“என்னடி கீர்த்தனா நம்ம ஒன்னு நினைச்சா அது ஒன்னு நடக்குது?” என்று புலம்பித் தள்ளிவிட்டார் அவளிடம்.

“அம்மா நீங்க எதுவும் பேசாதிங்க. அப்படி நாம ஏதாவது சொன்னாலும், எங்க விஷயத்தை நாங்க பார்த்துக்கிறோம்னு ரெண்டு பேரும் பேசி வச்ச மாதிரி பேசுவாங்க. பெட்டர் நாம அமைதியா இருக்குறதுதான்” என்றுவிட்டாள்.

“இவங்க ரெண்டு பேரும் இப்படி முட்டிகிட்டு நிக்கிறாங்கன்னு பார்த்தா முடிஞ்சதுன்னு நினைச்ச பிரச்சனை வேற மறுபடியும் வந்து நிற்குது. என்ன தான் பண்றது?” என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது அவரால்.

“அதெல்லாம் அண்ணன் பார்த்துப்பான். நீங்க கவலைப்படாதிங்க” என்பதோடு அவள் முடித்துக் கொண்டாள்.

கல்லூரியில் ரம்யாவோ,

“ஏன் வேதா? நான் சொன்னதுக்காகத் தான் விஜய் சார் கிளாசில் அமைதியா இருக்கியா?” என்றாள் ரம்யா.

அவளைப் புரியாமல் பார்த்த வேதா,

“நீ என்ன சொன்ன? நான் ஏன் அமைதியா இருக்கேன்?” என்று கேட்டாள்.

“இல்ல, விஜய் சாரை யாரு பார்த்தாலும் அந்த லயாவுக்கு பிடிக்காதுன்னு சொன்னேன்ல. அவளுக்கு பயந்து தான் அமைதியா இருக்கியா?” என்றாள் ரம்யா.

“அவள்லாம் ஒரு ஆளுன்னு, அவளுக்கு பயந்து நான் ஏன் அமைதியா இருக்கணும்?” என்றாள் கடுப்புடன்.

“அப்பறம் ஏன் இப்பல்லாம் ரொம்ப சைலண்ட்டா இருக்க?” என்றாள் புரியாமல்.

“இருக்கணும்னு தோணுது. வேற ஒன்னுமில்லை. ஏன் நாம ரெண்டு பேரும் பேசி அதைப் பார்த்து அவர் நாலு கத்து கத்தி,நான் டென்ஷன் ஆகி இதெல்லாம் உன்னால பார்க்காம இருக்க முடியலையா?” என்றாள் நக்கலாய்.

“ஹி..ஹி.. ஒரு என்டர்டேயின்ட் வேண்டாமா?” என்றாள் ரம்யா சிரித்துக் கொண்டே.

“அடிங்க..! உன்னோட என்டர்டேயின்மென்ட்க்கு நான் தான் ஊறுகாயா?” என்றாள்.

“சரி சரி, சார் குடுத்த அசைன்மென்ட்ட முடிச்சுட்டியா?” என்றாள் ரம்யா.

“எந்த அசைன்மென்ட்?” என்றாள் புரியாமல்.

“நேத்து குடுத்தாரே..! மறந்துட்டியா? இன்னைக்கு எல்லாரும் கண்டிப்பா சமிட் பண்ணனும்னு சொல்லியிருக்கார் சார்” என்றாள் ரம்யா.

“அய்யோ எனக்குத் தெரியாதே? எப்போ சொன்னார்” என்றாள் வேதா.

“நேத்து கிளாஸ் ரெப் கிட்ட சொல்லி, சொல்லச் சொல்லியிருந்தாரே. நீ என்னடி புதுசா கேட்குற?” என்றாள் ரம்யா புரியாமல்.

“நிஜமா எனக்குத் தெரியாதுடி ரம்யா. நான் அப்போ கிளாஸ்ல இல்லை.” என்றவளுக்கு ஏதோ புரிவதைப் போல் இருந்தது. லயா தான் அவர்கள் கிளாஸ் ரெப்.

‘இவ வேணும்னே நான் இல்லாதப்போ விஷயத்தை கன்வே பண்ணியிருக்கணும்” என்று பல்லைக் கடித்தவள்,

“எருமை மாடே..! நேத்தே என்கிட்ட சொல்றதுக்கு என்ன?” என்று ரம்யாவைத் தாளித்தாள்.

“நான் எங்கடி உன்னைப் பார்த்தேன். நான் மதியத்துக்கு மேல லீவ் சொல்லிட்டு போயிட்டேனே”என்றாள் பாவமாய்.

“ஆமாம்ல..!!” என்று தலையில் கைவைத்தாள்.

‘கொஞ்ச நாளா அவர்கிட்ட எந்த திட்டும் வாங்கமா, நான் உண்டுன்னு என் வேலை உண்டுன்னு இருந்தேன். நல்லபடியா கோர்த்து விட்டுட்டாளுங்க’ என்று நொந்து கொண்டாள். அவன் எப்படி கத்துவான் என்று தான் அங்கிருந்த அனைவருக்குமே தெரியுமே.

“இப்ப என்னடி பண்றது?” என்றாள் ரம்யா.

“சரி விடு! பார்த்துக்கலாம்.நான் என்ன இன்னைக்கு நேத்தா திட்டு வாங்குறேன்.” என்று வேதா கூற,

“நான் இல்ல நாம. ஏன்னா நானும் கம்ப்ளீட் பண்ணலை” என்றாள் பாவமாய். அதுவரை இருந்த மனநிலை மாறியது வேதாவிற்கு.

“நண்பன்டா..!” என்று அவளை அணைத்துக் கொண்டாள்.

“அவ்வளவு சந்தோஷமாடி”

“இல்லையா பின்ன, தனியா அடி வாங்கிறதுக்கும், கூட ஒரு ஆள் சேர்ந்து வாங்குறதுக்கும் வித்யாசம் இருக்குல்ல” என்றாள் சிரிப்புடன்.

“மச்சான் அப்படியே என்னையும் சேர்த்துக்கோங்க” என்றான் ஆனந்த் பாவமாய்.

“நீயுமா மச்சான்?” என்றாள் வேதா.

“ம்ம் ஆமா மச்சான். நேத்து தலைவர் படத்துக்கு போயிட்டேன்” என்றான்.

“வந்து ஜோதில ஐக்கியமாகுடா நல்லவனே. இன்னும் சற்று நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்” என்றாள் வேதா.

அவர்கள் நேரத்திற்கு விஜய் அன்று வகுப்பிற்குள் வரும் போதே கோபமாகத் தான் வந்தான்.

“எல்லாரும் அசைமென்ட் முடிச்சாச்சா? ரெப்கிட்ட சமிட் பண்ணிடுங்க. நீங்க கலெக்ட் பண்ணி டிப்பார்ட்மென்ட்ல என் டேபிள்ல வச்சிடுங்க” என்று வேகமாய் சொல்லிவிட்டு கிளாஸ் எடுக்க முற்பட, இவர்கள் மூவரும் எழுந்து நின்றனர்.

“என்ன?” என்றான் மூவரையும் பார்த்தபடி. லயாவும் ஹரிணியும் சிரித்துக் கொள்ள, அவர்களைப் பார்த்த வேதா முறைத்தாள்.

“சாரி சார். நாங்க கம்ப்ளீட் பண்ணலை” என்றனர் மூவரும்.

“நான் இன்னைக்கு சமிட் பண்ணி இருக்கணும்னு அவ்வளவு தெளிவா சொல்லிவிட்டும் நீங்க பண்ணலைன்னா என்ன அர்த்தம்?” என்றான் கோபமாய்.

“எனக்கெல்லாம் விஷயமே தெரியலைன்னு அர்த்தம்” என்று முனுமுனுத்தாள் வேதா.

“சும்மா இருடி.ஏற்கனவே இன்னைக்கு செம்ம கோபத்துல இருப்பார் போல” என்று ரம்யா காதைக் கடித்தாள்.

“என்ன முனுமுனுப்பு” என்றான் மீண்டும்.

“சாரி சார்..!” என்று மூவரும் சேர்ந்து சொல்ல,

“இன்டெர்னல் மார்க்கு இதை சேர்ப்பேன்னு சொல்லியும் நீங்க பண்ணாம வந்தா இதுக்கு அர்த்தம் என்ன தெரியுமா? நீங்க என்ன சொல்றது? நான் என்ன கேக்குறதுன்னு தான?” என்றான் கேள்வியாய்.

“ஏதே இன்டெர்னல் மார்க்ல ஆட் பண்ணுவேன்னு சொன்னிங்களா?” என்று வேதா அதிர்ந்து போய் லயாவைப் பார்க்க, அவளோ மிதப்பாய் சிரித்து வைத்தாள்.

“இடியட்ஸ்..! கெட் அவுட் ஆப் மை கிளாஸ்” என்றான் கோபமாய்.

ஆனந்தும், ரம்யாவும் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு வெளியேற, வேதாவோ லயாவை முறைத்தபடி வெளியே சென்றாள்.

“பேசாம மரத்தடிக்கு போய்டுவோமா?” என்றாள் ரம்யா.

“இன்னைக்கு முக்கியமான டாப்பிக் கிளாஸ் எடுக்குறேன்னு சார் சொல்லியிருக்கார். வெளிய நின்னாலும் பரவாயில்லை. இங்கயே நின்னு கவனிப்போம்” என்றாள் வேதா.

“உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையாடி” என்றாள் ரம்யா. வேதாவோ, விஜய் கிளாஸ் எடுக்க ஆரம்பித்த பிறகு கவனத்தை வேறு எங்கும் திசை திருப்பவில்லை. தீவிரமாய் வெளியே நின்று கொண்டே நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.

“வேதா..!” என்று சுரண்டினால் ரம்யா.

“ம்ம்..!”

“இன்னைக்கும் கவனிச்சியா?” என்றாள் மெதுவாக.

“என்ன?” என்றவளின் கவனம் பாடத்தில் தான் இருந்தது.

“நீயும் இன்னைக்கு பச்சைக் கலர். சாரும் பச்சைக் கலர்” என்றாள் ரம்யா.

அவளை முறைத்த வேதா,

“ம்ம்..! அவர் பிஸ்தா க்ரீன். நான் டார்க் க்ரீன்” என்றாள்.

“எப்படியோ க்ரீன் தான? அன்னைக்கு சிவப்பு பேமிலி. இன்னைக்கு பச்சை பேமிலி” என்றாள் ரம்யா.

“இன்னும் ஒரு வார்த்தை பேசினாலும், நான் பச்சை பச்சையா கேட்பேன். மூடிகிட்டு நில்லுடி. மேய்க்கிறது எருமை இதுல பெருமை வேற? நானே கடுப்புல இருக்கேன்” என்று வார்த்தையை கடித்து மென்று தின்று துப்பினாள் வேத வர்ஷினி.

ஆனால் அவளின் மூளை பாடத்தை பதிவேற்றிக் கொண்டது. மனம் பாடம் எடுத்தவனை பதிவேற்றிக் கொண்டிருந்தது. பார்வையை சாதரணமாகத் தான் வைத்திருந்தாள். ஆனால் மனதை சாதரணமாக வைக்கவில்லை. அவனின் ஒவ்வொரு அசைவையும் ரசித்துக் கொண்டிருந்தாள். சட்டென்று திரும்பினான் விஜய்.

வேதா தீவிரமாக எழுதிக் கொண்டிருக்க, அதைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ,

“கம் இன்சைட்..!” என்றவன்,

“ப்ரேக் டைம்ல  டிப்பார்ட்மென்ட்ல வந்து என்னைப் பாருங்க” என்றபடி பாடத்தை தொடர்ந்தான்.