அத்தியாயம் 07

“இந்த மட்டன் சூப்பை குடிச்சிட்டு இரண்டு பேரும் பேசாம உக்காந்திருக்கணும். இன்னைக்கு நாங்க தான் மத்தியான சமையல் ரெடி பண்ணப் போறோம், நீங்க சாப்பிடுறீங்க.” திலகம், லீலாவதி கைகளில் சூப் பௌலைக் கொடுத்துவிட்டு கட்டளை இடுவது போலச் சொன்னாள் நந்தினி.

“பேசக்கூடாதா? அது அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப கஷ்டமான டாஸ்க் ஆச்சேக்கா?” அம்மாக்கள் இருவரையும் கேலி செய்தது நந்தினியின் இரண்டாவது தங்கை இந்துஜா. யுபிஎஸ்சி தேர்வுக்காக சென்னையில் படித்துக் கொண்டிருப்பவள். அக்காவின் தேர்வு ஐபிஎஸ் என்றால் தங்கை ஐஏஎஸ் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முழுமூச்சாக தயாராகிக் கொண்டிருக்கிறாள்.

“ஐடியா எல்லாம் நல்லாத்தான் இருக்கு க்கா, நீ திடீர்னு வேலை வந்திடிச்சுன்னு கிளம்பி போகாம இருந்தா சரிதான்.” இது கௌரி. அந்த வீட்டின் கடைக்குட்டி. அவள் கையிலும் சூப் இருக்க, ரசித்து குடித்தபடியே பேசினாள்.

 திட்டமிட்டபடி இந்துஜாவும் கௌரியும் ஒன்றாக சேர்ந்து வீட்டுக்கு வந்திருந்தார்கள். அன்று ஞாயிற்றுக்கிழமை, சாயங்காலம் அலுவலகம் வருவதாக சபேசனிடம் சொல்லிவிட்டு வீட்டிலிருந்தாள் நந்தினி. எனவே நீண்ட நாட்களுக்கு பிறகு வீடு கொண்டாட்ட மனநிலைக்கு வந்திருந்தது.

அவர்களுடைய கொண்டாட்டத்தில் லீலாவதி குடும்பத்தார் இல்லாமலா? எனவே அவர்களையும் மதிய உணவிற்காக அழைத்திருந்தார்கள். வீட்டை காலி செய்துவிட்டு திலகம் இங்கே வந்தபிறகு, அவ்வப்போது லீலாவதியின் வருகை உண்டு தான்.

 இந்த வீடு பால்காய்ச்சி குடிவந்த அன்று லீலாவதி குடும்பமாக வந்திருந்தார். அன்று வந்தவன் தான் கண்ணன். அதுவும் பால் காய்ச்சும் வரை நின்றுவிட்டு வேலையிருக்கிறது என்று சென்றுவிட்டான். சாப்பிடக்கூட வரவில்லை. அதன் பிறகு இந்த பக்கம் வந்து எட்டித்தானும் பார்க்கவேயில்லை. இங்குதான் வரவில்லையே தவிர அத்தையைக் காண அவ்வப்போது தையலகத்துக்கு செல்கிறானாம்.

அவனுடைய நடவடிக்கையில், “ஏன் நந்து? உனக்கும் கண்ணனுக்கும் ஏதாவது பிரச்சினையா?” என்றுகூட திலகம் கேட்டிருக்கிறார்.

நீதிமன்ற வளாகத்தில் வைத்து எதேச்சையாக ஒரு முறை அவனை பார்க்க நேர்ந்திருக்கிறது. அப்போதும் யாரோ என்ற முகபாவனையில் நந்தினியைக் கடந்து சென்றிருக்கிறான். அப்படி முறுக்கிக் கொண்டு அலைபவன் இன்று மதிய சாப்பாட்டிற்கு வருவானா, மாட்டானா என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் வந்திருந்தது நந்தினிக்கு.

 அதுவுமில்லாமல் வைரவமூர்த்தி மாதிரியான ஆளிடம் அவன் சிக்கிக் கொள்ள கூடாது என்ற எண்ணத்தில் அன்று எச்சரிக்கை செய்ய முயன்றால், என்னவெல்லாமோ பேசுகிறான்.  இன்றுமட்டும் வீட்டில் வைத்து கையில் மாட்டினால் நன்றாக பதிலுக்கு கொடுத்துவிட வேண்டும் என்ற எண்ணமும் நந்தினிக்கு இருந்தது.

அதுவே, “நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க? மாமா எல்லோரும் எப்போ வருவாங்க அத்த?” என்று லீலாவதியிடம் கேட்கவும் வைத்தது.

“அதெல்லாம் சாப்பிடுற நேரத்துக்கு கண்ணத்தான் சரியா வந்துடுவாங்க, நீ வொர்ரி பண்ணிக்காத க்கா.” நந்தினியைக் கலாய்த்தபடியே அங்கே வந்த அனிதா, வெளியே செல்வது போல தயாராகி இருந்தாள்.

இப்போதெல்லாம் இப்படித்தான் நந்தினியையும் கண்ணனையும் இணைத்து பயமில்லாமல் அடிக்கடி பேசுகிறாள் அனிதா. அவளை முறைத்து பார்த்த நந்தினி,

“ம்மா… உங்க மகளுக்கு கல்யாணம் பண்ணுற ஐடியா வந்திடிச்சு போல, எனக்காகவெல்லாம் பாக்காதீங்க, மொதல்ல அவளுக்கு கல்யாணத்தை முடிங்க.” என்றாள் கடுப்பாக.

“ஐயையோ… அப்படியெல்லாம் இல்லன்னு சொல்லமாட்டேன் க்கா. ஆனா நீ கல்யாணம் பண்ணாம நாங்க யாருமே பண்ணிக்க மாட்டோம், அப்படித்தானே செல்லம்ஸ்.” தன் மற்ற இரு சதோதரிகளையும் பார்த்து அனிதா கேட்க, ஆமாம் என்று அவர்கள் வேகமாக தலையாட்டினார்கள்.

“அப்போ நீங்க லைஃப் முழுக்க இப்படியேத் தான் இருக்கணும்.” அலட்சியமாக நந்தினி தோள்களைக் குலுக்க, திலகத்தோடு சேர்ந்து லீலாவதியின் முகமும் கசங்கிப் போனது.

“அதெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம் க்கா, இப்போ நம்மளை சமைக்க விட்டுட்டு இந்த அம்மா மட்டும் கிளம்பி எங்க போறான்னு கேளுக்கா.” சூழ்நிலையை எளிதாக்க முயன்றாள் கடைக்குட்டி கௌரி. அது நன்றாக வேலை செய்யவே எல்லோரும் கேள்வியாக அனிதாவை பார்த்தார்கள்.

“பதில் சொல்லு அனி, லீவு நாளும் அதுவுமா எங்கப் போற?” நந்தினி கேட்க,

“எங்கூட வேலை பாக்குறவங்களுக்கு பிறந்த நாள் க்கா, சின்னதா செலிபிரேட் பண்ணலாம்னு கூப்டாங்க, போகலைன்னா நல்லா இருக்காது. போய்ட்டு வந்துடுறேனே, ப்ளீஸ் க்கா.” தமைக்கையின் முகவாயைப் பிடித்து கெஞ்சினாள் அனிதா.

“எவ்வளவு நாளைக்கு அப்புறம் நாங்க வீட்டுக்கு வந்துருக்கோம் அனி. எங்க கூட லஞ்ச் சாப்பிடாம, ஃப்ரெண்ட் கூப்பிடுறாங்க போறேன்னு சொல்லுறியே? அப்போ எங்களைவிட அவங்கதான் உனக்கு முக்கியமா?” ஏமாற்றத்தோடு முகம் சுருக்கினாள் இந்துஜா.

“வேலை பாக்குற இடத்துல உள்ளவங்க கூப்பிட்டு போகலைன்னா, நாளைக்கு அவங்களை ஃபேஸ் பண்ண கஷ்டமா இருக்கும் இந்து. அவ போயிட்டு வரட்டும். உங்களுக்கு லீவ் இருக்குது தானே. இன்னொரு நாள் இதைவிட சூப்பரா ஜமாய்ச்சிடலாம்.” தங்கையை சமாதானப்படுத்தினாள் நந்தினி.

“யெஸ் இந்து, நாளைக்கு லீவ் போட்டுட்டு நாள் முழுக்க உங்ககூடவே இருக்கிறேன். இப்போ போய்ட்டு ஓடிவந்துடுறேன்.” தனக்கு அடுத்து பிறந்தவளின் கன்னத்தை லேசாக கிள்ளி கொஞ்சிய அனிதா, எல்லோரிடமும் சொல்லிவிட்டு கிளம்பி சென்றுவிட, மீதமிருந்த மூன்று சகோதரிகளும் சமையலறையை முற்றுகையிட்டார்கள்.

தங்கைகளுக்கு பிடித்த மீன் வகைகள், மட்டன், சிக்கன் என்று நந்தினியே கடைவீதிக்கு சென்று வாங்கி வந்திருந்தாள்.

கடைக்குட்டி பிள்ளைகளுக்கே உரித்த ஆஸ்தான வேலையான வெங்காயம் உரிக்கும் வேலையை கௌரி கையிலெடுத்துக் கொண்டாள்.

“உளுந்தஞ்சோறு பொங்கி, மட்டனை கூட்டு மாதிரி வச்சிடலாம் க்கா, சிக்கனை ஃப்ரை பண்ணிடலாம், இந்த இறாலை என்ன பண்ணுறது?” இந்து சமையலை திட்டமிட ஆரம்பித்தாள்.

“ம்ம்… இறாலை தொக்கு வச்சி கொஞ்சமா பொறிச்சிடலாம்.” என்றபடியே அங்கு வந்து நின்றான் கமலகண்ணன்.

முன்பு இருந்த வீடுபோல இல்லை இது. நன்றாகப் பெரிய வீடு. கடைசியில் தான் சமையலறை இருந்தது. அதுவும் பக்கவாட்டு அறையாக இருந்தது. எனவே கண்ணன் வந்தது இவர்களுக்கு தெரியவில்லை.

ஹாலில் இருந்த அம்மாவிடமும் அத்தையிடம் சிறிது நேரம் அளவளாவியன், அத்தை மக்கள் எல்லோரும் சமையலறையில் இருக்கிறார்கள் என்று தெரியவும் தயக்கமின்றி அங்கேயே வந்துவிட்டான்.

“அடடே… வாங்க கண்ணத்தான். பரவாயில்லையே…சாப்பிடுற நேரத்துக்கு தான் வருவீங்கன்னு நெனைச்சா, சமையல் பண்ணவே வந்துட்டீங்களே!” கலகலப்பாக வரவேற்பில் இறங்கினாள் இந்துஜா.

“சமையல் தானே, செய்துட்டா போச்சு.” இலகுவான குரலில் சொல்லியபடி கவனமாக நந்தினியைத் தவிர்த்து இளையவர்களிடம் கலகலத்தவனின் கண்களில், சுத்தம் செய்வதற்காக வைத்திருந்த இறால் விழுந்தது.

 சட்டையின் முழுநீளக் கையை மடக்கிவிட்டபடியே, “இதை க்ளீன் பண்ண வச்சிருக்கீங்களா?” என்று கேட்டவன் எந்தவிதமான தயக்கமும் இன்றி இறாலைக் கையில் எடுத்துவிட,

 “ஐயோ அத்தான்… நான் சும்மா தான் சொன்னேன்.  நாங்க பாத்துப்போம், நீங்க கையைக் கழுவுங்க” என்றாள் இந்து பதட்டமாக.

“எதுக்காக இவ்வளவு டென்ஷன் இந்து? சமையல் ஆண்கள் செய்யக்கூடாத வேலையா என்ன? என்னைக் கேட்டா சாப்பிடத் தெரிஞ்ச எல்லோருக்கும் சமைக்கவும் தெரியணும். அதனால தாராளமா உங்க கண்ணத்தான் இந்த வேலையைச் செய்யலாம், விடு.” கிடைத்த முதல் வாய்ப்பை கச்சிதமாக பிடித்துக்கொண்டு கண்ணனின் காலை வாரிவிடத் தயாரானாள் நந்தினி.

 “என்னைக் கேட்டா, எங்களுக்கு நடக்குற மொத அநியாயம் இதுன்னு தான் சொல்லுவேன்…” நந்தினியை சவாலாகப் பார்த்தபடியே இறாலை லாவகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தான் கண்ணன்.