அத்தியாயம் 12
“என்னடா ஆச்சு?” பதறிப்போய் கத்தியபடி மகனிடம் ஓடிவந்தார் கல்பனா.
நடைபயிற்சிக்கு சென்றிருந்த மகன் ஆட்டோவில் வந்து இறங்கவுமே யோசனையோடு பார்த்தபடி நின்றிருந்த பெண்மணி, அவன் நடையில் வித்தியாசத்தை காணவும், செடிக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலையை விட்டுவிட்டு கூர்ந்து பார்க்க, மகன் காலில் இருந்த காயம் தவறாமல் அவருடைய பார்வையில் விழுந்துவிட்டது.
அவ்வளவு தான், கையிலிருந்த தண்ணீர் பாய்ச்சும் குழாயை வீசி எறிந்து விட்டு மகனை நோக்கி வேகமாக ஓடிவந்தவர் பதட்டமாக கேட்க,
“ப்ச்ச்… ஒன்னுமில்ல.” சலிப்பாக வந்தது பதில்.
“காலைக் கண்கொண்டு பாக்க முடியல, ஒன்னுமில்லயா?” மகனை கோபமாக அதட்டியவர்,
“என்ன ஆச்சு ப்பா. நீயாவது சொல்லு.” என்று சிவாவை பிடித்துக் கொண்டார்.
“அது…” இத்தனை நாட்களில் சுரேந்திரன் வீட்டு விஷயம் தெரிந்திருக்க, நடந்த விஷயத்தை சொன்னால் கல்பனா எப்படி எதிர்வினையாற்றுவாரோ என்ற பயத்தில், தடுமாறினான் சிவா.
அதைப்புரிந்து கொண்ட சுரேந்தர், “ஆட்டோ வெயிட்டிங்ல நிக்குது பாரு, நீ கிளம்பு சிவா” என்று விட, விட்டால் போதும் என்பது போல கிளம்பி சென்றேவிட்டான் சிவா. போகும்போது, “டேக் கேர் ப்ரோ.” என்று மெல்லிய குரலில் முணுமுணுக்கவும் தவறவில்லை.
புழுதியைக் கிளப்பிக்கொண்டு ஆட்டோ கிளம்பி செல்லவும், எதுவும் நடவாதது போல வீட்டுக்குள் திரும்பி நடக்க ஆரம்பித்தான் சுரேந்தர்.
“காலுல அவ்வளவு பெரிய சூட்டுக்காயம் இருக்குது, என்ன நடந்ததுன்னு கேட்டா, பதில் சொல்லாம போற, என்ன நடந்தது? சொல்லுடா…” மகனின் பின்னோடு வந்து அவன் கையை பிடித்திழுத்து பெரிய சத்தத்தில் கல்பனா அதட்ட,
“நீங்க ரெண்டு பேரும் செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடுறேன், போதுமா?” நந்தினியின் வார்த்தைகள் சுரேந்தரை பாதித்திருக்க, தாயைவிட பெரிய சத்தத்தில் வெடித்தான். அதிர்ந்து போனார் கல்பனா.
இருவரின் சத்தத்தில் அங்கே வந்த ராஜவேலுவின் கண்களிலும் மகனின் கால் காயம் விழ, அவரிடமிருந்தும் அதிர்ச்சியோடு கூடிய கேள்வி வந்தது. அதற்கு பதில் சொல்ல முனையாமல் சுரேந்தர் அங்கிருந்து நகர ஆரம்பித்தான்.
“நாம செய்த பாவத்துக்கு பரிகாரம் செய்யுறானாம். உங்க புள்ள சொல்லுறான்.” மகனின் வார்த்தைகள் ஒருமாதிரி பாதித்திருக்க, கம்மிப் போன குரலில் சொன்னார் கல்பனா.
“என்னடா சொல்லுற?” ராஜவேலு குரலை உயர்த்த, அலட்டிக்கொள்ளாமல் தாயிடம் சொன்னதையே மறுபடியும் சொன்னான். அவ்வளவு தான்…
“ராஸ்கல்… போனா போகட்டும்னு பாத்தா, வரவர பயமில்லாம போச்சு உனக்கு. எங்களையே தப்பு சரி சொல்லுற அளவுக்கு வந்துட்டியா நீ?” சட்டென்று கோபம் ஏற, மகனின் கன்னத்தில் தன் கையை இறக்கியிருந்தார் ராஜவேலு.
“ஐயையோ… ஏற்கனவே நொந்துபோய் வந்து நிக்குற பிள்ளையை, நீங்களும் அடிக்கிறீங்களே…” கதறியபடி இரண்டு பேருக்கும் நடுவில் வந்திருந்த கல்பனா,
“என்ன நடந்ததுன்னு சொல்லேன்டா” என்றார் மகனிடம் கெஞ்சலாக. அந்த குரலிலோ, இல்லை விழுந்த அடியின் வீரியத்திலோ, சுரேந்தர் நடந்ததைச் சொல்ல, கல்பனாவால் தான் அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனது.
ஆமாம் … மகனின் வார்த்தைகளில் இப்படி ஏதோ ஒன்றுதான் வரப்போகிறது என்று யூகித்திருந்த கல்பனாவுக்கு, மகனின் உடம்பில் ஏற்பட்டிருக்கும் காயம், திலகத்தின் மகளுக்காக ஏற்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கோபம் வந்தது.
நொடிக்கொரு முறை நந்தினியை அக்கா என்று அழைத்து சுரேந்தர் நடந்தவற்றைச் சொல்ல, கேட்டுக்கொண்டிருந்த ராஜவேலுவுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
“உங்க உறவு தண்டவாளம் போல, கடைசிவரை ஒன்னு சேரவே முடியாது சுரேன். இதை நான் ஏற்கனவே உனக்கு சொல்லியிருக்கணும். வீணா எந்த முயற்சியும் செய்யாம, உன்னோட வேலையை மட்டும் பாரு.” கட்டளையாக சொல்லிவிட்டு ராஜவேலு அங்கிருந்து நகர்ந்துவிட, ஹாலில் கிடந்த இருக்கையில் தளர்ந்து போய் அமர்ந்தான் சுரேந்தர்.
“அவ பின்னாடி போகாதே போகாதேன்னு படிச்சு படிச்சு சொன்னேனே, நீ கேட்டியா? நான் சொன்னதை கேட்டிருந்தா இப்போ இது உனக்கு நடந்திருக்குமா? அதுக்கு தான் அம்மா சொல்லுறதை கொஞ்சமாவது கேட்கணும்னு சொல்லுறது.” மகன் அருகே வந்து அமர்ந்து, தன் கோபத்தை மறைக்காமல் ஓங்கி குரலெடுத்து பேசினார் கல்பனா.
வேறொன்றுமில்லை, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதப்போகும் விஷயத்தை வீட்டில் சொன்ன சுரேந்தர், அக்காவைப் போல ஐபிஎஸ் ஆகவேண்டும் என்பதையும் சேர்த்துச் சொல்ல, எதிர்ப்பு குரல் கொடுத்திருந்தார் கல்பனா.
எதிலும் பிடிப்பில்லாமல் அலையும் மகன் படிக்கப் போவதாக சொல்லவும் முதலில் சந்தோஷம் தான் கல்பனாவுக்கு. ஆனால் தொடர்ந்தாற்போல அவன் நந்தினியின் பெயரை பேச்சில் இழுக்க, மகனின் முடிவு பிடிக்காமல் போயிருந்தது.
“அவளைப்போல பிழைக்க வழி இல்லாம இருக்கியா நீ? நமக்கே தொழில் இருக்கு, அதை முதல்ல கவனி.” மகனிடம் கோபமாக வேறு சொல்லியிருந்தார்.
“ஏன், நான் சாக கிடக்குறேனா என்ன, எம்புள்ள வந்து தொழிலை பாத்துக்குறதுக்கு? நீ உன் இஷ்டம் போல படி டா, நானும் ஐபிஎஸ் ஆஃபீஸரோட அப்பான்னு தோளை தட்டிக்குவேன்.” மகனின் முடிவுக்கு உற்சாகமாக தகப்பன் ஆதரவு கொடுக்க, அதற்கு மேல் கல்பனாவால் ஒன்றும் செய்ய முடியாமல் போனது.
‘சரி, இங்கிருந்தால் அக்கா கொக்கா என்று அந்த வீணாகப் போனவள் பின்னால் தான் சுற்றுவான், பரீட்சைக்கு தயாராக என்று சொல்லி சென்னைக்கு அனுப்பிவிடலாம்.’ இப்படி தன்னை சமாதானப்படுத்திக் கொண்ட கல்பனா, மகனை சென்னைக்கு போகச் சொன்னால்,
“நம்ம திருநெல்வேலியில இல்லாத கோச்சிங் சென்டரா சென்னையில இருந்துறப் போகுது? அதுவுமில்லாமல, இங்கயிருந்தா அக்காகிட்டயும் எப்படி படிக்கிறதுன்னு அப்பப்போ கேட்டுப்பேன்.” ஏதோ ஒரு நம்பிக்கையில் சொன்ன சுரேந்தர் சென்னைக்கு கிளம்ப மறுக்க, தலைவலியாகிப் போனது கல்பனாவுக்கு.
அதைவிட மகன் பேசியதைக்கேட்டு அமைதியாக இருந்த கணவனால் கூடுதல் மன அழுத்தம் அந்த பெண்மணிக்கு. இந்த மனிதனை எந்த வகையில் சேர்ப்பது என்று அவருக்கு தெரியவேயில்லை.
அன்று என்னவோ வைரவமூர்த்தியிடம் விஷயத்தை சொல்லிவிடுங்கள் என்று சொன்னதற்கு செய்துவிடுவது போல யோசித்த கணவர், இப்போது வரைக்கும் அப்படி எதுவும் செய்யாமல் மனைவியை எரிச்சலுக்கு உள்ளாக்கியிருந்தார்.
இவ்வளவு ஏன்? ஒருமுறை கல்பனா ஞாபகப்படுத்தியும் கூட, “இந்த விஷயத்துல அவசரப்பட முடியாது, கொஞ்சம் யோசிக்கணும் கல்பு.” என்று கண்டிப்பான குரலில் சொல்லி மனைவியின் வாயை அடைத்திருந்தார்.
கணவனின் பதிலில் கல்பனாவுக்கு தான் இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் ஏறியிருந்தது. ‘என்ன சொல்ல வருகிறார் இந்த மனிதர்? அப்படியானால் இன்னமும் அந்த திலகத்தின் மீதும் அவர் பெற்ற பிள்ளைகளின் மீதும் பாசம் மனதில் ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறதா?’ நினைக்க நினைக்க மனது ஆறவே இல்லை அவருக்கு.
எல்லாவற்றுக்கும் மேலாக இப்போது மகன் அந்த நந்தினியை காப்பாற்ற என்று காயப்பட்டு வந்து நிற்க, மகனை கண்டிக்காமல், தத்துவம் சொல்லிட்டு போகிறார் மனிதர்.
இப்படியே போனால் தகப்பனும் மகனும் அந்த திலகத்தையும் அவள் பெற்று வைத்திருக்கும் பிள்ளகளையும் தலையில் தூக்கி வைத்து ஆடினாலும் ஆடுவார்கள்.
‘அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது. நான் ஏதாவது செய்தே ஆகவேண்டும்.’ புலம்ப ஆரம்பித்திருந்தது கல்பனாவின் மனது.
*******
அன்றும் எப்போதும் போல அலுவலகத்திற்கு வந்திருந்தாள் நந்தினி.
“என்ன இருந்தாலும் நீ சுரேந்தர் முகத்துக்கு நேரே அப்படி சொல்லியிருக்க கூடாது நந்தினி. பாவம், அவன் முகமே சுருங்கிப்போச்சு.” வீட்டுக்கு வந்ததும் கணவன் இப்படி சொல்லியிருக்க,
“ஓகோ… வேற எப்படி சொல்லியிருக்கணும்? அதையும் கொஞ்சம் நீங்களே சொல்லிக் குடுத்துடுங்க.” என்று எகிறியிருந்தாள் நந்தினி.
“அந்த பையன் கொஞ்சம் அமைதியா இருந்திருந்தா நானே கவனிச்சு விலகியிருப்பேன், அவசரப்பட்டு குறுக்கால விழுந்து என்னை தள்ளிவிட்டதால எனக்கும் காயம், அவனுக்கும் சுட்டுகிட்டான். இப்படியெல்லாம் செய்து எங்கிட்ட சிம்பதி கிரியேட் பண்ணப் பாக்குறான். அது தெரியாம நீங்க என்னை குறை சொல்லுறீங்க.” நந்தினி கணவனை குற்றம் வேறு சுமத்த,
“இதுக்கு மேல நான் என்ன சொன்னாலும் நீ புரிஞ்சிக்கப் போறது இல்ல. கடைசியில நான் தான் பொல்லாத ஆளாகிப்போவேன். சோ இந்த ஆட்டத்துக்கு நான் வரல.” வெற்றிகரமாக கண்ணன் தான் பின்வாங்கியிருந்தான்.
“கையில காயம் இருக்குதே, இன்னைக்கு ஒருநாளாவது ரெஸ்ட் எடுத்துக்கோ.” கணவனின் அக்கறையான வார்த்தைகளையும் மீறிதான் வேலைக்கு வந்திருந்தாள்.
அலுவலகத்தில் அமர்ந்திருந்தவளின் முன்னே சபேசன் இருந்தான். காலையில் நடந்ததைப்பற்றி அவனிடம் சொல்ல, “வண்டியோட நம்பரை நோட் பண்ணுனீங்களா மேடம்?” என்று தான் முதலில் கேட்டிருந்தான்.
“எங்க? அப்பிடி மட்டும் நோட் பண்ணியிருந்தா இதுக்குள்ள ஆளை தூக்கியிருக்கலாமே?” நந்தினி அலுத்துக்கொள்ள, நடந்த நிகழ்வைப்பற்றி இருவரும் அலசி ஆராய ஆரம்பித்தார்கள்.
இது நந்தினியை இலக்காக கொண்ட தாக்குதலா? இல்லை சாதாரணமாக நடந்த விபத்தா? நந்தினி தான் இலக்கு என்றால், யார் முயற்சி செய்திருக்க கூடும்? பணியில் சேர்ந்த இத்தனை மாதங்களில் யாரோடெல்லாம் நந்தினிக்கு பிரச்சினை இருந்திருக்கிறது? என்ற அளவில் அவர்களது யோசனை போய்க்கொண்டிருந்தது.
தற்சமயம் நந்தினிக்கு எதிரிகள் என்றால் வைரவமூர்த்தியும், நேற்று நடந்த பிரச்சினையில் சம்மந்தப்பட்ட ஆட்களும் தான். ஆனால் மேற்கொண்டு நந்தினியின் நடவடிக்கைகள் தெரியாமல் நேற்றைய பிரச்சினைக்கு சொந்தக்காரர்கள் இப்படி அவசரப்படுவதற்கு சாத்தியங்கள் மிகவும் குறைவே.
அப்படியானால் வைரவமூர்த்தி எதுவும் செய்தாரா? எதற்காக? இப்படி அவர்களின் ஆராய்ச்சி நீண்டுகொண்டேச் செல்ல, நந்தினியின் கைபேசி சிணுங்கி அழைப்பு வந்ததைச் சொல்லியது.
நேற்றிரவு அழைத்திருந்த மாவட்ட செயலாளரிடமிருந்து தான் அழைப்பு. சபேசனைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்தியவள், அழைப்பை ஏற்று போனை காதுக்கு கொடுக்க,
“என்ன முடிவு எடுத்திருக்கீங்க?” அதே கட்டைக் குரலில் அதிகாரமாக கேட்டார் அந்த மனிதர்.
“ஹலோ, மொதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க?” அந்த மனிதனின் பேச்சில் சுறுசுறுவென கோபம் ஏறினாலும், ஆளைத் தெரியாதது போல அமைதியாகவே கேட்டாள்.
“நேற்று ஈவ்னிங் பேசுனனே? அதுக்குள்ள மறந்துட்டீங்களா?” அந்த குரல் அலுத்துக் கொள்ள,
“உங்களை மாதிரி தினமும் எத்தனை பேரோ பேசுறாங்க? எல்லாரையும் ஞாபகம் வச்சிட்டு இருக்க முடியுமா என்ன?” பதிலுக்கு நந்தினியும் அலுத்துக் கொண்டதில், தன்னை முறையாக அறிமுகம் செய்து கொண்ட அந்த செயலாளர்,
“அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டருக்கு கேஸ் போடவேண்டாம்னு சொல்லச் சொன்னேனே, சொல்லிட்டீங்களா?” என்றும் கேட்டார்.
“நானும் இந்த விஷயத்தை ஸ்டேஷனுக்கு வந்து நேர்ல பேசுங்கன்னு உங்ககிட்ட சொன்னேனே, நீங்களும் மறந்துட்டீங்க போல.” நக்கலாக சொன்னவள்,
“இந்த விஷயத்துல செயலாளர் எதுக்கு இவ்வளவு ஆர்வம் காட்டுறீங்க? ஒருவேளை பினாமி பெயர்ல இந்த வேலையை செய்யுறதே நீங்க தானோ?” என்று இழுத்தாள்.
“இது உங்களுக்கு தேவையில்லாத வேலை, நான் சொன்னதை மட்டும் செய்யுங்க.” அதட்டலாக வந்தது பதில்.