அவன் சுத்தம் செய்யும் அழகை பெண்கள் மூவருமே ஆச்சர்யமாக பார்க்க, “அநியாயமா? என்ன சொல்லுறீங்க கண்ணத்தான்.” என்று பேச்சை வளர்த்தாள் இந்துஜா.
“ஹாங்… இந்த அம்மாக்கள் எங்களுக்கு சமையல் வேலை பழக்கி விடாம, நல்லா உக்கார வச்சு வயித்தை வளத்துவிட்டுட்டு, கடைசியில ஒருவாய் சோத்துக்கு அடுத்தவங்க கையை எதிர்பார்க்க வச்சிடுறாங்க. அதுவும் உங்க அக்கா மாதிரி ஆட்களோட கையை எதிர்பாக்குறவன் செத்தான். லேடீஸ் தான் சமைக்கணுமா? ஆம்பிள்ளைங்கன்னா பெரிய இவனான்னு கேட்டே சாகடிச்சிடுவாங்க.” ஓரக்கண்ணால் நந்தினியை பார்த்தபடியே சொன்னான். அவன் எதிர்பார்த்தபடியே நந்தினியின் முகம் உடனடியாக எதிர்வினையாற்ற தொடங்க, உள்ளுக்குள் குதூகலம் அவனுக்கு.
“பாரேன்… இப்பக்கூட சொகுசா உக்காந்து சாப்பிடுறதை ஒத்துக்க மனசில்லாம அம்மாக்கள் மேல பழியைப் போடுறதை. இது தான் ஆண்களோட மெண்டாலிட்டி, சமையல் செய்யுறதை கௌரவக் குறைச்சலா நினைக்கிறது, அதே நேரம் நாங்க நல்லவங்க, எல்லாம் எங்க அம்மாக்களால தான்னு அவங்க மேல பழியைத் தூக்கி வைக்கிறது.” சிலிர்த்துக் கொண்டு சண்டைக்கு தயாரான நந்தினி,
“அது என்ன உங்க அக்கா மாதிரி ஆட்கள்னு மறைமுகமா சொல்லுறது, உங்க அக்கான்னு நேரடியாவே சொல்லுங்க சர். ஆமா… ஒருவேளை நான் கல்யாணம் செய்தா யாரையும் உக்கார வச்செல்லாம் சாப்பாடு செய்து போடமாட்டேன். அவங்களுக்கு வயிறு நிறையணும்னா எங்கூட சேர்ந்து சமையல் வேலை பாத்தே ஆகணும்” என்றாள் உறுதியான குரலில்.
அவளுடைய பாவனையில், “சொன்னேன்ல” என்று கேலியாக கண்ணன் உதட்டை பிதுக்க,
“அத்தான், கேட்ச் தி பாய்ண்ட்.” என்று கிளுக்கிச் சிரித்தார்கள் இளையவர்கள் இருவரும்.
“பிடிச்சாச்சு… பிடிச்சாச்சு…” வேண்டுமென்றே நந்தினியைப் பார்த்து லேசாக கண்ணைச் சிமிட்டியபடியே அவன் ராகமிழுக்க,
“அதெல்லாம் யாராலயும் என்னைப் பிடிக்க முடியாது. அதுவும் ரௌடிகளுக்கு வக்காலத்து வாங்குற காஸ்ட்லி லாயர்… நோ சான்ஸ்…” மறுப்பது போல இடவலமாக தலையை அசைத்தாள் நந்தினி.
“எங்களுக்கும் சந்தேகப் போலீஸ் வேண்டாம். அதுவும் ஆண்கள் எல்லாருமே தப்பானவங்கன்னு நினைக்கிற போலீஸ் வேண்டவே வேண்டாம்” என்றான் அவளுக்கு சளைக்காதவனாக.
ஜாடையாக என்றாலும் எதற்காக இந்த பேச்சு என்று பேசிய இருவருக்கும் புரிந்தே இருக்க, ஒருவரையொருவர் முறைத்தபடி நின்றிருந்தனர்.
“அத்தான், பேச்சு ரூட்டு மாறுதோ?” புரிந்தும் புரியாமலுமாக கேட்டாள் இந்துஜா.
“இப்போதான் சரியான பாதையில போகுது இந்து ம்மா. நீ இதுல கொஞ்சம் மசாலாவைப் போடு, ப்ரை பண்ணுறதுக்கு மிக்ஸ் பண்ணி வச்சிடலாம்.” என்றான் சுத்தம் செய்து முடித்திருந்த இறாலைக் காட்டி.
“ஐயோடா, நாலு யூ ட்யூப் வீடியோவை பாத்துட்டு வந்து என்னா பில்டப்!” அதற்கும் அவனைக் கலாய்த்தாள் நந்தினி.
“ஆமா… நான் இறால் வாங்கப் போறேன் கண்ணத்தான்னு எங்கனவுல வந்து நீ சொல்லிட்டு போன, அதான் நான் கரெக்டா வீடியோ பாத்துட்டு வந்துட்டேன்.” பதிலுக்கு கலாய்த்தவன், நந்தினி கையிலிருந்த குக்கரை பிடுங்கிக்கொண்டு,
“எனக்கு சாப்பிட மட்டுமில்ல, சமைக்கவும் தெரியும்னு இன்னைக்கு நான் ஃப்ரூப் பண்ணியே ஆகணும். அதனால சமையல் இன்னைக்கு நான் தான். நீங்க கேர்ள்ஸ் எனக்கு ஹெல்ப் பண்ணிக் குடுக்குறீங்க, ஓகே…” என்றபடி கிச்சன் மேடையில் வைத்து குக்கரைத் திறந்தான்.
திறந்தான்… அவ்வளவுதான் அவனால் முடிந்தது. குக்கர் மூடியை அவனால் உள்ளிருந்து வெளியே எடுக்க முடியவில்லை.
ஆமாம்… அது ஒரு ஹாக்கின்ஸ் குக்கர். எல்லா குக்கரையும் போலில்லாமல் இந்த குக்கரின் வாய்ப்பகுதி ஓவல் வடிவில் இருக்கும். அதன் வடிவத்துக்கு ஏற்றாற் போல மூடியை லேசாக சாய்த்து உள்பக்கமாக கொடுத்து, கைப்பிடியில் லாக் செய்ய வேண்டும். அதேபோல லேசாக சாய்த்து மூடியை வெளியே எடுக்க வேண்டும்.
அதில் அனுபவம் இல்லாத கண்ணன் லாக்கை விடுவித்து மூடியை மேலே தூக்கினால், அது குக்கருக்குள் இருந்து கொண்டு வெளியே வரமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்தது. சட்டென்று உடம்பில் ஒரு பரபரப்பு ஒட்டிக்கொள்ள நந்தினியைத் திரும்பிப் பார்த்த கண்ணன், மூடியை வெளியே எடுக்க விதவிதமாக முயற்சி செய்ய, பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் மூவரும் பக்கென்று சிரித்துவிட்டார்கள்.
“ஐயையோ… கிச்சன் கில்லாடிக்கு ஒரு குக்கரைக் கூட திறக்க முடியலைப்பா.” அடக்க முடியாத சிரிப்போடு கிடைத்தது சான்ஸ் என்று கண்ணனை ஓட்டித் தள்ளினாள் நத்தினி.
“அது… எங்க அம்மா இப்பிடி எல்லாம் குக்கர் யூஸ் பண்ணுனதே இல்ல தெரியுமா? நீங்க ஏன் இப்படி எல்லாம் வாங்கி வைக்கிறீங்க?” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசிய கண்ணன் தன் முயற்சியை விட்டுவிடாமல் முயன்று கொண்டே இருக்க, நந்தினியைப் போலவே அதுவும் அவனுக்கு போக்கு காட்டியது.
“கண்ணத்தான்… இப்பிடி திறக்கணும்.” கௌரி ஓடி வந்து அவனுக்கு சொல்லிக் கொடுக்க, ஒரு தடவையிலேயே பிடித்துக்கொண்டான் கண்ணன்.
“ப்ப்பூ… இவ்வளவு தானா?” என்றவன் குக்கரைக் கழுவி அடுப்பில் ஏற்றிவிட,
“வாங்கி வச்சிருக்க பொருட்களோட விலை எவ்வளவுன்னு தெரியுமா? எல்லாத்தையும் உங்களை நம்பி தரலாமா?” சந்தேகமாக கேட்டாள் நந்தினி.
“நான் உன்னை சந்தேக போலீஸ்னு சொல்லும் போது மட்டும் உனக்கு எவ்வளவு கோபம் வந்தது? இப்போ பாரு, அப்படித்தான்னு நீயே நிரூபிக்கிற.” கேலியாக கண்ணன் சொல்ல, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு அவனை முறைத்தாள்.
“இப்படியே சந்தேகப்பட்டு தான் என்னை மாதிரி பசங்களோட சமையல் திறமையை வெளி உலகத்துக்கு காட்டவே விடமாட்டேங்குறீங்க, கொஞ்சமாவது எங்களை நம்புங்க ம்மா.” அங்கலாய்த்தபடியே எண்ணையை ஊற்றி வெங்காயத்தை வதக்க ஆரம்பித்து விட்டான்.
“அதானே… நம்பிக்கை தானே க்கா எல்லாம்… அத்தானைப் பாரு எவ்வளவு லாவகமா வெங்காயத்தை வதக்குறாங்க, அந்த ஸ்டைலே சொல்லுதே கண்ணத்தான் சமையல் திறமையை, நீங்க ப்ரொசீட் பண்ணுங்க த்தான், நாம பாத்துக்கலாம்.” அவனோடு கை கோர்த்துக் கொண்டாள் இந்துஜா.
அதன் பிறகு அங்கே முட்டல் மோதல் வார்த்தையாடல்கள் இல்லை. கலகலப்பாகவே சமையல் நடந்தது. பெரும்பான்மையானவற்றை கண்ணனே அடுப்பில் நின்று செய்ய, பெண்கள் அவனுக்கு உதவி தான் செய்தார்கள்.
சிறிது நேரத்தில் கண்ணனின் தங்கை தீபாவும் அவர்களோடு சேர்ந்துகொள்ள கலகலப்புக்கும் கால்வாரல்களுக்கும் அங்கே பஞ்சமில்லாமல் இருந்தது.
சமையலை முடித்து அதை அழகாக சாப்பாட்டு மேஜையில் அடுக்கியும் வைத்தாயிற்று. கண்ணனின் தந்தை நாதனும், தம்பி அருளும் சாப்பாட்டு நேரத்திற்கு வந்துவிட்டார்கள். அனிதா அப்போதும் வரவில்லை.
“அனி… சாப்பாடு ரெடி ஆகிடிச்சி, சாப்பிட வர்றியா?” தங்கையிடம் கேட்காமல் சாப்பிட மனமில்லை நந்தினிக்கு. எனவே ஃபோன் செய்து கேட்டாள்.
“க்கா, நாங்க சாப்டுட்டு தான் இருக்குறோம். நீங்க சாப்பிடுங்க க்கா.” கொஞ்சம் தடுமாறியது அவள் குரல்.
“என்ன ஆச்சு அனி, வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு? பிரச்சினை ஒன்னும் இல்லையே?” வேகமாக கேட்டாள் நந்தினி.
“சரி, கவனமா வா.” என்றவள், தங்கை வரவில்லை என்ற விஷயத்தை சொல்லி எல்லாரையும் சாப்பிட அழைத்தாள். சாப்பாட்டு நேரமும் கலகலப்பாகவே சென்றது.
சாப்பிட்டு முடித்து எல்லோரும் ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். எல்லோருக்கும் ஐஸ் க்ரீம் கொடுத்தாள் நந்தினி. கப் ஐஸ்க்ரீம், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ப்ளேவரில் இருக்க, கண்ணனின் கையில் பட்டர் ஸ்காட்ச் ஃப்ளேவரை வைத்தாள். அவ்வளவு தான்… அவன் கண்களில் சந்தோஷ மின்னல் தெறித்தது.