“சாட்சியே இல்லாம எல்லா காரியத்தையும் முடிச்சிடுறோம்ங்குற மிதப்புல தானே பேசுறீங்க. நான் உங்களை அப்படியெல்லாம் இனி நிம்மதியா இருக்க விடமாட்டேன், கூடிய சீக்கிரமே உங்க ஆட்டத்துக்கு முடிவு கட்டுறேன்.” என்றாள் உறுமலாக.
“ஆமா, அப்படித்தான்னு வச்சிக்கோங்களேன்… இப்போ என்ன செய்ய முடியும் உங்களால? இப்போ மட்டுமில்ல, எப்பவுமே நீங்க ஒன்னும் கிழிக்க முடியாது.” இத்தனை நேரமும் அணிந்திருந்த முகமூடியை உதறிவிட்டு நிஜ முகத்தை காட்டினார் வைரவ மூர்த்தி.
“இந்த நினைப்போட திரிஞ்ச பலரோட கதை, கடைசியில என்ன ஆகியிருக்குன்னு கொஞ்சம் வரலாறைப் புரட்டிப் பாத்து தெரிஞ்சுக்கோங்க சார். கூடிய சீக்கிரமே திரும்பவும் வருவேன். எல்லாத்துக்கும் தயாரா இருங்க.” என்றவள் மிடுக்காக போலீஸ் வாகனத்தில் ஏறி அமர்ந்தாள். அவளுக்கு பின்னால் தேர்ந்த படைவீரர்களைப் போல நின்றிருந்த காவலர்களும் வாகனத்தில் ஏறி அமர, யுடர்ன் அடித்து சர்ரென்று வாகனத்தைக் கிளப்பியிருந்தார் ஓட்டுனர்.
“அப்போவாவது சொல்லிட்டு வாங்க மேடம். இன்னைக்கு போல எப்பவும் என்னோட பயலுகள கட்டுப்படுத்த என்னால ஆகாது.” கேலியாக வைரவ மூர்த்தி சொன்ன வார்த்தைகள், நந்தினியின் காதை எட்டாமல் காற்றோடு காற்றாக கரைந்து தான் போனது.
போலீஸ் வாகனம் வைரவ மூர்த்தியின் வீட்டு காம்பௌண்டை விட்டு வெளியே வரும் நேரம், கமலகண்ணனின் பைக் உள்ளே நுழைந்தது.
‘இவன் எதற்காக இங்கே வருகிறான்?’ யோசனையோடு நந்தினி திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்தும் பார்க்காதது போல முன்னேறிச் சென்றான் கண்ணன்.
என்னிடம் இரட்டை வேஷம் போடாதே என்று நந்தினி சொன்ன நாளிலிருந்து இப்படித்தான் நந்தினியைத் தவிர்க்கிறான் கமலகண்ணன்.
ஆனால் அதைப்பற்றி எல்லாம் இப்போது சிந்திக்க முடியாமல் நந்தினியின் மனதை இன்னொரு விஷயம் தொந்தரவு செய்து கொண்டிருந்தது.
ஆமாம்… சபேசனைக் கண்டதும் வைரவ மூர்த்தி மற்றும் அவருடைய மூத்த மகனின் கண்களில் நொடி நேரம் என்றாலும் ஒரு தடுமாற்றமும் கோபமும் வந்து சென்றதை நந்தினி கண்டிருந்தாளே.
‘அந்த நபர் தங்களை உள்ளே வரக்கூடாது என்று அதட்டியது கூட சபேசனைக் கொண்டுதானோ? ஆனால் எதற்காக?’ யோசித்தவள், திரும்பி சபேசனைப் பார்த்தாள்.
எப்போதும் கம்பீரமாக இருக்கும் அவன் கண்கள், இப்போது கொஞ்சம் சோர்ந்து போய் இருந்தனவோ?
“சபேசன்…” நந்தினி அழைத்துவிட்டாள்.
சட்டென்று சுதாரித்துக் கொண்டவனின் கண்கள் இயல்புக்கு திரும்பியிருக்க, “எஸ் மேடம்” என்றான் விறைப்பாக.
“உங்களுக்கு மேரேஜ் ஆகிடிச்சா?” கேட்டு விட்டாள் நந்தினி.
நந்தினியிடமிருந்து அலுவலக ரீதியாக ஏதோ ஒரு பேச்சை எதிர்பார்த்திருந்த சபேசன் திகைத்து போய் பார்க்க,
“கேக்கணும்னு தோணிச்சு.” என்றாள்.
“இன்னும் இல்ல மேடம்.” உணர்வுகளை தொலைத்த முகத்தோடு சபேசன் பதில் சொல்ல, தலையாட்டி கேட்டுக் கொண்டவள், அலுவலகத்திற்கு போன பிறகு சபேசனுடன் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள்.
ஆனால் வேலைகள் இழுத்துக் கொண்டே சென்றதில் அதற்கான நேரம் நந்தினிக்கு கிடைக்கவே இல்லை.
நந்தினி வீட்டுக்கு வரும்போது இரவு ஒன்பது மணியாகிவிட்டது. அவளுக்கென்று அரசாங்கம் ஒதுக்கி இருந்த வாகனத்தில் தான் அவளது பயணம். அதேபோல அவளுக்கென்று அரசாங்கம் கொடுத்திருந்த வீட்டில் தான் அம்மாவோடும் தங்கையோடும் தங்கியிருக்கிறாள்.
ஆமாம்… மூன்று வாரங்கள் ஆகியிருந்தது அவர்கள் இங்கே குடிவந்து. திலகத்திற்கு அந்த வீட்டை விட்டு இங்கே வருவதில் உடன்பாடு இல்லாமல் தான் இருந்தது.
போலீஸ் உத்தியோகம், எப்போது வேண்டுமானாலும் மகள் இடமாறுதல் ஆகி செல்லுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அப்படி ஏதும் நடந்தால் வேறுவீடு வாடகைக்கு பார்க்க வேண்டும். வீடு கிடைக்காது என்று இல்லை. ஆனால் லீலாவதி வீட்டுக்கு அருகில் கிடைக்க வேண்டுமே. எனவே வீட்டை காலி செய்ய யோசித்தார் திலகம். தன்னுடைய தயக்கத்துக்கான காரணங்களை அப்படியே மகளிடமும் சொல்லிவிட்டார்.
“இந்த வீட்டை இப்போதைக்கு நாம காலி பண்ண வேண்டாம் ம்மா. வாடகையை தொடர்ந்து கொடுத்துடலாம்.” இப்படி நந்தினி சொல்லவும், மகளோடு சந்தோஷமாகவே வந்து விட்டார் திலகம்.
குளித்து முடித்து நந்தினி வரும்போது, சூடாக இரவு உணவு தயாராக இருந்தது.
“எடுத்துப் போட்டு எனக்கு சாப்பிடத் தெரியாதா என்ன? நீ உட்காரு அனி.” என்றவள், அன்றைய நடப்புகளை அன்னையிடமும் தங்கையிடமும் கேட்டபடியே சாப்பிட ஆரம்பித்தாள்.
“இந்துவும், கௌரியும் அடுத்த வாரம் ஊருக்கு வர்றோம்னு சொன்னாங்க க்கா.” சென்னையில் இருக்கும் தங்களுடைய இளைய சகோதரிகள் சொன்ன விஷயத்தை அனிதா பகிர்ந்துகொள்ள,
“ஹாங்… நானும் அவங்ககூட பேசி இரண்டு நாளாகிடிச்சி. ஃபோன் பண்ணு, பேசலாம்.” என்றாள் நந்தினி.
சகோதரிகள் இருவரையும் ஒன்றாக கான்ஃபரன்ஸ் அழைப்பில் அனிதா இணைக்க, சற்று நேரம் அந்த உடன்பிறந்தவர்களுக்கிடையே கலகலப்பாக சென்றது நேரம்.
“சாப்பிடும் போது என்ன பேச்சு?” என்று திலகம் மக்களை அதட்டினாலும், அவர்களோடு இணைந்து கொள்ள தவறவில்லை.
தங்கைகளோடு பேசி முடித்து கைகழுவி விட்டு வந்த நந்தினி, “உங்க லாயரோட நம்பரைக் கொஞ்சம் குடு அனி” என்று கேட்டாள்.
“லாயரா?” சட்டென்று புரியவில்லை அனிதாவுக்கு.
“வக்கீல் கமலகண்ணன் நம்பர் தான் டி கேக்குறேன்.”
“ஓ… கண்ணத்தான் நம்பரா.” அனிதாவின் முகம் புன்னகையில் விரிய, “அத்தான் நம்பர் எல்லாம் கேக்குற? என்னக்கா விசேஷம்?” என்று கேட்டு கண்ணையும் சிமிட்டினாள்.
“ஒரு மண்ணாக்கட்டியும் இல்ல, குடு டி.” என்று வாங்கிக்கொண்டு தன்னுடைய அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டாள் நந்தினி.
இருவரின் சம்பாஷணையைக் கேட்டுக்கொண்டிருந்த திலகத்தின் முகத்திலும் விரிந்த புன்னகையே. கண்ணனோடு மகளின் திருமணத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவருக்கு, மகள் கண்ணனின் அலைபேசி எண்ணை வாங்கிக்கொண்டு சென்றதே பெரும் முன்னேற்றமாகத் தெரிந்தது. பூரித்து போனார்.
அறைக்குள் வந்த நந்தினி தாமதிக்காமல் கண்ணனுக்கு அழைத்தும் விட்டாள்.
அழைப்பு முடியப்போகும் தருவாயில், “ஹலோ…” என்றான் கண்ணன்.
“அங்க எங்க வந்தீங்க?” எடுத்த எடுப்பிலேயே வேகமாக வந்தது கேள்வி.
“ஹலோ…ஹலோ… மொதல்ல நீங்க யாரு பேசுறீங்கன்னு சொல்லுங்க.” நந்தினியின் தொலைபேசி எண்ணை சேமித்து வைத்திருக்கவே செய்திருந்தான் கண்ணன். அப்படியில்லை என்றாலும் கூட தன் மனம் கவர்ந்தவளின் குரலை கண்டுபிடிக்க முடியாமலும் அவன் இல்லை. இருந்தாலும் வேண்டுமென்றே கேட்டான்.
‘என்னோட வாய்ஸ்ஸை கண்டுபிடிக்க முடியலையா வக்கீலுக்கு… இல்ல வேணும்னே சொல்லுறாரா?’ நினைத்துக் கொண்டாலும்,
“நந்தினி பேசுறேன்.” என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.
“எந்த நந்தினி? என் மாமன் பொண்ணு நந்தினியா? இல்ல, எஸ் பி மேடம் நந்தினியா?” மாமன் மகள் என்று சொன்னால் அவளுக்கு பிடிக்காது என்று தெரிந்தே கேட்டான்.
“ஹாங்… நான் நந்தினி ஐபிஎஸ் பேசுறேன்.” கோபமாக வந்தது பதில்.
“சாரி மேடம், நீங்க நினைச்ச நேரம் எங்கிட்ட போன் பண்ணி பேச, நான் உங்க விசாரணை கைதி இல்ல, வைங்க போனை” என்றான் அதட்டலாக.
அவன் அதட்டல் நந்தினியின் சுயமரியாதையை லேசாக உரசிச் சென்றது. இப்படி இவனிடம் விஷயத்தை தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா என்று மனம் வேறு முரண்டு பிடித்தது.
என்றாலும், வைரவ மூர்த்தியின் வழக்கறிஞராக கண்ணனை கற்பனை செய்து கூட பார்க்கப் பிடிக்காதவளாக, “வைரவ மூர்த்தி வீட்டுக்கு எதுக்கு வந்தீங்க?” என்று கேட்டுவிட்டாள்.
“நீ எதுக்கு அங்க வந்தன்னு நான் கேட்டேனா? அப்புறம் எதுக்கு நீ எங்கிட்ட கேள்வி கேக்குற?” முரட்டுத்தனமாகவே வந்தது பதில்.
“நான் ஒரு வேலையா அங்க போனேன்…”
“நாங்க மட்டும் என்ன களைபிடுங்கவா அங்க போனோம், நாங்களும் வேலையா தான் போனோம்.” நக்கல் துள்ளி விளையாடியது கண்ணனின் வார்த்தைகளில்.
“வேலையா போனீங்களா? அந்த ஆளு எப்படி பட்டவர்னு தெரியும்ல?” அசூசையாக வந்தது கேள்வி.
“அவர் எப்படிபட்டவரா இருந்தா எனக்கென்ன? எம்மேல, என்னோட திறமை மேல நம்பிக்கை வச்சி எங்கிட்ட வர்றவங்களுக்கு, நான் உண்மையா இருப்பேன், அவ்வளவு தான்.” அலட்சியமாக வந்தது பதில்.
“இப்பிடி சொல்ல உங்களுக்கு வெக்கமா இல்ல?” கோபத்தில் பற்களைக் கடித்தாள்.
“நான் எதுக்கு வெட்கப் படணும்? ஸ்ட்ராங் எவிடன்ஸ்ஸோட ஒரு குற்றவாளியை சட்டத்துக்கு முன்னாடி கொண்டுவந்து நிறுத்த முடியாத நீயும், உன்னோட டிப்பார்ட்மெண்ட்டும் தான் வெக்கப்படணும்.”
“அப்புறம்… என்னோட தொழில்ல யாரும் தலையிடுறது எனக்கு பிடிக்காது. அதனால அந்த தப்பை இன்னொரு தடவை நீ செய்யாத.” கட்டளை இடுவது போல சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்துக் கொண்டான் கமலகண்ணன்…