அத்தியாயம் 09

சார்பதிவாளர் அலுவலகத்தில் குடும்பத்தோடு நின்றிருந்தார்கள் நந்தினியும் கமலகண்ணனும். எல்லாம் அவர்கள் திருமணத்திற்காகத் தான்.

திருமணத்தைப் பற்றி திட்டமிட ஆரம்பித்த உடனே ஆடம்பர திருமணம் கூடாது என்று நந்தினி சொல்லிவிட்டாள். திருமணம் என்ற பெயரில் வீண்செலவு எதற்காக செய்ய வேண்டும் என்பது அவளுடைய வாதம். எனவே ரெஜிஸ்டர் ஆபீஸில் வைத்து எளிமையாக திருமணத்தை முடித்துக் கொள்ளலாம் என்றாள்.

ஆனால் இரண்டு அம்மாக்களுக்கும் அதில் உடன்பாடு இல்லை.

கோவிலில் திருமணத்தை முடித்துக்கொண்டு சிறியதாக ஒரு மண்டபத்தை பிடித்து திருமணத்தைத் தொடர்ந்த நிகழ்வுகளை வைத்துக் கொள்ளலாம் என்று திலகம் சொன்னால், அதற்கும் தடா தான்.

“உங்ககிட்ட ரொம்ப காசு இருந்தா ஒரு இடத்தை வாங்கி போடுங்க ம்மா, வருங்காலத்துல வீடாவது கட்டலாம்.” என்று தாயை கேலி வேறு செய்திருந்தாள்.

“நம்ம வீட்டுல நடக்குற மொத கல்யாணம், எனக்கும் கொஞ்சம் நல்லா செய்து பாக்கணும்னு ஆசை இருக்காதா?” தன்னுடைய ஆசை என்று சொன்னாலாவது மகள் இறங்கி வருவாள் என்று நினைத்து திலகம் சொன்னால்,

“நான் லோன் போடணும், நீங்க கையில இருக்கிற சேவிங்ஸ்ஸை எல்லாம் வழிச்சி போடணும். தேவையா இது? இந்துவும் கௌரியும் இன்னும் படிச்சுகூட முடிக்கல. அதோட,  புதுசா வாழ்க்கையை தொடங்கும் போது நானும் கடன் இல்லாம  தொடங்குறேனே.” என்று விட்டாள்.

“நீ உன்னை மட்டுமே மனசுல வச்சிட்டு முடிவை எடுக்க கூடாது நந்து, அத்தை மாமாவுக்கு கண்ணனோட கல்யாணத்தை பெருசா நடத்தணும்னு ஆசை இருக்காதா?” திலகம் விடாமல்  முயற்சி செய்ய,,

“அப்படியா த்தான்? உங்க கையில இருக்குற காசை எல்லாம் கரைக்க ரொம்ப ஆசையா இருக்குதோ?” என்று அவனையும் கேலி செய்தாள்.

பதிலுக்கு அவனோ, “நான் மிஸ்டர் நந்தினி ஆகணும். அது எப்பிடி நடந்தாலும் ஓகே தான்.” என்று சொல்லி, தொபுக்கடீர் என்று அவள் பக்கம் சாய்ந்திருந்தான். ஆனால்,

“இது என்ன திருட்டு கல்யாணமா, யாருக்கும் சொல்லாம செய்ய? கொஞ்ச பேருக்குன்னாலும் சொல்லிதான் கல்யாணத்தை முடிக்கணும்.” என்று தன் முடிவை திட்டவட்டமாக சொல்லிவிட்டார் லீலாவதி.

கடைசியில், சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தை முடித்து, கண்ணன் வீட்டிற்கு முன்னால் கிடக்கும் இடத்தில் ஷாமியானா பந்தல் போட்டு மதிய விருந்து பரிமாறுவது என்று முடிவானது.

அடுத்ததாக திருமணத்திற்கு யார்யாருக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்பதில் வந்து நின்றது பேச்சு.

“உங்க இளைய தம்பியைக் கண்டிப்பா கூப்பிடக்கூடாது அத்த, என்னைக் கேட்டா உங்ககூட பிறந்த எல்லோருமே எங்க கல்யாணத்துக்கு வர தகுதியில்லாதவங்க தான். இருந்தாலும் உங்களுக்காக மத்தவங்களை கூப்பிட சம்மதிக்கிறேன். ஆனா அந்த ஆளு மட்டும் கண்டிப்பா வரக்கூடாது. அதோட இன்விடேஷன்ல அவரோட பெயரை நாங்களும் போடமாட்டோம், நீங்களும் போடக்கூடாது.” மேல்பூச்சு எதுவும் இல்லாமல் மகள் நேரடியாக பேசும் பேச்சில் திலகத்திற்கு தான் சங்கடமாக இருந்தது.

“நீ சொல்லாட்டாலுமே அவனுக்கு இந்த கல்யாணத்துல எந்தவகையிலும் இடம் இல்ல தங்கம். மத்தவங்களை ஒதுக்கி வைக்க முடியாது தான். ஆனா சின்னவனை கூப்பிடலைங்குற காரணத்துக்காகவே, கூப்பிட்டாலும் மத்தவங்க வருவாங்களா என்னன்னு தெரியாது?” எந்த முகச்சுணுக்கமும் இன்றி பதில் சொல்லியிருந்தார் லீலாவதி.

கடைசியில் அவர் கணித்தது போலத்தான் நடந்திருந்தது.

 “டைவர்ஸ் ஆகிட்டா, பிள்ளைகளுக்கு தகப்பன் அவன் இல்லைன்னு ஆகிடுமா? அவதான் கொழுப்பெடுத்து போய் அப்பங்காரன் பெயரை பத்திரிக்கையில போடலைன்னா உனக்கு எங்க போச்சு அறிவு? நீ எப்படி உங்கூடப் பிறந்தவனை விட்டுக் குடுக்கலாம்? அவன் பெயரையே பத்திரிக்கையில போடாதவ, கல்யாணத்துக்கு மட்டும் கூப்பிட்டுறவா போற?  அவன் வராத இடத்துக்கு நாங்களும் வரமாட்டோம்.” திருமண அழைப்பிதழ் வைக்க சென்றிருந்த இடத்தில் லீலாவதியின் உடன்பிறப்புகள் இப்படித்தான் அவரிடம் சொல்லி விட்டிருந்தனர்.

ஏற்கனவே இதை எதிர்பார்த்திருந்ததாலோ என்னவோ பெரிதாக ஏமாற்றம் எதுவும் இல்லை லீலாவதிக்கு.

காலம், எதற்காகவும் யாருக்காகவும் காத்திருக்காமல் நகர்ந்திருக்க, இதோ திட்டமிட்டபடி திருமண நாளும் வந்தாயிற்று.

 மெல்லிய ஜரிகை வைத்திருந்த மெரூன் கலர் பட்டுப்புடவை அணிந்திருந்தாள் நந்தினி. கூந்தலை எப்போதும் போல போனிடெயில் போட்டிருந்தவள், அதில் கொஞ்சமாக மல்லிகை பூவிற்கு மட்டும் அனுமதியளித்திருந்தாள்.

கழுத்தில் ஒரு லாங்க் செயின், வலது கையில் இரண்டு தங்க வளையல்கள், இடது கையில் வாட்ச், இவ்வளவு தான் நந்தினியின் அலங்காரம். அதையும் கூட திலகத்தின் வற்புறுத்தலின் பெயரில் தான் அணிந்திருந்தாள். அதைத்தாண்டி எந்த அலங்காரமும் செய்துகொள்ள மறுத்து விட்டாள். ஆனால் அவளுடைய தங்கைகள் சிரத்தை எடுத்து தங்களை அலங்காரம் செய்திருந்தார்கள்.

கண்ணன் பட்டு வேட்டி, சட்டை அணிந்திருந்தான்.

அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த நேரத்தில் எல்லோரும் அலுவலகத்திற்கு உள்ளே சென்றார்கள். பதிவாளர் முன்னிலையில் இருவரும் மாலை மாற்றிக்கொள்ள, கண்ணன் நந்தினியின் கழுத்தில் பொன்தாலி அணிவித்தான்.

அதன்பிறகு இருவரும் கணவன் மனைவியானதை உறுதிசெய்யும் விதத்தில் பதிவேட்டில் கையெழுத்திட, திலகமும், கண்ணனின் பெற்றோர்களும் சாட்சி கையெழுத்திட்டார்கள்.

“வாழ்த்துகள் அத்தான்.” முதல் ஆளாக கணவனுக்கு கை கொடுத்து வாழ்த்து சொன்னாள் நந்தினி.

“ம்ம்… வாழ்த்துகள்.” புன்னகையோடு பதிலுக்கு வாழ்த்து சொல்லி கைகுலுக்கி கொண்டான் புது மாப்பிள்ளை.

“நீங்களே ஒருத்தருக்கொருத்தர் வாழ்த்து சொன்னா போதுமா? எங்க வாழ்த்தையும் வாங்கிக்கோங்க மச்சான்.” சத்தமாக கண்ணனின் கவனம் கலைத்த தீபாவின் கணவன்,

“தினம் ஒரு சண்டையும் சமாதானமுமா உங்க வாழ்க்கை ஜெகஜோதியா இருக்கட்டும்.” என்று வாழ்த்த,

“எதுக்கு இப்போ பீதியை கிளப்புறீங்க மாப்பிள்ள.” அட்டகாசமாக சிரித்தான் கண்ணன்.

“ஹ்ம்ம்… நீங்க பீதியாகிட்டீங்க? நாங்க அதை நம்பணும்?” பதிலுக்கு தீபாவின் கணவன் கேலி செய்ய, புன்னகை முகமாகவே அலுவலக அறையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள் எல்லோரும்.

அப்போது இரண்டு நபர்கள் பின்தொடர வேகமாக அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தான் ஜெகத்ரட்சகன்.

அவனைப் பார்த்ததும், ‘தங்கை வரச் சொல்லியிருப்பாளோ?’ என்ற ஐயம் எழ, அதிருப்தியாக உணர்ந்த நந்தினிக்கு, ‘அது ஒரு அரசு அலுவலகம். யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமானாலும் வந்து செல்லலாம்’ என்ற எண்ணம் வரவும், அவனைக் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வழியில் நடந்தாள்.

ஆனால் அவனோ நந்தினிக்கு முன்னால் வந்து நின்று எந்த தயக்கமும் இன்றி,

“திருமண வாழ்த்துகள் எஸ்பி மேடம்.” என்றவன் கைகுலுக்குவதற்காக வலது கையை நீட்டினான். அவனுடைய செயலில் சுர்ரென்று கோபம் வர, வாழ்த்தை ஏற்றுக்கொள்ள மறுத்து, “யார் நீ” என்பது போல பார்த்தபடி நின்றிருந்தாள் நந்தினி.

அத்தனை கோபத்திலும் மறந்தும் கூட தன்னுடைய பார்வையை தங்கையின் பக்கமாக திருப்பவில்லை நந்தினி. காரணம், சின்னச் சின்ன விஷயங்கள் கூட அடுத்தவர்களின் கவனத்தை ஈர்த்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் வந்த கவனம் தான்.

ஆனால் நீட்டிய கையை இறக்காமல் நின்றிருந்தவனின் கண்களோ, நந்தினிக்கு அருகே நின்றிருந்த அனிதாவை ஆர்வமாக பார்வையிட்டது. அதுவும் இப்படியெல்லாம் அலங்காரத்தில் அவளை பார்த்திராதவனின் கண்கள் உல்லாசமாக மின்ன, “ம்ம்… அனிதா டீச்சர், நீங்க எங்க இங்க?” எதுவுமே தெரியாதது போல கேள்வி வேறு கேட்டு வைத்தான்.

“இவங்க எங்க அக்கா தான்…” நொடிப்பொழுதில் உள்ளங்கால் வரை வியர்த்துப்போன அனிதாவுக்கு, ஜெகன் நடத்தும் நாடகத்தில் பங்கேற்காமல் இருக்க வழியில்லாமல் போகவே, மெதுவாக முணுமுணுத்தாள்.

“நீங்க எஸ்பி மேடத்தோட தங்கச்சியா?! ஒருநாளும் இதைப்பற்றி ஸ்கூல்ல யார்கிட்டயும் சொன்னதேயில்லையே!” அநியாயத்துக்கு புருவத்தை ஜெகன் உயர்த்த, ஆமாம் என்பதுபோல தலையாட்டினார்கள் அவனோடு நின்றிருந்த இருவரும். அவர்கள் இருவரும் பள்ளி அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள். எனவே அனிதாவை அவர்களுக்கும் தெரிந்திருந்தது.

அவர்களுடைய சம்பாஷணையை அலுவலகத்தில் ஆங்காங்கே நின்றிருந்தவர்கள் ஆர்வமாக பார்வையிட, அதற்கு மேலும் அவனை அங்கே நிற்க வைப்பது சரியில்லை என்பது கண்ணனுக்கு புரிந்து போனது. நீட்டிய கரத்தை இறக்கிக் கொள்ளாமல் நின்றிருந்தவனின் கையில் தன் கையை வைத்த கண்ணன், “எங்களுக்கும் வாழ்த்து சொல்லலாம் பிரதர்” என்றான் கேலியாக.

“யெஸ்… வாழ்த்துகள் பிரதர்.” கண்ணனின் கையைப்பிடித்து அழுத்தமாக குலுக்கிய ஜெகன், அனிதாவிடம் கண்களால் சிரித்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருந்தான்.

தங்கையின் காதல் விஷயம் தெரிந்த இந்த இரண்டு மாதத்தில் ஜெகத்ரட்சகனைப் பற்றிய விஷயங்களை திரட்டியிருந்தாள் நந்தினி. குறை சொல்லுவதற்கு ஒன்றுமில்லை. வரன் என்று பார்த்தால் கண்ணை மூடிக்கொண்டு திருமணத்திற்கு சம்மதித்து விடலாம். ஆனால் கூடவே நெருஞ்சி முள்ளாக ஒட்டிக்கொண்டிருக்கும் அவனுடைய தகப்பனின் வரலாறு அவளை மிரட்டவே, ஜெகத்ரட்சகனை நேரிலோ, இல்லை போனிலோ அழைத்து பேச முற்படவே இல்லை நந்தினி.

அனிதாவும், அக்காவை எதற்கும் கட்டாயப்படுத்தாமல் அமைதியாக பள்ளிக்கு சென்று வருகிறாள். வைரவ மூர்த்திக்கும் இவர்கள் விஷயம் தெரியவராததால் இதுவரைக்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இனி அது தொடர வாய்ப்பில்லை என்று நந்தினியின் உள்மனது ஏனோ சொல்லியது. ‘ம்ம்… எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.’ தனக்குத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டவள், மற்றதை பின்னுக்கு தள்ளி அப்போதைய நிகழ்வில் தன்னை இணைத்துக் கொண்டாள்.

எல்லோரும் வீட்டிற்கு வரும்போது நண்பகல் பன்னிரண்டு மணி ஆகியிருந்தது. இவர்கள் வீட்டுக்கு வரும்போதே திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த சொந்தங்களில் ஒருசிலர் வீட்டுக்கு வருகையும் தந்திருந்தார்கள். திருமண ஏற்பாடுகளை கவனித்துக் கொள்வதற்காக வீட்டிலிருந்த அருள், அவர்களை வரவேற்று அமர வைத்திருந்தான். இளையவர்கள் சேர்ந்து புதுமணத் தம்பதியருக்கு ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள்.

அதன்பிறகு உறவினர்களின் வருகை சிறிது சிறிதாக அதிகப்பட, அத்தனை பேரையும் வரவேற்று, பேசி, புகைப்படம் எடுத்து என்று மணமக்களுக்கு சுறுசுறுப்பாக நகர்ந்தது நேரம். ஒருவழியாக விருந்தினர் வருகை குறையவும் மணமக்களை சாப்பிட பந்தியில் அமர்த்தினார்கள்.