அனிதாவுக்கு பளாரென்று விழுந்த அடியில், அறையில் இருந்த அத்தனை பேரும் பதட்டத்தோடு உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து எழும்பியிருந்தார்கள். அடிவிழுந்த கன்னத்தை கையால் பிடித்தபடி பயத்தோடு அக்காவின் முகத்தை பார்த்த அனிதாவின் கண்கள் உடைப்பெடுத்திருந்தது.
“ஏய் காட்டுமிராண்டி, இப்பிடித்தான் பேசிட்டு இருக்கும்போதே அடிப்பியா நீ?” நந்தினியை அதட்டியபடியே அக்கா தங்கை இருவருக்குமிடையே பாய்ந்து வந்து நின்றிருந்தான் கண்ணன்.
எதுவும் பேசாமல், கண்ணனின் முதுக்கு பின்னால் லேசாக மறைந்தபடி நின்றிருந்த தங்கையை கோபமாக முறைத்தாள் நந்தினி.
“பதில் சொல்லு, எதுக்கு இப்போ அனிதாவை அடிச்ச?” தனக்கு முன்னால் மரம் போல நின்றிருந்த நந்தினியை, மறுபடியும் கண்ணன் அதட்ட, கையிலிருந்த ஃபோனை அவனிடம் நீட்டினான்.
அதிலிருந்த புகைப்படங்களைப் பார்த்தவனுக்கும் கொஞ்சம் அதிர்ச்சியே. அதைக் காட்டிக்கொள்ளாமல், “இது… வைரவமூர்த்தியோட இரண்டாவது பையன் ஜெகத்ரட்சகன் தானே!” தனக்கு பின்னால் நின்றிருந்த அனிதாவிடம் கேட்டான்.
வைரவமூர்த்தி என்ற பெயரைக் கேட்டதுமே அங்கிருந்த அத்தனை பேரின் முகங்களும், பயத்தில் வெளிறிப்போக,
“ஆமாம்” என்பது போல தலையசைத்தாள் அனிதா.
“என்ன, லவ்வா?” ஊர்ஜிதம் செய்து கொள்வது போல கண்ணன் கேட்க, மறுபடியும் ஆமாம் என்று தலையசைத்தாள் அனிதா.
தங்கை தலையசைக்கவும் மறுபடியும் அடிப்பதற்காக கையை ஓங்கிக்கொண்டு வந்தாள் நந்தினி.
“எதுக்கு இப்போ அவளை அடிக்க பாயுற? லவ் பண்ணுறது என்ன அவ்வளவு பெரிய குத்தமா?” கோபமாக கண்ணன் கேட்க, அவன் கண்களை சந்தித்த நந்தினியின் கண்களில் உயிர்ப்பில்லை.
“ச்சு… என்ன?” உயிரோட்டமான அந்த கண்களை அப்படி பார்க்கப்பிடிக்காமல் லேசாக அதட்டினான்.
“நான் லவ்வுக்கு எதிரியெல்லாம் கிடையாது. எங்க எல்லாருடைய நம்பிக்கையையும் உடைச்சிட்டு வந்து நிக்குறாளே, அதால வந்த ஆத்திரம் இது. எத்தனை நம்பினோம், அத்தனையும் அழிச்சிட்டு வந்து நிக்குறாளே, ச்சை…” முகத்தை சுருக்கி கோபத்தில் கையை உதறினாள் நந்தினி.
அந்த பேச்சு அனிதாவை பதம் பார்த்துவிட, கண்ணனின் முதுக்கு பின்னாலிருந்து வெளியே வந்தவள், “க்கா… அப்படியெல்லாம் இல்ல க்கா…” என்று கதறியபடி நந்தினியை அணைத்துக்கொண்டாள். பதிலுக்கு தங்கையை ஆதரவாக அணைத்துக்கொண்ட நந்தினியின் கண்களில் இப்போது யோசனை.
“அவளுக்கு இருபத்தியாறு வயசாகுது. தன்னோட வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கிற பக்குவம் அவளுக்கு இருக்குதுன்னு நம்புவோம். ரொம்ப யோசிக்காத, பாத்துக்கலாம்.” நந்தினியின் யோசனையை பார்த்து ஆதரவாக பேசினான் கண்ணன்.
நந்தினிக்கும் அதில் மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால் தங்கையின் தேர்வு, அப்படி நினைத்து அவள் தன்னைத் தேற்றிக் கொள்ளும் அளவிற்கு இல்லையே.
காரணம் வைரவமூர்த்தி… அவரின் ஜாதி வெறி.
திருநெல்வேலி மாவட்டமே அறிந்த மறுக்க முடியாத உண்மை இது. அதனால் தானே வீட்டில் உள்ளவர்களும் இந்த காதல் விஷயம் தெரிந்ததும் அதிர்ந்து போய் நிற்கிறார்கள்.
இதையெல்லாவற்றையும் விட, அவருடைய ஜாதிக்காக அவர் என்ன வேண்டுமானாலும் செய்வார் என்று வாழும் சாட்சியாக சபேசன் கூறியதை சமீபத்தில் கேட்டிருக்கிறாளே. அதன்பிறகும் அவர் மகனோடு தன் தங்கையின் காதலை அறிந்து எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
ஆமாம்… வைரவமூர்த்தியின் ஜாதிவெறியில் துண்டாடப்பட்டது தான் சபேசனின் வாழ்க்கையும் காதலும். அதுவும் அவன் காதலித்த பெண் வைரவமூர்த்தியின் சொந்த மகள் பூங்கோதை என்றானதில் சூறாவளியாக சுழற்றியடிக்கப்பட்டிருக்கிறான்.
அவனுடைய பெற்றவர்களுக்கும் மகனின் உயிருக்கு முன்னால் வேறெதுவும் பெரிதாக இல்லாமல் போகவே, குற்றுயிரும் குலையுயிருமாக இருந்த மகனோடு ஊரைவிட்டே சென்றுவிட்டார்கள்.
அவரும் தன் பெண்ணின் படிப்பை பாதியிலேயே நிறுத்தி, தன் ஒன்றுவிட்ட சகோதரியின் மகனோடு கோலாகலமாக திருமணத்தை நடத்தியும் முடித்துவிட்டார்.
ஆனால் அந்த திருமணமும் நிலைத்திருக்கவில்லை அந்த பெண்ணிற்கு. ஒரு விபத்தில் கணவன் இறந்துவிட, ஒரே வருடத்தில் வயிற்றில் குழந்தையோடு தாய் வீட்டுக்கு திரும்பி வந்தது தான் மிச்சம். அதைப்பற்றி எல்லாம் அந்த மனிதருக்கு கவலையில்லை. அவருக்கு அவருடைய ஜாதியை வாழ வைத்தால் போதும். ஜாதிக்கு முன்னால் மகளின் வாழ்க்கை எல்லாம் ஒன்றுமே இல்லை.
“நீங்க எல்லாம் எதுக்கு காதலிக்கிறீங்க?” சமீபத்தில் பார்த்திருந்த பூங்கோதையின் தோற்றத்தில் பாதிக்கப்பட்டிருந்த நந்தினி சபேசனிடம் சீற,
“நான் என்ன சினிமா ஹீரோவா மேடம், எத்தனை பேர் வந்தாலும் அலட்டிக்காம அடிச்சு தூள் பண்ணிட்டு, லவ் பண்ணுன பொண்ணை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணிக்க? நான் சாதாரண மனுஷ பிறவி மேடம். அதுவும் பணபலமும் ஆள்பலமும் இல்லாத சாதாரண மனுஷன் மேடம்.” பேசிக்கொண்டிருப்பது தன்னுடைய மேலதிகாரியிடம் என்பதையும் மறந்து பதிலுக்கு சீறியிருந்தான் சபேசன்.
அத்தனையும் இப்போது ஒன்றுவிடாமல் ஞாபகம் வர, “தெரிஞ்சே உன்னோட வாழ்க்கையில என்னால ரிஸ்க் எடுக்க முடியாது, இந்த காதல் வேண்டாம் உனக்கு, விட்டுரு அனி.” என்றாள் தங்கையின் முதுகைத் தடவியபடி.
தமக்கையின் தோளிலிருந்து விலுக்கென்று நிமிர்ந்து அடிபட்ட பார்வை பார்த்த அனிதா, “அவங்க ரொம்ப நல்ல மாதிரி க்கா.” என்றாள் பரிதாபமாக.
அதுவும்கூட சபேசன் சொல்லி நந்தினிக்கு தெரியுமே! வைரவமூர்த்தியின் மூத்த மகன் தான் குணத்தில் தகப்பனை அப்படியே கொண்டிருப்பவன். இளையவன் அவர்கள் கூட்டத்தில் தப்பிப் பிறந்தவன் என்று பேச்சுவாக்கில் சபேசன் சொல்லியிருக்கிறானே.
ஆனால் அதற்காகவெல்லாம் இந்த திருமணத்திற்கு சம்மதித்துவிட முடியாதே. எனவே,
“வாழ்க்கையில் நிதர்சனம் எப்போதுமே வேறதான் அனி ம்மா. அந்த பையன் உனக்கு வேண்டாம் “ என்றாள் நந்தினி உறுதியான குரலில்.
“சரி க்கா, ஆனா லைஃப் முழுசும் நான் அம்மாவுக்கு பிள்ளையா, உனக்கு தங்கச்சியா மட்டும் தான் இருப்பேன்.” தமக்கையின் அணைப்பிலிருந்து மெதுவாக விலகிய நந்தினி, அதிர்ந்து பேசாமல் தன் முடிவைச் சொல்ல,
ஓவென்ற அழுகை வெடித்தது திலகத்திடமிருந்து.
“இதுக்கா நான் உங்களை கஷ்டப்பட்டு வளர்த்தது?” சத்தமாக அழுதபடியே பொத்தென்று தரையில் அமர்ந்த திலகம் வாய்விட்டு புலம்ப, அனிதா உட்பட பிள்ளைகள் நான்கு பேரும் பதறியடித்துக்கொண்டு அவரிடம் ஓட்டினார்கள்.
“ம்மா… இப்போ என்ன ஆகிப்போச்சுன்னு இந்த அழுகை?” தாயைத் தோளோடு அணைத்துக்கொண்டு சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கினாள் நந்தினி.
“இன்னும் என்ன ஆகணும் நந்தினி? நான் யார் முன்னாடி நெஞ்சை நிமிர்த்தி எம்பிள்ளைங்களை எப்படி வளத்துருக்கேன் பார்னு சொல்லணும்னு நினைச்சிருந்தனோ, அவரே இன்னைக்கு எம்முன்னாடி வந்து நின்னு என்ன பிள்ளை வளத்துருக்கன்னு விரலை நீட்டி குத்தம் சொல்லிட்டு போயாச்சு.” இத்தனை நேரமும் மனதை அழுத்திக் கொண்டிருந்த ராஜவேலுவின் குற்றச்சாட்டு இப்போது புலம்பலாக வெளியே வந்தது.
“ப்ச்ச்… அவரெல்லாம் ஒரு ஆளுன்னு… அவர் சொன்னா ஆச்சா ம்மா?” மென்மையாக தாயை அதட்டினாள் நந்தினி.
“எம்பிள்ளைங்களை படிக்க வச்சி ஆளாக்கி, அவங்களுக்கு ஜாம்ஜாம்னு கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்துன்னு எத்தனை கனவு எனக்கு… ஆனா அத்தனையும் கனவாவே போயிடும் போலயே? முன் ஏர் போற வழியில தான், பின் ஏரும் போகும்னு சும்மாவா சொன்னாங்க? மொதல்ல நீ கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்ன, இப்போ அவளும் சொல்லியாச்சு. மிச்சம் இருக்குற இரண்டு மகராசிகளும் என்ன வச்சிருக்காங்கன்னு எனக்கு தெரியல? இப்போ அந்த மனுஷன் சொன்னது போல உங்களை வளக்க எனக்கு தெரியலையோன்னு எனக்கே எம்மேல சந்தேகம் வருதே?” முகத்தை தன்னிரு கைகளால் மூடியபடி அழுத திலகம் தன்னிரக்கத்தில் கரைந்து கொண்டிருந்தார். அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்,
“நீங்க நினைச்சது எல்லாம் நடக்கும் ம்மா, அப்படியெல்லாம் அனிதா வாழ்க்கையை நான் விட்டுடமாட்டேன். நல்ல பையனா பார்த்து அவளுக்கு கல்யாணம் செய்து வைக்கலாம், கவலப்படாதீங்க.” தாயின் கண்ணீரை துடைத்து விட்டபடியே ஆறுதல் வார்த்தைகள் கூறினாள் நந்தினி.
“இல்ல க்கா, நான் சொன்னா சொன்னது தான், அதுல எந்த மாற்றமும் கிடையாது.” தன்னுடைய முடிவில் உறுதியாக அனிதா நிற்க, பாத்தியா என்பதுபோல கசப்பாக புன்னகைத்த திலகம்,
“ம்ஹும்…நீ கல்யாணம் பண்ணாத வரைக்கும் நான் நினைச்சது எதுவும் நடக்காது நந்து?” என்றார் சோர்வாக.