ருத்ரன் அமர்ந்த இடத்திலிருந்து அசையாமல் அவள் பேசுவதை எல்லாம் செவி வழி உள்ளே இறக்கிக் கொண்டிருந்தான்.

“என்ன சொன்னாரு? போயிட்டே இர்ராம்! எங்க போவ நான்? கலிகட்டுன்னு கதை பேசிட்டு கழட்டி விட பார்க்கிறாரு. போறேன்… எனக்கும் போவ தெரியாம இல்லை” கல்லில் துணியை துவைத்துக் கொண்டே கன்னத்து கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

துணியை கும்மியவள், “இந்தா இந்த கல்லும் நான் கட்டிகிட்டவரும் ஒன்னு, இல்லைனா இந்த பேச்சு நான் பேச ஏதாவது வாயை தொறந்திருப்பாரே!” என துணியிடமும் கல்லிடமும் நியாயம் வைத்தாள்.

இதற்கு மேலும் இவளை விட்டால் சத்தம் கேட்டு ஊரே வீட்டு வாசலில் கூடி விடும் என கிண்டலாக நினைத்தவன்,  “இந்தா எதுக்கு இப்ப சத்தம் போடுற? நாந்தான் தெரியாம ஏதோ பேசிப்புட்டேனா ஊருக்கே தம்பட்டம் அடிப்பியா?” என ஹாலில் அமர்ந்திருந்தவாறே அவளிடம் கேட்டான்.

“அப்பா! ஒரு வழியா ஐயா வாய்ல உள்ள முத்து உதிந்து போச்சு, ஆனா பேசினது தப்புன்னு ஸாரி மட்டும் வராது” என்றாள்.

“ஏட்டி வந்தேன்னு வையி!” அதட்டினான்.

“சும்மா சும்மா மிரட்டாதீங்க, வாங்க வந்துதான் பாருங்களேன்!” என்றவள் அவனது வேஷ்டியை கையில் பிடித்து கல்லில் தூக்கி போட்டு அடித்து துவைத்தாள்.

அனிச்சையாக தலையை பின்னுக்கு இழுத்துக் கொண்டவன், “ஆத்தாடி என்னையவே பயமுறுத்துறத பாரேன்!” என வாய் விட்டு சொன்னான்.

“தாட் பூட்ன்னு பேச்சுக்கும் ஆய் ஊய்ன்னு மிரட்டலுக்கும் எந்த பஞ்சமும் இல்லை! அட  பொண்டாட்டிகிட்ட ஒரு வார்த்தை மானே தேனேன்னு கொஞ்சி பேச வேணாம், இப்படித்தான் அராஜகமா பேசுவாங்களா? எனக்குத்தான் கேட்க ஆள் இல்லையே அந்த தைரியம்! இவரை நம்பி பெத்தவங்க நெனப்ப கூட தள்ளி வச்ச என்னை சொல்லணும்!” என அவள் கடுகாய் பொரிய, எழுந்து நின்றவன் இடுப்பில் கை வைத்து முறைத்தான்.

அடுத்து அவனது வெள்ளை சட்டையை கையில் எடுத்தவள் பிரஷ் கொண்டு காலரை தேய் தேய் என தேய்த்துக் கொண்டே, “எவ்ளோ அழுக்கு! உன்னை போடறவர் மனசு மாதிரியேவா? தாலி கட்டி மாசம் முடியலை, போன்னு சொல்றாரு! கட்டிக்கன்னா கட்டிக்கணும் போயிடுன்னா போயிடணும். எங்களுக்குனு தனியா மனசு ஆசை எந்த… எந்த…” என்றவள் பிரஷை அப்படியே கல்லில் வைத்து விட்டு தேம்ப ஆரம்பித்து விட்டாள்.

அவன் சொன்னதையே திரும்ப சொல்லிக் காட்ட நினைத்தவளால் அப்படி பேச முடியவில்லை.

அவன் சொன்ன வார்த்தை எல்லாம் அவனுக்கு சர்வ சாதாரணம், அந்தப் பகுதியில் எளிதாக பேசி விடுவார்கள். அவளுக்கு அது மோசமான வார்த்தை பிரயோகம், தாளவே முடியவில்லை. அதுவும் அவன் சொன்னதில் அடி பட்ட உணர்வு.

இப்படி அழுவது அவளது திட்டத்தில் இல்லை, அவளை மீறிக் கொண்டு கட்டுப்படுத்த முடியாமல் வந்தது. அழுவது பிடிக்கவும் இல்லை. கைகளில் முகம் பதித்துக் கொண்டு அழுதாள்.

அவன் தன்னை நோக்கி வந்ததை எல்லாம் அவள் கவனித்திருக்கவே இல்லை. அவளை அப்படியே இரு கைகள் கொண்டு அவன் தூக்கவும் பயத்தில் துள்ளினாள்.

“அக்கம் பக்கம் காதுல வுழுவுமேன்னு கூறு வேணாம்? மழை விட்டு கொஞ்சம் போல வெயில் தலை காட்டுது, அது பொறுக்கலையா உனக்கு? இந்த பேச்சுக்கு சூரியன் கூட மறைஞ்சு போச்சுடி, தரைல வுட்ட ஜிலேபி மீனாட்டம் என்ன துள்ளாட்டம் போடுற புள்ள நீ?” என கேட்டுக் கொண்டே உள்ளே வந்து விட்டான்.

படுக்கையில் அவளை உருட்டி விட்டவன், “தெரியாம பேசிப்புட்டேன், அதுக்கு நூறு மடங்கு அதிகமா நீ பேசிப்புட்ட புள்ள. ஸாரி சொல்லணும் அதானே? ஸாரி போதுமா?” எனக் கேட்டான்.

முகம் கன்றி சிவந்து, உலர்ந்து விட்ட தொண்டையோடு அவனை முறைத்துப் பார்த்தாள்.

“அதான் ஸாரி கேட்டுட்டேனே இன்னும் என்னடி வேணும்?” எனக் கேட்டான்.

“இனிமே எப்பவும் அப்படிலாம் பேசக்கூடாது, கடைசியா வுடுற மூச்சு நிக்கும் போது நீங்களே காட்டுக்கு அனுப்பி வைங்க, இடைல ஏதாவது பேசினீங்களோ…” என்றவள் தொண்டையை தடவிக் கொண்டாள்.

தாடை இறுக, மனம் அதிர அவளை பார்த்து நின்றவனிடம் ‘தண்ணீர் வேண்டும்’ என சைகை செய்தாள்.

நன்றாக மூச்சு இழுத்து விட்டுக் கொண்டே திரும்பி, ஜக்கில் இருந்த தண்ணீர் எடுத்து அவளிடம் கொடுத்தான். ஜக்கின் மூடி லூசாக இருந்திருக்க, அவள் பருகிக் கொண்டிருக்கும் போதே கொட கொட என அவள் முகத்திலும் உடம்பிலும் தண்ணீர் கொட்டி விட்டது.

அவளது நாசியில் நீர் ஏறி விட, இருமலும் திணறுலுமாக அவஸ்தை பட்டாள்.

அவள் முகத்தை குனிய வைத்து முதுகில் தட்டினான். உள்ளே சென்ற நீர் வெளியேறினாலும் நாசியில் நல்ல எரிச்சலை உணர்ந்தாள்.

சட சடவென மழை பொழியும் சத்தம் கேட்டது.

“ஹையோ துணி கெடக்கு!” என சொல்லி எழுந்தாள்.

“அது ஈரத்துலதான் கெடக்கு, கெடக்கட்டும், முத உன் ஈர துணிய மாத்து” என்றான்.

அவனை விலக்கி விட்டு எழுந்தவள், “நேத்து துவைச்ச துணி காயுது” என சொல்லி ஓட முயன்றாள். அவளை இழுத்து படுக்கையிலேயே விட்டவன், “இங்கேயே இரு!” என அதட்டி விட்டு அவனே போய் எடுத்து வந்தான்.

அவன் தலை ஈரமாகியிருக்க, “திரும்ப ஏதாவது இழுத்துக்க திட்டமா? தலையை துவட்டுங்க” என்றாள்.

துண்டு எடுத்து கடமையாக தலையை இரண்டு முறை ஒற்றி எடுத்தவன் துண்டை வைத்து விட்டான்.

“எது சொன்னாலும் கேட்க மாட்டீங்களா? துவட்டுங்க” என சொல்லிக் கொண்டே அவளே துண்டை எடுத்து நீட்டினாள்.

அவளின் கையை பிடித்து தன்னை நோக்கி சுண்டி இழுத்தவன், “எம்புட்டு பேச்சு? என்னாச்சு புள்ள உனக்கு?” எனக் கேட்டான்.

“நீங்க அப்படி பேசினதை சாதாரணமா எடுத்துக்க முடியலை, என்னை மீறி பேசிட்டேன்” என்றாள்.

“ அதென்ன பட்டுனு கடைசி மூச்சு அது இதுன்னு எல்லாம் சொல்லிப்புட்ட? என்ன வயசு உனக்கு? இன்னொரு தரம் இப்படி கடைசி மூச்சு பத்தி பேசுவியா? மாட்டேன்னு சொல்லு புள்ள!”

அப்படித்தான் சொல்வேன் என தலையாட்டியவள், “எல்லாருக்கும் கடைசி மூச்சுன்னு ஒன்னு இருக்கும்தான், யாரும் விதி விலக்கு இல்லை, அது எப்ப என்னன்னுதான் யாருக்கும் தெரியாது. ஏதோ சொல்லிட்டேன்னு அதையே புடிச்சுக்காதீங்க” என்றாள்.

“ஏதோ சொல்லிட்டியா அப்ப உணந்து சொல்லலியா?” என ஆழ்ந்தடர்ந்த குரலில் கேட்டான்.

“நிதானம் இழந்து நிக்கும் போது பேசுற எல்லாமே உள்ளுக்குள்ள ஒளிஞ்சு கெடக்கிற வார்த்தை” என்றாள்.

அவள் விழிகளை ஊடுருவிப் பார்த்தான்.

“நாளைக்கே எனக்கு கடைசி மூச்சு வந்திட போறதில்லை, அதுக்கு நெறைய காலம் கெடக்கு, அவ்ளோ காலமும் உங்களோட இப்படி சண்டை புடிச்சிகிட்டே வாழப் போறேன், ஓடி ஒளியல்லாம் முடியாது நீங்க” என்றாள்.

அவளை அணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தாலும் அவனுள் நிறைய தயக்கம். அவளின் நெற்றியோடு தன் நெற்றி முட்டி நின்றான்.

முதலில் திகைத்தவள் பின் புன்னகை செய்து, “இனிமே  அப்படிலாம் தப்பா பேசி இப்படிலாம் எங்கிட்டேருந்து வாங்கி கட்டிக்காதீங்க” என்றாள்.

ஒன்றும் சொல்லாமல் விலகியவன், “மழைய பார்த்தியா? வாய்க்கால்ல தண்ணி நிறைஞ்சு போயிடும், உபரித் தண்ணிய வடிகால்ல இறக்கணும், இந்த நேரம் ஆளுங்க அவ்வளவா இருக்க மாட்டாங்க, போய்ட்டு வாரேன்” என்றான்.

அவனது தோள்களை  அழுத்தி படுக்கையில் அமர வைத்தவள் துண்டால் அவனது தலை ஈரத்தை துடைத்து விட்டாள். தடுக்காமல் நெஞ்சம் நெகிழ அப்படியே அமர்ந்திருந்தான்.

துண்டை விலக்கி கைகள் கொண்டு அவனது சிகையை ஒதுக்கி சரி செய்து விட்டவள், “மழைல நனைஞ்சிடாம வேலை பார்க்கணும், இருட்டும் முன்ன என்கிட்ட வந்திடணும்” என அன்பாக கட்டளைகள் போட்டாள்.

‘வீட்டுக்கு’ என சொல்லாமல் ‘என்கிட்ட’ என்ற பதம் அவனை அவளிடம் வீழ்த்தியிருந்தது.

ஒரு வார்த்தை கூட அவளிடம் சொல்லாமல்தான் அவன் கிளம்பினான். அவனது மௌனம்தான்  தான் சொன்னதற்கு சரி என்ற பதில் என்பதை சரியாக விளங்கிக் கொண்டாள் சிவரஞ்சனி.

பால்கனியில் அவள் நின்றிருக்க, கீழே மழை கோட் போட்டு புல்லட்டில் ஏறியிருந்தவன் மேல் நோக்கி பார்த்து, அவளிடம் தலையசைத்து விட்டு புறப்பட்டான்.

கண் முன் விழும் மழைக்கோடுகளில் எல்லாம் அவளது பிம்பம் தெரிவது போலவே உணர்ந்தான்.