மொட்டவிழ்ந்த தேனரும்பே -6

அத்தியாயம் -6

அரைகுறையாக உறங்கியிருந்த சிவரஞ்சனிக்கு விடியற்காலையிலேயே விழிப்பு வந்து விட்டது. ஓய்வறை  சென்று வந்தவள் முதல் வேலையாக ருத்ரனை எழுப்பி விட்டாள்.

விழித்தவன் என்னவென கேட்க, “நல்லா விடியறதுக்குள்ள எந்திரிச்சு உள்ள வந்திடுங்க. இல்லைனா பக்கத்து வீடுகள்ல உள்ளவங்க அவங்க வீட்டு மாடி ஏறினா நீங்க இங்க படுத்திருக்கிறது தெரிஞ்சு போயிடும்” என்றாள்.

அவள் சொல்லும் விஷயம் உண்மை என்பதால் மறுக்காமல் எழுந்து கொண்டான்.

“ரூம்ல போய் படுத்துக்கோங்க, எனக்கு அவ்ளோதான் தூக்கம்” என்றாள்.

அவளிடம் ஏதும் சொல்லிக் கொள்ளவில்லை அவன், அறைக்கு சென்று படுத்து விட்டான்.

குளித்து புடவை கட்டி தயாராகி விட்ட சிவாவுக்கு நல்ல பசி. இங்குள்ளவர்கள் யாரின் கைப்பேசி எண்ணும் அவளிடம் கிடையாது, தானாக கீழே செல்லவும் தயங்கி ஹாலிலேயே அமர்ந்து விட்டாள்.

வழக்கத்தை விட தாமதமாகவே எழுந்தான் ருத்ரன். குளித்து விட்டு இடையில் கட்டியிருந்த துண்டுடன் வெளியில் வந்தவன் இவளை கண்டு கூச்சம் கொண்டு வேகமாக வேஷ்டியை அணிந்து கொண்டான்.  பின் பால்கனியில் நின்று சூரிய நமஸ்காரம் செய்ய ஆரம்பித்தான்.

காலை காபியோடு சிவா கட்டிக்கொள்ள புதிய பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு வந்தாள் வைதேகி. குலதெய்வ கோயிலுக்கு செல்ல வேண்டுமாம். நேற்று கொடுத்த நகைகளையும் அணிந்து கொண்டு தயாராக சொன்னாள்.

“அத்தனையும் போட்டுக்கணுமா அத்தாச்சி?” வேண்டாமே என்பது போல கேட்டாள் சிவா.

“அம்மா அப்படித்தான் சொல்லுச்சு அண்ணி, ஒரு முறை மட்டும் அண்ணி, போட்டுக்கோங்க” என்ற வைதேகி, “அண்ணா நீயும்தான் பட்டு வேஷ்டி போட்டு ரெடி ஆகுவியாம்” என்றாள்.

“இன்னும் என்னென்ன சடங்கு சம்பிராதயம் இருக்காம், எனக்கு அம்புட்டு வேலை குவிஞ்சு கெடக்கு” என கடுப்பாக சொன்னான் ருத்ரன்.

“கல்யாணம் முடிஞ்சப்புறம்  என்னென்ன இருக்கும்னு உனக்கு தெரியாதா ண்ணா, இல்லைனா அண்ணிகிட்ட கேட்டு  தெரிஞ்சுக்க” என்ற வைதேகி, அண்ணனின் திட்டுக்களை வாங்கிக் கொள்ள அங்கு நிற்கவில்லை.

தனது பேக்’கிலிருந்து நாத்தனார் கொடுத்த புடவைக்கு பொருத்தமாக பிளவுஸ் தேடிக் கண்டுபிடித்த சிவா பெருமூச்சு விட்டாள். பீரோவிலிருந்து எடுத்த பணக் கட்டுக்களில் தனி தனியாக எண்ணி எடுத்து வைத்துக்கொண்டிருந்தான் ருத்ரன். ஏதாவது சம்பளம் கொடுக்கவாக இருக்கும் என நினைத்துக் கொண்டாள் சிவா.

அவன் அறையிலேயே இருக்க, ஹால் வந்தவள் அறைக் கதவை அடைக்கப் போனாள். “ஏய் ஏய் என்ன செய்ற?” என அதட்டல் போட்டான்.

“புடவை மாத்திக்கணும், நீங்க திடீர்னு வெளில வந்திட்டா அதுதான்…” என்றாள்.

‘இது வேறயா?’ என்பது போல சலிப்பாக தலையாட்டிக் கொண்டவன், அறையை விட்டு வெளி வந்து, “உள்ள போ” என்றான்.

‘ஆஹா நைட்ல கத்தினவரு காலைல நல்லவனா மாறிட்டாரே!’ என உள்ளுக்குள் வியந்து கொண்டே அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.

முழுதாக தயாராகி கதவை திறந்தவளை பார்த்தான். அவன் என்னவோ மிக சாதாரணமாகத்தான் பார்த்தான். திருத்தமான புடவைக் கட்டு, பாந்தமான அலங்காரம், கண்களில் சுடர் விடும் ஒளி என எதுவும் அவனது கவனத்தில் பதியவில்லை. அவளும் அவன் தன்னை ரசிக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை.

ஆனால் அவன் தயாரான பிறகு அவனுடைய கம்பீரத்தை அவளை மீறி ரசித்துக் கொண்டாள். சில நொடிகள்தான், உடனேயே ‘அடங்குடி, ஆயிரத்தெட்டு வில்லங்கத்தோட ஆரம்பிச்சிருக்கு வாழ்க்கை, அப்பா அம்மாவையே விரோதியா பார்க்கிறாரு, இதுல சைட் ஒன்னுதான் குறைச்சல்!’ என தனக்கு தானே குட்டு வைத்துக் கொண்டாள்.

வா என்றெல்லாம் அவன் அழைக்கவில்லை, அவன் பார்வையை வைத்து அவளாகவே  புரிந்து கொண்டு கீழே செல்ல, அவளை முன்னே விட்டு பின்னால் நடந்தான்.

இருவரையும் பூஜையறை சென்று வணங்கும் படி பணித்தார் வள்ளி. சிவா விளக்கேற்றி கொண்டிருக்க, வீட்டு ஆட்கள் மட்டுமே இருந்ததாலும் நேற்றைய கொதிப்பு சற்றே அடங்கியிருந்ததாலும் கல்யாணம் நடந்து விட்ட நிதர்சனத்தை மனம் உணர ஆரம்பித்து விட்டதாலும் மனைவியின் பக்கத்தில் அமைதியாக நின்றிருந்தான் ருத்ரன்.

சேர்ந்து கை குவித்து வழிபாட்டார்கள், “அவளுக்கு குங்குமம் வச்சு விடு, தாலியிலும் வச்சு விட சொல்லு” என சொல்லி சென்றார் செங்கமலம்.

அவள் அவனிடம் வாயை திறந்து ஏதும் சொல்லவில்லை, உன் காதிலும் விழுந்ததுதானே என்பது போல அவனை பார்த்தாள். பிகு ஏதும் செய்யாமல் அவள் நெற்றியில் அவன் குங்குமம் இட, மாங்கல்யத்தை வெளியில் எடுத்து அவன் முன் நீட்டினாள். அதிலும் வைத்து விட்டவன் ஹால் வந்து அமர்ந்து கொண்டான்.

தன் மாமனார் மாமியாரை அழைத்து வந்து நிறுத்தினார் வள்ளி.

சிவரஞ்சனி வரவும் ருத்ரனையும் அவளோடு நிற்க சொல்லி இருவரையும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசி வாங்க வைத்தார் வள்ளி.

சதாசிவம் “நல்லாருங்க!” என வாழ்த்தினார்.

மங்களத்தம்மாளோ, “நல்லாருங்க” என பொதுவாக சொல்லி, சிவாவிடம், “நினைச்சு பார்க்க முடியாத படி பெரிய இடத்துல வாக்க பட்டிருக்க! கிடைச்ச அதிஷ்டத்தை தக்க வச்சு எம்பேரன், பெரியவங்க மனசு கோணாம குடும்பம் பண்ணணும்” என்றார்.

‘வேண்டுமென்றே தன்னை குறைத்து பேசுபவர் வயதில் பெரியவர், என்ன பேசுவது நான்?’ என அமைதி காத்தாள் சிவா. ருத்ரனின் முகம் ‘இந்த பேச்சு எனக்கு பிடிக்கவில்லை’ என்பதை வெளிப்படையாக காட்டியது.

கலையரசன் உணவருந்தி கொண்டிருக்க, அவனுக்கு பரிமாறிக் கொண்டிருந்தாள் பிறை.

“இந்த அட்வைஸ் எல்லாம் இவளுக்கும் சொல்றதுக்கு என்ன ஆத்தா?” என்றான் கலையரசன்.

இளைய பேரனின் பேச்சு மங்களத்தம்மாளுக்கு சரியாக காதில் விழவில்லை, ஆகவே வெளிப்பக்கம் சென்று அமர்ந்து விட்டார்.  பிறை தன் கணவனை முறைக்க, “வாயை வச்சுக்கிட்டு சும்மான்னு இருடா” என மகனை அதட்டி விட்டு சென்றார் செங்கமலம்.

சிவாவை வைதேகியுடன் இருக்க சொல்லி, ருத்ரனை மட்டும் தனியாக அழைத்துக் கொண்டு பின்பக்கம் சென்றார் வள்ளி.

“என்னம்மா?” என அலுத்துக் கொண்டான் ருத்ரன்.

“அவ பொறந்த வீட்டுக்கு போறது முறைனு தெரியாதா உனக்கு? அதென்னடா நேத்து அப்புடி சொல்லியிருக்க உன் தங்கச்சிகிட்ட? கோயிலுக்கு போய்ட்டு வந்து அவங்க வீட்டுக்கு ஒரு எட்டு போய்ட்டு வர்றீங்க ரெண்டு பேரும்” கண்டிப்போடு சொன்னார் வள்ளி.

“நீ சொன்னேன்னு கல்யாணம் பண்ணிக்கிட்டேன், அத்தோட விடணும் மா. அந்த வீட்டு வாசலை நான் மிதிக்க மாட்டேன், அவகிட்டேயும் சொல்லிட்டேன், சரின்னு சொல்லிட்டா” என்றான் அவன்.

“என்னத்தடா உளர்ற? சிவா அப்படி சொன்னாளா?”

“என் மரியாதைக்கு குறையா ஏதும் செய்ய மாட்டேன்னு சொல்லிருக்கா. அப்படியே அவ இருந்தாதான் என் கூட வாழலாம், இல்லைனா அவளையும்…”

“எலேய்! நல்லதா பேசு. தப்புடா, ஒருத்தி பண்ணின தப்புக்கு இன்னொருத்திக்கு தண்டனையா? அவளை அவளோட பெத்தவங்கள விட்டு தள்ளி இருக்க சொல்றது அநியாயம்டா” எடுத்து சொன்னார் வள்ளி.

கௌரியின் காதல் விவகாரம் சுடருக்கும் தெரியும் என்பதை அம்மாவிடம் சொல்லி விட்டவன், உத்தமனுக்கு தெரியாது என்கிறாள் அதை நான் நம்பவில்லை, தெரிந்தே என்னை அவமானம் செய்திருக்கிறார்கள் என்றான்.

வள்ளிக்கும் சுடரின் மீது கோவமானது. ஆனாலும் அதற்காக சிவாவை அங்குள்ள உறவை துண்டிக்க சொல்வது முறையாகாதே.

“நீ ஒன்னும் அங்குட்டு போய் உறவாட வேணாம், ஆனா அவளை போக கூடாது பேச கூடாதுன்னு சொல்றது சரி கிடையாதுப்பா, அவுங்களுக்கு மகன்னு இவ ஒருத்திதான் இருக்கிறா இப்போ” என்றார் வள்ளி.

“அவுங்க மக இல்லை இவ, எம்பொண்டாட்டி. என் மான அவமானம் அவளுக்கும்தானே? என்னை மீறி அவ அங்குட்டு உறவு வச்சுக்கிட்டா…” என நிறுத்தியவன், “அத்து வுட்ருவேன் மா!” என தீர்மானமாக சொன்னான்.

பிடித்த முயலுக்கு மூன்று கால் என நிற்பவனிடம் இப்போது என்ன பேசியும் பிரயோஜனம் இல்லை என்பதை புரிந்து கொண்ட வள்ளி, தற்போதைக்கு மகனின் போக்கிலேயே விடுவது என முடிவு செய்தார்.

காலை உணவு முடியவும் சேகர் மற்றும் கோதையும் அவரின் பிள்ளைகளோடு வந்து விட்டார்கள். அவர்களின் மகன் கல்லூரியிலும் மகள் பள்ளி இறுதியிலும் என படிக்கின்றனர்.

அனைவரும் மூன்று கார்களில் குலதெய்வ கோயிலுக்கு சென்றனர். வழியில்தான் சிவாவின் வீடு, கவலையாக  அவள் அந்தப் பக்கம் பார்க்க, அவனும் கவனித்தான், ஆனால் கண்டுகொள்ளவில்லை.