முன்னாடி ஆரவாரத்தோட பொண்ணையும் பையனையும் மணமக்களா கட்டுவிக்கிற மங்களமான சடங்கு. அது அப்படியே ஆம்பளைங்கள இடிச்சு சொல்ற மாதிரி மாறிப் போச்சு” என்றான்.

“அப்பாடியோவ்! நல்ல விஷயாதிதான் நீங்க, எங்க படிச்சீங்கலாம் இதை?”

“ஐயா சொன்னது”

“அதெல்லாம் சொல்லி கொடுத்தவரு ரூபா நோட்ட எண்ணுறத மட்டும் சரியா சொல்லி தரலையா?” எனக் கேட்டாள்.

திருமணத்துக்கு அடுத்த நாள் தான் பணம் எண்ணுவதை பார்த்து விட்டு சொல்கிறாள் என்பதை புரிந்து கொண்டவன், “நல்லாத்தான் நோட்டம் விட்ருக்க என்னைய” என்றான்.

“அப்புறம் நாள் பூரா உங்க பக்கத்திலேயே இருந்தா பார்க்கத்தான் செய்வேன்” என்றாள்.

“ஆமாம் பெரிய அழகன்தான் நான், ரொம்ப பார்க்காத, கடுப்பாகிட போவுது”

“ம்ம்… கட்டிகிட்டவளுக்கு புருஷன் அழகனாத்தான் தெரிவான், நீங்களே உங்களை குறைச்சு பேசாதீங்க” என்றாள்.

அவனுக்கு என்ன சொல்லவென தெரியவில்லை, குரலை செருமிக் கொண்டான்.

“ஹ்ஹ்ஹான்… வந்து… ஜுரம் விட்டுச்சா இப்ப நல்லாருக்கீங்கதானே?” என உரையாடலை இலகுவாக்க பார்த்தாள்.

உடம்பு சரியாகி விட்டதா என அவனுக்கு தெரியவில்லை ஆனால் மனம் தெளிவை நோக்கி செல்வது போலிருந்தது. அவளருகில் இருப்பது இதமாக இருந்தது.

தேநீர் நேரம் வந்து விட்டதால் கீழே மாடிப் படி அருகில் நின்று சிவாவின் பெயரை சொல்லி கூப்பிட்டுக் கொண்டிருந்தார் வள்ளி.

சிவா விரைந்து ஓடவும், “ஏய் பதுக்க போ, எதுக்கு வேகம்?” என்றான்.

எங்கே காதில் வாங்கினாள், ஓடித்தான் சென்றாள்.

 இருவருக்கும் தூதுவளை சூப் கொடுத்த வள்ளி, “மேல ஏறி இறங்க முடியலை, வைதேகி இன்னும் ரெண்டு நாள் இருந்திட்டு போயிருக்கலாம், மாப்ள விடாப்பிடியா அழைச்சிட்டு போயிட்டாரு. ம்ம்… அவளும் அவ குடும்ப பொழப்ப பார்க்கணுமே” என்றார்.

“ஸாரி அத்தை, பேசிட்டே இருந்தோமா, நேரத்தை கவனிக்கல நான், இல்லைனா நானே கீழே வந்திருப்பேன்” என்றாள் சிவா.

“ஐயோ ஆயி! தங்கமா பேசிட்டு இரு அவனோட, அவனை நல்லா பார்த்துகிட்டா போதும் எனக்கு. சின்னதிலிருந்து எந்த விதத்திலேயும் சுகபடாதவன், அவன் அப்பாரு அவனுக்கு விட்டுட்டு போனதெல்லாம் கடனும் அகலக்கால் வச்ச குடும்பம்ங்கிற பேரையும்தான். கடனை அடைக்கவும் குடும்ப பேரை மீட்கவும் உடம்பை உருக்கி உழைச்சவன். அவன் கல்யாண விஷயத்துல சொந்தத்த நம்பி நானும் ஏமாந்து போயிட்டேன், இந்த மாசி வந்தா அவனுக்கு வயசு முப்பத்தி மூனு, இல்லைனா எப்பவோ கைல புள்ளைய தூக்கிருப்பான். இப்ப கூட மனசு எம்புட்டு துவண்டு போய் கெடக்கோ, கடைசி காலத்துல எனக்கு கஞ்சி ஊத்தணும்னு கூட அவசியம் இல்லடி,  எம்புள்ளய மட்டும் பார்த்துக்க ஆயி” என சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவரது கன்னமெல்லாம் கண்ணீர்.

கராறாக பேசித்தான் இவரை கண்டிருக்கிறாள் சிவா, ஊருக்குள்ளும் வள்ளியம்மாவா பெரிய வூட்டாம்மாவா என சிறு பயத்துடன்தான் இவரைப் பற்றி பேசுவார்கள். அப்படிப்பட்டவர் தன் முன் கலங்கி நிற்கையில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை.

நெகிழ்ச்சியுடன் அவரை பார்த்தவள், “கவலை படாம இருங்க அத்தை, அவங்கள பார்க்காம என்ன பெரிய வேலை எனக்கு?” என்றாள்.

முந்தானையை உதறி கண்ணீரை துடைத்துக் கொண்ட வள்ளி, “அவன் கோவத்தை கண்டெல்லாம் பயந்திடாத, நல்லா வச்சுக்கடுவான் உன்னை” என்றார்.

தலையாட்டிக் கொண்டே மாடிக்கு சென்றாள்.

சூப்பை கண்டதும், “இதெதுக்கு, டீ இல்லையா?” என முகம் சுளித்தான் ருத்ரன்.

“இப்ப இதை சாப்பிடுங்க, கொஞ்ச நேரம் ஆனதும் டீ போட்டுத் தர்றேன்” என்றாள்.

“வேணாம் கொடு இதையே” என சொல்லி வாங்கிக் கொண்டான்.

மின்சாரம் போய் விட்டது. மாலை நேரம் என்றாலும் இருளாகவே இருந்தது. ஹாலில் மட்டும் மின்விளக்கு போட்டு விட்டாள்.

அவளுக்கு ஓய்வறை செல்ல வேண்டும், அங்கே இன்வெர்டர் இணைப்பு இல்லை, கதவை அடைத்தால் முழு இருட்டாகி விடும். டார்ச் லைட் நேற்று மாட்டு கொட்டகைக்கு எடுத்து சென்றவள் அங்கேயே விட்டு விட்டாள் போலும்.

தன் கைப்பேசியின் டார்ச்சை உயிர்ப்பித்து அவளிடம் கொடுத்தான். அவள் திரும்ப வரவும், நினைவு வந்தவனாக “கல்யாண ஃபோட்டோலாம் என் ஃபோனுக்கு அனுப்பியிருக்கான் ஃபோட்டோக்காரன். பார்க்கிறதுன்னா பாரு” என்றான்.

அவளும் ஆசையாக புகைப்பட கேலரிக்கு சென்றாள். அதில் கௌரியின் புகைப்படம் இருக்க, சட்டென அவளின் முகம் மாறி விட்டது. அவளையே பார்த்திருந்தவன், “என்ன புள்ள?” என கேட்டுக் கொண்டே கைப்பேசியின் திரையை எட்டிப் பார்த்தான்.

கௌரியுடன் அவனுக்கு திருமணம் உறுதியான பின்பு, வைதேகிதான் அவளை புகைப்படம் எடுத்து அண்ணனுக்கு அனுப்பி வைத்திருந்தாள். திருமணத்துக்கு முன் அந்த புகைப்படத்தை ரசித்து பார்க்கவும் செய்திருக்கிறான். சிவாவுடன் திருமணம் ஆன பிறகு இந்த புகைப்படம் தன் கைப்பேசியில் இருக்கும் நினைவே அவனிடம் இல்லை.

இப்போது சிவா என்ன எண்ணுவாளோ என்ற நினைவில் அவமானமாக உணர்ந்தான். இலகுத் தன்மையும் விலகி கடினமான பாவத்திற்கு மாறி விட்டான்.

சிவா தவறாக ஏதும் நினைக்கவில்லை, இது இப்போது அவனுக்கு நினைவில் இருந்திருக்காது என்பதையும் அவனது விளக்கம் இல்லாமலே அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

“ஃபோன்ல ஸ்டோரேஜ் அதிகம் ஆகிடிச்சுன்னா ஹேங் ஆக ஆரம்பிச்சிடும், அப்பப்ப தேவை இல்லாதத டெலீட் செய்யணும்” என சொல்லிக் கொண்டே தன் அக்காவின் புகைப்படத்தை நீக்கி விட்டாள்.

திருமண புகைப்படங்களுக்கு சென்றவள், “ஊருக்கே ஆரி ஒர்க் வச்சு பிளவுஸ் ரெடி பண்ணி தர்றேன். எனக்கு பண்ணிக்க முடியலை பாருங்களேன். பரவாயில்லை அண்ணி நல்லாத்தான் செலக்ட் பண்ணியிருக்காங்க” என வேறு பேச்சிற்கும் தாவினாள்.

ஆனால் அவனால் இயல்பாக முடியவில்லை.

“நீ பார்த்திட்டு இரு, மாட்டை ஒரு எட்டு பார்த்திட்டு வரேன்” என சொல்லி எழுந்தான்.

“நல்ல ஊத காத்து வீசுது. மாரியண்ணன் நல்லாத்தான் பார்த்துக்கிறார். சும்மா சும்மா மழைல நடந்து நேத்து மாதிரி நடுக்கம் வந்திட போவுது. அப்படி ஆனா என்ன செய்றோம்னே உங்களுக்கு தெரிய மாட்டேங்குது” என்றாள்.

தன் பின்னந்தலை சிகைக்குள் கை விட்டு தடவிக்  கொண்டவன், “இன்னிக்கு இந்த கட்டிலையும் உள்ளுக்கு எடுத்து போட்டிடுறேன், பயப்படாத” என்றான்.

“பயமா எதுக்கு?” எனக் கேட்டாள்.

பதில் சொல்லத் தெரியாமல் அவன் தடுமாறுவதை ரசித்தவள் உதடுகள் மடித்து சிரிப்பை அடக்கினாள். ஆனாலும் கன்னங்கள் அவள் சிரிப்பதை அவனுக்கு காட்டிக் கொடுத்து விட்டன.

அவளுடன் இருக்க சங்கடம் கொண்டவன், “சித்தப்பாகிட்ட ஒரு சங்கதி பேச வேண்டிருக்கு, வந்திடுறேன்” என சொல்லி கீழே சென்று விட்டான்.

“மிரண்டு ஓடுறத பாரு சண்டியரு!” என சொல்லி அளவான சத்தத்தில் கல கலத்து சிரித்தாள் சிவரஞ்சனி.