எனக்கு தெரியாமல் இதென்னடி வேலை என முதலில் மகளை கோவித்துக் கொண்ட சுடர், “அது அப்படியே இருக்கட்டும். கௌரிக்குத்தான் எல்லாம் அவ மாமியார் கொடுத்திட்டாங்களே. உனக்கு வச்சுக்கலாம்” என்றார்.
“அக்காவுக்கு மதிப்பா இருக்காதுமா, லேட் ஆனாலும் அவளுக்குனு சேர்த்ததை அவளுக்கே கொடுத்தாதான் எனக்கு திருப்தி” என சொல்லி விட்டாள் சிவா.
அடுத்த நாள் காலைப் பொழுதிலேயே வள்ளியிடம் வட்டிக்கு என கொடுத்திருந்த பணத்தை திருப்பிக் கேட்கவென பெரிய வீட்டுக்கு சென்றாள் சிவரஞ்சனி.
“வா வா” என அவளை வரவேற்றது ருத்ரன்தான்.
சிவா புன்னகைக்க அவன் எப்போதும் போலவே இருந்தான். என் அக்காவை ஆசைப்பட்டு கட்டிக்கொள்ள போகிறார், துளிக்கும் சிரிப்பு இல்லையே என நினைத்தாள் சிவா.
“என்ன பலமா ஏதோ யோசிக்கிற போல?” எனக் கேட்டான் ருத்ரன்.
தயக்கத்தை உடைத்து, “ஏன் மாமா எப்ப பாரு கடு கடுன்னே இருக்கீங்க? கொஞ்சம் சிரிச்சா போல இருந்தாதான் என்னவாம்?” எனக் கேட்டு விட்டாள்.
முதலில் விழித்து பின் லேசாக சிரித்தவன், “உன் அக்கா சொன்னாளாக்கும்?” எனக் கேட்டான்.
“ஏன் அக்கா சொன்னாதான் சிரிப்பு வருமா மாமா?” எனக் கேட்டாள் அவள்.
அவளது அந்த மாமா என்ற அழைப்பை கவனித்துக் கொண்டவன், என்ன விஷயமென விசாரித்தான்.
“உங்கம்மா இல்லையா?” என தயக்கமாக கேட்டாள்.
“அவுங்களும் உனக்கு உறவுதான் இப்போ, அத்தைன்னே சொல்றதுக்கென்ன?” எனக் கேட்டவன், அவர் அழைப்பிதழ் வழங்கவென விடியற்காலையிலேயே புறப்பட்டு விட்டதை சொன்னான்.
வேறு வழியின்றி அவனிடமே பண விஷயத்தை சொன்னாள்.
“அது ஏன் இப்போ உனக்கு? உன் அக்காவுக்கு சேர்க்கிறது உனக்குன்னு உதவும். வேற தேவைப்பட்டா அப்பாவை வந்து என்னை பார்க்க சொல்லு” என்றான்.
“அது அக்காவுக்குத்தான், நாங்களும் ஏதாவது செய்யணும், உங்கம்மா… இல்லை அத்தைகிட்ட சொல்லுங்க” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, செங்கமலம் வெளியில் வந்தார்.
“வாம்மா என்ன இந்நேரம் வந்திருக்க?” என செங்கமலம் விசாரிக்க, “சாயங்காலம் பால் கூட வேணுமாம் சித்தி, அதை சொல்ல வந்திருக்கா. சொக்கன்கிட்ட நானே சொல்லிக்கிறேன்” என சொல்லி விட்டான் ருத்ரன்.
அடுப்பில் பால் இருக்கிறது என செங்கமலம் உள்ளே செல்ல, இந்த பணத்தை உன்னிடம் எப்போது கொடுப்பது என எனக்கு தெரியும், நீ வீட்டுக்கு போ என அவளை அனுப்பி வைத்து விட்டான்.
எந்நாளும் அக்காவின் கணவன் தனக்கு செய்ய வேண்டும் என்றெல்லாம் அவள் எதிர்பார்த்ததே இல்லை. எல்லாம் கொடுத்து அக்காவை கட்டுவதோடு அல்லாமல் தன் எதிர்காலத்தையும் கருத்தில் கொள்கிறானே என ருத்ரனை நினைத்து மிகுந்த பெருமை. அப்படிப்பட்டவன் மனைவியை எப்படி வைத்துக்கொள்வான் என அக்காவை நினைத்தும் அத்தனை மகிழ்ச்சி.
கௌரியிடம்தான் மகிழ்ச்சியே இல்லை. ருத்ரனை நினைத்து பயம் என சுடர் சொல்லும் போது அப்படித்தான் என நினைத்த சிவாவும் அக்காவின் பயம் தெளிய நிறைய பேசினாள்.
“கல்யாணம் பண்ணிக்கிட்டு போ கௌரி, ரெண்டே நாள்ல எல்லா பயத்தையும் மாமாவே விரட்டிடுவாரு. எவ்ளோ நல்லவரு தெரியுமா அவரு? உன்னை ரொம்ப நல்லா பார்த்துக்குவாரு” என அக்காவின் மோவாயை பிடித்துக்கொண்டு குழந்தைக்கு சொல்வது போல சொன்னாள் சிவா.
கௌரியின் முகத்தில் பயத்தின் அளவு கூடியதே தவிர நேர்மறையான மாற்றம் இல்லை.
“விடுடி, கல்யாணம் ஆனா தானா மாறிக்குவா” என அம்மா சொல்ல, சரிதான் என சிவாவும் விட்டு விட்டாள்.
திருமணத்துக்கு முதல் நாள் அதிகாலையே கௌரி சுருண்டு படுத்து விட்டாள். தாங்க முடியாத வயிற்று வலி என அழுத அக்காவை கண்டு சிவாவுக்கும் அழுகை வருவது போலிருந்தது.
என்ன கைவைத்தியம் பார்த்தும் வலி சரியாகவே இல்லை என துடித்தாள் கௌரி.
யாருக்கும் தெரிந்தால் அபசகுணமாக நினைப்பார்களே என பயந்து விட்டார் சுடர். பக்கத்து ஊரிலிருந்து தெரிந்த வாடகை காரை வரவழைத்து யாருக்கும் தெரியாமல் கௌரியை அழைத்துக் கொண்டு பட்டுக்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார் சுடர்.
இங்கே சமாளித்துக் கொள்ளும் படி சிவாவிடமும் கணவரிடமும் சொல்லியிருந்தார். அக்காவுக்கு சரியாகி விட வேண்டும் என மனதிற்குள் வேண்டிக் கொண்டே இருந்தாள் சிவா.
காலை பத்து மணிக்கெல்லாம் அம்மாவிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.
“கௌரியை காணோம்டி, போயிட்டாடி பாவி சிறுக்கி! அவ தலையில அவளே மண்ண அள்ளி போட்டுக்கிட்டாடி…” என்ற சுடர் ஓ என கதறி அழுதார்.
அக்காவுக்கு என்னவாகி விட்டது என்ற நினைப்பில் சிவாவுக்கு இதயம் நின்று விட்டது போலானது. பின்னர்தான் அக்காவின் உயிருக்கு ஒன்றுமில்லை, கௌரி அவளது காதலன் சொக்கநாதனுடன் சென்று விட்டாள் என்பது அவளுக்கு தெரிய வந்தது.
தலையில் இடி விழுந்தது போல அமர்ந்து விட்டார் வள்ளி. ‘ருத்ரன் கட்டிக்க இருந்த பொண்ணு அவன் வீட்டு வேலைக்காரனோட போயிட்டாளாம்’ எனதான் ஊர் முழுக்க பேச்சு பரவியது.
இத்தகைய அவமானம் ருத்ரனுக்கு புதிதில்லை என்ற போதும் இது மிகுந்த ஆவேசத்தை கொடுத்தது. அப்படியென்ன என்னை விட அந்த வேலைக்கார பயல் அவளுக்கு உயர்ந்தவனாகி விட்டான் என சொக்கன் கௌரி இருவர் மீதும் அவனுக்கு கொலைவெறி.
பிறை சென்ற போது ஏற்பட்ட மன வலியை விட இப்போது பல மடங்கு வேதனை அவனுள்.
சொக்கனுடன் போகிறேன் என தெளிவு படுத்தி விட்டுத்தான் சென்றிருக்கிறாள் கௌரி. அவளை தேடி கண்டுபிடிப்பது ஒன்றும் பிரமாதமான காரியம் இல்லை, ஆனால் அதற்காக யாரும் முனையவில்லை, வேறு ஒருவனுடன் ஓடிச் சென்றவளை அழைத்து வந்து நம் மகனுக்கு மண முடிப்பதா என விட்டு விட்டனர்
தனது அறையில் நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்து விட்ட அண்ணனை தன் பார்வையில் இருக்குமாறு வைத்துக் கொண்டே மௌனமான அழுகையோடு அமர்ந்து விட்டாள் வைதேகி.
என் மகனின் வாழ்வு அவ்வளவுதானா என நொறுங்கி விட்டார் வள்ளி. எதிர்பாராத நேரத்தில் கணவனை பறி கொடுத்த போது என்ன தவித்தாரோ இப்போதும் அந்த தவிப்பு தவித்தார்.
அவரின் மனதில் திடீரென வேறொரு யோசனை. கண்களை துடைத்துக் கொண்டு எழுந்தவர் நேராக சுடரின் வீட்டுக்குத்தான் சென்றார்.
துக்கம் விசாரிப்பது போல வந்த அக்கம் பக்கத்தினரையெல்லாம் ஒரு வழியாக அனுப்பி வைத்த சிவா கதவை அடைத்து விட்டாள். உத்தமன் நொந்து போனவராக தரையில் அமர்ந்திருக்க, சுடர்தான் தலையில் அடித்துக் கொண்டு புலம்பலும் அழுகையுமாக இருந்தார்.
சுடரின் புலம்பலை வைத்துதான் கௌரியின் காதல் விவகாரம் அவருக்கு முன்பே தெரியும் என்பதை புரிந்து கொண்டனர் மற்ற இருவரும். உத்தமன் மனைவியை அடிக்க பாய, அப்பாவை தடுத்த சிவா அம்மாவை கோவமாக பார்த்தாள்.
“என்னடி செய்யணும்ங்கிற? வசதி வாயப்பா ஒரு இடம் வரும் போது அந்த வூட்டு வேலைக்காரன் மேல ஆசைன்னு அவதான் அறிவில்லாம சொன்னா, நானும் அறிவில்லாம சரிதான்டி மகளேன்னு சொல்றதா? புத்தி மழுங்கி எப்படியாபட்ட வாழ்க்கைய கெடுத்துக்கிட்டா!” அரற்றினார் சுடர்.
இந்த அக்கா என்னிடம் கூட ஒரு வார்த்தை சொல்லவில்லையே என சிவாவுக்கு தன் அக்காவின் மீதும் கோவம்.
கதவு தட்டப் பட, அடுத்து யார் என எரிச்சலுடன்தான் கதவை திறந்தாள் சிவரஞ்சனி. வள்ளியை கண்டதும் சர்வமும் அவளுக்கு ஒடுங்கி விட்டது.
வாங்க என அழைக்காமல் ஸ்தம்பித்து போயிருந்த சிவாவின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே வந்தார் வள்ளி. உத்தமன் மன்னிப்பாக கையெடுத்து கும்பிட, சுடர் அவரின் காலிலேயே விழ வந்துவிட்டார்.
சுடரை பிடித்து தள்ளி நிறுத்திய வள்ளி அழுத்தமாக மூவரையும் பார்த்தார். “என் மகனோட கல்யாணம் நாளைக்கு கண்டிப்பா நடக்கும்!” என உறுதியாக சொன்னார்.