு மேல ஏதாவது சொன்னீங்கன்னா கடிச்சி வச்சிடுவேன்.” சொன்னதோடல்லாமல் தன் முகத்துக்கு அருகே இருந்த கணவனின் கழுத்தில் நந்தினி லேசாக கடித்தும் வைக்க,
“பேய் இல்ல, நான் தப்பா சொல்லிட்டேன்…” அவசர அவசரமாக கண்ணன் தன்னுடைய வார்த்தைகளை திருத்தினான்.
“ஹஹ… அந்த பயம் இருக்கணும்.” நந்தினி மலர்ந்து சிரிக்க,
“ரத்தக் காட்டேரி…” அவசரமாக சொல்லிவிட்டு, கவிழ்ந்தடித்து படுத்துக் கொண்டான் கமலக்கண்ணன்.
இப்படியான செல்லச்சீண்டல்கள், கருத்து மோதல்கள், வாக்குவாதங்கள் என்று எல்லாம் கலந்த கலவையாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது இருவரின் வாழ்க்கையும். ஆனால் எதையும் தங்கள் குடும்ப வாழ்க்கையை பாதிக்கும் அளவிற்கு இருவருமே இதுவரையிலும் அனுமதித்தது இல்லை. அந்த வகையில் இருவருமே ஒருவருக்கொருவர் சிறந்த வாழ்க்கைத் துணை தான்.
சபேசன் பூங்கோதை திருமணத்திற்கு இன்னும் ஐந்து நாட்களே இருந்தது.
விசாரணைக்காக செல்லும் இடத்தில் தங்களை கைது செய்துவிடக்கூடும் என்ற எண்ணம் இருந்ததாலோ என்னவோ, எஸ்பி அலுவலகத்திற்கு செல்ல மறுத்த வைரவமூர்த்தியும் அவருடைய மூத்த மகனும், தங்களுடைய வழக்கறிஞரின் ஆலோசனைப்படி தலைமறைவாகியிருந்தனர். அதில் விருப்பம் இல்லை என்றாலும் வேறுவழியும் இருக்கவில்லை அவர்களுக்கு.
தங்களுக்கு சொந்தமான இடங்களில் இருந்தால் போலீஸார் கண்டுபிடித்துவிடக் கூடும் என்பதால் நண்பர்கள் வீடு, உறவினர்கள் வீடு என்று மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தார்கள்.
ஒரு சிற்றரசனைப்போல எல்லா வசதி வாய்ப்புகளோடு வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர்களுக்கு, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழும் இந்த நாடோடி வாழ்க்கை எரிச்சலையேக் கொடுத்திருந்தது.
அப்படித்தான் அன்று அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்த பாலகிருஷ்ணன், தகப்பனிடம் சொல்லிவிட்டு இருந்த இடத்திலிருந்து வெளியே வந்திருந்தான்.
“கவனம் டா.” பத்திரம் சொல்லியே மகனை அனுப்பி வைத்திருந்தார் வைரவமூர்த்தி.
வெளியே வந்தவனுக்கு எல்லோருடைய கண்களும் தன்னையே உற்றுப் பார்ப்பது போன்ற பிரம்மை. சுதந்திரமாக நடமாடக்கூட முடியாத தன்னுடைய நிலையை அடியோடு வெறுத்தவனுக்கு, அத்தனைக்கும் காரணமான தங்கை மீது அடக்க முடியாத கோபம் வந்தது.
ஒரு வாடகைக்காரை பிடித்தவன், சற்றும் யோசிக்காமல் பாட்டியின் வீட்டை நோக்கி வந்துவிட்டான்.
அவர்களுடைய வீட்டுக்கு சளைக்காத அளவில் இதுவும் பெரிய, பழமையான வீடு தான். காரிலிருந்து இறங்கி ஹாலுக்கு வந்திருந்தவன் சுற்றும் முற்றும் பார்க்க, யாரும் கண்களில் தட்டுப்படவில்லை.
“பூங்கோதை, ஏய் பூங்கோதை, எங்க இருக்கீங்க எல்லோரும்?” சத்தமாக அழைக்க, வேகமாக வந்தாள் பூங்கோதை. அவள் பின்னோடு அம்மா, பாட்டி என்று எல்லோரும் வந்தார்கள். கூடவே நந்தினியும் அனிதாவும் அவர்களுடைய அம்மாவும் வந்தார்கள்.
நந்தினி சீருடையில் இல்லாமல் புடவை அணிந்திருந்தாள். ஜெகனோடு தான் மகளின் திருமணம் என்று முடிவான பிறகு திருமணத்திற்கு தாயாராகும் அவனது அக்காவை பார்த்துவிட்டு வரவேண்டும் என்று திலகம் சொல்ல, அழைத்து வந்திருந்தாள் நந்தினி.
நந்தினியை அங்கே எதிர்பாராத, அதுவும் சாதாரணமான உடையில் எதிர்பாராத பாலகிருஷ்ணனின் புருவம் உயர்ந்தது.
“ஓ… இந்த ஜான்ஸிராணி இருக்குற தைரியத்துல தான் நீங்கல்லாம் இவ்வளவு ஆடுறீங்களா? இப்போ புரியுது உங்களுக்கெல்லாம் தைரியம் எங்க இருந்து வருதுன்னு? இவங்க பேச்சைக் கேட்டு ஆடாம, மரியாதையா கேஸை வாபஸ் வாங்குனீங்கன்னா தப்பிச்சீங்க, இல்லைன்னா என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது…” ஆத்திரத்தில் பேசிக்கொண்டே சென்றவனின் கண்களில் அனிதா விழ,
“நீ… அன்னைக்கு ஹோட்டல்ல உன்னைத்தானே இவங்ககூட பாத்தேன்?’’ யோசனையாக கேட்டான்.
“அவளே தான், என்னோட தங்கை, அனிதா. ஜெகத்ரட்சகனும் என் தங்கையும் விரும்புறாங்க. கூடிய சீக்கிரம் அவங்களுக்கும் கல்யாணம் பண்ணப் போறோம். ஹாங், உங்களுக்காக கூடுதல் தகவலும் சொல்லுறேன், கேட்டுக்கோங்க. நாங்களும் உங்க சமுதாயத்தை சேர்ந்தவங்க இல்ல.” கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு அமர்த்தலான குரலில் சொன்னாள் நந்தினி.
இன்று பள்ளிக்கு வேலை நாள், தம்பி பள்ளிக்கு சென்றிருப்பான். தன் கோபத்தை வீட்டு பெண்களிடம் கொட்டிவிடலாம் என்று வந்திருந்த பாலகிருஷ்ணன், கேட்ட தகவலில் அதிர்ந்து போனான்.
“நீ போலீஸ்னா பெரிய பருப்புன்னு நினைப்பா? ஆளு தெரியாம மோத நினைக்காத, இருக்குற தடம் தெரியாம அழிச்சிடுவோம்.” ஆத்திரத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் கையை வீசி வீசி பேசியபடி இருந்தவனின் கரங்களை பின்புறமாக வளைத்து உறுதியாக பற்றியிருந்தார்கள் இரண்டு காவலர்கள்.
புகாரில் சம்மந்தப்பட்டிருந்த இருவரும் இங்கே வரலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்ததால், வீட்டைச்சுற்றி சீருடை அணியாத காவலர்கள் சிலரை பணியில் அமர்த்தியிருந்தாள் நந்தினி. அவள் எதிர்பார்த்தபடியே நடந்திருக்க, கொத்தாக அவளிடமே மாட்டிக்கொண்டான் பாலகிருஷ்ணன்.
“பாலகிருஷ்ணன், ஏற்கனவே உங்க மேல புகார் இருக்குது. இப்போ வீடு புகுந்து எம்முன்னாடியே சம்மந்தப்பட்ட பெண்ணை மிரட்டியிருக்கீங்க, போதாதற்கு என்னையும் அவதூறா பேசியிருக்கீங்க, இந்த குற்றங்களுக்காக உங்களை அரெஸ்ட் பண்ணுறேன்.” என்றாள் நந்தினி…