மொட்டவிழ்ந்த தேனரும்பே -10

அத்தியாயம் -10

சிவரஞ்சனியுடன்  இருக்க சங்கடப் பட்டுக் கொண்டுதான் கீழே வந்தான் ருத்ரன். அங்கே பிறை அவளது மாமனாரிடம் தன் கணவனுக்கு உண்டான பொறுப்புகளை கொடுப்பதில்லை என சொல்லியிருப்பாள் போலும்.

கலையரசனுக்கு கொடுத்த வேலைகளை பொறுப்பில்லாமல் பாதியில் விட்டு அதனால் ஏற்பட்ட நஷ்டங்களையும் அதை சரி செய்ய ருத்ரன் இரு மடங்கு நேரம் செலவிட வேண்டி இருந்ததையும் சுட்டிக் காட்டிய தனராஜன், “நாங்களும் அவனை செம்மை படுத்தத்தான் மெனெக்கெடுறோம், விஷயம் தெரியாம குடும்பத்துல குழப்பம் ஏற்படுத்துற மாதிரி பேசாத ஆயி” என்றார்.

“உங்க பையன் ஒன்னும் பச்ச புள்ள இல்லையே மாமா, முன்னாடி நடந்துகிட்டத வச்சு இப்ப வரை அவரை வேலையாள் மாதிரியே நடத்தினா சரியா? இதோ சின்ன அத்தை பெரியத்தைக்கு வேலைக்காரியா இருக்க மாதிரி என் புருஷனை ருத்ரன் மாமாவுக்கு வேலைக்காரனா இருக்கணும், அதானே உங்க விருப்பம்?” என கேட்டு விட்டாள்.

இப்போதுதான் கல்லூரிப் படிப்பை முடித்த சின்னப் பெண். எத்தனை அனர்த்தமாக பேசி விட்டாள்? என அனைவரும் அதிர்ந்து விட்டனர். பாட்டி கூட திகைத்துதான் போனார்.

கலையரசன் வீட்டிலே இல்லை, அவன் இருந்திருந்தால் இப்படி அநியாயமாக பேசாதே என கண்டித்திருப்பான். கணவனுக்கு பயந்தவள் இல்லை என்றாலும் குறைந்த பட்சம் ஒரு உறுத்தலாவது அவளுக்கு ஏற்பட்டிருக்கும்.

திறமையற்ற மகனை நினைத்து ஏற்கனவே வேதனை பட்டுக் கொண்டிருக்கும் தனராஜன், மருமகளுக்கு விளக்கம் சொல்லாமல் அவள் சொல்லும் அபாண்டமான முறையில் அல்லாமல் தன் மகன் ஒன்றுக்கும் ஆகாமல் போய் விடுவானோ என்ற பயத்தில் அமர்ந்து விட்டார்.

விவசாயத்தை குடும்பத் தொழிலாக கொண்டவர்கள் நேரம் காலம் பாராமல் உழைக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் பயிரின் வளர்ச்சியை நுணுக்கமாக கவனித்து அதற்கு ஏற்ப செயல்பட வேண்டும். நெல், உளுந்து, எள் என பயிர் செய்து விளைவிக்கிறார்கள். அதை தவிர ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்பு உள்ளது.

 எந்தக் காலத்தில் என்ன பயிர் செய்வது, விளைந்த பயிர்கள் எப்படியெல்லாம் விற்பனைக்கு போகிறது, வியாபாரத்தின் நேக்கு போக்குகள், இத்தனை சதுர அடி நிலத்தில் விவசாயம் செய்ய எத்தனை ஆட்கள் தேவை, ஆட்களிடம் எப்படி வேலை வாங்குவது என எல்லாமே தெரிந்திருக்க வேண்டும்.

எத்தனை பார்த்து பார்த்து எல்லாம் செய்தாலும் இயற்கையின் கொடை இல்லா விட்டால் தலைகீழாக  மாறிப் போகும். இதோ இப்போது தொடர்ந்து பெய்யும் இந்த கன மழையை முன்னரே எதிர் பார்த்திருந்தான் ருத்ரன். அதற்கு ஏற்றபடிதான் விவசாயத்தையும் திட்டமிட்டிருப்பான்.  சரியான கணிப்பும் திட்டமிடுதலும் விவசாயத்திற்கு அடிப்படை.

அப்படியும் எதிர்பாராமல் நிகழும் இயற்கை சீற்றங்கள் திருப்புமுனையை ஏற்படுத்தி விடும், கலங்காமல் சமாளிக்கும் மன உறுதி வேண்டும்.

ஒன்று லாபம் பார்த்தால் இன்னொன்று நட்டமாகும். எதில் பணம் போட வேண்டும் எதில் எடுக்க வேண்டும் என்பதெல்லாம் எந்த ஏட்டுக் கல்வியும் சொல்லித் தராது. அனுபவம் மட்டுமே கற்றுத் தரும்.

பதினைந்து வயதில் தாத்தாவோடு வயலில் இறங்கியவன்  ருத்ரன். மண்ணின் வாசத்தை வைத்து அதன் வளத்தை சொல்லி விடுவான். கலையரசனோ சொன்னதையே சரியாக செய்ய மாட்டான். அவனுக்கு விவசாயம் சரியாக வராது என்பதுதான் ருத்ரனின் கணிப்பு.

அதை வெளிப்படையாக சொல்லி விடவும் முடியாது, ஏக்கர் கணக்கில் நடக்கும் விவசாய தொழிலை நீ மட்டுமே பார்க்கலாம் என நினைக்கிறாயா என கேட்டு விட எத்தனை நேரமாகும்? அப்பா இறந்த போதே நட்டத்திற்கு அவர் மட்டுமே காரணம் என சட்டென பேசியவர்கள்தானே?

யாருக்கு என்ன என்றெல்லாம் பிரித்தாகி விட்டது, சித்தப்பாவுக்காக அவருடையதையும் சேர்த்தே ருத்ரன் பார்க்கிறான், அதனால் அவனுக்கு எந்த லாபமும் கிடையாது, பார்க்க வேண்டாம் என்றால் தனக்கானதில் இன்னும் கவனம் செலுத்திக் கொண்டு போய் விடுவான்.

பிறை சின்னப்பெண் தானே? அவளுக்கு இதெல்லாம் புரியவில்லை, என்னவோ ருத்ரனே அனைத்தையும் பார்த்துக் கொண்டு அதிகாரத்தோடு திரிகிறான்  என்ற அளவிலேயே புரிந்து வைத்திருந்தாள்.

இந்த நேரம் ஏனடா இங்கு வந்தோம்? என ருத்ரனுக்கு தோன்றி விட்டது. வள்ளி இந்த உரையாடலில் கலந்து கொள்ளவே இல்லை. சொந்தங்கள் என பார்த்ததெல்லாம் போதும், என்ன பேச்சு பேசுகிறாள், யாருக்கு வேலைப் பளு, யார் சொகுசாக சுற்றுவது என்றெல்லாம் தெரியாதா? அவர்களின் மருமகள்தானே, சமாளிக்கட்டும் என பட்டுக் கொள்ளாமல் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தார்.

மகனை கண்டதும், “என்னப்பா ஏதும் வேணுமா?” எனக் கேட்டார் வள்ளி.

“சுடு தண்ணி தீந்து போச்சு ம்மா, போட்டு வை, ஃபிளாஸ்க் எடுத்திட்டு வர்றேன்” என சொல்லி மாடிக்கு சென்று விட்டான் ருத்ரன்.

தங்கள் திருமண புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்த சிவா, “என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க? போன வேலை ஆச்சா?” என கிண்டலாக கேட்டாள்.

அமைதியாகவே ஃபிளாஸ்க்கில் இருந்த சுடு தண்ணீரை பருகி முடித்தவன், அவளையே கீழே போய் தண்ணீர் எடுத்து வரச் சொல்லி அனுப்பினான்.

ருத்ரன் தண்ணீர் கேட்கவுமே சமையலறை சென்று தண்ணீர் காய வைத்திருந்தார் செங்கமலம். இப்போது சிவா வரவும் அவரே ஊற்றிக் கொடுத்தார்.

“பார்த்தீங்களா மாமா, இப்ப வந்த இவளுக்கு கூட அத்தைத்தான் சேவகம் செய்ய வேண்டியதா இருக்கு” என தன் மாமனாரிடம் சொன்னாள் பிறை.

“இந்தாடி உன் கதை என்னங்கிறது மட்டும் சொல்லு, என் மருமவள எதுக்கு இழுக்கிற? உன் புருஷனுக்கு அண்ணன் ருத்ரன், அவன் பொண்டாட்டி இவ, உன்னை விடவும் வயசும் கூட, அக்கான்னு சொல்லி பேச தெரியலை, வெட்டி நியாயம் சொல்ல வந்திட்ட” என சத்தம் போட்டார் வள்ளி.

தன்னை ‘இவளுக்கு’ என பிறை சொன்னது சிவாவுக்கும் சுருக் என்றுதான் இருந்தது. அதை தவிர இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என எதுவும் அவளுக்கு புரியவில்லை, தனராஜனுடன் எல்லாம் அவள் பேசவே ஆரம்பித்திருக்கவில்லை. என்ன எதிர்வினை ஆற்ற என தெரியாமல் அமைதியாகவே இருந்தாள்.

தன் அண்ணிக்கும் தன் மனைவிக்கும் இடையில் உள்ள பிணைப்பு என்ன என்பதை தனராஜன் அறிவார். உடன்பிறந்த சகோதரி போலத்தான் இருவரும் பாவித்துக் கொள்கிறார்கள். இப்போதும் செங்கமலத்திடம் எந்த வேலையையும் ஏவவில்லை வள்ளி, அவராகத்தான் சென்றார்.

செங்கமலத்துக்கு கலையரசனுக்கு முன் ஒருத்தி பின் ஒருத்தி என  இரண்டு சகோதரிகள் இருக்கிறார்கள். செங்கமலம் வசதியான வீட்டு பெண் என்றாலும் அம்மா இல்லாதவர், அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டவர். ஆகவே செங்கமலத்தின் மூன்று பிரசவங்களும் புகுந்த வீட்டில்தான் நடந்தது.

“தாயில்லாத பெண்ணை எடுக்க வேணாம்னு சொன்னா கேட்டியளா? என் பிராணன்ல போவுது!” என மங்களத்தம்மாள் நன்றாக வசை பாடுவார். செங்கமலத்துக்கு தைரியம் சொல்லி கூடவே இருந்து பார்த்தது எல்லாம் வள்ளிதான்.

இப்படி பிறை பேசுவது அபாண்டம் என மங்களத்தம்மாளுக்கே புரியும். அவரின் காதில் இந்த பேச்சுக்கள் விழவில்லை.

ஆனால் சிவரஞ்சனி சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவள் என தனராஜனின் பார்வையில் அவள் குறைவாக தெரிந்தாள். அவளுக்கு என் மனைவி வேலை பார்ப்பதா என்ற எண்ணம் தலை தூக்க, குழப்பத்தில் இருந்தவர் நிதானத்தை கை விட்டார்.

“இந்தா உனக்கு வேணுங்கிறத நீயே செஞ்சுக்க, பெரியவுகளை வேலை வாங்காத” என சிவாவிடம் சொல்லி விட்டார்.

‘நான் எங்கே அத்தையிடம் கேட்டேன், அவராகத்தானே செய்தார்’ என சிவாவின் தொண்டை வரை வந்து விட்டது. ஊர்ப் பெரியவர், பிரசிடென்ட் என்ற ஹோதாவோடே அவரை பார்த்து பழகியவளுக்கு பட்டென அப்படி பேச வரவில்லை.

வள்ளிக்கு சுர் என கோவம் வந்து விட்டது. சிவாவின் கையிலிருந்த ஃபிளாஸ்க்கை வெடுக் என பிடுங்கியவர் செங்கமலம் ஊற்றிக் கொடுத்த தண்ணீரை வேறொரு பாத்திரத்துக்கு மாற்றிக் கொண்டே, “யாருக்கும் ஏதும் செய்ய முடியாம இல்லை, எல்லாரும் பிரிவினையைத்தான் ஆசை படுறீங்கன்னா எனக்கு என் மவனுக்கு மருமவளுக்குனு யாருக்கும் எந்த ஆச்சேபனையும் இல்லை” என பேசினார்.

அவசரத்தில் வாய் விட்டு விட்ட தனராஜனுக்கு உடனேயே தன் தவறு விளங்கி விட்டது. எப்படி சரி செய்வது எனதான் தெரியவில்லை. செங்கமலமோ தன் கணவரை கண்டனமாக பார்த்துக் கொண்டு, கோவத்தில் இருக்கும் அக்காவை அணுக முடியாமல் கவலையாக நின்றிருந்தார்.

‘விரைவாக இங்கிருந்து சென்று விட்டால் தேவலை’ என நினைத்துக் கொண்டாள் சிவா.