அன்று பகலில் தென்னந்தோப்பில் நீர் பாய்ச்சும் படி கலையரசனிடம் சொல்லியிருந்தான் ருத்ரன். போர் செட்டில் தண்ணீர் போட்டு விட்டவன் அதை அணைக்க மறந்து விட்டு நண்பர்களோடு சீட்டு விளையாட சென்று விட்டான். ருத்ரனுக்கு யாரோ விஷயத்தை சொல்ல, சொக்கனை விட்டுத்தான் தண்ணீரை நிறுத்த வைத்திருந்தான்.
இந்த விஷயம் மாலையே கலையரசனுக்கும் தெரிந்திருக்க இப்போது அண்ணனை எதிர்கொள்ள அவனுக்கு பயம்.
ஆகவே இந்த ஓட்டலுக்கு வெளியே இங்கு நிற்கிறாய் எனக் கேட்ட அண்ணனுக்கு, “ஒன்னும் இல்லை ண்ணா” என பதில் கொடுத்தான் கலையரசன்.
‘ஒன்றுமில்லாமல் இங்கு என்னடா வேலை உனக்கு?’ என்பது போல ருத்ரன் பார்க்க, வேகமாக பைக்கை எடுத்த கலை அங்கிருந்து சென்று விட்டான்.
ருத்ரனும் புறப்பட எத்தனிக்க, சிவரஞ்சானியிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்த அந்த வெளியூர்காரன் விடவில்லை. தன்னை யாரென அறிமுகம் செய்து கொண்டு தன் பிரச்சனையை கூறினான்.
ருத்ரன் சிவாவை நெற்றி சுருக்கி பார்க்க, ‘அடுத்து இவனிடமும் விளக்கவுரை கொடுக்க வேண்டுமா?’ என அவளுக்கு கடுப்புதான் என்ற போதும் தன் தரப்பை சொன்னாள்.
“அண்ணா… நாளைக்கு நைட் என் தங்கச்சிக்கு நிச்சயம், ஆரி வேலை முடிச்சு அப்புறம்தான் ஜாக்கெட்டை தைக்கணும். இப்ப இந்த பொண்ணு கொடுத்தாதான் எங்க ஊர்ல வேற கடைல கொடுத்தாவது தச்சு ரெடி பண்ணுவேன். அந்த கடைக்காரன் இப்படி கழுத்தறுப்பான்னு தெரியாம போச்சுது, இந்த பொண்ணும் புரிஞ்சுக்காம பேசுது” என்றான் அந்த மனிதன்.
சிவாவை பார்த்த ருத்ரன், “எனக்கு தெரிஞ்சவன்தான், கொடுத்தனுப்பு” என்றான்.
“தம்பி நான் கொடுக்க சொல்லிடுறேன்” என்றார் உத்தமன்.
சுடரும், “தம்பி சொல்லிட்டாங்கல்லடி, எடுத்து கொடு” என மகளை அதட்டினார்.
“இவர் சொல்றது உண்மையா கூட இருக்கலாம், ஆனா என்கிட்ட இருக்கிறதுதான் இவர் கொடுத்த பிளவுஸான்னு தெரியலை. காலைல நானே பட்டுக்கோட்டை கடைல போய் விசாரிச்சு இவரோடதுன்னா பிளவுஸ் தைக்கவும் வச்சு ஒப்படைச்சிடுறேன். வேற யாரோடதா இருந்தா பிரச்சனை ஆகிப் போயிடும்” என்றாள் சிவா.
ருத்ரனுக்கு ஊரில் ஏகப்பட்ட செல்வாக்கு. யாரும் அவனை எதிர்த்து பேசியதே இல்லை. ஏன் இதுநாள் வரை இந்த வீட்டு பெண்கள் இவனை கண்டால் தள்ளி நிற்பார்கள். அப்படியிருக்க இன்று அசலூர்காரன் முன்னிலையில் தன் பேச்சை உதாசீனப் படுத்துகிறாளே என அவனுக்கு ஆத்திரமாக வந்தது.
“அவன் கொடுத்த துணி எதுன்னு அவனுக்கு தெரியாதா, காட்டினா சொல்லிட்டு போறான், உன்னை ஏமாத்தி ஜாக்கெட் துணிய வாங்கி என்ன செஞ்சிட போறான், போ எடுத்திட்டு வா” சிவாவிடம் அழுத்தமாக சொன்னான் ருத்ரன்.
“என்கிட்ட இருக்கிறதும் இவர் வாங்கினது போல இருக்கலாம், இவரோடதுதான்னு உறுதியா சொல்ல முடியாதில்ல. நாளைக்கு வேறொருத்தரோடதுன்னு தெரிஞ்சா எனக்குத்தான் கஷ்டம்” என்றாள் சிவா.
“அடியே!” என சின்ன குரலில் மகளை கண்டித்தார் சுடர். உத்தமனும் என்ன செய்வதென கையை பிசைந்து கொண்டிருந்தார்.
“நீங்கதான் ண்ணா எப்படியாவது துணிய வாங்கி தரணும்” என்றான் வந்திருந்தவன்.
சுடரை பார்த்த ருத்ரன், “போங்க நீங்களே போய் இவன் துணிய எடுத்திட்டு வாங்க” என கட்டளை போல சொன்னான்.
சுடர் உள்ளே விரைய, அம்மா என சத்தம் போட்டுக் கொண்டே சிவாவும் உள்ளே சென்றாள். தள்ளியே நின்று வேடிக்கை பார்த்திருந்தாள் கௌரி.
ருத்ரனின் பார்வை கௌரியிடம் சென்று மீண்டது. அவளுக்கும் அவனது பார்வை என்னவோ செய்ய, உள்ளே செல்வதா இங்கேயே நிற்பதா என ஒன்றும் புரியாமல் தவித்தாள்.
மகள் முடித்து வைத்திருந்த இரண்டு பிளவுஸ் துணிகளில் எது வந்தவனுடையது என சுடருக்கு தெரியவில்லை. மகளிடம் கேட்டாலும் சொல்ல மாட்டாள் என்பதால் இரண்டையுமே எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விட்டார்.
அதில் ஒன்றை தன்னுடையது என வந்தவன் அடையாளம் காட்ட, அவன் கையில் ஒப்படைத்து விட்டார் சுடர்.
“இந்த வேலைக்கு ரெண்டாயிரம் ரூபா கிடைக்கணும் எனக்கு, யாரும்மா வாங்கி தருவா?” கோவப்பட்டாள் சிவா.
“ஏற்கனவே கடைல கொடுத்திட்டேன், அங்கேயே வாங்கிக்கம்மா, இல்லைன்னாலும் நான் வாங்கி தரேன்” என்றான் அவன்.
“நீ கெளம்பு, இங்க பணம் வந்து சேரலைனா நீதான் பொறுப்பு” என்ற ருத்ரன் அவனை அனுப்பி விட்டு சிவாவை பார்த்தான்.
“பணம் கிடைக்கலைன்னாலோ இல்லை இந்த ஜாக்கெட்னால பிரச்சனை வந்தாலோ நீங்கதான் பொறுப்பு” என பட படத்தாள் சிவா.
“அடியே!” என அதட்டிக் கொண்டே மகளின் கையை பிடித்திழுத்தார் சுடர். ருத்ரனின் அழுத்தமான பார்வையில் இப்படி பேசியிருக்க வேண்டாமோ என சிவாவுக்குமே தோன்றியது.
அவளை அலட்சியமாக பார்த்தவன் சுடரிடம் திரும்பி, “மட்டு மரியாதை சொல்லி வளருங்க புள்ளைய” என்றான்.
“ஐயையோ தம்பி, தெரியாம பேசிப்புட்டா, நீங்க கெளம்புங்க” என பதறினார் சுடர்.
ருத்ரனின் கோவம் அவன் பைக்கின் கிக்கரை உதைத்த வேகத்தில் தெரிந்தது. அவன் புறப்பட்டு செல்லவும் நீ கொடுக்கிற இடம்தாய்யா என கணவரை கடிந்த சுடர் மகளையும் திட்டினார்.
“என்னம்மா எதுக்கு இவ்ளோ பம்மிட்டு நிக்கிற அந்தாளுகிட்ட? வசதி படைச்சவன்னா அவனோட நமக்கென்ன வந்துச்சு?” என அம்மாவிடம் சீறினாள் சிவா.
“வாயை மூடுடி கழுத, ஊருல பெரிய மனுஷன்டி அந்த தம்பி, அதை போய் பகைச்சுக்கிட்டா நம்ம பொழப்பு எப்படி ஓடும்?” என சுடரும் கோவப்பட்டார்.
அதற்குள் உணவருந்த இருவர் வர, சுடர் அவர்களை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
மறுநாள் சீக்கிரம் எழ வேண்டும் என்பதால் சிவாவும் உறங்க சென்று விட்டாள்.
ருத்ரன் வீடு வந்த சற்று நேரத்திலேயே, “என்னடா அந்த ஓட்டல் பொண்ணு சின்னவ உன்னை ஏதோ எதிர்த்து பேசினாளாமே?” என மகனிடம் விசாரித்தார் வள்ளிக்கண்ணு.
சின்ன ஊர்தானே, அங்கே வீட்டிற்குள் நடக்கும் விஷயங்களே ரகசியமாக இருக்காது எனும் போது தெருவில் நடந்தது பற்றி கேட்கவா வேண்டும்?
“ம்ம்… ஏதோ துடுக்கா பேசிட்டா, நீ சட்னி வை” என்றான் ருத்ரன்.
“நாளைக்கு பேசிக்கிறேன் அவகிட்ட” என்றார் வள்ளி.
“என்னத்த பேச போற? நான்தான் விடுன்னு சொல்றேன்ல?” என அவன் சற்று கடுமையாக சொல்லவும், வள்ளியும் அமைதியாகி விட்டார்.
அண்ணன் கண்களில் சிக்காமல் அறையிலேயே பதுங்கி விட்டான் கலையரசன். ருத்ரனும் வீட்டில் வைத்து அவனை கண்டிக்கவில்லை. பிறையை வீட்டுக்கு தெரியாமல் அவன் மணமுடித்துக் கொண்ட பிறகு அவனுடன் பேசாமல்தான் இருந்தான்.
ஒரே வீட்டில் இருந்து கொண்டு நன்றாகவா இருக்கிறது, அவன் செய்தது தவறுதான், அதற்காக நீ ஒதுக்கி வைத்து விட்டால் உனக்கேதும் இல்லை, அவன் கெட்டு சீரழிந்து போவான், அவனை நம்பி வந்தவளும் நம் வீட்டு பெண் இல்லையா என தாத்தாதான் பேரனிடம் ஏதேதோ சமாதான வார்த்தைகள் பேசியிருந்தார்.
தங்கள் மகனுக்கு ருத்ரனின் ஆதரவு என்றும் தேவை, திருமணம் முடித்து சென்று விட்ட தங்கள் மகளுக்கும் ருத்ரனின் உறவு தேவை என்பதால் கலையரசனின் பெற்றோர் அவனிடம் வாய் விட்டு மன்னிப்பு கேட்டுக் கொண்டனர்.
என்ன செய்வான் ருத்ரன்? தன் வருத்தத்தை கோவத்தை ஆதங்கத்தை உள்ளேயே வைத்துக்கொண்டு விட்டான். ஆனால் வள்ளிக்குத்தான் தன் மகனுக்கு ஆதரவாக பேசாமல் மற்ற பேரன் பேத்திக்காக அவனை சமாதானம் செய்து விட்டனர் என தன் மாமனார் மாமியார் மீது ஆற்றாமை.