அவர்கள் சாப்பிட்டு முடிப்பதற்குள் குளித்து முடித்துவிட்டு வந்திருந்தாள் வேதா.
“ஹேய் வேதா இந்த ஸ்கேர்ட் அழகா இருக்கு. எங்க எடுத்த?” என்று கீர்த்தனா கேட்க பல்லைக் கடித்தான் சரண்.
“இங்க என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு? உள்ள போன ஒருத்தனோட நிலைமை என்னன்னு தெரியலை. ஆனா, நீ என்னடான்னா ஸ்கேர்ட்டு நல்லா இருக்கு எங்க எடுத்தன்னு கேட்டுட்டு இருக்க? இந்த பொண்ணுங்களை புரிஞ்சுக்கவே முடியலை” என்றான் சரண்.
“தேங்க்ஸ் அண்ணி. ஆனா, இது சரண் அண்ணா எடுத்துக் கொடுத்தது தான்” என்று போகிற போக்கில் பிட்டை போட்டு விட்டுச் சென்றாள்.
“அடப்பாவி..! எனக்கு செலக்ட் பண்ண சொன்னா மட்டும், எனக்கென்ன தெரியும்னு ரீல் சுத்த வேண்டியது. உன் தங்கச்சிக்கு மட்டும் எப்படி எடுத்துக் குடுத்திருக்க” என்றவள் அவனை முறைக்க,
“அடியே அவ சும்மா உன்னை ஏத்தி விட்டுட்டு போறா. சத்தியமா அது நான் இல்லை. அவ போடுற டிரஸ் எல்லாமே அவ செலக்சன் மட்டும் தான். நீ எனக்கு ரசத்தை ஊத்து” என்றான் பாவமாய்.
“ஆமா எங்க போறா?” என்றாள்.
“விஜயை சாப்பிட கூப்பிடவா இருக்கும்” என்றான் சரண்.
“விஷயம் அப்படி போகுதா? இப்போ நாம இங்க இருக்கனுமா இல்லை போகனுமா?” என்றாள்.
“அதை நீங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணுங்க. ஆனா, எனக்கு இன்னைக்கு மேட்ச் இருக்கு. சோ, டாட்டா பை பை..” என்ற அகரன் சென்று விட்டான்.
விஜயின் அறையின் முன்பு நின்ற வேதா, மெதுவாய் கதவைத் தட்ட, அவனோ கதவைத் திறக்கவில்லை. விடாமல் தட்டிக் கொண்டே இருக்க, ஒரு கட்டத்தில் கோபத்தில் வந்து கதவைத் திறந்தான் விஜய். கலைந்த தலையுடன், சிவந்த கண்களுடன் இருந்தவனைப் பார்த்தவளுக்கு, பயத்தில் மீண்டும் உடல் வெடவெடத்தது.
‘வேதா ஸ்டெடி’ என்று தனக்குள் கூறிக் கொண்டவள், சளைக்காது அவனையே பார்த்து வைக்க,
“பச்… இப்ப என்னடி வேணும் உனக்கு?” என்றான்.
‘நீங்க தான் வேணும்” என்றாள்.
“என்னது?” என்ற அவனின் அதட்டல் குரலில் வார்த்தையை உணர்ந்தவள்,
“அது.. நீங்க தான் சாப்பிட வரணும்னு சொல்ல வந்தேன்.பசியோட இருந்தா கோபம் அதிகம் தான் ஆகும்” என்றாள்.
“சரி பட்டினியாவே இருக்கேன். டேப்லட் போட மாட்டேன்.” என்று அவள் திரும்பி செல்ல, அவளின் கையைப் பிடித்து இழுத்தான்.
“என்ன பிளாக்மெயில் பண்றியா?” என்றான் கடுப்பாக.
“ஆமா” என்றாள் அவனை நேருக்கு நேராக பார்த்து.
“இந்த பிளாக்மெயில் பண்ற வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். போடின்னு போயிட்டே இருப்பேன். என்னைக்கும் இல்லாத அக்கறை இன்னைகென்ன புதுசா?” என்றான் கோபமாய்.
“எதுக்கு இவ்வளவு லென்தியா பேசுறிங்க. அதான் சொன்னிங்களே போடின்னு போயிட்டே இருப்பேன்னு. அப்படியே இருங்க. நான் எப்படி போனா உங்களுக்கு என்ன? நானும் புதுசா அக்கறை காட்ட வேண்டாம். நீங்களும் எந்த அக்கறையையும் என் மேல காட்ட வேண்டாம்.” என்றவள் கையை உருவ முற்பட, அவன் பிடியோ இரும்புப் பிடியாய் இருந்தது.
“உனக்கு தான் ஹெல்த் இஷ்யூஸ். நீதான் சாப்பிட்டு மெடிசன் எடுக்கணும். நான் இல்ல” என்றான் கொஞ்சம் நிதானத்துக்கு வந்த குரலில்.
“வேதா எனக்கு நிஜமாவே பசி இல்லை. இப்போ சாப்பிடுற மன நிலைமைலயும் நான் இல்லை. என்னோட கோபத்தை தூண்டாம போய்டு” என்றான் வரவழைக்கப் பட்ட நிதானத்துடன்.
அப்போதும் வேதா விடாப்பிடியாக நிற்க,
“என்னடி பிரச்சனை உனக்கு? இப்ப என்ன நான் சாப்பிடனும் அவ்வளவு தான? வா” என்றவன் அவள் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போக, இவர்களை பார்த்த சரணும் கீர்த்தனாவும் பார்த்தும் பார்க்காததும் போல் இருந்து கொண்டனர்.
கோபம் கொஞ்சமும் குறையாமல் விஜய் அமர, அவனுக்கு அருகில் இடித்துக் கொண்டு அமர்ந்தாள் வேதா.
“இப்ப ஏன் என் பக்கத்துல உட்கார்ற? உனக்குத் தான் என் பக்கத்துல உட்கார்றது பிடிக்காதே?” என்றான் வெடுக்கென்று. வேதாவிற்கு கண்கள் கலங்க, பட்டென்று எழுந்தாள். அவள் எழுந்த வேகத்தில் மீண்டும் அமர்ந்திருந்தாள். அவன் தான் இழுத்திருந்தான்.
அவளுக்கு முதலில் வைத்து கொடுத்தவன்,
“சாப்பிடு” என்றவன், தனக்கும் வைத்துக் கொண்டு அவளை நிமிர்ந்தும் பார்க்காமல் சாப்பிட்டு முடித்தான். உணவின் ருசியே அவனுக்கு சொல்லியது அவள் தான் சமைத்திருக்கிறாள் என்று.
சாப்பிட்டு முடித்து மீண்டும் அவன் அறைக்குள் புகுந்து கொள்ள, அவன் பின்னாலேயே வேகமாய் சென்றாள் வேதா. அவர்களைப் பார்த்து சிரித்த கீர்த்தனா,
“உங்க தங்கச்சிக்கு தைரியம் ஜாஸ்தி தான். சிங்கத்தோட குகைக்கு தனியா போறாளே?” என்றாள்.
“உங்களை” என்று முறைக்க முற்பட்டவளுக்கும் சிரிப்பு வந்தது.
தனக்கு பின்னால் வந்தவளை கண்டு திகைத்தவன்,
“இன்னும் என்ன வேதா?” என்றான் சற்று எரிச்சலுடன்.
எதுவும் பேசாமல் அவனருகில் சென்றவள்,அவனை பின்னிருந்து அணைத்துக் கொண்டாள். அவள் தானாக வந்து அப்படி அணைப்பாள் என்று எதிர்பார்க்காதவன், அப்படியே நின்றான்.
“என்னடி பண்ற?” என்றவனின் குரல் கரகரத்திருந்தது.
“சாரி” என்றவளின் கண்ணீர் அவன் முதுகு சட்டையை நனைக்க,
“வேதா பிளீஸ் மூவ்” என்றான்.
“மாட்டேன்” என்றவள் மேலும் இறுகக் கட்டிக் கொள்ள,
“வேதா நான் இப்போ ஒரு நிலையில இல்லை. என்னோட மைன்ட் ஸ்டேபிளா இல்லை. நான் ஏதாவது ஹார்ஷா பிகேவ் பண்ணிடுவேன். சோ இங்க இருந்து போ. ப்ளீஸ் லீவ் மீ அலோன்..” என்றான் வரவழைக்கப்பட்ட பொறுமையுடன்.
“நீங்க சாரி சொன்னப்ப எல்லாம் நான் அமைதியா அக்சப்ட் பண்ணிகிட்டேன்ல. இப்போ நான் சாரி சொல்றப்ப நீங்களும் அமைதியா அக்சப்ட் பண்ணிக்கோங்க” என்றாள். அவளின் கையை விடுவித்து தனக்கு முன்னால் நிறுத்தியவன்,
“சொல்லுடி நான் இப்படித்தான் சாரி சொன்னேனா” என்றான் மீண்டும்.
“இல்லை” என்று தலையை ஆட்டினாள்.
“சாரி சொல்லனும்னா நான் சொன்ன மாதிரியே சொல்லு. இல்லைன்னா நீ சாரியே சொல்ல வேண்டாம்” என்றான். ஒரு நிமிடம் அவனையே பார்த்தவள், அங்கிருந்த கட்டிலில் ஏற,
அவன் புரியாமல் பார்த்தான்.
அவனை கழுத்தோடு அணைத்தவள், மொத்த உணர்வுகளையும் அடக்கி அவன் நெற்றியில் முத்தமிட, நெக்குருகி நின்றான் விஜய். அவளின் மென்ஸ்பரிசம் அவனுக்குள் மாயாஜாலம் நிகழ்த்திக் கொண்டிருந்தது.
“சாரி” என்றவளின் கண்ணீர் அவன் இமைகளில் விழ,பட்டென்று கண்களைத் திறந்தான் விஜய்.
“என்னடி பண்ற?” என்றான் சற்று கரகரத்த குரலில்.
“நீங்க இப்படித்தான சாரி கேட்டிங்க?” என்றாள்.
“அதுக்கு ஏன்டி கட்டில் மேல ஏறுன?”
“இப்படி வளர்ந்திருந்தா நான் என்ன பண்றது?” என்றவளை ஆழ்ந்து பார்த்தவன்,
“ஒருத்தி வந்து விஜய் மாமா எனக்கு வேணும்னு சொல்றா? உனக்கு ஏன் அந்த இடத்துல கோபம் வரலை” என்றான் அவள் கண்களைப் பார்த்தபடியே.
“எனக்கு ஏன் கோபம் வரணும்?” என்றாள் புரியாமல்.
அவன் முகம் மீண்டும் இறுக,
“நம்பிக்கை இல்லாத இடத்துல தான கோபம் வரும். எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கும் போது, அவ பேசுறதுக்கேல்லாம் நான் ஏன் கோபப்படனும்?” என்று சொன்னவளை அடுத்த நொடி, இழுத்து அணைத்துக் கொண்டான். அவள் முகம் முழுவதும் முத்தமிட்டுத் தீர்த்தவன், இறுதியில் இதழ்களில் இளைப்பாற, அவளோ அவனின் வன்மையையும், மென்மையையும் தாங்க முடியாமல் தகித்துக் கொண்டிருந்தாள்.
விடவே மாட்டேன் என்பதை போல் அவளும் அணைத்துக் கொண்டு நிற்க,அவன் ஒட்டுமொத்த உள்ளக் கிடக்கைகளுக்கும் அந்த அணைப்பும் முத்தங்களும் போதுமென்று தோன்றவில்லை அவனுக்கு. அவள் உடல் நிலை ஞாபகத்திற்கு வர, அவளில் இருந்து மீண்டான்.
“உங்க கோபம் போயிடுச்சா?” என்றாள் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தபடி.
“எனக்கு கோபமெல்லாம் போயிடுச்சான்னு கேட்டா சொல்லத் தெரியலை.ஆனா, நீ இப்படி சாரி சொல்லுவேன்னா கோபமாவே இருக்கலாம்னு தோணுது” என்றான் இதழ்களில் தோன்றிய குறுநகையுடன்.
அவன் அணைப்பிற்குள் இருந்தவளுக்கும் புன்னகை தோன்ற, அதையும் அவனுக்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.