பிள்ளைகளை ஹாலில் அமர வைத்து நேரம் செலவிட்டாள் சிவா. அவர்களை பார்த்துக் கொண்டே ருத்ரனுக்கும் நேரம் ஓடியது.

சாப்பிட்டு விட்டு மீண்டும் மேலே வரும் போது பிள்ளைகளை ருத்ரனே அழைத்து வந்து விட்டான். ஆனால் அவர்களை சமாளிக்கும் வேலை சிவாவுடையதுதான். இவன் வெறும் வேடிக்கை மட்டும்தான். இப்படியாக அன்றைய பகல் ஓடியது.

சிவரஞ்சனி அறையிலும்  ருத்ரன் ஹாலிலும் என படுத்துக் கொண்டனர்.

அடுத்த நாள் காலையில் உள்ளூரில் இருக்கும் சித்தப்பாவின் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். காலையில் அங்கே முடித்து விட்டு மதியமும் இரவும் இரண்டு அத்தைகளின் வீடுகளுக்கு செல்வதாக திட்டம்.

கார்த்திகை மாதம் என்பதால் அடிக்கடி மழை பெய்தது. ஆகவே காரில்தான் சென்றனர்.

சிவாவிடம் கோதை நன்றாக பழகினார், அவர் வசிக்கும் வீடு நவீனமாக இருந்தது.

“என் மாமியாவோட எனக்கு செட் ஆகவே இல்லை, அங்குட்டு இருக்க முடியாதுன்னு இவர்கிட்ட சொல்லவும் முதல்ல சண்டை போட்டாரு, நான் கோச்சுக்கிட்டு எங்கம்மா வூட்டுக்கு போயிட்டேன். அப்புறம்தான் தனியா அழைச்சிட்டு போனாரு” என பழைய கதைகள் எல்லாம் சொன்னார்.

ருத்ரன் அவனது சித்தப்பாவுடன் திண்ணையில் அமர்ந்திருந்தான். அவர்கள் தோப்பு, வயல், கோயில் வேலை என  பேசிக் கொண்டிருந்தனர்.

“ருத்ரனோட அப்பா செத்து போனப்போ அந்த வூட்லதான் இருந்தேன். அப்ப நிறைய பணக் கஷ்டம், ருத்ரன் அப்பாதான் எல்லாத்துக்கும் காரணம்னு என் புருஷன் கலையோட அப்பா எல்லாம் பிரச்சனை பண்ணினாக. என் மாமனாருக்கு உதவ கூட முன் வராம சொத்த பிரிச்சு கேட்டாக. ஸ்கூல் முடிச்சிட்டு வந்து தாத்தாகிட்ட ஓடிடும் புள்ள, அப்பான்னா ரொம்ப பாசம், திடீர்னு போயிட்டார், அவரை எல்லாரும் குறை பேசுறாங்கன்னு எம்புட்டு கஷ்டப்பட்டுச்சோ? இப்ப ருத்ரா ருத்ரா’ன்னு வாய் ஓயாம கூப்பிட்டு வச்சு பேசுறாங்கனு பார்க்காத, அந்தக் காலம் நிறைய ஆடினாக. அண்ணன் மவன் மவுசு தெரிஞ்சு இப்ப அடங்கி போயிட்டாவோ. அம்மா சொல்லிபுட்டா அப்படியே கேட்டு நடந்திடுவான் ருத்ரன், இப்ப நீ வந்துட்டீல்ல, உம்பேச்சையும் கேட்டு நடந்துப்பான்”  என பெரிதாக நீட்டி முழக்கினார் கோதை.

“நடக்கிற கதையா பேசுங்க அத்தை” என்றாள் சிவா.

“நடக்காம போவாதுடி. இப்படி கடுசா இருக்கிற ஆம்பளைங்கதான் பொண்டாட்டிய தாங்குவாக. போக போக நெசத்தை தெரிஞ்சிக்கிடுவ” என அவர் சொல்ல, நம்பாமல் சிரிக்க மட்டுமே செய்தாள்.

ஆனால் அவனது சிறு வயது கதை அவளுக்கு வருத்தமாக இருந்தது. அதனால்தான் இவ்வளவு கடுமைத் தன்மையோடு இருக்கிறான் போலும் எனவும் நினைத்துக்கொண்டாள்.

“என்ன செய்றீய சித்தி? இன்னும் ரெண்டு வூட்டு விருந்துக்கு போகணுமா இல்லையா?” என சத்தம் கொடுத்தான் ருத்ரன்.

“இந்தா ஆச்சுப்பா” என்ற கோதை வேகமாக உணவை கொண்டு வந்து வைத்தார்.

சாப்பாடு ஆனதும் புது மணமக்களுக்கு பணம் வைத்துக் கொடுத்தனர்.

“உங்களுக்கு பிடிச்ச போல நீங்களே பார்த்து ட்ரெஸ் எடுத்துக்கோங்க” என பொதுவாக சொன்ன கோதை, ருத்ரனிடம், “வேற செலவு பண்ணிப்புடாதய்யா, நெனப்பா சிவாவுக்கு துணி எடுத்து கொடுத்திடு, நான் கேப்பேன் அப்புறம்” என்றார்.

“எது கொடுத்த பணத்தை கேப்பியளா?” எனக் கேட்டான் ருத்ரன்.

“ம்ம்… கொடுத்ததையே எப்புடி கேப்பேன், வட்டி போட்டு கூடத்தான் கேப்பேன்” என்றார் கோதை.

“என் அம்மாதான் வட்டிக்கு விடும், நீங்களும் ஆரம்பிச்சிட்டியளா? சொல்லவே இல்லை. எல்லாம் கணக்கு வச்சு எந்தங்கச்சிக்கு செஞ்சிடுறேன்”என்றான்.

‘இப்படியெல்லாம் பேசுவானா?’ என கணவனை பார்த்தாள் சிவா. ‘என்ன பேசினாலும் அதே உர்ருன்னு இருக்க மூஞ்சுதான்’ எனவும் மனதில் அவனை கடிந்து கொண்டாள்.

கிளம்பும் போது நன்றாக மழை பிடித்துக்கொண்டது. ஒரு குடை எடுத்து வந்து தந்தார் கோதை. அவர்கள் விடைபெற்று வீட்டிலிருந்து இறங்கவும், “ரெண்டு குடையா கொடுக்கறத்துக்கு என்னடி?” என மனைவியை கடிந்தார் சேகர்.

“அந்தக் காலத்துல ஒரு குடை புடிச்சு நீங்க என்னை அழைச்சிட்டு போகல? நம்ம மவனும் திறமைக்காரன்தான், பொண்டாட்டி ய நனைய வுடாம அழைச்சிட்டு போயிடுவான்” என கோதை சொல்ல, பழைய நினைவுகளில் மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு கள்ளச் சிரிப்பு சிரித்தார் சேகர்.

 ருத்ரன் குடை பிடித்துக்கொள்ள  இருவரும் நடந்தார்கள். பட்டுப் புடவை ஆகிற்றே என கணுக் கால் வரை புடவையை உயர்த்தி பிடித்துக்கொண்டாள் சிவா. பெரிய குடைதான் என்றாலும் இருவரால் தாராளமாக நிற்க முடியவில்லை.

 சிவாவின் தோள் பட்டையில் மழை தண்ணீர் வடிய, அவளை இழுத்து பிடித்து தனக்கு நெருக்கமாக அழைத்து சென்று காரில் ஏற்றி விட்டான்.

காரில் அமர்ந்தவளுக்கு அவனது நெருக்கம் தந்த படபடப்பு இன்னும் குறைந்திருக்கவில்லை. அவனும் காரில் ஏறியவன் அம்மாவுக்கு அழைத்து, “இம்புட்டு மழைல அத்தைக வீட்டுக்கெல்லாம் எப்படி போறது மா, இன்னொரு நாள் பார்த்துக்கிடலாம்னு அவுகள்ட்ட சொல்லிடு” என்றான்.

எல்லாம் சமைக்க ஆரம்பித்திருப்பார்கள், காரில்தானே போகிறாய், முடித்து விட்டே வா என சொல்லி விட்டார் வள்ளி.

“எது சொன்னாலும் ஏதாவது சொல்ல வேண்டியது!” என எரிச்சல் பட்டுக் கொண்டேதான் அழைப்பை துண்டித்தான்.

நடு அத்தையின் வீட்டுக்கு செல்லும் போது தெரு முனையிலேயே காரை நிறுத்தி விட்டான். குறுகிய சந்து அது, கார் உள்ளே செல்லாது.

ஒரு குடை வைத்துக்கொண்டு எப்படி நடப்பது என நினைத்த சிவாவுக்கு, ஏன் அத்தைகள் வீடுகளுக்கு இன்று வேண்டாம் என அம்மாவிடம் சொன்னான் என்பது இப்போது புரிந்தது.

இவளை காரில் இருக்க சொல்லி விட்டு தான் மட்டும் அத்தை வீட்டுக்கு சென்று இன்னொரு குடை வாங்கி வரலாமா என கூட யோசித்தான். அத்தையின் மகள் வீட்டில்தான் இருப்பதாக அம்மா சொல்லியிருக்க, அவளின் கிண்டலுக்கு பயந்து ஒரு குடை வைத்தே சமாளிப்பது என தீர்மானித்து விட்டான்.

தன் வீடு அல்லது வேறு வயல் வேலை என்றால் மழையில் நனையவும் அவன் தயங்கியிருக்க மாட்டான். இங்கு முடித்து இன்னொரு அத்தை வீட்டுக்கு வேறு செல்ல வேண்டுமே.

மண் சாலை என்பதால் சேறும் சகதியுமாக அவளால் நடக்கவே முடியவில்லை. ஓரடி எடுத்து வைப்பதற்கே பெரும் பாடாக இருந்தது. எங்கே விழுந்து விடுவாளோ என இவனுக்கும் பயம், ஆகவே அவளை அணைவாக பிடித்துக்கொண்டே நடந்தான்.

மழை ஈரத்தால் சில்லிட்டு போயிருந்த அவனது கை பட்ட இடை இம்சையை கூட்ட, செருப்போடு இருந்த கால்  சேற்றில் புதைந்து கொள்ள அவளுக்கு அலற வேண்டும் போலிருந்தது.

அங்கு நடப்பது சிரமம் என்பது அவனுக்கு தெரியும், ஆகவே கோவம் கொள்ளாமல், “அந்தா இருக்குது பாரு வீடு, இதோ போயிடலாம்” என  சொல்லி அவளை நடக்க வைத்தான்.

அடித்த மழைக்கு எல்லாரும் வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்தனர். ருத்ரனின் அத்தை வீட்டில் கூட விருந்துக்கு இன்று வர மாட்டார்கள், சற்று நேரத்தில் செய்தி சொல்வார்கள் என்றே நினைத்திருந்தனர்.

ஒரு இடத்தில் வழுக்கி விழப் போய் விட்டாள் சிவா. அவளை பிடிக்கிறேன் என குடையை கீழே விட்டு விட்டான் ருத்ரன். சில நொடிகள் இருவரையும் ஸ்பரிசித்தது மழை.

மீண்டும் குடையை எடுத்து அவன் பிடிக்கும் போது லேசாக நனைந்து போயிருந்தனர் இருவரும். சற்று முன்னால் மழை நீர் வாய்க்கால் போல ஓடிக் கொண்டிருக்க, அந்த இடம் பள்ளமாக இருக்கலாம் என  கணித்தான் ருத்ரன்.