மஞ்சள் காட்டு மைனா 24 1 9183 மஞ்சள் காட்டு மைனா 24 மிகவும் பிடித்தமான கனவு பலித்ததா என்ன? தன் வீட்டில் துளசியின் நடமாட்டம் அப்படி தான் என்றது! தேவா வீட்டிற்குள் வலது கால் எடுத்து வைத்து, கணவனின் மிகப்பெரிய வருத்தத்தை போக்கிவிட்டாள். உங்க பொண்டாட்டி துளசி எந்த கால் எடுத்து வைச்சு வீட்டுக்குள்ள வராங்கிறது தான் கணக்கு! என்று செயலில் காட்டினாள். துளசியின் முன்னெடுப்பு தேவாவின் கோவத்தை, வருத்தத்தை குறைத்தது. “உங்களை உணர நினைக்கிறேன்” துளசியின் வார்த்தைகள் அவனுக்குள் கேட்டு கொண்டே இருந்தது. மனைவி சாய்ந்திருந்த இதயத்தை வருடிக் கொண்டான் தேவா. அக்காக்கள் அவரவர் வீடு செல்ல ஏற்பாடு நடந்து கொண்டிருந்தது. துளசி மாமியாருக்கு உதவி கொண்டிருந்தாள். தேவா பார்வையை மனைவி பக்கம் இருந்து திருப்ப முயல்கிறான். ம்ஹூம். அவள்தான் காதல் கந்தமாகிற்றே! கணவனை பிடித்து இழுத்தாள் “தேவா” என்று சித்தப்பா எதையோ கேட்டார். “சரி” என்றான் தேவா. “என்னடா சரி? நீ திரும்ப இதுக்குள்ள போக வேண்டாம்” என்று மனிதர் கோபம்கொள்ள, “ம்ம்” என்றான் தேவா. துளசி மாமியார் சொன்ன வேலை புரியாமல், நொடி முழித்து, பின் தயங்கி ஜெயலட்சுமியிடம் கேட்டு கொண்டிருந்தாள். ‘என்கிட்ட மட்டும் தான் வாய். அங்க பம்முறதை பாரு‘ கணவனுக்கு மென்புன்னகை. “சாதாரணமா ம்ம் சொல்ற. சுந்தரம் கிடைக்கலைன்னு போலீஸ் ஒதுங்க பார்க்கிறாங்க” வைரவேல் சொல்ல, “ஓகே சித்தப்பா” என்றான். துளசி கிட்சன் மேலடக்கில் எதையோ எடுக்க பார்த்து, அது உயரமாக இருந்ததில் உதட்டை கடித்து அக்கம் பக்கம் பார்த்து ஸ்டூல் ஒன்றை இழுத்தாள். அதன் கால்களோ இவள் ஏற பாதம் வைத்ததுமே ஆட்டம் காட்ட, தேவா உணர்ந்து எழுவதற்குள் துளசியே ‘அம்மா‘ என்று பயந்து பின்னடைந்தாள். “என்ன ஓகேடா. தேடி கிடைக்கைலைன்னா விட்டுடுவாங்களா? நாளைபின்ன அந்தாள் திரும்ப நம்மகிட்ட வந்து பிரச்சனை பண்ணவா?” என்று வைரவேல் மகனிடம் கேட்டார். “பார்த்துக்கலாம் விடுங்க சித்தப்பா” என்றான் மகன். துளசி அதை எடுக்க உதடு கடித்து யோசித்து பின் யாரையோ தேடி தேவா பக்கம் பார்வை வந்ததும், “இங்க வாங்க” என்று சைகை செய்தாள். “எதுக்கு?” என்று இவன் புருவம் உயரத்தினான். “எடுக்கணும்” என்று மேலே கைகாட்டி சைகை நடக்க, “முடியாது” என்றான் இவன். துளசி இவனை உர்ரென பார்த்தவள் பின் செல்வி வரவும் அவரிடம் உதவி கேட்டாள். அவர் எடுத்து கொடுக்கவும், கணவனை பார்த்து சிலுப்பி கொண்டு சென்றாள். என்னமோ இவளே எடுத்துட்ட மாதிரி பந்தா! போடி! “என்னடா ஓகே. நீ எதுவும் செய்ற திட்டத்துல இருக்கியா என்ன?” என்று வைரவேல் மகன் தோள் தட்டி சந்தேகமாக கேட்டார். “சித்தப்பா” என்ற தேவா, அதுக்குள்ள எந்த ரூமுக்குள்ள போயிட்டா? என்று மனைவியை தேடினான். “தேவா இங்க பாரு சாமி. என் பேச்சை கேளு. நமக்கு இது வேலை இல்லை. சந்தோஷை தேடி பிடிக்க வேண்டியது சுந்தரம் தலைவலி. அவர் நம்ம பின்னாடி அலைஞ்சு நேரத்தை தான் வீணடிக்கிறார்“ “நீங்க தான் இப்போ நேரத்தை வீணடிச்சுட்டு இருக்கீங்க மாமா” என்றான் பெரிய மருமகன். “என்னப்பா” என்று வைரவேல் புரியாமல் மருமகனை பார்த்தார். அவன் தேவாவை கண் காட்டினான். வைரவேல் என்னவோ என்று மகனை பார்க்க, அவனோ தீவிரமாக பார்வையை சுழட்டி கொண்டிருந்தான். “என்ன தேடுற தேவா?” என்று வைரவேல் கேட்க, தேவா தேடல் வாசலில் இருந்து வந்த மனைவியிடம் நின்றது. அவளுக்கு பின் பெரிய பெட்டி ஒன்று வந்தது. “அத்தை. இதெல்லாம் அம்மா கொடுத்துவிட்டாங்க” என்று துளசி பலகாரங்களை, பரிசு பொருட்களை கொடுத்தாள். ஜெயலட்சுமி ஆச்சரியத்துடன், “எதுக்கு துளசி இவ்வளவு?” என்று கேட்டார். “அண்ணிங்க ஊருக்கு கொண்டு போக அத்தை” என்று பெண் சொல்ல, அகல்யா, செல்வி முகம் மலரத்தான் செய்தது. “மருமகனுக்கு ஏதும் இருக்கா?” என்று தேவா மனைவியிடம் வந்துவிட்டான். சித்தப்பாவை டீலில் விட்டது கூட அவனுக்கு தெரியவில்லை. “இத்தனை பேச்சும் வீண் தானா?” வைரவேல் மருமகன் முன் தலையில் அடித்து கொள்ள கூட முடியாமல் மகனை கோவமாக பார்த்தார். “உங்களுக்கென்ன வேணும்” என்று துளசி கணவனிடம் வினவ, “கேட்டு தான் கொடுப்பீங்களா?” என்றான் தேவா. “மச்சான். நீங்க முதல்ல உங்க சித்தப்பாக்கு பதில் கொடுங்க. அவர் பாவம்” என்றார் பெரிய மருமகன். “என்ன பதில் மாமா? சித்தப்பா என்னாச்சு?” “ஒன்னுமில்லை. ஒன்னுமே இல்லை” என்றார் வைரவேல். “கோபமா இருக்கீங்களா சித்தப்பா“ “இல்லை குளு குளுன்னு இருக்கேன்“ “ஹாஹா. மாமா. புது மாப்பிள்ளை. கொஞ்ச நாளைக்கு அப்படி தான் இருப்பார்” என்றார் மருமகன். “என்னங்க. என்ன சொல்றீங்க?” என்று செல்வி கேட்க, “சொல்ல மாட்டேன். என் மச்சான் வெட்கப்படுவார்“ “என் தம்பி வெட்கப்படுறதா? வாய்ப்பே இல்லை மாமா” என்றாள் அகல்யா. “நீங்க ஏதோ சும்மா சொல்றீங்க” என, “இப்படி கேட்டா நான் சொல்லிடுவேனா? சின்ன மாமா தேவா மச்சான்கிட்ட பேசவே இல்லை. மச்சான் துளசியையவே பார்த்துகிட்டு அவர் பேச்சை டீல்ல விட்டுட்டார்ன்னு சொல்லவே மாட்டேனே” என்றார் அவர் குறும்பாக. “மாமா” என்றான் தேவா. “என்ன மச்சான்? மாமா ரகசியத்தை காப்பாத்திட்டேன் இல்லை“ “அருமையா காப்பாத்திட்டீங்க. என் பொண்டாட்டி என்கிட்ட சைகையில கேட்டதையும் நீங்க சொல்லலை. நான் அவகிட்ட முடியாதுன்னு சொன்னதையும் நீங்க சொல்லவே இல்லை” என்றான் தேவா. “ஏங்க” என்று துளசி முகம் சிவந்து போனாள். கணவன் சொல்வது வேறு அர்த்தத்தை அல்லவா கொடுக்கிறது? நான் கேட்டது பொருள் எடுத்து கொடுக்க சொல்லி தானே? “நாந்தான் சொல்லலியே? அப்புறம் என்ன? நீ ப்ரீயா விடு” என்றான் கணவன். “நான் கேட்டேன் தான். ஆனா அது” என்று துளசி சொல்ல வர, “ஹேய் பொண்டாட்டி. இதெல்லாம் பொதுவுல சொல்ல கூடாது. பெரியவங்க, குழந்தைங்க எல்லாம் இருக்காங்க இல்லை” என்று மனைவியை கண்டித்தான் நல்லவன். “ஐயோ நான்” என்று துளசி வாய் மேல் கைவைத்து விட்டாள். “சரி. சரி எல்லாம் எடுத்து வைங்க. நேரம் ஆகுது. செல்வி, அகல்யா ரெடியாகுங்க போங்க, மாப்பிள்ளைங்களுக்கு நான் சாப்பாடு எடுத்து வைக்கிறேன்” என்று ஜெயலட்சுமி எல்லோரையும் அங்கிருந்து கிளம்பிவிட்டார். ‘உன் தம்பி சரியான ஆளு‘ என்று பெரிய மருமகன் முணுமுணுத்து சென்றார். துளசி கணவனிடம் கோவமாக சண்டைக்கு கிளம்ப தயாராக, “அக்காங்க கிளம்பட்டும். பொறுடி” என்றான் தேவா உரக்க. “அச்சோ” என்று துளசி பாய்ந்து சென்று கணவன் வாயை மூட, “அத்தை என்ன பண்றீங்க? மாமா வாய் மூடுறீங்க” என்று குட்டி ஒன்று சந்தேகம் கேட்டது. என்ன அதை சத்தமாக கேட்டு வைக்க, “இல்லை. இல்லை. நான் இல்லை” என்று துளசி அறைக்குள் ஓடிவிட்டாள். “ஹாஹா” என்று தேவா சிரிப்பு சத்தம் மனைவியை பல்லை கடிக்க வைத்தது. ‘இவரை! தனியா சிக்கட்டும்‘ என்று கருவி கொண்டாள். “விருந்துக்கு வந்திடணும்” என்ற அழைப்புடன் செல்வி, அகல்யா குடும்பம் சந்தோஷமாக விடைபெற்றனர். பெற்றவர்கள் சிறிது நேரம் மகள்கள் கிளம்பி சென்ற வருத்தத்தில் இருந்து சமாளித்து கொண்டனர். “இனியாவாது நான் சொல்றதை கேட்பியா?” என்று தேவாவை பிடித்தார் வைரவேல். “சித்தப்பா. முக்கியமான வேலை. கிளம்புங்க. துளசி” என்று மனைவியையும் உடன் அழைத்து கொண்டான். “இருட்டுற நேரத்துல எங்கடா கிளம்புறீங்க?” என்று பசுபதி, ஜெயலட்சுமி கேட்டதிற்கு பதில் இல்லை. தேவா ஏதோ போன் பேசியபடி, சிந்தனையிலே பயணிக்க, வைரவேல், துளசிக்கு இப்போது என்ன? என்ற கேள்வி. கார் நீண்ட தூரம் பயணித்து, ஓர் கட்டிடத்தின் முன் நின்றது. “நீங்க காருக்குள்ளே இருங்க” என்று தேவா கேட்டிற்கு முன் சென்று நின்றான். கேமரா முன்பு ஏதோ பேசினான். உடனே கதவுகள் திறந்துவிடவில்லை. சில நிமிடங்களே கேட்டிற்கு வெளியே நிற்க, “தேவா. என்னடா இது?” என்று வைரவேல் இறங்கினார். “சித்தப்பா. கார்ல தானே இருக்க சொன்னேன்” என்று மகன் கோவப்பட்டான்.