மொட்டவிழ்ந்த தேனரும்பே -7

அத்தியாயம் -7

அன்று காலையே குளித்து தயாராகி கீழே வந்து விட்டாள் சிவரஞ்சனி. அவள்தான் பால் காய்ச்சியதே. சம்பிரதாயத்துக்கு ஒரு இனிப்பு செய் போதும் எனதான் வள்ளி சொன்னார். ஆனால் முழு சமையலும் அவளே செய்தாள். அனைவருமே வழக்கத்தை விட கூடுதலாகவே சாப்பிட்டனர்.

சதாசிவம் தாத்தா இட்லியில் சாம்பாரை ஊற்றி சப்பு கொட்டிக்கொண்டு சாப்பிட்டார்.

“என்ன மனுஷன் நீங்க? காணாததை கண்ட மாதிரி…” நொடித்தார் மங்களத்தம்மாள்.

“உனக்கு எங்கடி எரியுது? ஆயி அந்த முட்டைகோஸ் போண்டால இன்னும் ஒன்னு எடுத்து வை” என கேட்டு வாங்கி சாப்பிட்டார்.

“சும்மா சொல்லக்கூடாது ஆயி, அந்த அன்னபூரணி தாயி உன் கைக்கு மட்டும் ஏதோ பெசல் அருளு கொடுத்திருக்கா” என பாராட்ட வேறு செய்தார்.

“சமையகார குடும்பம்தானேய்யா, அதான் ரகம் ரகமா வாய்க்கு ஒனக்கையா ஆக்கி போட்ருக்கா, இது ஒரு அதிசயமா?” என்றார் பாட்டி.

சமையல் கட்டில் நின்றிருந்த சிவாவிடம், “ஆத்தா எப்பவும் இப்படித்தான் கண்டுக்காதீய அண்ணி” என்றாள் வைதேகி.

“சமையல் செய்றவங்கன்னா கேவலம்னு அவங்க நினைச்சிட்டாங்க போல அத்தாச்சி, அவங்களோடவே இருக்கட்டும் அந்த நெனப்பு” என சொல்லி சிவாவும் சாதாரணமாகவே எடுத்துக் கொண்டாள்.

“ஆனா அண்ணி, நெஜமாவே அம்புட்டும் அத்தனை ருசி. என் அண்ணன் கொடுத்து வச்சது”  என வைதேகி சொல்லிக் கொண்டிருக்கும் போதே சாப்பிட வந்து விட்டான் ருத்ரன்.

அண்ணன் அண்ணி இருவரையும் அமர வைத்து பரிமாறிய வைதேகி, சிவாவின் சமையல்தான் இன்று என விவரம் சொன்னாள். அவன் கண்டு கொண்டது போலவே தெரியவில்லை. சிவாவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

‘ஒரு வார்த்தை நல்லாருக்குனு சொன்னா என்னவாம்?’ என வைதேகிக்குத்தான்  வருத்தம்.

மதியமும் சமைக்கிறேன் என சிவா சொல்ல, வள்ளி சம்மதிக்கவில்லை. “புதுப் பொண்ணு சமைய கொட்டாயிலேயே நின்னுட்டு இருக்க கூடாது, அவன் கூட போய் இரு”  என மாடிக்குத்தான் துரத்தி விட்டார்.

ருத்ரனுக்கே மாடியில் இருந்து என்ன செய்வது என தெரியவில்லை. நேற்று பழைய கணக்கு நோட்டுக்களை ஒழித்து மேசையையும் துப்புரவு செய்தாகிற்று. நடந்து கொண்டே இருந்தவன் சிவாவை கண்டதும், “நான் வெளில போறேன், அம்மா கேட்டா இங்குட்டுதான் தூங்கிட்டு இருக்கேனு சொல்லி சமாளிச்சுக்க” என்றான்.

“ஹையோ பொய்யா!” என அதிர்ந்தாள் சிவா.

“உண்மையை தவிர வேற எதுவும் பேசினதில்லைனு என்கிட்ட பொய் சொல்லாத” என சொல்லி வெளியேறி விட்டான்.

கீழேயே அவனை தடுத்து மீண்டும் மாடியேற்றி விட்டார் போலும் வள்ளி. முகத்தை தொங்க போட்டுக் கொண்டுதான் வந்தான்.

அவனுக்கு பொழுது போகவில்லை என்பதை புரிந்து கொண்ட சிவாதான் வைதேகியின் பசங்களை அழைக்க சென்றாள்.

“ஹையையோ அண்ணி! அண்ணனுக்கு சின்ன புள்ளைங்கன்னாலே ஆகாது, தொல்லை பண்ணுதுகன்னு சத்தம் போடுவாரு” என்றாள் வைதேகி.

“நான் பார்த்துக்கிறேன் அத்தாச்சி” என சொல்லி பிள்ளைகளுடன் சென்று விட்டாள். அவளுக்கும் பொழுதை ஓட்டியாக வேண்டுமே.

வைதேகியின் மூன்று வயது பெண்ணை இடுப்பிலும் ஐந்து வயது பையனை கையிலும் பிடித்துக்கொண்டு வந்து நின்றவளை பார்த்த ருத்ரன், “இங்குட்டு எதுக்கு கூட்டிட்டு வந்த?” எனக் கேட்டான்.

“இவங்களுக்கு மாமாவை பார்க்கணுமாம்” என சொல்லி ஹாலில் விளையாட விட்டாள். சும்மா சொல்லக்கூடாது, மாமனுக்கும் மாமிக்கும் நன்றாகவே ட்ரில் எடுத்தார்கள் பிள்ளைகள்.

சற்று நேரத்தில் எல்லாம் அறைக்கு சென்று விட்டான் ருத்ரன். அவனால் சமாளிக்க முடியவில்லை.

டிவியில் கார்ட்டூன் சேனல் வைத்து விட்டாள் சிவா. பெரியவன் அதை பார்க்க, சின்னவளுக்கு அதெல்லாம் பிடிக்கவில்லை. மாமனின் அறைக்கு சென்று விட்டாள். படுக்கையில் ஏறி தலையணை எல்லாம் கீழே தள்ளி, அது போதாது என்று அலமாரியில் உள்ள துணிகளை எல்லாம் இழுத்து போட்டு விட்டாள்.

“ஏய் ஏய் என்னடி பண்ற?” என ருத்ரன் சத்தமாக அதட்டியதில் அழ ஆரம்பித்து விட்டாள்.

தூக்கி வைத்து சமாதானம் செய்யலாம் என அவன் முயல, குழந்தையோ இன்னும் வீரியமாக அழுதது.

“ஏய் சும்மான்னு இரு, அழுவாந்தங்கிறேன்ல!” அவனுக்கு அதட்டி அதட்டித்தான் சமாதானம் செய்ய வந்தது.

“என்னங்க இப்படி அழுவ விடுறீங்க? கொடுங்க” என சொல்லி குழந்தையை வாங்கிக் கொண்டாள் சிவா.

“மாமா மாமா அடி அடி…” என சொல்லிக் கொண்டே அழுதாள் குழந்தை.

“மாமாவை ரெண்டு அடி வச்சாதான் அழுகாட்சியை நிறுத்துவா பாப்பா” என தன் தங்கையை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த பெரியவன் சொன்னான்.

“ஹையோ உன் மாமாவை நான் அடிக்கிறதா? நல்லா மாட்டி வைக்கிறடா என்னை” என முணு முணுத்த சிவா, குழந்தையின் அழுகையை நிறுத்த வெளியில் அழைத்து சென்றாள்.

ருத்ரனும் அவர்களிடம் வந்து விட்டான்.

“அது கண்ணு முன்னாடி எனக்கு சும்மா ரெண்டு அடி வச்சு விடு, செல்லக்கழுதை எப்படி அழுவுது பாரு, உடம்புக்கு ஏதாவது வந்திட போவுது” என்றான்.

சிவா தயக்கமாக அவனை பார்க்க, “அட புள்ள அழுவுது பாரு!” என அதட்டினான்.

ருத்ரனின் தோளில் இரண்டு தட்டு தட்டினாள் சிவா.

இன்னும் நன்றாக அடிக்க வேண்டுமாம், மழலையில் சொன்னது சின்ன வாண்டு.

பட் பட்டென கொஞ்சம் வேகமாகவே அடி வைத்தாள் சிவா.

தேம்பலோடு மாமனை பார்த்த வாண்டு, “பிச்சு பிச்சு” என மழலையில் மிரட்டியது.

‘அப்பாடா!’ அழுகையை நிறுத்தி விட்டாள் என ருத்ரன் ஆசுவாசமாக பார்த்தான்.

 ‘டெரர் பீஸையே கதி கலங்க வைத்து விட்டாளே குட்டிப் பெண்!’ என நினைத்து சிவாவுக்கு சிரிப்பு வந்து விட்டது.

“ஏய் சும்மான்னு இரு!” என மனைவியை அதட்டினான் ருத்ரன். தன்னைத்தான் மாமன் திட்டி விட்டான் என அடுத்த அழுகையை ஆரம்பித்தாள் வாண்டு.

“உன்னையில்லடி உன் அத்தையல்ல திட்டினேன்” என ருத்ரன் எடுத்து சொல்ல, சிவா அழுவது போல பாவனை செய்தாள்.

“அடிச்சேனா பாரு, பாப்பாவை ஏன் அழுவ வுட்ட?” என அவனும் சிவாவை பொய்யாக திட்டினான். சிவாவும் கொஞ்சம் ராகம் போட்டு அழ, எட்டிப் பார்த்த பெரியவன் கீழே ஓடிச் சென்று மாமாவுக்கும் அத்தைக்கும் சண்டை, அத்தை அழுகிறாள் என சொல்லி விட்டான்.

பிறை அறையிலிருந்தாள், பாட்டி வெளியில், மற்ற ஆண்களும் வெளி வேலைகளாக போயிருந்தனர். வள்ளி, செங்கமலம், வைதேகி மூவரும் மாடிக்கு ஏறி வந்தனர்.

சிவாவின் இடுப்பிலிருந்த குழந்தை  மாமனுக்கு முத்தம் வைத்து செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்தது. அவள்தான் கோவத்திலிருந்த குழந்தையை இப்படி மாற்றியிருந்தாள்.

“என்னடா சண்டைனு சொன்ன?” என செங்கமலம் வைதேகியின் பையனிடம் கேட்டதில் திரும்பிப் பார்த்தான் ருத்ரன்.

“அப்ப அத்தை அழுதாங்கதான்” என்ற பெரிய வாண்டு, “மாமா சண்டை போட்டாங்கதானே உங்க கூட?” என சிவாவிடமே கேட்டான்.

“அதான் எல்லாம் வந்துட்டீங்களா? அதெல்லாம் இல்லை, இவளை சமாதானம் பண்ண சும்மா…” என்றாள் சிவா.

“ம்ம்… அவன் சொன்னான்னு கிளம்பி வந்திட்டியளா?” எனக் கேட்டுக் கொண்டே அறைக்கு சென்று விட்டான் ருத்ரன்.

“நல்லா வந்து சொன்னான் சண்டை கதை!” என அலுத்துக் கொண்டே வள்ளி கீழே செல்ல, செங்கமலமும் அவருடன் சென்று விட்டார்.

வைதேகி பிள்ளைகளை கீழே அழைத்து செல்வதாக சொல்லியும் சிவா மறுத்து விட்டாள்.

 “அண்ணன்கிட்ட விடாதீய அண்ணி, கோவம் வந்தா அடிச்சு போட்ரும்” என எச்சரித்து விட்டு வைதேகியும் கீழே சென்று விட்டாள்.