மூவரும் பயமும் குழப்பமுமாக அவரை பார்க்க, அவரின் பார்வையோ சிவரஞ்சனியின் பக்கம் சென்றது.

மற்ற மூவருக்கும் விஷயம் இன்னதென விளங்கி விட்டது.

சிவா மறுப்பாக தலையசைக்க, “உங்க வீட்டு பொண்ணால எங்களுக்கு நடந்த அவமானத்துக்கு நீங்கதான் பொறுப்பு, முடியாதுன்னு எப்படி சொல்லுவ?அப்படி என்னடி என் மகன்கிட்ட குறைய கண்டீங்க எல்லாரும்?” என கோவமாக கேட்டார் வள்ளி.

அவரின் கையை பிடித்துக்கொண்ட சிவா, “ஐயோ! அப்படிலாம் நான் நினைக்கலங்க. அக்கா இப்படி பண்ணியிருக்கும் போது நானே அவுங்கள கல்யாணம் பண்ணிக்கிட்டா எப்படிங்க சரியா வரும்?” எனக் கேட்டாள்.

“ஏன் சரியா வராது? வேறொருத்தி வந்து ஏதாவது சண்டைல உன்னை புடிக்காமதான் உன் வூட்டு வேலைக்காரனோட ஓடிப் போனா ஒருத்தின்னு என் பையன பார்த்து கேட்டுபுட்டா?” நெஞ்சில் கை வைத்து பதற்றத்தோடு கேட்டார் வள்ளி.

சுடரும் உத்தமனும் என்ன சொல்வதென ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“அசிங்க படுத்திப்புட்டு ஓடுனவளை பத்தி பேசவே விரும்பல நான். நாளைக்கு எம்மவனுக்கும் சிவரஞ்சனிக்கும் கல்யாணம், அம்புட்டுத்தான் என்ன சொல்றீய?” உத்தமனிடம் கேட்டார் வள்ளி.

உத்தமன் தன் மகளை பார்த்தார். சிவாவின் நினைவுகளில்  அவமானத்தால் கூனி குறுகி நிற்கும் ருத்ரன் வந்தான். பிறை விஷயத்தின் போதே ருத்ரன் மீது பாவப்பட்டவள், இப்போது தன் அக்காவாலும் அவனுக்கு இப்படியான நிலை உண்டாகியிருக்க, அவளுக்கு குற்ற உணர்வானது.

இந்த இக்கட்டில் அவனுக்கு கை கொடுப்பதை தன் கடமையாக நினைத்தவள், திருமணத்துக்கு சம்மதம் என தலையசைத்தாள்.

 மனம் மலர்ந்து போன வள்ளி, அவளின் இரு கைகளையும் கெட்டியாக பிடித்துக்கொண்டு, “எம்மவன் வைரம், அருமை தெரியலை எவளுக்கும். உனக்குத்தான் கொடுத்து வச்சுருக்குடி!” என்றார்.

சிவாவுக்கு என்ன சொல்வதென தெரியவில்லை. அக்காவின் மீது கோவத்தில் இருப்பவன் தன்னை ஏற்றுக்கொண்டு இணக்கமாக வாழ்வானா என்ற அச்சம் அவளுள் எழாமல் இல்லை, ஆனால் அதை ஒதுக்கி வைத்து விட்டாள்.

“போனவளை நினைச்சு அழுது புலம்பாம நடக்க வேண்டியதை பாருங்க” என்ற வள்ளி, “ஆனா ஒன்னு! உண்ட வீட்டுக்கு துரோகம் பண்ணின அந்த பயலையும் கடைசி நேரத்துல கழுத்தறுத்த அந்த சிறுக்கியையும் வீட்டுக்குள்ள சேர்த்தீய… சேர்க்க கூடாது சொல்லிப்புட்டேன்!” என எச்சரிக்கை போல சொல்லி விட்டே புறப்பட்டார்.

சிவாவும் அவளின் பெற்றோரும் கலக்கத்தோடே, மாறிப் போன கல்யாணத்துக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள துவங்கினார்கள்.

தன் வீடு வந்த வள்ளி மற்ற யாரைப் பற்றியும் யோசிக்கவில்லை. தன் மகன் சரியென சொல்லி விட்டால் போதும் என்ற நினைப்போடுதான் ருத்ரனின் அறைக்கு சென்றார். அண்ணனிடம் அம்மா சொல்லும் செய்தியை கேட்டு வைதேகிக்கு அதிர்ச்சி என்றால் ருத்ரனுக்கு கோவமான கோவம்.

“அந்த வூட்டு பொண்ணையே கட்ட சொல்றியா என்னை!” என சீறி விட்டு வெளியேற போனவனை இழுத்து பிடித்துக்கொண்டார் வள்ளி.

“என்னடா குறை சிவரஞ்சனிக்கு? அம்மா உனக்கு நல்லதுதான் செய்வேன், சொல்றத கேளுடா” என கெஞ்சினார்.

அதிர்விலிருந்து மீண்டிருந்த வைதேகிக்கும் அம்மாவின் யோசனை பிடித்திருக்க, அவளும் அண்ணனிடம் எடுத்து சொன்னாள்.

பிறை விஷயம் வேறு, கௌரி விஷயம் வேறல்லவா? மனதில் ஒருத்தியை ஆசைப் பட்டு விட்டு அவமானத்தை சுமந்து கொண்டு நிற்கையில், உடனே வேறொருத்தியை அதுவும் அவளது தங்கையையே மணந்து கொள் என்றால் அவனால் ஏற்க முடியவில்லை.

இப்போது விட்டால் ருத்ரனின் திருமணம் எட்டாக் கனியாகி விடும் என்ற பயம் அவனது அம்மாவுக்கும் தங்கைக்கும்.

நாளை உன் திருமணம் நடக்கவில்லை என்றால் என்னை உயிரோடு பார்க்க முடியாது என சொல்லி அழுது விட்டார் வள்ளி.

ருத்ரன் தன் அம்மாவுக்காகத்தான் இறங்கி வந்தான்.  “என்னவோ பண்ணு” என்றவன் மீண்டும் நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்து விட்டான்.

வள்ளிக்கு இதுவே போதுமானதாக இருந்தது.

அரை நாளில் மாறிப் போயிருந்த சூழலை அழகாக சீராக்கினார் வள்ளி. வைதேகியோ அவளுக்குள் இன்னொரு ஆன்மா புகுந்து விட்டது போல இரட்டை பர பரப்புடன் அடுத்து ஆக வேண்டியதை கவனித்தாள்.

ருத்ரனின் சித்தி சித்தப்பாக்கள்  அவன் தங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை தங்களின் செயல்களில் காட்டினார்கள்.

பிறையின் அம்மா அடாவடியாக ஏதாவது பேசிய போது அவரின் மற்ற இரு சகோதரிகளே சத்தம் போட்டு அடக்கினார்கள்.

கௌரி இப்படி சென்று விட்டதில் மங்களத்தம்மாளுக்கே பேரதிர்ச்சிதான், தான் புலம்பிக் கொண்டே இருந்ததில்தான் பேரனுக்கு இப்படியாகி விட்டதோ என அவருக்கு தோன்றியது. ஆகவே இப்போது அவர் அமைதியாகவே இருந்து கொண்டார்.

ருத்ரனின் அத்தைகளும் வைதேகியும் மற்ற சகோதரி முறை உள்ளவர்களும் பெண்ணை பரிசம்  போட்டு அழைத்து வர சிவாவின் வீட்டுக்கு சென்றனர். கௌரிக்கு என எடுத்த எதையும் உபயோகபடுத்தவில்லை. வேறு புடவைகள், ரெடிமேட் பிலவுஸ்கள் என எல்லாம் ஏற்பாடு செய்திருந்தாள் வைதேகி.

 விளக்கேற்றி வைத்து சாமி கும்பிடுகையில் கவனக்குறைவாக குத்துவிளக்கை தட்டி விட்டு விட்டார் சகுந்தலை. ஏற்கனவே முதல் பெண்ணை நினைத்து கவலையில் இருந்த சுடருக்கு நெஞ்சமெல்லாம் பதறிப் போக, வைதேகியின் கண்கள் கலங்கி விட்டன.

வயதான ஒரு பெண்மணிதான், “எல்லாம் மனசுலதான் இருக்கு. கடவுளை நினைச்சுகிட்டு பொண்ணை அழைங்க” என சொல்லி சிவாவுக்கு திருநீறு பூசி விட்டார்.

சிவாவை பரிசத்திற்கு என எடுத்த புடவையை கட்டிக் கொள்ள வைத்து, முந்தானையில் மடிப்பழம் (தேங்காய், பூ, வாழை, வெற்றிலை பாக்கு)  முடிந்து இறுக பிடித்துக்கொள்ளும் படி அவளிடம் சொன்னார்கள்.  மாப்பிள்ளை வீடு பக்கம்தான் என்ற போதும் காரில்தான் அவளை அழைத்து சென்றனர்.

சிவரஞ்சனி வீடு வரவும் ஆரத்தி எடுத்தனர்.  நிறைநாழி விளக்கு( படியில் நெல் நிரப்பப் பட்டு காமாட்சி விளக்கு அதன் மேல் இருக்கும்) எடுத்து வந்த செங்கமலம் அவளையும் பிடித்துக்கொள்ள செய்தார்.

“பத்திரமா புடிச்சுக்க ஆயி” என யாரோ ஒருவர் சொல்ல, ஒரு கையில் விளக்கு இன்னொரு கையில் மடிப்பழம் என பிடித்துக்கொண்டிருந்த சிவாவுக்கு பதற்றமாகி விட்டது.

ஓரமாக உம் என்ற முகத்தோடு நின்றிருந்த ருத்ரனின் பார்வை அனிச்சையாக அவளிடம் சென்றது. தழைய கட்டியிருந்த புடவை அவளை வெகுவாக பயமுறுத்தியது. வீட்டில் விளக்கு விழுந்திருக்க இப்போது அசம்பாவிதம் ஏதும் ஆகி விடக்கூடாதே என நினைத்தவள் ஒரு நொடி கண்களை மூடி தன்னை நிலைப்படுத்திக் கொண்டாள்.

லேசாக தலை உயர்த்தி வலது காலால் முதலடி எடுத்து வைத்தாள் சிவா. தன் மகளுக்கு இப்படியெல்லாம் எந்த சடங்கு சாங்கியமும் நடக்கவில்லையே, ஒன்றுமில்லாத வீட்டு பெண்ணை இப்படி எல்லாரும் தாங்குகிறார்களே என சகுந்தலைக்கு நல்ல பொறாமை.

கோதை மலர் தூவ, செங்கமலம் பெரு விரலால் நிறை நாழி விளக்கிலிருந்து நெல் தூவ,  அடிகளை எடுத்து வைத்து நடந்தாள் அந்த வீட்டுக்கு வரப் போகும் மகாலக்ஷ்மி.

அவளுடன் பரிசம் போட சென்றவர்களும் வந்தார்கள்.  சகுந்தலை  வேண்டுமென்றே சிவாவின் தோளில் சற்று வலுவாக இடித்து விட்டார்.

ருத்ரனின் கவனமெல்லாம் அங்கேதானே இருந்தது. அந்த நேரம் சிவாவும் அவனருகில்தான் நடந்து கொண்டிருந்தாள். தடுமாற போனவளின் தோளை நொடிப் பொழுதில் பற்றி விழுந்து விடாமல் அவளை காத்தான் ருத்ரன்.

வேறு யாராக இருந்தாலும் பயத்தில் கையை விட்டிருந்தாலும் விட்டிருப்பர், ஆனால் அதிக கவனத்தோடு இருந்ததால் சிவா கெட்டியாக பிடித்துக்கொண்டாள்.

இருவரின் பார்வையும் சந்தித்துக் கொண்டிருந்தன. எல்லாம் சில நொடிகள்தான். அத்தையை முறைத்த ருத்ரன், “உள்ள நட” என சிவாவிடம் சொல்லி விலகி நின்று கொண்டான். உள்ள நட என்பதற்கு முன் ‘தைரியத்துடன்’ என்ற வார்த்தையை அவன் உபயோக்கிக்கவில்லை, ஆனால் அந்த வார்த்தையும் மறைந்து கிடந்ததை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது.

அவனுடையது சிறு செயல்தான், ஆனால் இந்த நேரம் அவள் விழுந்தால் என்னென்ன பேசியிருப்பார்கள்? அவனது மனநிலை அவளுக்கு புரியாமல் இல்லை, அக்கா மீதுள்ள கோவம் தன் மீதும் இருக்கும், இந்த கல்யாணம் அவனது அம்மாவின் பிடிவாதத்தில் நடக்கிறது என நன்றாக தெரியும்.

அவனது அந்தப் பிடியிலும் அந்தப் பார்வையிலும்  அந்த சொல்லிலும் அவன் தனக்கு நெருக்கமானவன் என்பதை உணர்ந்தாள் சிவா.

ஒருவர் மீது பிடித்தம் ஏற்பட கால் நொடிக்கும் குறைவான நேரம் கூட போதுமானது போல!

அந்த நொடி சிவாவின் மனதில் ருத்ரனின் முகம் ஆழப் பதிந்து கொண்டது.

 அத்தனை அழகாக, வேகமாக, நேர்த்தியாக அவளின் மனதில் நுழைந்து விட்டான் ருத்ரன்!