“மைதிலிம்மா இவளைத் தள்ளிப் போகச் சொல்லுங்க. இப்பல்லாம் இவ என்னை கண்டுக்கறதே கிடையாது. எப்ப பார்த்தாலும் விஜய் அண்ணா பின்னாடியே சுத்திட்டு இருக்கா” என்றான் அகரன்.
“போடா டேய் போடா” என்றவள், அப்போது தான் அங்கிருந்த நீலாவதியை கவனித்தாள்.
“வாங்க நீலாம்மா” என்றாள்.
“இப்பவாவது கண்ணு தெரிஞ்சதே” என்றார் இடக்காய்.
“கனி அக்கா, குட்டி பாப்பா எல்லாம் எப்படி இருக்காங்க” என்றாள்.
“நல்லா இருக்காங்க.நல்லா இருக்காங்க” என்றார். அதற்குள் சரண் கீர்த்தனா வர அவர்களுடன் கிரியும் வந்தான். ஒட்டு மொத்த குடும்பமும் அந்த வீட்டில் இருக்க, வீடே ஆட்களால் நிரம்பியிருந்தது.
வீடு நிறைய ஆட்களைப் பார்த்த அமுதாவிற்கு அப்படி ஒரு சந்தோசம். என்றுமில்லாமல் அன்று அப்படி ஒரு மகிழ்ச்சி அவர் முகத்தில். அதிலும் ராமச்சந்திரன் வந்தவுடன் அவரிடம் கூறியிருந்த வார்த்தைகளை கேட்டு மனம் நிரம்பியிருந்தது அமுதாவிற்கு.”தங்கமான புள்ளையைப் பெத்து அருமையா வளர்த்திருக்கிங்கம்மா” என்ற வார்த்தைகள் தான் அது. ஒரு தாய்க்கு இதைவிட சந்தோசம் தரக் கூடிய வார்த்தைகள் இருந்துவிடப் போகிறதா என்ன?
“உறவு முறையில ஒரு முக்கியமான கல்யாணம் தம்பி. அதான் குடும்பத்தோட வந்தோம். மனோவும் இன்னைக்கு ஊர்ல இருந்து வந்தான். அப்படியே அவனையும் அழைச்சுட்டு போன மாதிரி இருக்கும். அப்பறம் ஒரு முக்கியமான விஷயம்” என்று ராமச்சந்திரன் நிறுத்த,
“சொல்லுங்க அங்கிள்” என்றான் புரியாமல்.
“மனோ அதை எடுத்துட்டு வாப்பா” என்று சொல்ல,
“என்ன அங்கிள்?”
“நாங்க வேதாவுக்கு செய்ய வேண்டிய சீர் வரிசை எதையும் இன்னும் செய்யலை. இத்தனை நாள் நிலைமை சரியில்லை. அதான் நாங்களா எதுவும் பேச்சை எடுக்கலை. எங்க பொண்ணுக்கு செய்ய வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கு” என்று அவர் நிறுத்த,
“மச்சான் அப்படியெல்லாம் நீ சொல்ல முடியாது. கீர்த்தனாவுக்கு நீ செஞ்சப்பா நாங்க அமைதியா வாங்கிகிட்டோம் தான. அதே மாதிரி நீ இப்போ அமைதியா இருக்குற” என்றான் சரண்.
சந்தியாவிற்கு மனமே இல்லாமல் நீலாவின் பக்கத்தில் நின்றிருந்தாள்.
“வேதா வந்து மாப்பிள்ளையோட நின்னு வாங்கிக்கடா” என்றனர். அவள் அமைதியாய் விஜய்யைப் பார்க்க, அவனோ எதுவும் பேசாமல் நின்றான்.
“அமுதாம்மா அண்ணாவை சரின்னு சொல்ல சொல்லுங்க. அப்ப தான் வேதா வாங்குவா” என்றாள் கீர்த்தனா.
“இதெல்லாம் பொண்ணைப் பெத்தவங்க சந்தோஷம் தம்பி. இதை நீங்க மறுக்கக் கூடாது.” என்று மைதிலியும் சொல்ல,
“உங்க விருப்பம். வேதாவுக்கு ஓகேன்னா எனக்கு பிரச்சனையில்லை” என்றான் வேண்டா வெறுப்பாய்.
“அப்பா பொண்ணுக்கு இடையில நான் எதுக்கு வரணும்? அவர் சந்தோஷத்தை நான் எதுக்கு கெடுக்கணும். ஆனா ஒன்னு இதையெல்லாம் வாங்கித்தான் பிழைக்கணும்னு எனக்கு அவசியமில்லை” என்றான் பட்டென்று.
‘இவர் சரிப்பட்டு வர மாட்டார்’ என்று எண்ணியவள்,
“ஹீரோ சார், நீங்க ஹீரோவாவே இருங்க. ஆனா, நான் சராசரி பொண்ணு. இதெல்லாம் என் அம்மா எனக்காக பார்த்து பார்த்து வாங்கினது. அப்படியெல்லாம் வேண்டாம்னு சொல்ல முடியாது” என்றாள்.
“கீர்த்தனா சந்தோஷமா இருக்குடா” என்ற விஜய் அவளை அணைத்துக் கொள்ள, அவனின் சித்திக்கோ சந்தோஷத்தில் கைகால் ஓடவில்லை.
“அக்கா நாம பாட்டியாகிட்டோம்” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்த, அமுதாவின் கண்கள் ஏக்கமாய் விஜயை பார்த்தது. விஜய்க்கு புரியவில்லை என்றாலும் வேதாவிற்கு புரிந்தது.சிரித்தபடியே அவருக்கு அருகில் சென்றவள்,
“உங்களையும் சீக்கிரம் பாட்டியாக்கிடுறேன் அத்தை” என்றாள் காதுக்கருகில். அமுதாவிற்கு வேற என்ன வேண்டும். வாஞ்சையுடன் அவள் கைகளை பிடித்துக் கொண்டார்.