திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்கள் அத்தனை பேரும் விடைபெற்று சென்றிருக்க, சாயங்காலம் மணமக்களை அழைத்துக்கொண்டு, நந்தினி குடும்பத்தினர் தற்போது குடியிருக்கும் வீட்டுக்கு வந்திருந்தார்கள் எல்லோரும்.
கண்ணனின் வீடும் அப்படி ஒன்றும் பெரிதில்லை. எனவே மணமக்களை இங்கே குடிவைப்பதாக இருவரின் பெற்றோர்களும் ஒருமனதாக முடிவெடுத்திருந்தார்கள்.
எல்லோரும் ஹாலில் இலகுவாக அமர்ந்திருந்தார்கள். மணமக்கள் இருவரும் குளித்து முடித்து வேறு உடை அணிந்திருந்தார்கள். அன்றைய நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டிருந்தவர்களின் பேச்சில் சுரேந்தரும் வந்தான்.
“கண்ணா, அந்த பையன் மனசளவுல பாதிக்கபட்டுருக்க மாதிரி தோனுது. அவனைப் பார்த்து கொஞ்சம் நல்லவிதமா பேசு ப்பா.” திலகம் சொல்ல, அவரை அதிசயப் பிறவியைப் போல பார்த்தார்கள் எல்லோரும்.
“ம்ம்… சரி அத்த.” கண்ணன் தலையாட்டிக் கொள்ள, அவனை ஒருமாதிரி பார்த்தாள் நந்தினி.
ஹோட்டலில் ஆர்டர் செய்திருந்த இரவு உணவு வந்ததும் எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். கண்ணனின் குடும்பத்தோடு திலகமும் அவருடைய பெண்களும் கிளம்ப,
“ம்மா, நீங்க எங்க ம்மா போறீங்க?” வேகமாக கேட்டாள் நந்தினி.
“அங்க, நம்ம வீட்டுக்கு தான்.” வீட்டை அதற்குள் புதுப்பித்து சாவியை திலகத்தின் கையில் கொடுத்திருந்தார் நாதனின் அண்ணன். லேசாக விரிவாக்கம் செய்யப்பட்டிருந்த ஹாலும், குளியலறையோடு கூடிய படுக்கையறை ஒன்றும் ஜம்மென்று புதிதாக வீட்டோடு இணைந்திருந்தது.
“என்னம்மா இப்படி தனியா விட்டுட்டு போறேன்னு சொல்லுறீங்க?” ஆதங்கமாக நந்தினி கேட்க,
“ஐயோடா! பெரிய ஜோக், நான் சிரிச்சிட்டேன்.” உதட்டைச் சுழித்தாள் நந்தினி.
“நீங்க இரண்டு பேருமே வேலைக்கு போறவங்க நந்து. நீங்க தனியா இருந்தா தான், நமக்கான துணை வீட்டுல காத்திருக்குது அப்படிங்குற எண்ணம் உங்க இரண்டு பேரையுமே சீக்கிரம் வீட்டுக்கு வரவைக்கும். நாங்க உங்ககூட இருந்தா அதான் அம்மா இருக்காங்களே ஆட்டுக்குட்டி இருக்குதே, அவங்க பாத்துப்பாங்கன்னு சின்ன அலட்சியம் வந்துடும். ஒருத்தருக்காக ஒருத்தர் காத்திருந்து, விட்டுக்கொடுத்து உங்களுக்கான வாழ்க்கையை நீங்க சந்தோஷமா வாழுங்க. நாங்க எங்கப் போயிடப் போறோம்? சீக்கிரமா ஒரு பிள்ளைக் குட்டியை பெத்துத் தந்தா, அதை வளத்து தர வந்துட்டு போறோம்?” இலகுவாக சொல்லி மகளின் உச்சந்தலையில் முத்தம் ஒன்றை வைத்து விடைபெற்றுக் கொண்டார் திலகம்.
நந்தினியின் உடன்பிறப்புகள் அக்காவை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து விடைபெற்றுக் கொண்டார்கள்.
“நந்தினி, எங்கண்ணையே உங்கிட்ட ஒப்படைச்சி இருக்கிறேன் ம்மா. அதுல ஆனந்த கண்ணீரை மட்டும் தான் நான் பாக்கணும்.” மருமகளின் கையைப் பிடித்து கொண்டு லீலாவதி டயலாக் பேச, நந்தினி உட்பட எல்லோருமே சத்தமாக சிரித்துவிட்டார்கள்.
ஆக, சிரிப்போடே எல்லோரும் விடைபெற்று செல்ல, வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு வந்தாள் நந்தினி. இத்தனை நேரமும் கலகலப்பாக இருந்த வீடு அமைதியாக இருக்க, என்னவோ போலிருந்தது.
“எல்லோரும் ப்ளான் பண்ணி நம்மளை தனியா விட்டுட்டு கிளம்பி போய்ட்டாங்க.” அங்கலாய்த்தபடியே கணவனுக்கு அருகே வந்து அமர்ந்தாள் நந்தினி.
திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த இந்த இரண்டு மாதங்களில், பெரிதாக இருவரும் சந்தித்துக்கொள்ள நேரம் அமையவே இல்லை. எப்போதாவது சந்திக்க நேர்ந்தால் கூட இப்படியெல்லாம் அருகருகே இருவரும் அமர்ந்ததே இல்லை. இன்று காலையில் இருந்து அது இயல்பாக நடக்க,
“இந்த தாலியோட மகிமையே தனிதான், இல்லையா நந்து?” என்று பேச்சை ஆரம்பித்தான் கண்ணன்.
“எதுக்கு சொல்லுறீங்க?” யோசனையோடு நந்தினி கேட்க, தான் நினைத்ததை மறைக்காமல் சொன்னான் புதுமாப்பிள்ளை.
“ஹ்ம்ம்… நான் கூட நினைச்சேன். அது என்ன, தாலி, மெட்டி, வகிட்டு குங்குமம், பிள்ளைப்பேறுன்னு திருமணத்தோட எல்லா அடையாளங்களையும் பொண்ணுங்களையே சுமக்க வைக்குறது? ஏதாவது ஒன்னையாவது நீங்களும் சுமக்கலாம்ல?” சண்டை பிடிக்கும் தோரணை நந்தினியிடம்.
“அதான், குடும்ப பாரத்தை ஆண்கள் தங்களோட தோள்ல சுமக்குறாங்களே? அப்புறம் என்ன?” நந்தினியைப் பற்றி தெரிந்தும் வார்த்தைகளை விட்டுவிட்டான் கண்ணன்.
“என்னது? குடும்ப பாரமா? இந்த சம்பாத்தியத்தை சொல்லுறீங்களா? அதுதான் லேடீஸும் இப்போ உங்களைப் போலவே சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டாங்களே? அப்புறமும் என்ன, குடும்ப பாரம், நாங்க சுமக்குறோம்னு ஓட்டை விழுந்த ரிகார்ட் போலவே புலம்புறீங்க?” நந்தினியின் குரலில் கொஞ்சம் கோபம் ஏறியிருந்தது.
“ஆமால்ல… சட்டுன்னு ஞாபகத்துக்கு வரலை, அதான் ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன்.” புதுமனைவியின் கோபத்தில் சுதாரித்துக் கொள்ள முயற்சி செய்தான் கண்ணன்.
“அப்படியெல்லாம் சும்மாவிட முடியாது த்தான். காலைலயிருந்து கழுத்துல இது எவ்வளவு அழுத்துதுன்னு தெரிஞ்சா தான், இந்த மாதிரி எல்லாம் இனிமே நீங்க பேசமாட்டீங்க.” என்றவள் சட்டென்று தன் கழுத்து தாலியைக் கழற்றி கணவனின் கழுத்தில் போட்டு விட்டாள்.
“ஹேய்! என்ன பண்ணுற நீ?” பதறிப்போனவனாக கண்ணன் கேட்டான்.
கணவனின் செயலில் நந்தினி தன்னை மறந்து வெடிச்சிரிப்பு சிரிக்க, அவளை ரசனையாக பார்த்தவன், “எங்கிட்ட ஏதோ பேசணும்னு கல்யாணத்துக்கு முன்னாடி சொன்னியே? எதுவாயிருந்தாலும் இப்போ பேசிடு நந்து.” என்றான் மனைவியை நெருங்கி அமர்ந்தபடி.
ஒருவருக்கொருவர் இத்தனை நாட்களில் பார்த்துக்கொண்டதே அரிதாக இருந்த போது, பேசிக்கொள்ளவா அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்கும்? எனவே நந்தினி பேசவேண்டும் என்று சொன்னபடி இருவரும் அமர்ந்து பேசிக்கொள்ளவே இல்லை.
“பேசலாம் தான்… ஆனா நான் இப்போ பேசத் தொடங்குனா, நம்ம இரண்டு பேருக்கும் நடுவே இருக்கிற இந்த இலகுத்தன்மை தொடருமான்னு சந்தேகமா இருக்குது? அதனால இப்போ வேண்டாம்.” கண்களாலேயே தாங்கள் இருவரும் அமர்ந்திருக்கும் விதத்தை சுட்டிக்காட்டியவள், புன்னகையோடு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பினாள்.
“இப்போ நீ என்ன பேசினாலும், என்னால உம்மேல கோவப்பட முடியாது. அதனாலத் தான் இப்போ பேசுன்னு சொல்லுறேன்.” மனைவியின் இடையில் உரிமையாக கையைக் கொடுத்து தன்னை நோக்கி இழுத்தபடியே சொன்னான் கண்ணன்.
“அப்போ நான் என்ன பேசுவேன்னு கெஸ்ஸிங் இருக்கு உங்களுக்கு? ம்ம்…” அவன் கண்களை ஊடுருவிப் பார்த்தபடி நந்தினி கேட்க,
“நான் லாயர் ம்மா, அது கூட இல்லைன்னா எப்படி?” பற்கள் தெரிய சிரித்தவன் தன்னுடைய பிடியில் அழுத்தத்தைக் கூட்டினான்.
“நீங்க லாயர், நான் போலீஸ், இதையெல்லாம் இந்த வீட்டுக்குள்ள நாம மறந்தா தான், நம்ம வாழ்க்கை ஸ்மூத்தா போகும். ஆனா நீங்க, நாம நிக்குறது ஹால் ங்குறதையே மறந்துட்டீங்க கண்ணத்தான்.” கணவனின் மீசையை முறுக்கி விட்டபடியே கேலி பேசிய நந்தினியின் கண்கள் சிரிப்பில் மின்னின.
இப்படியொரு பரிணாமத்தை மனைவியிடமிருந்து எதிர்பார்க்காத கண்ணன், சட்டென்று அவளுடைய கைகளை பற்றி தன் கன்னங்களில் பிடித்து வைத்தபடியே, “நந்தினி…” என்றான் ஆவலாக.
“என்ன? என்ன நந்தினி?” அவனிடமிருந்து லாவகமாக உருவி சமையலறையை நோக்கி சென்றவளிடம் புதிதாக ஒரு தடுமாற்றம் முளைத்திருந்தது. அதை அழகாக மறைத்தவள் கெத்தாக புருவத்தை உயர்த்த,
“உங்கிட்ட இருந்து இப்பிடியெல்லாம் எதிர்பார்க்கல தெரியுமா?” என்றான் பின்னோடு வந்திருந்தவன்.
“எப்பிடியெல்லாம்?” உல்லாசமாக வந்தது கேள்வி.
“இத்தனை நாள் முறைச்சிட்டு திரிஞ்சவ, இன்னைக்கு என்னை என்னமோ பண்ணுறியே, அதைச்சொன்னேன்.” இடது நெஞ்சைத் தடவியபடியே கண்ணன் சொல்ல,