மொட்டவிழ்ந்த தேனரும்பே -11

அத்தியாயம் -11

சிவரஞ்சனியின் பெற்றோர் அஞ்சலகம் வந்த போது அலுவலர்கள் தவிர வேறு யாருமில்லை. வேலையும் முடிந்து விட்டதால் பின்னால் இருந்த இடத்துக்கு பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்று விட்டாள்.

மகளுக்கு பிடிக்கும் என மெதுவடை, பாயசம் என செய்து எடுத்து வந்திருந்தார் சுடர். சாப்பிட்டவள், தான் அங்கு நலமாக இருப்பதாகவும் எந்தக் குறையும் இல்லை, தன் கணவன் நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் அவர்களுக்கு சொன்னாள்.

“எங்கள மட்டும் பார்க்க விட மாட்டேங்குறாரே? நீ எங்க பொண்ணுதானே?” என ஆதங்கப்பட்டார் உத்தமன்.

“அவங்க ரொம்ப மன கஷ்டத்துல இருக்காங்கப்பா, இப்ப போய் இதை பேச முடியாது, அவங்க மனசு கொஞ்சம் சரியாகட்டும்” என மகள் சொல்ல, சுடர் ஏற்றுக்கொண்டாலும் உத்தமன்தான்  முகம் சுருக்கினார்.

“இந்தாய்யா… அவ நல்லா வாழறது முக்கியமா, இல்லை நீ அவளை சீராடறது முக்கியமா? உன்னாலதான் அவளுக்கு ஒரு கதையும் ஆவப் போறது இல்லைன்னுதான் கடவுளா பார்த்து அவளுக்கு நல்ல வாழ்க்கை அமைச்சு கொடுத்திருக்காரு, அவளை வாழவுடு” என கணவரை கடிந்து கொண்டார் சுடர்.

“எல்லாம் உன்னாலதான் டி! என்னைய குறை பேசாத” என மனைவியை திட்டினார் உத்தமன்.

“நடந்த எல்லாம் நல்லதுக்குதான், இல்லைனா நம்ம சிவா பெரிய வூட்டு மருமவ ஆகியிருக்க முடியுமா? என்னையவே சொல்லாத, இருந்த அம்புட்டு சொத்தும் உன்னாலதான் போச்சு” என்றார் சுடர்.

அம்மாவை அதட்டி அடக்கிய சிவா, அப்பாவையும் இப்படி பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டாள்.

“ஒரு விஷயம் முடிஞ்சு போச்சு, அதை மாத்த முடியாதுதானே, விட்டுட்டு அடுத்தது என்னன்னுதான் பார்க்கணும். கௌரிகிட்ட பேச சொன்னேனே என்னாச்சு?” என விசாரித்தாள் சிவா.

பல வருடங்களுக்கு முன் இந்தப் பகுதியில் வாழ்ந்த ஒருவன் இப்போது சென்னையில் இருக்கிறான். அவனுக்கும் சொக்கனுக்கும் நல்ல பழக்கமாம். கௌரியை அழைத்துக் கொண்டு அங்குதான் சென்றிருக்கிறான் சொக்கன். கோயில் ஒன்றில் வைத்து தாலியும் கட்டி விட்டானாம். சொக்கனின் நண்பன்தான் அவர்களுக்கு ஏதோ உதவிக் கொண்டிருக்கிறானாம்.

“உள்ளதை உள்ள படி சொல்ல மாட்டேங்குது  கழுதை, பத்திரமா இருக்கு அம்புட்டுதான், மத்தபடி பணத்துக்கு கஷ்ட படுது போல” என வருத்தப்பட்டார் உத்தமன்.

சுடருக்கு தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. பெரிய மகள் மீது கோவம் இருந்தாலும் கஷ்ட படுகிறாள் எனும் போது இயல்பாக இருக்க முடியவில்லை. இருந்தது அனைத்தையும் சிவாவுக்கே செய்து விட்டனர்.

“உதவி செய்யத்தான் நம்மகிட்ட என்ன இருக்கு, எல்லாம் அவளா இழுத்து போட்டுக்கிட்டதுதானே? ஆசை வைக்க வேற எவனுமே கிடைக்கலியா அவளுக்கு? அவ பாவம், அந்த பயதான் என்னமோ பேசி பண்ணி எம்புள்ளய மயக்கி கொண்டுட்டு போயிட்டான், படுபாவி!” என மூக்கு சிந்தினார் சுடர்.

“ம்மா! இது நம்ம வீடு இல்லை, அமைதியா இருங்கிறேன்ல?” என சொல்லி, அம்மாவின் கண்களை துடைத்து விட்டாள் சிவா.

முகத்தை அழுந்த துடைத்து விட்டுக் கொண்ட சுடர், “அது கெடக்கட்டும், ரெண்டு மூனு நாள் முன்னாடி விருந்துக்கு போனப்போவும் நேத்தும் உன்னையும் உன் ஆம்படையானையும் பக்கத்தூட்டு அம்புசம் பார்த்தாளாம். உங்களை பார்க்க ரெண்டு கண்ணு போதாதுன்னு சொன்னா, மோசமான கண்ணுடி அவளோடது, அதான் மாட்டுக்கு முடியாம போயிருக்கு, உங்களுக்கும் ஆவாம போயிடுச்சு.  உன் மாமியாகிட்ட சொல்லி மண் எடுத்து சுத்தி போட சொல்லுடி” என்றார் சுடர்.

சிவா சன்னமாக சிரிக்க, “ஆயி நெசத்துக்கு சொல்லு, நல்லாருக்கதானே அங்குட்டு?” எனக் கேட்டார் உத்தமன்.

சிவா ஏதும் சொல்லும் முன், அவளுடன் வேலை பார்க்கும் இன்னொருவர் இவளை தேடிக் கொண்டு வந்தார்.

“உன்னை தேடிகிட்டு உன் ஹஸ்பண்ட் வந்திருக்காரு ம்மா” என அவர் தெரியப் படுத்தவும், நெஞ்சில் கை வைத்து அதிர்ந்தாள் சிவா.

“என் பேரெண்ட்ஸ் வந்திருக்கிறது சொல்லலைங்களே ஸார்?” எனக் கேட்டு அவர் குழப்பத்தோடு மறுப்பாக தலையாட்டவும், “நான் அப்பறம் ஃபோன்ல பேசுறேன், நானே கூப்பிடுவேன், நானும் அவரும் கிளம்புற வரை இங்கேயே இருங்க” என சொல்லி ஓடிச் சென்றாள் சிவா.

சுடர் லேசாக எட்டிப் பார்க்க, அவரின் தோளிலேயே அடி வைத்து இழுத்து நிறுத்திய உத்தமன், “சிவா சொன்னது புத்தியில உரைக்கல, சும்மான்னு நில்லுடி” என பற்களை கடித்துக் கொண்டு சொன்னார்.

ருத்ரன் அஞ்சலகம் உள்ளேவெல்லாம் வரவில்லை. வாயிலில் வைத்தே சிவா எங்கே எனக் கேட்டவன் வெளியிலேயேதான் காத்திருந்தான்.

மனைவி வரவுமே, “எங்குட்டு போயிட்ட புள்ள? வேலையெல்லாம் முடிஞ்சுதா? போலாமா?” எனக் கேட்டான்.

“என்னைய கூப்பிடவா வந்தீங்க?” என ஆச்சர்யமாக கேட்டாள்.

“பொறவு இங்குட்டு எனக்கு வேற யாரை தெரியும்?” எனக் கேட்டான்.

“இதோ சொல்லிட்டு வந்திடுறேன்” என சொல்லி உள்ளே சென்றாள்.

அவள் வரும் போது மற்ற அலுவலர்களும் வந்துவிட்டனர். அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள். அக்காவுக்கு பார்த்த மாப்பிள்ளை தான் மாறிப் போய் இவளுக்கு கணவனாகி விட்டான் என்ற கதையெல்லாம் அவர்களுக்கு தெரியும். சங்கடமாக ஏதும் கேள்வி கேளாமல் வாழ்த்துகளை மட்டும் சொன்னார்கள்.

அனைவரையும் பொதுவாக  வீட்டுக்கு வரச் சொல்லி  அழைத்தவன், சிவாவுக்கு கண்கள் காட்டி முன்னே நடந்தான். பின் பக்கம் தன் பெற்றோர் இருக்கும் இடத்தை பார்த்து விட்டு கணவன் பின்னால் நடந்து சென்றாள் சிவா.

ருத்ரன் புல்லட்டை எடுக்க, ஆதரவுக்கு அவனது தோளை பற்றிக் கொண்டு ஏறி அமர்ந்து கொண்டாள். அவளின் துப்பட்டா காற்றில் பறக்க, “சரியா இழுத்து புடி!” என்றான்.

அவள் துப்பட்டாவின் இரண்டு முனைகளையும் சேர்த்து முடிச்சிட்டுக் கொள்ளவும் வண்டியை எடுத்தான்.

மகனும் மருமகளும் சேர்ந்து வரவும் வள்ளிக்கு அத்தனை மகிழ்ச்சி, சாப்பிடும் போதும் இருவருக்கும் தனிமை கொடுத்து அறைக்கு சென்று விட்டார். அவன் ஏதும் பேசாமல் சாப்பிட, அவள் விடுவதாக இல்லை.

“அந்தப் பக்கம் ஏதும் வேலையா வந்தீங்களோ?” என ஆரம்பித்தாள்.

“என்ன… எந்த பக்கம்?” எனக் கேட்டான்.

“போஸ்ட் ஆஃபிஸ் பக்கம்”

“உன்னை கூப்பிடுற வேலையாதான் வந்தேன்”

தலை குனிந்து கொண்டு சிறு மலர்வோடு “தேங்க்ஸ்!” என்றாள். அவன் தலையாட்டிக் கொண்டான்.

“பஸ்ஸுக்கு வெயிட் பண்ணி வீடு வந்து சேருறத்துக்குள்ள பசியே மறத்து போயிடும், வந்த உடனே அக்கடான்னு படுத்திடுவேன், அப்புறம் சாப்பிட மூன்றரை நாலு மணி ஆகிடும்னு வைங்களேன். இன்னிக்கு உங்க புண்ணியத்துல நேரத்துக்கு சாப்பிடுறேன்” என்றாள்.

“என்னதான் சோர்வா இருந்தாலும் யாரும் வயித்துக்கு துரோகம் பண்ணுவாகளா? நல்ல புள்ள நீயி!” என்றான்.