பேரனை கண்டு பாட்டி திடுக்கிட்டுப் போக, “உன் பேரன்தான் எல்லாருக்கும் குப்பை, அப்படித்தானே எல்லாரும் ஒதுக்கி தள்ளுனீய? நாக்குல நரம்பில்லாம அவளை பேசுற ஆத்தா, எம்புட்டு சொன்னாலும் அடங்க மாட்டீல்ல? வசதி கொறச்சல்னுதானே அவளை இப்படி பேசுற நீயி, எனக்கு சேர வேண்டிய அம்புட்டையும் அவ பேருக்கு மாத்துறேன்” என அவரின் காதில் விழும் படி சத்தமாக சொல்லி அங்கிருந்து செல்ல போனான்.

“எங்குட்டுடா இருந்த நீயி? உன்னை பார்க்காம ஏதோ பேசிப்புட்டேன், அப்படியெல்லாம் பண்ணி தொலைச்சிடாதடா, உன் அம்மா பேர்ல வைக்க கூடாதுன்னு அப்பவே உன் ஐயன்கிட்ட சொன்னேன், எங்குட்டு கேட்டு நடந்தாரு? ஆம்பள பேர்லதான் சொத்து இருக்கணும்” என பட படத்தார் பாட்டி.

மீண்டும் பாட்டியிடம் வந்து அவரின் முகத்தை நோக்கி குனிந்து கடுமையாக பார்த்தான்.

“ஊருக்குள்ள என்னைய பத்தி என்னெல்லாம் பேச்சு வந்துச்சுனு தெரியுமா உனக்கு? உன் பேரன் ஆம்பள இல்லை, அதான் ஒருத்தியும் அவனை ஏத்துக்காம ஓடிப் போயிட்டாளுங்கன்னு வாய் கூசாம சொன்னானுவோ. என்னைய மனசார ஏத்துகிட்ட அவ உனக்கு குப்பையா? நீ சொல்ற சொத்து வச்சு என்னைய எவனும் ஆம்பளைனு ஒத்துக்கல ஆத்தா, அவ என் கூட பொழைக்கிறா பாரு அதை வச்சுதான் ஒத்துக்கிறானுவோ” என அடக்கப் பட்ட சினத்தோடு சொன்னான்.

“எந்த பய உன்னை அப்படி சொன்னது, கூட்டியாடா காத அறுத்து காவாயில வீசுறேன், பல்ல தட்டி பல்லாங்குழி ஆடுறேன்” தரையை தட்டி வீராவேசமாக சொன்னார் பாட்டி.

“அந்த பயில்வான் வேலையெல்லாம் பார்க்க வேணாம், வாயடக்கமா இரு போதும். இனி ஒரு சொல் அவளை பத்தி சொல்லு… இந்த வூடு எனக்கு சேர போறதுதானே, நாளைக்கே அவ பேருக்கு மாத்தி வுட்ருவேன். அவ கையாலதான் கஞ்சி குடிக்கணும்னு ஆகிப் போயிடும் உன் நிலைமை பார்த்துக்க” என்றான்.

“அதெப்பட்றா அப்படி சொல்லிப்புட்ட? எல்லாம் என் ஆம்படையான்.சொத்து, எவ வந்து எனக்கு கஞ்சி ஊத்துறது? அம்புட்டு ஏத்தம் ஆகிப் போச்சா உனக்கு?” என அரற்ற தொடங்கினார் பாட்டி.

ருத்ரன் இன்னும் கோவம் கொண்டு பாட்டியை நெருங்க, மகனை பிடித்துக் கொண்ட வள்ளி, “அவுக பேசுறத காதுல வாங்கப் படாதுன்னு தெரியாதாடாப்பா, நல்ல நாளும் அதுவுமா எதுக்கு கரைச்சல்? போடா தம்பி,” என கெஞ்சினார்.

“எம்புட்டுத்தான் மா பொறுத்து போறது? என்னைய நிம்மதியாவே வாழ வுட மாட்டாக ம்மா, அவளை குத்தி குத்தி பேசினா எனக்கென்ன மதிப்பு கொடுக்குறாவோ இங்குட்டு, அவளை பேசினா என்னைய பேசுற மாதிரிதானே? நானெல்லாம் ஆளே இல்லைல ஆத்தாவுக்கு?” நொந்து போனவனாக கேட்டான் ருத்ரன்.

“அடே அய்யா ராசா அவுக என்னத்தடா உன்னை ஆளா நினைக்கிறது? மேல போடாப்பா, அவள கொண்டு போய் வுட நேரம் ஆவுது பாருடா, அவளே கிளம்பி வந்து நிக்கிறா பாரு” என பதமாக சொல்லி மகனை மேலே அனுப்ப முயன்றார் வள்ளி.

ருத்ரன் திரும்ப, சிவா அங்குதான் அமைதியாக நின்றிருந்தாள். எப்போது வந்தாள் என அவனுக்கு தெரியவில்லை.

“பத்து நிமிஷம் வந்திடுறேன்” என சொல்லி அவன் மாடிக்கு செல்ல, அவள் சாப்பிட அமர்ந்து விட்டாள்.

“என்னென்னமோ பேச்சு எம்புள்ள காதுல விழுந்திருக்கு பாரு ஆயி, வயசுதான் ஆவுது என் மாமியாருக்கு, அவனை கோவ படுத்திகிட்டே கெடக்குறாக” என மருமகளிடம் சொன்னார் வள்ளி.

அவர் அப்படி பேசுபவர்தானே, விட்டுத் தள்ளுங்கள் என மாமியாருக்கு ஆறுதல் சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்தாள் சிவா. தயாராகி வந்த ருத்ரன் அவளை விட்டு வந்து சாப்பிட்டுக் கொள்வதாக சொன்னான்.

எங்கே சாப்பிடாமல் இருந்து விடுவானோ என நினைத்து, “சாப்பிட்டே வாங்க” என்றாள் சிவா.

“பட்டினியா இருக்க போறேன்னு சொன்னேனா உன்கிட்ட, எல்லாம் எனக்கு சாப்பிட்டுக்க தெரியும், கெளம்பு” என சொல்லி வெளியே சென்று விட்டான்.

“ஆத்தா மேல உள்ள கோவத்துல பேசுறான் ஆயி, நீ போ” என வள்ளி சொல்ல, சரி என சொல்லிவிட்டு அவளும் கிளம்பினாள்.

வழியில் அமைதியாகவே வண்டியை செலுத்தியவன் அஞ்சலக வாசலில் அவளை இறக்கி விட்டு, “மதியானம் நான் வர முன்ன பின்ன ஆகும், ஆனா பஸ் வர்ற நேரத்துக்கு முன்ன வந்திடுவேன்” என்றான்.

“அது நான் வெயிட் பண்றேன்” என்றாள். அவன் புறப்படவும், “நில்லுங்க ஒரு சேதி” என்றாள். அவனும் என்னவென பார்த்தான்.

அவனுக்கு பக்கமாக வந்து நின்று கொண்டவள், “எல்லாத்துக்கும் ஏன் எமோஷ்னல் ஆகுறீங்க? ஆத்தாகிட்ட என்னல்லாம் பேசினீங்க? இதோ இங்க என்னோட வேலை பார்க்கிறவங்க கூட சாடை மாடையா வசதிய பார்த்துதான் உங்களை கட்டிகிட்டதா சொல்றாங்க. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருக்க முடியுமா? சொத்தெல்லாம் எம்பேருக்கு மாத்துறேன்னு எதுக்கு சொன்னீங்க, ஆத்தா வாய்க்கு இன்னும் வேலை கொடுக்கவா?” எனக் கேட்டாள்.

“அதென்ன சும்மா சொன்னேன்னு நினைக்கிறியா புள்ள?”

“நீங்க சொத்து எழுதி வச்சிட்டா பேசுறதை நிறுத்திடுவாங்களா? எனக்கு நீங்க எப்படிங்கிறதுதான் முக்கியம், கட்டினவர் துணையிருந்தா பொண்டாட்டியை எந்த பேச்சும் ஒன்னும் செய்யாது” என்றாள்.

“ம்ம்… சரி, நான் வர்றேன்” என சொல்லி வண்டியை உயிர்ப்பித்தான்.

“நீங்களும் நம்ம பெர்சனல் வாழ்க்கைய நம்ம ரெண்டு பேரை வச்சு மட்டும் பாருங்க, ஊரும் உலகமும் ஆயிரம் பேசும், இன்னிக்கு கையெடுத்து கும்பிடும் நாளைக்கு கல்ல விட்டு எறியும், எல்லாத்தையும் போட்டு அடைக்க மனசு என்ன குப்பை தொட்டியா?”

“ரோட்டுல நிறுத்தி வச்சு பல்லு போன கெழவி கணக்கா அளக்காம உள்ளுக்கு போடி!” என்றான்.

“உங்களுக்கெல்லாம் உங்க ஆத்தாதான் சரி, நான் கெழவியா உங்களுக்கு? அதும் பல்லு போன கெழவி! இதுக்காக சீக்கிரமே வருத்த பட போறீங்க”

“உள்ளர்த்தம் ஏதும் வச்சு பேசுறியா என்ன?” எனக் கேட்டான்.

கிழவி என அவன் சொல்லி விட்டதால் பேசி பேசியே இவரை கதற விடுகிறேன் என நினைத்துதான் அவள் சொன்னாள். அவன்தான் வேறு மாதிரி புரிந்து கொண்டிருந்தான்.

“என்ன அர்த்தம்?” என குழப்பத்தோடு கேட்டாள்.

“நைட்டு கிட்ட வரும் போது பல்லு எம்புட்டு கூர்மைனு காட்ட நினைச்சியோன்னு கேட்டேன், இல்லியா?” என சொல்லி அவள் வெட்கப் படுவாள் என எதிர்பார்த்தான்.

அவளோ, “ஹையோ இப்படிலாம் கூட யோசிப்பீங்களா நீங்க?” என சொல்லி எல்லா பற்களையும் ஈஈ என காட்டி கிண்டல் செய்தாள்.

அவன் முறைக்க, ரகசிய குரலில், “இன்னிக்கு நைட்டு கிட்ட வர போறீங்களா என்ன?” எனக் கேட்டாள்.

அவனது விழிகள் பெரிதாகி விட, உடனே சுதாரித்து சுற்றிலும் பார்த்தவன், “ரோடு புள்ள இது” என்றான்.