அந்த வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் விடுமுறையாய் இருக்க, விடிந்து வெகு நேரமாகியும் படுக்கையை விட்டு எழ விருப்பமில்லாமல் படுத்திருந்தாள் வேத வர்ஷினி. முதல் நாள் இரவு வெகு நேரம் படித்துவிட்டு நேரம் சென்று உறங்கியதால் கண்ணெல்லாம் தீயாய் எறிந்தது.
“என்ன இன்னைக்கு இவ்வளவு டயர்டா இருக்கு?தலை வேற இப்படி வலிக்குது” என்று எண்ணியவள், நேரத்தைப் பார்க்க அது மணி எட்டைக் காட்டியது.
“எட்டு மணி ஆகிடுச்சா?” என்று வேகமாய் எழுந்தவள், அகரனின் அறைக்கு சென்று பார்க்க, அவனோ இழுத்து போர்த்திக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
‘சரி டீயை போட்டுட்டு இவனை எழுப்புவோம்’ என்று எண்ணியவள்,பல் தேய்த்துக் கொண்டே பால் பாக்கெட்டை எடுக்கப் போனாள். கீழே வீட்டிற்குள் பேச்சு சத்தம் அதிகமாய் கேட்க, விஜய் கோபமாய் கத்துவதும் கேட்டது.
‘என்னாச்சு? எப்பவும் சைலன்ட்டா இருக்குற வீடு இப்போ காலையிலேயே ரணகளமா இருக்கு? என்னவா இருக்கும்?’ என்று யோசித்தபடியே உள்ளே நுழைய, அங்கிருந்த புதியவர்களை கண்டு யோசனையில் புருவம் நெறித்தாள்.
‘இவரொருத்தரு? எப்ப பார்த்தாலும் என்னைய மட்டும் தான் முறைப்பாரு, நான் என்னமோ இவருக்கு முறைப் பொண்ணு மாதிரி’ என்று மனதிற்குள் முனங்கிக் கொண்டாள்.
“என்ன லுக்கு? கண்ணை நோண்டிடுவேன்” என்று சைகையில் சொன்னவள்,
அப்போது தான் அங்கு நின்றிருந்தவளை கவனித்தாள்.
‘யாருடா இந்த சூப்பர் பிகர்’ என்று அவளால் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
‘என்ன கொஞ்சம் கம்மியா வளர்ந்திருக்கலாம். விஜய் சார் ஹைட்டுக்கு கொஞ்சம் தான் கம்மி’ என்று அவளை வேதா இன்ச் பை இன்ச்சாக எடை போட்டுக் கொண்டிருந்தாள்.
விஜய் வேதாவை முறைத்து வைத்தான். வாயில் பிரஷுடன் வந்து நின்று ஏதோ பக்கத்து வீட்டு சண்டையை வேடிக்கை பார்ப்பதைப் போல் பார்த்துக் கொண்டிருந்தவளை கண்டு அவனின் கோபம் ஏற்கனவே எகிறிப் போயிருந்தது
‘நமக்கெதுக்கு வம்பு? நடையை கட்டுவோம்’ என்று எண்ணி அவள் வெளியேற செல்ல, எதிரில் இருந்தவள் வேதாவை இளக்காரமாய் பார்த்து வைத்தாள். முதலில் கண்டு கொள்ளாமல் சென்ற வேதாவிற்கு அவள் பார்வையின் பொருள் தாமதமாகத்தான் விளங்கியது. வேகமாய் மேலே சென்று வாயைக் கொப்பளித்து, முகத்தைக் கழுவியவள், போன வேகத்தில் மீண்டும் திரும்பி வந்தாள்.
திரும்பி வந்தவளை அவர்கள் முறைக்க,
‘நீங்க முறைச்சா நான் பயந்துடுவேனா?’ என்ற ரீதியில் பார்த்தவள், விஜயின் சித்தியின் அருகில் சென்று,
“யார் ஆன்ட்டி இவங்க?” என்றாள் மெதுவாய்.
“அது.. வேதா.. இது விஜயோட அத்தை பொண்ணு யாழினி. அது விஜயோட அத்தை மாமா” என்றார் சித்தி தவிப்புடன்.
“அதுக்கு ஏன் ஆன்ட்டி இவ்வளவு நெர்வஸ் ஆகுறிங்க?” என்றாள் புரியாமல்.
“அது விஜய் கல்யாணம்..நின்னு போனது..” என்று அவர் தயங்க, நிமிடத்தில் விஷயத்தை உள்வாங்கிக் கொண்டாள் வேதா.
“ஹோ.. அந்த பழைய பொண்ணா?” என்று அவள் சத்தமாக கேட்டு வைக்க, யாழினி அவளை மீண்டும் முறைத்தாள்.
‘சரித்தான் போடி’ என்ற ரீதியில் பார்த்தவள், விஜயின் அருகில் சென்று அவனின் கையை சுரண்டினாள்.
“என்னடி?” என்றான் கோபமாக.
“அது.. நைட் ரொம்ப நேரம் படிச்சேனா? தூங்க லேட் ஆகிடுச்சு. இப்போ சரியான தலைவலி. ஒரு காபி போட்டு தரீங்களா?” என்றாள் பாவமாய்.
அவன் கோபமெல்லாம் நொடியில் மறந்து போக,
“தலைவலிக்குதா? எப்ப இருந்து வலிக்குது? ஏன் என்கிட்டே சொல்லலை? உன்னைய யாரு லேட் நைட் வரைக்கும் படிக்க சொன்னா?” என்று கேள்வியை விடாமல் அடுக்க,
“சார்..சார்..! கொஞ்சம் மூச்சு விடுங்க. சாதாரண ஹெட் ஏக். அதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப் படுறிங்க?” என்றாள் வேதா.
‘உனக்குத் தான் அது சாதாரண ஹெட் ஏக். ஆனா, எனக்குத் தாண்டி உள்ளுக்குள்ள பக்கு பக்குன்னு இருக்கு’ என்றெண்ணியவன்,
“வா” என்று அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சமையலறைக்குள் செல்ல, அங்கிருந்த மூவரும் அவனையே அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர்.
யாழினியோ, ‘ யாரு இவ? விஜய் மாமா இவளுக்கு ஏன் இவ்வளவு இம்பார்ட்டன்ஸ் கொடுக்குறாரு?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
அங்கே விஜய் நிதானமாய் காபியை கலக்கிக் கொண்டிருக்க, மூளைக்குள் பல விஷயங்கள் ஓடிக் கொண்டிருந்தது.
“அப்பறம் விஜய் சார்..! உங்க அத்தை பொண்ணா? நல்லா அழகா தான் இருக்காங்க. அப்பறம் ஏன் உங்க மேரேஜ் நின்னுச்சு?” என்றாள் சாவகாசமாய்.
அவளுக்கு விஷயம் தெரிந்ததில் விஜய்க்கு தான் அதிர்ச்சியாக இருந்தது.
“உனக்கெப்படி தெரியும்?” என்றான் யோசனையாய்.
“எனக்கு உங்க மேரேஜ் நின்னு போச்சுங்கறதைத் தாண்டி இப்ப வரைக்கும் எதுவும் தெரியாது. அதுவும் கூட ரீசண்ட்டா தான் ” என்றாள் தோள்களைக் குலுக்கி.
“அவளை இங்க பார்த்துட்டு உனக்கு கோபம் வரலையா?” என்றான் காபியை அவள் கையில் திணித்தபடி.
“எனக்கெதுக்கு கோபம் வரணும்? உங்க அத்தை பொண்ணு. உங்களுக்கு பார்த்த எக்ஸ் பியான்சி. அவ்வளவு தான?” என்றாள் புரியாமல்.
‘அதானே..! உனக்கெதுக்கு கோபம் வரப் போகுது’ என்று சலித்தவன்,
“ஒண்ணுமில்லை, காபியை குடி.” என்றான்.
அவள் வெளியே வந்து சாவகாசமாய் சோபாவில் அமர்ந்து காபியை குடிக்க,
“மாமா யாரு இவ?” என்றாள் யாழினி கோபமாய்.
‘அவளுக்கு வர வேண்டிய கோபமெல்லாம் இவளுக்கு வருது. அவ என்னடான்னா சாவகாசமா காபி குடிச்சுட்டு இருக்கா’ என்று பல்லைக் கடித்தான்.
‘நீயே பதில் சொல்லு’ என்ற தோரணையில் விஜய் வேதாவையே பார்க்க,
“அதென்ன? அவனோட தங்கச்சியா? கிவ் ரெஸ்பெக்ட், டேக் ரெஸ்பெக்ட்” என்றாள் வேதா பட்டென்று.
“உனக்கென்ன மரியாதை? ஜஸ்ட் ரெண்ட்க்கு இருக்குற உனக்கே இவ்வளவு இருக்குன்னா இது என் தாய்மாமா வீடு” என்றாள் யாழினி வேகமாய்.
“எப்போ வரைக்கும்?” என்றாள் வேதா, காபியில் கவனம் செலுத்தி.
அவளின் செய்கை யாழினி கோபத்தை தூண்டி விட,
“நீ யாருடி பர்ஸ்ட்..! நான் எதுக்கு உனக்கு பதில் சொல்லணும்? ஏதோ திறந்த வீட்ல நுழைஞ்ச மாதிரி நுழைஞ்சு என் மாமாகிட்டையே உரிமையா காபி போட்டு தர சொல்ற? அவரோட ரேஞ்ச் என்னன்னு தெரியுமா உனக்கு? முதல்ல வெளிய போடி” என்று கத்தினாள் யாழினி.
அவள் கத்தி முடிப்பதற்கும் அங்கிருந்த பூ ஜாடி கீழே விழுந்து உடைவதற்கும் சரியாய் இருந்தது. அது சில்லு சில்லாய் உடைந்திருக்க, ஆக்ரோஷமாய் நின்றிருந்தான் விஜய்.
“சித்தி இவங்களை இப்ப வெளிய போக சொல்லுங்க. இல்லைன்னா நான் மனுஷனா இருக்க மாட்டேன்..” என்றான் ரத்தம் சிவப்பேறிய கண்களுடன்.
“மாமா ப்ளீஸ்..! நான் அன்னைக்கு பண்ணது தப்பு தான். அது எவ்வளவு பெரிய முட்டாள் தனம்னு எனக்கு இப்போதான் புரியுது. தயவு செஞ்சு என்னை மன்னிச்சுடுங்க” என்றாள் யாழினி.
“ஆமா விஜய்..! அவ இப்போ செஞ்ச தப்பை உணர்ந்து வந்திருக்கா. உன்னைய விட்டா எங்களுக்கும் அவளுக்கும் யார் இருக்கா?” என்று அவனின் அத்தையும்,மாமாவும் சேர்ந்து கொண்டு மன்னிப்பு கோர,
“மரியாதையா வெளிய போய்டுங்க. எனக்கு இருக்குற கோபத்துக்கு, கொலை பண்ண கூட தயங்க மாட்டேன்” என்றான் விஜய்.
அவனின் இந்த அவதாரம் கண்டு மிரண்டு தான் போயிருந்தாள் வேதா. அவன் கோபப்பட்டு பார்த்திருக்கிறாள். ஆனால் இப்படி ஒரு கோபத்தை இதுவரை கண்டதில்லை. அதற்குள் விஷயமறிந்து கீர்த்தனாவும் சரணும் கூட வந்து விட்டிருந்தனர்.
“நீங்க என்ன சொன்னாலும் நான் இங்க இருந்து போக மாட்டேன் மாமா. உங்களையும்,அத்தையையும் பார்க்க நான் எத்தனை முறை வந்தேன் தெரியுமா? இதோ உங்க சித்தி தான் என்னைய உள்ள கூட விடலை” என்றாள் யாழினி குறையாக.
“இப்ப மறுபடியும் பிரச்சனை பண்ணனும்னே வந்திருக்கிங்களா? எங்கண்ணனை நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா?” என்றாள் கீர்த்தனா கோபமாய்.
“கீர்த்தனா நீயாவது நான் சொல்றதை புரிஞ்சுக்கோ. நான் தப்பு பண்ணேன் தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, பட்டுத் திருந்தி வந்திருக்கேன். எனக்கு விஜய் மாமா வேணும்” என்றாள் விடாமல்.