செந்தாமரை பெரியவர் முன் எப்போதும் அமர மாட்டார். அவர் நின்றிருக்க,
அய்யா இப்போ தான் வந்திருக்கீங்க, என்ன சாப்பிடறீங்க என்றான் தமிழ்
ஒன்னும் வேண்டாம் தமிழ் என்றவர்
பிள்ளைகளை பார்க்கணும்னு வந்துட்டேன் என்றார்
எதுவும் பேசவில்லை நிலா அவரின் எதிரில் அமர்ந்து கொண்டாள்.
பின் அவர் தமிழிடம் அவர் இங்கில்லாத நாட்களில் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்க
அவன் அரசியல் நிலவரங்களை ஊர் நிலவரங்களை சொல்லிக் கொண்டிருந்தான்.
அமைதியாக அமர்ந்திருந்தாள். பொதுவில் பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகள் உண்ணக் கொடுக்க என்று அவள் பரபரப்பாக இருப்பாள் ஆனால் இன்று அமைதியாக அமர்ந்து கொள்ள
அதற்குள் சுதர்ஷன் சென்று குளித்து வர, கௌரிஷ் குளிக்கச் செல்ல
டைனிங் டேபிள் சென்று என்ன இருக்கிறது என்று பார்த்து, ப்ளேட்டில் வைத்து நிலாவிடம் கொடுத்து, அவளுக்கு ஊட்டுங்கம்மா, என்றவன் ஸ்ராவணி யைப் பார்த்து அம்மா கிட்ட போ என அவள் சென்று அருகமர்ந்து கொள்ள, நிலாவின் கைகள் அவளுக்கு உணவை கொடுக்க ஆரம்பித்தது.
என்ன குடிப்பீங்க தாத்தா என்றான் வீட்டினனாக சுதர்ஷன்,
நீ என்ன கொடுத்தாலும் என்று அவர் புன்னகையோடு சொல்ல
செந்தாமரையிடம் திரும்பி என்ன குடிப்பாங்க அத்தை என்றான்
ஆம் அத்தை தான் அவனிற்கு, அதாவது அப்பாவின் உறவைக் கொண்டு, அவனின் அம்மாவினுடைய அப்பாவின் மனைவி என்ற சொந்தம் கொண்டில்லை.
அவர் ஃபில்டர் காபி என
அக்கா என்று வேலை செய்யும் பெண்மணியை அழைத்து ஃபில்டர் இறக்கிட்டு கூப்பிடுங்க என்றான். சிறிது நேரமாகுமல்லவா
பின் நீங்க அத்தை என்று அவரிடமும் கேட்க
அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை, பின்னே இங்கே வரவா என்று பயந்து வந்தார், இதில் உள்ளே வந்து பிள்ளையை அழுக்காய் பார்க்கவும் அவளை குளியலறை அழைத்து சென்று முகம் கழுவி உடை மாற்றி என்று அழைத்து வந்தார், அதற்கே நிலா என்ன சொல்வாளோ என்று பயந்திருக்க
இப்போது அத்தை என்றழைத்து சுதர்ஷன் கேட்க
சிரிக்கவா வேண்டாமா என்று தடுமாறி என்ன சொல்ல என்று தயங்கி நின்றார்
அவங்களும் அதையே குடிப்பாங்க என்று தமிழ்செல்வன் சொல்ல,
என்னவோ தம்பியே அந்நியமாய் தெரிந்தான், இந்த அவனின் குடும்பத்தை அவனோட இப்படி அருகில் ஒன்றாய் பார்த்தது போல ஞாபகமில்லை.
அங்கே அவரின் வீட்டில் அவரோட பேசுவான், எல்லாம் வேலை நிமித்த பேச்சுக்கள், அவரின் வாழ்க்கையை பற்றிய குடும்பத்தை பற்றிய பேச்சுக்கள்.
அவனின் மனைவி மக்களைப் பற்றி பேசிய மாதிரி ஞாபகமில்லை. ஏன் அவரின் அம்மா மங்கம்மாவே அவளிடம் பேசியதில்லையே.
நிலாவின் துளைக்கும் பார்வை ஒரு பதட்டத்தை கொடுத்தது.
உட்காருங்க அத்தை என்று சுதர்ஷன் உபசரிக்க
அவர் எங்கே பெரியவர் முன் அமர்வார்
பெரியய்யா முன்ன அவங்க உட்கார மாட்டாங்க என்று தமிழ்செல்வன் சன்னக் குரலில் சொல்ல
வேகமாய் ஒரு முக்காலியை கொண்டு வந்து போட்டான்.
ம்ம் பெரியவரிடம் ஒரு மெச்சுதலான பார்வை…
பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்க என்றார் வாய் விட்டு
நீங்களும் என்னை நல்லா தான் வளர்த்தீங்க என்ற வார்த்தை உடனே அவளிடமிருந்து அடுத்த நொடி வந்தது.
பெரியவர் என்ன சொல்வது என்று தெரியாமல் பார்க்க
ம்ம் சொல்லுங்க அப்புறம் நேரா இங்க வந்திருக்கீங்க என்ன விஷயம் என்றாள் கறாராய்
ஸ்ராவணியை தவிர எல்லோர் முகத்திலும் ஒரு பதட்டம் என்ன இப்படி பேசுகிறாள் என்று.