உள்ளே கால் வைக்காமல் தாண்டி போகும் படி சொன்னான். புடவையில் அவளால் அவன் சொன்னபடியெல்லாம் தாண்ட முடியவில்லை.
குடையை அவள் கையில் கொடுத்தவன் சட்டென அவளை தூக்கி பள்ளத்திற்கு அந்தப் பக்கம் விட்டான். ‘என்னடா செய்தார் இப்போது?’ என அவள் யோசிக்க, அவனும் பள்ளத்தை தாண்டி வேகமாக குடைக்குள் வந்தான். அவனது வேகத்தில் அவளின் தலையில் முட்டி விட்டான்.
அவள் ஆ என முனக, “லேசாதானே பட்டுச்சு, வலிச்சு போச்சா என்ன?” எனக் கேட்டான்.
“இல்லை பரவாயில்லை, நல்லா நனைஞ்சு போயிட்டீங்களே” என்றாள். அவளை விட அவன் நன்றாகத்தான் நனைந்து விட்டான்.
“இருக்கட்டும் நட” என்றவன் குடையை தான் வாங்கிக் கொண்டான். அவன் சொல்லாமலே அவளே அவனோடு ஒண்டிக் கொண்டு நடந்தாள். அவளின் நெருக்கத்தில் அவனுக்கு இப்போது இம்சையானது.
நூறடி தூரத்தை கடக்க பத்து நிமிடங்களாக நடந்திருந்தார்கள்.
இவர்களை காணவுமே அத்தை ஓடி வந்து வரவேற்றார்.
“வீடு மட்டும் மாளிகையா கட்டி வச்சா ஆச்சா அத்தை? தெரு முனையிலேருந்து இங்குட்டு வந்து சேருதுறதுக்குள்ள கண்ண கட்டிடுச்சு” என்றான் ருத்ரன்.
“பொது இடம்லடா தம்பி? நம்ம காசை போட்டு ரோடு போட சொல்றியா?” என அத்தை கேட்க, “மங்களத்தம்மா பொண்ணுன்னு நிரூபிச்சிட்டீய அத்தை” என்றான் அவன்.
அத்தையின் கணவரும் மகளும் வந்து வரவேற்றனர். கை கால் கழுவி லேசாக துண்டால் துடைத்துக் கொண்டாள் சிவா.
ஆடை மாற்றிக் கொள் என ருத்ரனிடம் அவனது மாமா சொல்லியும் அவன் கேட்கவில்லை, தலையை மட்டும் துவட்டிக் கொண்டான்.
இரண்டு மணி நேரத்தில் விருந்தை முடித்துக் கொண்டு கிளம்பி விட்டார்கள். மழை நின்று போயிருக்க, போகும் போது அத்தனை சிரம படவில்லை. இன்னொரு அத்தை வீடு செல்வதற்கு யோசித்தான்தான், எப்படியும் போயிதான் ஆக வேண்டும், இன்றே வேலையை முடித்து விடுவோம் என கருதி அங்கேயும் சென்று விட்டான்.
இரவு ஏழு மணிக்கெல்லாம் விருந்தை முடித்துக் கொண்டு எட்டு மணிக்கெல்லாம் வீடு வந்து சேர்ந்து விட்டனர்.
உறங்க போவதற்கு முன் மீண்டும் நல்ல மழை பிடித்துக்கொண்டது. மின்சாரம் மாலையே போய் விட்டது. அந்த ஊரில் அடிக்கடி மின்சாரம் போய் விடும் என்பதால் இன்வெர்டர் இருந்தால் கூட சிக்கனமாகத்தான் உபயோகிப்பார்கள். ஹாலில் உள்ள பல்பு மட்டும் எரிந்தது. மற்றபடி ஊரே இருட்டில் மூழ்கியிருந்தது.
இன்னும் மூன்று நாளைக்கு நல்ல மழை இருக்க போவதாக வானிலை அறிக்கையில் சொல்லியிருந்தார்கள்.
ஹாலின் பின் பக்க வாயிலில் நின்று கொண்டிருந்த சிவாவுக்கு அவளின் அக்காவின் நினைவுகள். நன்றாக இருப்பதாக ஒரு தகவல் சொல்லக்கூடாதா என மனதிற்குள்ளேயே கௌரியை கடிந்து கொண்டாள்.
“தூங்காம என்ன பண்ணிட்டு இருக்கிற?” என ருத்ரன் கேட்கவும் திரும்பினாள்.
“இன்னிக்கு நிறைய பலகாரம் சாப்பிட்டாச்சா, அதான் என்னவோ போல இருக்கு” என்றாள்.
“நானும் அதைத்தானே சாப்பிட்டேன், எனக்கு ஒன்னும் செய்யல? சரி சுடுதண்ணி வச்சு குடிச்சிட்டு வா, தேவலையாவும்” என்றான்.
“கீழ போயா? ட்ரெஸ் மாத்திட்டேனே” என்றாள்.
நைட்டி தான் அணிந்திருந்தாள். ஆனால் இறுக்கமாக இருந்தது, காலையிலிருந்து கட்டியிருந்த புடவையை மாற்றிக் கொள்ளும் அவசரத்தில் இதுதான் அவளின் கைக்கு கிடைத்தது, இரவில் உறங்கி விட்டு காலையில் மாற்றிக் கொள்ள போகிறோம் என நினைத்து அதையே போட்டுக் கொண்டாள்.
அந்த நைட்டி அவளது உடல் வளைவுகளை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது. அவளை அளவிட்டவன் குரலை செருமிக் கொண்டு, “சரி சரி, நான் எடுத்திட்டு வரேன்” என சொல்லி கீழே சென்றான்.
மீண்டும் மழையை பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அக்காவை பற்றிய கவலையில் கண்களில் நீர் தழும்பியது.
தன் கைப்பேசியை எடுத்த சிவா கௌரியின் எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள். ரிங் செல்லவும் அவளுள் பர பரப்பு. அழைப்பு ஏற்க படவுமே, “கௌரி கௌரி… நல்லாருக்கியா எங்க இருக்க நீ?” என பட படத்தாள்.
மழையின் காரணமாக சிக்னல் இல்லாமல் அழைப்பு துண்டிக்கப் பட்டுவிட்டது.
வேகமாக ஹாலின் முன் பக்கம் வழி மாடிப் படிகளில் இறங்கி ருத்ரன் வருகிறானா என பார்த்தாள்.
வேலையாள் ஏதோ ஒரு மாட்டுக்கு உடல் உபாதை என சொல்வதையும் கையிலிருந்த பிளாஸ்க்கை திண்ணையிலேயே வைத்து விட்டு மாட்டுக் கொட்டகைக்கு ருத்ரன் செல்வதையும் கண்டாள். மீண்டும் மாடியில் உள்ள ஹால் வந்தவள் மறுபடியும் கௌரிக்கு அழைத்தாள்.
அழைப்பு செல்லவில்லை, இவளுடைய கைப்பேசியில் சுத்தமாக சிக்னல் இல்லை. கைப்பேசியை உயர்த்தி பிடித்துக்கொண்டே ஹால், அறை என எங்கும் அலைந்து கொண்டிருந்தாள்.
சோர்ந்து போனவளாக மீண்டும் ஹாலின் பின் பக்க வாயிலில் வந்து நின்று கொண்டாள்.
சுடு தண்ணீர் எடுத்துக் கொண்டு வந்து விட்டான் ருத்ரன்.
“மழை நாள் ராத்திரி நேரத்துலதான் எல்லாருக்கும் ஏதாவது பண்ணும்” என சொல்லிக் கொண்டே ஃபிளாஸ்க்கை அவளிடம் கொடுத்தான். கைப்பேசியை அலமாரியில் வைத்தவள் டம்ளர் எடுத்தாள்.
தண்ணீர் ஊற்றி பருகிக் கொண்டே “வேற யாருக்கு என்ன?” எனக் கேட்டாள்.
மாடு ஒன்றுக்கு வயிற்று நோவு என்றவன், “காலைலதான் டாக்டர் வருவாரு, கைவைத்தியம் செய்ய சொல்லிருக்கேன், ராப் பொழுதுக்குள்ள பெருசா ஏதும் ஆகாம இருக்கணும்” என்றான்.
“ரொம்ப தொந்தரவா?” என விசாரித்தாள்.
“பார்த்தா அப்படி தெரியலை, ஆனா கஷ்ட படுதுதான். அதை வுடு, கைவைத்தியத்துல சரியானாலும் ஆவும். உனக்கு சரியாகுதா பாரு, ரொம்ப தொந்தரவுன்னா அம்மாவை எழுப்புறேன், உனக்கும் கைவைத்தியமா ஏதாவது கொடுக்கும்” என்றான்.
“அதெல்லாம் வேணாம், இப்ப பரவாயில்லை” என அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அவளது கைப்பேசி அழைத்தது.
கையில் எடுத்த ருத்ரன் திரையில் கௌரியின் பெயரையும் உருவத்தையும் பார்த்து விட்டு கோவம் கொப்புளிக்க சிவாவை பார்த்தான்.
அழைப்பை துண்டிக்க எண்ணி கைப்பேசியை பறித்தாள் சிவா. தவறுதலாக அழைப்பு ஏற்க பட்டு விட்டது. திரையும் லாக் ஆகி விட்டது.
“சிவா சிவா நான்தான் கௌரி, எனக்கு கூப்பிடியே என்னாச்சு சிவா, கால் கட் ஆகிடுச்சு, உனக்கு கூப்பிட்டா கால் போகல. என்னடி ஏதாவது பேசேன்…” என கௌரி பேசிக் கொண்டிருக்க, ஒரு வழியாக அழைப்பை துண்டித்து கைப்பேசியை அணைத்தாள் சிவா.
அந்த கைப்பேசியை பிடுங்கிய ருத்ரன் வெளிப்பக்க தரையில் வீசி அடித்தான். இருளிலும் மழையிலும் எங்கு போய் விழுந்தது எனக் கூட தெரியவில்லை.
அவளையும் அடிக்க கை ஓங்கி விட்டான். பயத்தில் அவள் தலையை பின்னுக்கு இழுக்கவும் கையை இறக்கியவன் அவளை இழுத்துக் கொண்டு போய் வெளியில் மழையில் நிறுத்தி விட்டான்.
“எம்புட்டு துணிச்சல்டி உனக்கு? என்னை ஏமாத்திட்டு ஓடுனவ கூட என்னடி பேச்சுங்கிறேன்? இனி ஜென்மத்துக்கும் அவ நெனப்பு உனக்கு வரக்கூடாது!” என கொடூர முக பாவத்தோடு சொன்னவன் ஹால் வந்து விட்டான்.
வெளியிலேயே சுவர் ஓரமாக வந்து நின்றாள் சிவா. மேலே சுவரை ஒட்டி ஒரு அடி அளவுக்கு மேற்கூறை இருந்ததால் மழையில் நனையாமல் தன்னை காத்துக் கொண்டாள். ஆனால் தரையெல்லாம் ஈரம்தான்.
ருத்ரனின் செயலில் அதீத அதிருப்தியும் அளவிட முடியாத கோவமுமாக இருந்தவள் குளிர் தாளாமல் கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டாள்.
வெளியே பொழியும் மழைக்கு மாறாக ருத்ரனின் மூளையிலோ தீ பிடித்திருந்தது.