முன்னால் பால்கனி, ஹால், ஒரு அறை என இருந்த மாடியில் மற்ற இடமெல்லாம் திறந்த வெளியாக இருந்தது. கடைசியில் ஓய்வறை இருப்பதை பார்த்தவள் உபயோகித்து விட்டு வந்தாள். ஹாலில் பாய் தலையணை ஓரமாக இருக்க விரித்து போட்டு படுத்து விட்டாள்.
தன் வாழ்க்கை என்னவாகும், அக்கா எங்கே இருப்பாள் என்ன கஷ்ட படுவாளோ, அம்மாவும் அப்பாவும் சரியாக சாப்பிட்டார்களா என்றெல்லாம் நினைத்தவள் கைப்பேசி கூட கையில் இல்லையே என நொந்து கொண்டாள்.
நேரம் கொடுமையாக நகர்ந்தது. ஓய்வறை உபயோகிக்க என வெளியில் வந்தான் ருத்ரன். அவனை கண்டதும் வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தமர்ந்தாள். ஒரு நொடி நின்றவன் பின் ஒன்றும் சொல்லாமல் ஓய்வறை சென்று, மீண்டும் தன் அறைக்கு சென்று விட்டான்.
இரண்டு மணி நேரம் கழித்து தேநீர் எடுத்துக் கொண்டு வைதேகி வந்த போது உறங்கியிருந்தாள் சிவரஞ்சனி. அவளை எழுப்பி விடாமல் அண்ணனுக்கு தேநீர் கொடுத்தாள்.
“நான் ஏன் எழுப்ப போறேன் அவளை?” என கடுப்பாக கேட்டான்.
குரலை செருமிக் கொண்டவள், “சாயங்காலம் அண்ணி வீட்டுக்கும் ஒரு எட்டு ரெண்டு பேரும் போய்ட்டு வரணுமாம் அண்ணா. அம்மா சொல்லச்சு” என்றாள்.
முடியாது என்பது போல தங்கையை அழுத்தமாக பார்த்தான்.
“இல்லண்ணா, அவுக சொந்தபந்தமும் அங்குட்டு இருக்கு, போகலைனா ஏதாவது பேச்சுக்கு இடமாவும்…” என இழுத்தாள்.
“என்னை ரொம்ப போட்டு படுத்தி வச்சா எங்குட்டாவது போயிடுவேன், அம்மாட்ட சொல்லி வை” என அவன் எரிந்து விழவும் அமைதியாக வெளியேறி விட்டாள் வைதேகி.
மருமகளின் பிறந்த வீட்டுக்கு செல்ல மகன் மறுக்கிறான் என்பதை மகள் சொல்லவும் யோசித்த வள்ளி, “சரி விடு பார்த்துக்கலாம்” என்றார்.
“என்னம்மா அவங்க ஏதும் சொல்ல மாட்டாங்களா? இன்னிக்கு இல்லை நாளைக்கு கூப்பிட்டா கூட வராது போல அண்ணன்” என்றாள் வைதேகி.
“ம்ம்… அப்படியே இருந்திட மாட்டான். கல்யாணம் ஆச்சுதுல, அவனை கொஞ்சம் விட்டுத்தான் பிடிக்கணும். சிவா பெத்தவங்ககிட்ட நான் பேசிக்கிறேன்” என முடித்து விட்டார் வள்ளி.
சொன்னபடியே சுடரிடமும் உத்தமனிடமும் பேசிவிட்டார் வள்ளி. அவர்களும் சம்பந்தி என்ன சொன்னாலும் தலையாட்டுவது என முன்னரே முடிவெடுத்து வைத்திருந்தனர். சின்ன மகளின் உடைமைகளை மட்டும் கொடுத்து அனுப்பினார்கள்.
கைப்பேசி கைக்கு வரவுமே முதல் வேலையாக பெற்றோரிடம் பேசினாள் சிவா.
‘உன் அக்கா செய்த வேலைக்கு நம்மை இந்த ஊரிலேயே வாழ விடாமல் செய்திருப்பார்கள், ஏதோ அப்படி செய்யாமல் உன்னை ஏற்றுக்கொண்டார்கள், அனுசரித்து நடந்து கொள்’ என அறிவுரை சொன்னார் சுடர்.
உத்தமனோ, ‘உன் அக்கா செய்ததற்கும் உன் வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை, ஏதாவது பிரச்சனை என்றால் பொறுத்து போக வேண்டும் என்றில்லை, அப்பா இருக்கிறேன் உனக்கு’ என்றார்.
“நல்லா புத்தி சொல்றயா பொண்ணுக்கு, எனக்குன்னு வந்து வாச்சியே!” கடிந்த சுடர் கணவரிடம் இருந்து கைப்பேசியை பறித்துக் கொண்டார்.
“அதுதான் உன் வீடு, என்ன நடந்தாலும் அங்குட்டுதான் உன் வாழ்க்கை, உன் அப்பாரு ஒன்னும் சீமைதுரை இல்லை, அதை நெனப்பு வச்சு குடும்பம் பண்ணு!” என பொரிந்து தள்ளினார்.
“இங்க நான் பார்த்துக்கிறேன், என்னை பத்தி கவலை படாத. கௌரி எங்க இருக்கா என்ன ஏதுன்னு தெரிஞ்சுதா ம்மா?” எனக் கேட்டாள் சிவரஞ்சனி.
“அட கூறு கெட்டவளே! அக்கம் பக்கம் பார்த்து பேசுடி, இனி அவளை பத்தி ஏதும் பேசவே கூடாது நீயி. உன் வாழ்க்கைய பாரு” என அடித் தொண்டையில் சீறிய சுடர், அழைப்பை துண்டித்து விட்டார்.
கௌரி செய்தது பிழைதான், அதற்காக அந்த உறவையே மறக்க வேண்டும் என்றால் எப்படி? குறைந்த பட்சம் அவள் எந்த ஆபத்தும் இல்லாமல் நலமாக இருக்கிறாள் என்பதையாவது தெரிந்து கொள்ள வேண்டாமா? என நினைத்த சிவா, அக்காவுக்கு அழைத்து பார்த்தாள். இன்னும் ‘சுவிட்ச் ஆஃப்’ என்றே தகவல் வந்தது.
‘நன்றாகத்தான் இருப்பாள்’ என தனக்கு தானே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
தன் சொல்லுக்கு பணிந்து திருமணம் செய்து கொண்டான், இனி அவனை கோவ படுத்தும் படி வேறு ஏதேனும் செய்ய சொன்னால் வீட்டை இரண்டாக்கி விடுவான் மகன் என்பது வள்ளிக்கு நன்றாக தெரியும். ஆகவே இரவு உணவு வரை மாடிக்குத்தான் சென்றது. உறவுகளை சமாளித்து ஊருக்கு அனுப்பி வைத்து விட்டார்.
சகுந்தலை மட்டும் இன்னும் செல்லவில்லை, பிறை விஷயத்திற்கு பிறகு வாலை சுருட்டிக் கொண்டிருந்தவருக்கு இப்போது நடக்கும் விஷயங்கள் தன் மகளின் தவறை பின்னுக்கு தள்ளி விட்டது போலிருந்தது. இங்கே நடப்பதை அறிந்து கொள்ளாமல் தன் வீடு சென்றால் அவரால் நிம்மதியாக உறங்கத்தான் முடியுமா?
நாத்தனாருக்கு உண்டான கெடுபிடிகளோடு அங்கேயேதான் இருந்தார். இரவு சடங்குக்கு சிவாவை தயார் செய்ய வைதேகியை மட்டும் மேலே செல்ல சொன்னார் வள்ளி.
‘அதெப்படி ருத்ரனின் மூத்த அத்தை நான் இருக்கும் போது எனக்கு மரியாதை இல்லையா?’ என உரிமைக்கொடி தூக்கினார் சகுந்தலை.
சகுந்தலையின் மற்ற இரு சகோதரிகள் ருத்ரனின் மனநிலை புரிந்து அமைதியாக தங்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
“நீ போ மேல!” என மகளை அதட்டி அனுப்பி வைத்த வள்ளி, சகுந்தலையை கடினமாக பார்த்தார்.
“இவ்ளோ சொல்றேன், அவளை மட்டும் அனுப்புறீகளே அண்ணி, என் தங்கச்சிங்க மாதிரி நான் ஒன்னும் பயப்படுறவ இல்லை. என்ன எங்களையெல்லாம் ஒதுக்க நினைக்கிறீகளோ?” என்றார் சகுந்தலை.
‘இந்த அம்மாவுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?’ என பார்த்திருந்தாள் பிறை.
“நீங்க என்ன வேணா நினைங்க, அதுக்கெல்லாம் பதில் சொல்லிட்டு இருக்க முடியாது. இந்த வூட்டுக்கு வாழ வந்த பொறவு நானும் மூனு நாத்தனார் ரெண்டு கொழுந்தனாருக்கு எல்லா நல்லது கெட்டதும் செஞ்சு முடிச்சிட்டேன். இனி எம் புள்ளைங்கள மட்டும்தான் நான் பார்க்க முடியும். உங்களுக்கு பேரன் பேத்தி தூக்குற வயசாகியும் அல்பமா சண்டை கட்டினா அதுக்கு இடம் கொடுக்க மாட்டேன்” என்றார் வள்ளி.
அம்மாவை துணைக்கு இழுத்து வைத்துக்கொண்டு சண்டையை பெரிதாக்க பார்த்தார் சகுந்தலை. மங்களத்தம்மாள் தவிர மற்ற யாரும் அதற்கு இடம் கொடுக்கவில்லை. சகுந்தலையின் கணவரை அழைத்து விட்ட தனராஜன் கையோடு அவரை அழைத்து செல்ல வைத்து விட்டார்.
சிவாவை குளிக்க அனுப்பி வைத்த வைதேகி அண்ணனின் அறைக்கு செல்ல, ஏதோ கணக்கு வழக்கு பார்த்துக் கொண்டிருந்தான் அவன்.
அறையில் அலங்காரம் எல்லாம் தேவையில்லை ஏற்கனவே வள்ளி சொல்லியிருந்தார். அவர் சொன்ன படி, “அண்ணி இங்கதான் தூங்க வருவாங்க ண்ணா” என்பதை மட்டும் அண்ணனிடம் அறிவித்து விட்டு உடனே சென்று விட்டாள் வைதேகி.