நண்பர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக திரிவானே தவிர, குடிப்பழக்கம் எல்லாம் கிடையாது, இப்போது அதுவும் சேர்ந்து கொண்டதே என மகனை நினைத்து ருத்ரனிடம் வருத்தப்பட்டார் தனராஜன்.

“அவனுக்கு விவசாயம் சரியா வராது சித்தப்பா, அவன்கிட்ட பேசுங்க, வேற ஏதும் செய்ய விருப்பமான்னு கேட்டு அவன் சொல்றது நமக்கும் சரின்னு பட்டா அமைச்சு கொடுக்கலாம். அவன் பொறுப்பாகிட்டா பிறையை தானா கொண்டாந்து விட்ருவாக, கவலை படாதீய” என்றான் ருத்ரன்.

வேறு அமைத்துக் கொடுப்பதா என திகைப்பாகவும் சற்று கோவமாகவும் பார்த்தார் தனராஜன். நான் யோசனை சொல்லி விட்டேன், பின் உங்கள் விருப்பம் என்பது போல சொல்லி அந்தப் பேச்சை முடித்து விட்டான் ருத்ரன்.

வாந்தி செய்து, உளறலாக சத்தமிட்டு என கலை ஒரே அமர்க்களம். யார் பார்ப்பது அவனை, அப்படியே விடவும் ருத்ரனுக்கு மனமில்லை. அவனை கவனித்து அவனது அறையில் விட்டான்.  மகனை வெறும் வயிற்றோடு போட மனமில்லாமல் அவனுக்கு உணவை ஊட்டி விட்டு படுக்க வைத்தார் செங்கமலம்.

சிவாவும் ருத்ரனும் மாடிக்கு வரும் போது நேரம் பத்தை தொட்டு விட்டது. மழையில் வயலில் நின்றது, கலையரசனை சுத்தம் செய்தது என ருத்ரனுக்கு என்னவோ போலிருந்தது. குளித்து விட்டே படுக்க வந்தான்.

நாடாக் கட்டிலை ஓரமாக மடக்கி போட்டு வைத்து விட்டாள் சிவா.

“இதென்ன இப்படி போட்டு வச்சிருக்க?” தலை துவட்டிக் கொண்டே மனைவியிடம் கேட்டான்.

“ம்ம்… இடத்தை அடைக்குது, வேணுங்கிறப்போ எடுத்து போட்டுக்கலாம், இப்ப தேவையில்லதானே?” எனக் கேட்டாள்.

சின்னதாக சிரித்தான்.

“அடிக்கடி சிரிங்க, பார்க்க நல்லாருக்கு” என்றாள்.

குரலை செருமிக் கொண்டவன், கலை எப்போது வந்தான், பிறையின் வீட்டிலிருந்து எத்தனை மணிக்கு வந்தனர், உடனே என்னை ஏன் அழைக்கவில்லை நீ என விசாரித்தான்.

நடந்த அனைத்தையும் விரிவாக சொன்னவள், “அத்தைதான் உங்ககிட்ட சொல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க” என்றாள்.

“அம்மா சொன்னாலும் இனிமே கேட்காத. சித்தப்பா கலைய வெளில அழைச்சிட்டு வரலைனா பிரச்சனை இம்புட்டு பெருசாகியிருக்காது, அந்த புள்ளையும் வீட்டை விட்டு போயிருக்காது” என்றான்.

“புதுசா வந்தவ இப்படி சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க, உங்க தம்பி இப்படி செஞ்சிருக்க வேணாம், அவங்களுக்குள்ள ரகசியத்தை எல்லாமா இப்படி எல்லார் முன்னாடியும் அம்பல படுத்துறது? ஆசை பட்டு அவரை கட்டிக்கிட்டு வந்து உங்க அத்தை பொண்ணு நொந்து போயிட்டாங்க” என்றாள்.

“ப்ச், அந்த புள்ள வாயும் கம்மி கிடையாது. நீயென்ன வாங்க போங்கன்னு சொல்லுற, உன்னை விட வயசுல சின்ன பொண்ணுதான், உனக்கு தங்கச்சி முறை, சாதாரணமா பேசு” என்றான்.

“நான் என்னத்த அவங்க கூட பேசப் போறேன், என்னையெல்லாம் மதிக்க கூட மாட்டாங்க”

“ஏன் உங்களுக்குள்ள ஏதும் தகராறா?” எனக் கேட்டான்.

பிறையை பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றெல்லாம் இல்லை, கணவன் விசாரிக்கவும் மறைக்க முடியாமல் முன்னொரு நாள் தன்னை மரியாதை குறைவாக அவள் பேசியதை சொல்லி விட்டாள். தொடர்ந்து அவனது சித்தப்பா அவளை பேசியதையும் மாமியார் ஆதரவாக நடந்து கொண்டதையும் கூட சொல்லி விட்டாள்.

“இம்புட்டு நடந்திருக்கு, என்கிட்ட மூச்சு விடலை நீ!” என கண்டனமாக சொன்னான்.

“அப்ப உங்களுக்கு உடம்புக்கு முடியலை, அத்தையும் சொல்ல வேணாம்னு சொன்னாங்க” என்றாள்.

“இப்ப சொல்றதுதான் புள்ள உனக்கு, எதையும் என்கிட்ட மறைக்க கூடாது சொல்லிப்புட்டேன்” என்றான்.

“அதுக்கு ஏன் குரலை உசத்துறீங்க? தொண்டை நரம்பு புடைச்சுக்கிட்டு வெளில எட்டிப் பார்க்குது வேற” என கிண்டலாக சொன்னாள்.

படுத்து விட்டவன் அவளை இமைக்காமல் பார்க்க, மெதுவாக நடந்து வந்து அவன் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்.

நேராக படுத்துக் கொண்டவன், “தூங்கு புள்ள” என்றான்.

ருத்ரனுக்கு மனம் சரியில்லை, ஒரே வீட்டில் வாழ்கிறோம், தன் மனைவியை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கிறார்களே என அவனுக்கு வருத்தம். கலைக்கு வேறு அமைத்து கொடுக்கலாம் என்ற போது சித்தப்பா பார்த்த பார்வை வேறு இவனை குழப்பிக் கொண்டிருந்தது. இந்த மன நிலையில் மனைவியிடம் எப்படி காதல் செய்வான்?

வீட்டில் நடந்த சண்டையால்தான் அவர் தன்னை நெருங்கவில்லை என புரிந்து கொண்ட சிவாவும் ஏதும் பேசாமல் உறங்கி விட்டாள்.

அடுத்த நாள் திருக்கார்த்திகை என்பதால் காலையிலேயே வேலையாள் வைத்து வீட்டை துடைக்க செய்து கொண்டிருந்தார் வள்ளி.

சித்தப்பா எங்கே என கேட்ட ருத்ரனிடம், காலையிலேயே அவர் தன் மகனை அழைத்துக் கொண்டு வயலுக்கு சென்றிருப்பதாக சொன்னார். தலையை மட்டும் ஆட்டி கேட்டுக் கொண்டான் அவன்.

பின்பக்கத்தில் இருந்து விளக்குகள் எல்லாம் கழுவி காய வைத்துக் கொண்டிருந்தார் செங்கமலம்.

 சமைத்து முடித்த சிவா தயாராவதற்காக மேலே செல்ல, இன்று இவளாவது வீட்டில் இருக்க கூடாதா? நல்ல நாளில் புது மருமகள் ஒருத்தியும் வீட்டில் இல்லை என்றால் என்ன அர்த்தம் என புலம்பினார் பாட்டி.

இந்த வருட விடுப்பில் இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதாக சொன்ன சிவா, “ஏதாவது அவசரம்னா தேவை படும்னு எடுக்காம இருக்கேன் ஆத்தா, மதியானம்தான் வீடு வந்திடுவேனே” என்றாள்.

“மாமியாரை உட்கார வச்சு நீ சோறு போடணும், உனக்கு உன் மாமியா வடிச்சு போடுவாளா?” எனக் கேட்டார் பாட்டி.

எல்லா பேச்சுக்கும் தலையிட ருத்ரனுக்கு எரிச்சலாக இருந்தது, அவளே பேசட்டும் என மௌனமாகவே இருந்தான்.

“காலையிலேயே ஆரம்பிக்காதீயளேன்” என வள்ளிதான் மாமியாரை அடக்கி சிவாவை அனுப்பி வைத்தார்.

சங்கடத்துடன் மேலே சென்றவளை பார்க்க ருத்ரனுக்கு ஒரு மாதிரியாகி விட்டது. பாட்டியை ஆயாசமாக பார்த்தவன் கொட்டகை பக்கம் சென்று விட்டான்.

மாடுகளை பார்த்து விட்டு அவன் வீடு வரும் போது, சிவாவுக்கு சீர்வரிசையில் வந்த குத்துவிளக்குகளை எடுத்து வை, மாலையில் அதிலும் தீபம் ஏற்ற வேண்டும் என சொல்லிக் கொண்டிருந்தார் பாட்டி.

வள்ளியும் விளக்குகளை எடுத்து வந்து மாமியாரிடம் கொடுத்தார். கையில் எடுத்து பார்த்த பாட்டி, “கைக்கு கனமாவே இல்லை, நல்லதா வாங்கி தரக் கூடாது? என்னமோ போ, குப்பைல கெடந்த காயிதம் விசுக்’ன்னு அடிச்ச காத்துல பொசுக்’ன்னு பறந்து வந்து கோவுரத்துல ஒட்டிக்கிச்சு” என்றார்.

வெளியாள் வேலை செய்து கொண்டிருக்க, தன் மாமியாரை எப்படி கண்டிப்பது என எரிச்சலோடு வேலை செய்யும் பெண்ணை சமையற்கட்டை துடைக்கும் படி அனுப்பி வைத்தார் வள்ளி.

பாட்டியின் பேச்சில் ருத்ரனுக்கு சுள் என கோவம் வரப் பெற்றிருக்க, அம்மாவுக்கு முன் முந்திக் கொண்டு பாட்டியின் பக்கத்தில் மண்டியிட்டு அமர்ந்தான்.