“ம்மா… அனியோட முடிவுக்கும் என் கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்? எதுக்காக இப்போ என் தலையை உருட்டுறீங்க?” நந்தினி சலித்துக்கொள்ள,

“நீ கல்யாணம் பண்ணிக்காம நாங்க கல்யாணம் பண்ணிக்க மாட்டோம்னு இன்னைக்கு காலைல உன் தங்கச்சிங்க மூனு பேரும் சொன்னாங்களே? மறந்து போச்சா உனக்கு?” காலையில் நடந்ததை திலகம் மகளுக்கு ஞாபகப்படுத்தினார்.

“கல்யாணம் பண்ணிக்கமாட்டாங்க, ஆனா காதலிப்பாங்க.” முணுமுணுக்கிறேன் பேர்வழி என்று சத்தமாகவே நந்தினி சொன்ன அழகில், சூழ்நிலையையும் மீறி அனிதாவின் இதழ்களில் கீற்றாக புன்னகை பூக்க, இதழ்களை மடித்து அதை மறைத்துக் கொண்டாள்.

“இப்போ என்ன, நான் உங்களுக்கு கல்யாணம் பண்ணிக்கணும், அவ்வளவு தானே? பண்ணிக்கிட்டா போச்சு.” என்ற நந்தினி,

“என்னைக் கல்யாணம் பண்ணிக்கிற அபிப்பிராயம் கண்ணத்தானுக்கு இப்பவும் இருந்தா அவரையே கல்யாணம் பண்ணிக்கிறேன்.” எந்தவித சுற்றிவளைத்தலும் இன்றி நொடியில் நந்தினி திருமணத்திற்கு சம்மதித்துவிட, முகத்தை தன்னிரு கைகளால் வேகமாக துடைத்துக்கொண்ட திலகம்,

“உண்மையாவா சொல்லுற நந்தினி? கண்ணனை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா உனக்கு?” தன் காதுகளை நம்ப முடியாமல் மறுபடியும் மகளிடம் கேட்டார்.

“கல்யாணம் பண்ணிக்கோன்னு மனுஷனை தொந்தரவு பண்ணுறது, சம்மதிச்சா உண்மையான்னு நம்பாம கேக்குறது, உங்களோட இம்சை ம்மா.” செல்லமாக அலுத்துக் கொண்டவள்,

“அத்த, கண்ணத்தானை கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி, என்னை கல்யாணம் பண்ண உங்க பிள்ளை ரெடியான்னு கேட்டு சொல்லுங்க.” என்றாள் அதிரடியாக லீலாவதியிடம்.

“அதுக்கென்ன ராசாத்தி, கட்டுடா தாலியை ன்னா கட்டப் போறான்.” நொடியில் வாயெல்லாம் பல்லாகிப் போன லீலாவதி மகனின் தோளைத்தொட்டு உலுக்கியபடி, “சரின்னு சொல்லுடா.” என்றார் வேகமாக. ஆனால் சம்மந்தப்பட்டவனோ முகத்தில் எந்தவிதமான உணர்ச்சிகளையும் காட்டாமல் அமைதியாக நின்றிருந்தான். அதைக் கவனித்தவள்,

“கண்ணத்தான் நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?” நேரடியாக அவனிடமே கேட்க, இப்போதும் பதில் சொல்லாமல் அவளையே கூர்ந்து பார்த்தான்.

“என் வாழ்க்கையை உங்கையில குடுக்க தயாரா இருக்கேன்னு அன்னைக்கு டயலாக் எல்லாம் பேசினீங்களே த்தான்? அதை நம்பி நானும் உங்களை கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்துட்டேன், இப்போ முடிவை மாத்திகிட்டீங்களா என்ன?” பதட்டம் போல கேலியாகவே நந்தினி கேட்க,

“நாம பேசணும்.” ஒருவழியாக வாய்ப்பூட்டைத் திறந்திருந்தான் கண்ணன்.

நந்தினி திருமணத்திற்கு சம்மதித்திருந்த விதத்தில் அனிதாவின் காதல் விஷயம் தற்சமயம் பின்னுக்கு சென்றிருக்க, எல்லோரும் ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் இருவரின் உரையாடல்களையும் கவனிக்கத் தொடங்கினர். அதுவும் இப்படியெல்லாம் இதுவரையிலும் பேசியிராத நந்தினியின் பேச்சு, அவர்களின் ஆர்வத்தை இருமடங்காக்கியிருந்தது என்னவோ நிஜம்.

“அப்பிடி என்ன ண்ணா பேசப்போற? கல்யாணத்துக்கு அப்புறம் அடிக்கக் கூடாதுன்னு அண்ணிக்கூட சமாதான உடன்படிக்கை எதுவும் போடப்போறியா?” சந்தோஷ மிகுதியில் கேலியில் இறங்கினான் அருள்.

“அண்ணா… ஆத்தா மனமிறங்கி அருள்வாக்கு தந்துட்டா, விட்டுறாத கப்புன்னு பிடிச்சுக்கோ” என்றாள் தீபா.

“ம்ம்… உங்க உடன்பிறப்பு யோசிக்கிறதைப் பார்த்தா அனிதாவை நான் அடிச்சதைப் பார்த்து பயந்துட்டாங்களோ என்னவோ?” கண்ணனின் உடன்பிறந்தவர்களோடு சேர்ந்து கேலியில் இறங்கிய நந்தினி,

 “பயப்படாதீங்க த்தான், நான் உங்களை அடிக்கல்லாம் மாட்டேன்.” என்றிருந்தாள் கண்ணனைப் பார்த்து சிரிப்பை அடக்கிய குரலில்.

“ச்சு… நந்தினி… என்ன பேச்சு இது?” நாதனின் முகத்தை அவஸ்தையாக பார்த்துவிட்டு திலகம் மகளை அதட்ட, நாதனின் முகத்திலோ பிள்ளைகளின் கேலியை ரசிக்கும் பாவனை மட்டுமே.

“அடியேய்… அடிக்க மாட்டியா? அப்போ எம்பிள்ளையை அடிக்கலாங்குற ஐடியா வேற இருக்குதோ உனக்கு? தெலைச்சிபுடுவேன் தொலைச்சி.” நந்தினியின் காதை எட்டிப் பிடித்துக் கொண்டு மிரட்டினார் லீலாவதி.

“பாத்தீங்களா? அத்தையா இருக்கும் போது தங்கம், ராசாத்தின்னு செல்லம் கொண்டாடிகிட்டு, மாமியாரா அவதாரம் எடுத்த உடனே அடியேவா… நல்ல முன்னேற்றம் அத்த.” நந்தினி குற்றப்பத்திரிகை வாசிக்க, கிளுக்கிச் சிரித்தார்கள் பிள்ளைகள் எல்லோரும்.

அத்தனையும் ஒரு புன்முறுவலோடு கண்ணன் பார்த்துக்கொண்டிருந்தானே தவிர வேறெதுவும் பேசவில்லை. அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த நந்தினி,

“நாம கேக்கும் போதெல்லாம் பெரிய இவளாட்டம் சுத்தல்ல விட்டுக்கிட்டு இப்போ சட்டுன்னு இறங்கி வந்துட்டாளே, இவ்வளவு தானா இவன்னு  நினைக்கிறீங்களா அத்தான்?” ஒருமாதிரி குரலில் கேட்க, அவளைப் பார்த்து முறைத்தவன்,

“லூசு மாதிரி ஏதாவது பேசுனா சப்புன்னு அறைஞ்சிடுவேன்.” என்றான் பல்லைக் கடித்தபடி. அவன் கோபம் கூட அந்த சூழ்நிலையில் அவளுக்கு ஏனோ ஆறுதலாக இருக்க, சில வினாடிகள் அமைதியாக இருந்தவள்,

“எங்க அம்மாவுக்காக… அவங்க முகத்துல சிரிப்பைக் கொண்டுவர்றதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன், கல்யாணம் செய்யமாட்டேனா?” ஆழ்ந்த குரலில் சொன்னவள், கண்ணனின் கண்கள் அதிருப்தியாக சுருங்குவதைக் கண்டு,

“நம்ம ஊருல பாதிக் கல்யாணம் பெத்தவங்க ஆசைக்காகத் தானே நடக்குது. நானும் எங்க அம்மா ஆசைக்காக கல்யாணத்துக்கு சம்மதிச்சதுல ஒன்னும் தப்பில்லையே த்தான்?” இத்தனை நேரமும் நந்தினியின் குரலில் இருந்த கேலி விடைபெற்று சென்றிருக்க, தீவிரமான குரலில் கண்ணனைப் பார்த்து கேட்டாள்.

“அதெல்லாம் அந்தக்காலம், இப்போல்லாம் யாரோட சம்மதமும் இல்லாம கல்யாணம் எல்லாம் பண்ணிவைக்க முடியாது.” என்றவன்,

“இவ்வளவு அவசரமா நீ முடிவெடுக்க வேண்டாமோன்னு தோணுது. கொஞ்ச நாளெடுத்துக்கோ.” என்றான் மென்மையான குரலில்.

“இப்போ தான் அவளே இறங்கி வர்றா, இப்போ போய்… என்னடா ஆச்சு உனக்கு?” மகனை அதட்டினார் லீலாவதி.

“அவசரப்பட்டு இப்போ சம்மதம் சொல்லிட்டு அப்புறமா முடியாதுன்னு சொல்லிடுவேனோன்னு அத்தான் பயப்படுறாங்களோ என்னவோ த்த? அவங்க நினைக்கிறதும் சரிதானே. அப்படித்தானே நானும் இருந்துருக்கேன். இப்பவும் எங்க அம்மாவுக்கு நடந்த துரோகத்தோட வடு எந்நெஞ்சுல அப்படியே தான் இருக்குது. கூடவே ஆண்களைப் பற்றிய என்னோட அபிப்பிராயமும் தான்.”

“ஆனா, நான் கல்யாணம் பண்ணிக்கிறது தான் எங்கம்மாவுக்கு சந்தோசத்தை தரும்னா, அதையும் எங்க அம்மாவுக்காக நான் செய்வேன். அதே நேரம் என்னோட சுயநலத்துக்காக அத்தானோட வாழ்க்கையை கேள்விக்குறியா ஆக்குற உரிமை எனக்கு கிடையவே கிடையாது. என்னைப் பொருத்தவரை கல்யாணம் செய்யுறதுக்கு முன்னாடி எத்தனை தடவை வேணும்னாலும் யோசிக்கலாம், ஆனா கல்யாணம் செய்த பிறகு ஏன்டா செய்தோம்னு ஒரு செகண்ட் கூட யோசிக்க கூடாது. அந்த தப்பை என் வாழ்க்கையில நான் செய்யாம இருக்க ரொம்பவே பிரயத்தனம் பண்ணுவேன்.”  தன் மனதை திறந்து கொட்டிவிட வேண்டும் என்று நினைத்தாளோ என்னவோ நீளமாக பேசிய நந்தினி,

“அந்த தப்பை என்னை செய்ய விடாமல் வைக்கிறதுல உங்க பங்கு தான் அதிகமா இருக்கு த்தான்.“ என்றாள் கண்ணனைப் பார்த்து.

“பரவாயில்ல… தெளிவாவே குழப்புற ம்மா நீ. ஆனாலும் இந்த விஷயத்துல நான் உனக்கு உதவியா இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.” கண்ணன் சொல்லிய பாணியில் அவன் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டது புரியவும், மெல்லிய சிரிப்பு அலையோடு கரவொலியும் எழும்பி அடங்கியது அங்கே. பதிலுக்கு  எப்போதும் போல அவனை முறைத்தவள்,

“எனக்கு உங்ககிட்ட இன்னும் நிறைய நிறைய பேச வேண்டி இருக்குது கண்ணத்தான். அதுக்கு முன்னாடி அனிதாவோட பிரச்சினையை என்னன்னு பார்ப்போம்.” பூடகமாக சொன்னவள், “சொல்லு அனி…” என்றாள் தங்கையின் பக்கமாக திரும்பி.

“இப்பிடியே அவளை நிக்கவச்சி தான் பேசப்போறியா? உட்கார்ந்து பேசலாமே.” என்றான் கண்ணன்.

அவன் சொன்னதும் அத்தனை பேரும் பழையபடி தங்களுடைய இருக்கைகளில் அமர்ந்து கொள்ள, “அந்த வைரவமூர்த்தியோட பையன் உங்கூட வேலை பார்க்கிறாரா அனி?” நம்ப முடியாத குரலில் கேட்டாள் நந்தினி.

“ம்ம்… அது…” அனிதா பதில் சொல்ல முயல, அவளை முந்திக் கொண்ட கண்ணன், அவள் வேலை பார்க்கும் பள்ளியின் பெயரைச் சொல்லி, அது அவங்களோட சொந்த ஸ்கூல் தானே அனி என்று கேட்டான்.

“ஆமா த்தான்…அது அரசு உதவி பெறும் பள்ளி தான். ஆனா அவங்க குடும்பத்தோடது.  இவங்க எம். எஸ்சி, எம். எட், இப்போ பி ஹெச் டி அப்ளை செய்துருக்காங்க, ஸ்கூல் மேனேஜ்மென்ட் எல்லாம் இவங்க தான் பாத்துக்குறாங்க.” என்றாள் மெல்லிய குரலில். எத்தனை முயன்றும் பெண்ணவளின் குரலில் தன் மனம் கவர்ந்தவனைப் பற்றி சொல்லும் போது எழுந்த பெருமையை மறைக்க முடியவில்லை.

ஆமாம்… அது ஒரு மேனேஜ்மென்ட் ஸ்கூல் தான். ஜெகத்ரட்சகனின் தாத்தா  காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. தாத்தா என்றால் அம்மா வழித் தாத்தா.