அத்யாயம் 31:

வீட்டிற்கு வந்த வேதா,அங்கே விஜயின் காரை காணாமல் திகைத்தாள்.

‘சரண் அண்ணா வீட்டுக்குப் போறதாத் தான சொன்னான். இங்க வந்து பார்த்தா காரைக் காணோம்?’ என்று யோசித்தபடியே உள்ளே சென்றாள்.

அங்கே கீர்த்தனா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தாள்.

“அண்ணி” என்றவளின் குரலில் நிமிர,

“என்னாச்சு வேதா? என்ன இந்த டைம்ல? காலேஜ் முடிய இன்னும் டைம் இருக்கே” என்றாள் கீர்த்தனா.

“விஜய் சார் வீட்டுக்கு வரலையா?” என்றாள்.

“சரணும் கால் பண்ணி சொன்னார். ஆனா அண்ணா வரலை வேதா” என்றாள் கீர்த்தனா.

“கிளம்புன நேரத்துக்கு இந்நேரம் வீட்டுக்கு வந்திருக்கனுமே? போன் வேற ஸ்விட்ச் ஆப்னு வருது” என்றாள் பதட்டம் கலந்த குரலில்.

“வேதா ரிலாக்ஸ். அண்ணா என்ன சின்ன குழந்தையா? நீ இவ்வளவு பதட்டப்படுற? வந்துடுவான். ஏதாவது வேலையா போயிருப்பான்” என்றாள் கீர்த்தனா.

“இல்லண்ணி, இன்னைக்கு அவர் முகமே சரியில்லை. என்னமோ பிரச்சனைன்னு நினைக்கிறேன்” என்றவள்,

“நான் உள்ள வரும் போது நீங்க ஏன் டென்ஷனா இருந்திங்க? எங்க அந்த யாழினியும் அவங்க அம்மாவும்?” என்றாள்.

“எங்க இருப்பாங்க? எல்லாம் இங்க தான் இருக்காங்க. கிளம்ப சொன்னா சட்டம் பேசுறாங்க வேதா. என்னோட கோபமெல்லாம் நீலா அத்தை மேல தான். அவங்க தான் இவங்களை நல்லா ஏத்தி விட்டுட்டு போயிருக்காங்க. உங்க கல்யாணம் எப்படி நடந்ததுன்னு முதற்கொண்டு எல்லாத்தையும் சொல்லிட்டு போயிருக்காங்க. உடனே அந்தம்மா ஓவரா ஆடுது. மக அதுக்கு மேல” என்றாள் கீர்த்தனா.

“நீலாம்மா கடைசி வரைக்கும் திருந்த மாட்டாங்க அண்ணி. நீங்க இதெல்லாம் நினைச்சு வொரி பண்ணிக்காதிங்க. இப்போ நீங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும். சாப்பிட்டிங்களா?” என்றாள் வேதா.

கீர்த்தனா கண் கலங்க,

“என்னாச்சு அண்ணி?” என்றாள் கவலையாய்.

“விஜய் அண்ணா வாழ்க்கையில இருக்குற கொஞ்ச நஞ்ச நிம்மதியையும் இவ பறிக்காம போக மாட்டா போல வேதா” என்றாள்.

“நான் பார்த்துக்குறேன் அண்ணி” என்றாள் வேதா.

‘இதுக்குமேல அவங்களை இங்க இருக்க விட்டா அது தேவையில்லாத பிரச்சனை தான்’ என்று நினைத்தவள்,

அவர்கள் இருந்த அறையில் சென்று பார்க்க, அங்கே அவர்களைக் காணவில்லை.

“எங்க அண்ணி ஆளைக் காணோம்?” என்றாள்.

“அந்தம்மா அமுதாம்மா ரூம்ல இருக்காங்க. அவ..” என்று கீர்த்தனா தயங்க,

“அவ” என்றாள்.

“அவ விஜய் அண்ணா ரூம்ல இருக்கா வேதா. நானும் எவ்வளவோ திட்டிப் பார்த்துட்டேன். கொஞ்சம் கூட சூடு சொரணையே இல்ல” என்றாள் கீர்த்தனா.

அவ்வளவு தான். அவ்வளவு நேரம் இருந்த பொறுமை,தன்மை எல்லாம் பறந்து விட்டது வேதாவுக்கு.

வேகமாய் விஜயின் அறைக்கு செல்ல, அங்கே அவள் கண்டது விஜயின் கட்டிலில் காலை ஆட்டியபடி படுத்திருந்த யாழினியைத் தான்.

“ஏய்?” என்று சொடக்கிட்டு அழைத்தாள். அந்த நேரத்தில் வேதாவை எதிர்பார்க்காத யாழினி திகைத்து பின் அசட்டையாய் எழுந்தாள்.

“வெளிய போ” என்றாள் வேதா.

“நான் ஏன் வெளிய போகணும்? இது என் விஜய் மாமா ரூம்” என்றாள் தெனாவெட்டாய்.

“மாமா நோமான்னு சொல்லிட்டு திரிஞ்ச மவளே பேசுறதுக்கு வாய் இருக்காது” என்று அவளை வெளியே தள்ளி வந்து கதவை இழுத்து அடைத்த வேதா.

“மேனர்ஸ்னா என்னன்னு தெரியுமா உனக்கு?” என்றாள்.

“ஏய்? என்னை வெளிய தள்ளி கதவை சாத்த நீ யாருடி?” என்றாள் யாழினி.

“ஏன்? நான் யாருன்னு உனக்குத் தெரியாது? கெஸ்ட்டா வந்தா கெஸ்ட் ரூமோட போயிடனும். அதை விட்டுட்டு பெட்ரூம் பக்கம் எட்டிப் பார்க்குற வேலையெல்லாம் வச்சுகிட்டா, கழுத்தைப் பிடிச்சு வெளிய தள்ள வேண்டியதா இருக்கும். எப்படி வசதி?” என்றாள் வேதா.

“இந்த ஜென்மத்துக்கு அதெல்லாம் எங்க இருந்து புரிய போகுது வேதா?” என்றாள் கீர்த்தனா.

“சும்மா நிறுத்துங்க. என் மகளை பேசுறதுக்கு நீங்க யாரு?” என்று வரிந்து கட்டிக் கொண்டு வந்தார் விஜயின் அத்தை.

“ஏன்? அம்மாவுக்கும் பொண்ணுக்கும் அம்னீசியாவா? நான் யாருன்னு மறந்து போயிடுச்சா இல்ல மறந்த மாதிரி நடிக்கிறிங்களா?” என்றாள் வேதா.

“அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு. நீ தாலி கட்டிட்டு வந்த லட்சனம் தான் தெரியுமே?தாலியை அவன் தான் கட்டுனானா? இல்ல கட்டுனேன்னு சொன்ன உடனே நம்பிட்டு வந்துட்டியா? இந்த வீட்டு மருமகளா வர்றதுக்கு ஒரு தகுதி தராதரம் வேண்டாம்” என்றார் நக்கலாய்.

சட்டென்று கலங்கிய மனதை அடக்கியவள்,

“எப்படி? ஒருத்தனை லவ் பண்ணி ஏமாத்தி,கல்யாணம் பேசி அவனையும் ஏமாத்தி ஓடிப் போயி மறுபடியும் இன்னொருத்தி புருஷனை வந்து உரிமை கொண்டாடுற உங்க மகளை விட நான் எந்த விதத்துலையும் தரம் குறைஞ்சி போயிடலை. தகுதி தராதரத்தைப் பத்தியெல்லாம் யாரு பேசுறதுன்னு ஒரு விவஸ்தையே இல்லாம போய்டுச்சு” என்றாள் வேதா கடுமையான குரலில்.

“வார்த்தையை அளந்து பேசு. நீ மட்டும் என்ன பெரிய யோக்கியமா? ஏற்கனவே நிச்சயமாகி, அவனை விரும்பி மேடை வரைக்கும் போய் கல்யாணம் நின்னவ தான.” என்றாள் யாழினி நக்கலாக.

“அதுமட்டுமா? மேடைக்கு போறதுக்கு முன்னாடியே பெத்தவளையும் சேர்த்து அத்தனை உசிரை காவு வாங்கியிருக்க.  எந்த நேரத்துல இங்க காலடி எடுத்து வச்சியோ, முடியாமன்னாலும் உயிரோட இருந்த எங்கண்ணி உயிரையும் காவு வாங்கியாச்சு. இன்னும் என்னனென்ன பண்ண காத்திருக்கியோ?” என்றார் நாக்கில் நரம்பில்லாமல்.

எவ்வளவு தைரியமாக பேசினாலும், நடந்த விபத்து கண்முன் வந்ததில் கண்ணீரும் இப்பவோ அப்பவோ என்று கீழே வரத் தயாராய் இருந்தது.

“வார்த்தையை அளந்து பேசுங்க. அமுதாம்மாவை படுத்த படுக்கை ஆக்குனதே நீங்களும் உங்க மகளும் தான். உங்க வசதிக்கு எல்லாத்தையும் மாத்தி பேசிட்டு இருக்கீங்க?” என்று கத்திய கீர்த்தனா,

“விஜய் அண்ணா அப்பவே சொன்னான். இவங்களை உள்ள விட வேண்டாம்னு. கேட்டியா நீ? இது தான் இவங்க ஒரிஜினல் முகம்” என்றாள் கீர்த்தனா.

“எங்களை உள்ள விடுறதுக்கு இவ யாரு? இது என் மாமா வீடு. இங்க வர யாரோட அனுமதியும் தேவையில்லை. நான் வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போன வாழ்க்கையைத் தான் இவ தூக்கி வச்சிருக்கா” என்றாள் யாழினி.

கண்கள் கலங்கியிருந்தாலும் அவளை தீர்க்கமாய் பார்த்தாள் வேதா.

“ஆமா, நீ  வேண்டாம்னு தூக்கிப் போட்டுட்டு போன பொக்கிஷம் தான். நான் வேண்டாமா எனக்கு கிடைச்ச பொக்கிஷம் தான் விஜய். எனக்குத் தெரியாம கூட தொலைச்சிட மாட்டேன்” என்றாள் உணர்வுக் குவியலாய்.

“அண்ணா..!!!” என்ற கீர்த்தனாவின் குரலில் வாயிலைப் பார்க்க, வாசல் கதவில் கையை கட்டி சாய்ந்தபடி நின்றிருந்தான் விஜய். அவனை அங்கு பார்த்ததும் அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரும் உடைப்பெடுக்க,

“கண்ணீர் வெளிய வந்துச்சு தொலைச்சுடுவேன்டி உன்ன” என்றவனின் அதட்டல் குரலில் திகைத்து விழிக்க, அவளின் தவிப்பை உணர்ந்தவன்,

“வா” என்பதைப் போல் கைகளை விரிக்க, அடுத்த நிமிடம் வில்லில் இருந்து சென்ற நாணாய் அவனை அடைந்திருந்தவளை இறுக அணைத்துக் கொண்டான். தவிப்பு ஆதங்கம் எல்லாம் குமுறலாய் வெளிவர,அவனின் நெஞ்சத்தை கண்ணீரால் நிரப்பிக் கொண்டிருந்தாள்.

அவளின் முகத்தை நிமிர்த்தியவன்,

“திரும்பவும் சொல்றேன், அழுதா உன்னை தொலைச்சிடுவேன்டி” என்றான் மீண்டும் கண்டிப்புடன்.

“மாமா..!” என்று வந்த யாழினி அவன் கையைப் பிடிக்க, அவ்வளவு தான் தேக்கி வைத்திருந்த பொறுமையெல்லாம் காற்றோடு போனது அவனுக்கு. ஓங்கி அவன் அறைந்த அறையில் ஓரம் சென்று விழுந்திருந்தாள்.

“தொட்டுப் பேசுற வேலையெல்லாம் வச்சுகிட்ட மரியாதை கெட்டுடும்” என்று மிரட்டியவன்,  கோபத்தில் மீண்டும் கையை ஒங்க,

“வேண்டாங்க” என்று தடுத்துவிட்டாள் வேதா.

“ஆமாண்ணா, இவளை அடிச்சு உங்க கையை ஏன் கறை படுத்திக்கிறிங்க?” என்று கீர்த்தனாவும் தடுத்துவிட்டாள்.

“அவளுக்கு இல்லாத உரிமை இங்க யாருக்கு விஜய்?” என்று எகிறிக் கொண்டு வந்தார் அவனின் அத்தை.

“அந்த உரிமை எல்லாம் என் பொண்டாட்டியைத் தவிர வேற யாருக்குமில்லை. நீங்க யாரு எனக்கு? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?” என்றான் கோபமாய்.

“விஜய் நான் உனக்கு ஒரே அத்தை. ஒரே ரத்தம்” என்று அவர் கண்ணீர் வடிக்க,

“எனக்கு எந்த ரத்தமும் தேவையில்லை. அதுலயும் இப்படி ஒரு கேடுகெட்ட ரத்த பந்தம் தேவையே இல்லை. என்னை வேண்டாம்னு சொல்லி அவன் கூட போனா. இப்போ அவன் பிள்ளைக்கு என் பேரை இன்ஷியல் ஆக்க ட்ரை பண்றிங்களா?” என்றான் ஆத்திரம் அடங்காத குரலில்.

அத்தையும் யாழினியும் அதிர்ந்து முழிக்க,

“அட அற்ப பதரே” என்பதைப் போல் பார்த்து வைத்தனர் கீர்த்தனாவும், வேதாவும்.