“இந்தம்மா லூசா? இல்ல நாமதான் லூசா? இப்படி பேசுது” என குழம்பிய சுஜா
“அத்தை நான் சுபாஷ், ஈஸ்வர், சுகன் மூணு பேரையும் ஒரே மாதிரிதான் பாக்கறேன். அதனால அடிக்கடி சுபாஷண்ணான்னு கூப்பிட்டிடுறேன். உங்களுக்கு புரியுதா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்கிளா? எனக்கு தெரியல. ஆனா என்னை பொறுத்தவரை சுபாஷ் எனக்கு இன்னொரு அண்ணன். இனி நீங்க இந்த பேச்சை எடுக்காதிங்க” என்றாள் தெளிவாக.
“ஆனா அவன் உன்னைய உயிரா நினைக்கிறான் கண்ணு. உன்னைய தவிர வேற யாரையும் கட்டமாட்டேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். நீ வேணுமுன்னா இப்ப என் முன்னாடியே கேட்டுப்பாரு. அவன் என்ன பதில் சொல்லறான்னு” அத்தை தன் மகன் தன்மேல வச்சிருக்கும் பாசத்தை பகடையாய் வைத்து வியுகம் வகுக்க
“நாங்கெல்லாம் அபிமன்யுக்கே வியுகத்தை உடைக்க லெக்சர் குடுக்கறவங்க, எங்ககிட்டயேவா” என நினைத்த
சுஜா, “அத்தை எனக்கு பிடிச்ச படிப்பை முடிச்சிட்டு, வேலைக்கு போயி ரெண்டு வருசமாவது எஞ்சம்பளத்தை தாத்தா கையில கொடுத்துட்டுதான் காபி தட்டையே கையில வாங்குவேன்னு தாத்தா தலையிலடிச்சி சத்தியம் பண்ணியிருக்கேன்.”
“பாப்பா, என்னாச்சி பாப்பா? ஏன் இவ்வளவு கோவம்? அண்ணனுங்களையா திட்ற? எங்கிட்ட பேசுடா?” தாத்தா பொறுமையாக கேக்க
“தாத்தா உங்க பெண்ணரசி இங்க புயலா என்ன சுருட்டிக்கிட்டு போக வந்துச்சி. நான் எதிர்த்து பேசுனதால புஸ்வானமா போயிடுச்சி. இப்போ சூறாவளி அந்தப்பக்கம் வருது. என்பக்கம் மறுபடி திருப்பி விட்டிங்க உங்க தலைக்குதான் ஆபத்து. உங்க தலையிலடிச்சி சத்தியம் செஞ்சிருக்கேன் பாத்துக்குங்க” என காரியத்தில் கண்ணாக ஒப்பிக்க
“ஏம்மா இப்படி செஞ்ச? தாத்தா தல தப்புமா? தப்பாதா? நம்மூட்டு எஜமானி காலையிலேயே சொன்னா. கேட்டேனா நானு? வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பி வந்தேன்.தேவையா இது எனக்கு?”
“எங்க அந்த கூட்டு களவாணிங்க மூணு பேரும்? அங்கதான் பம்மிகிட்டு இருக்கானுங்களா? மூணு பேரையும் இந்த வாரம் இங்க வந்து சேர சொல்லு பாப்போம்.” என இந்த பிரச்சனைக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
“பாப்பா வாணலிக்கு தப்பி அடுப்புல விழுந்த மாறி எங்கம்மாகிட்ட இருந்து காப்பாத்தி இப்ப தாத்தாகிட்ட மாட்டி விட்டுட்ட. தாத்தாகிட்ட மாட்டாம இருக்க நீதான் வழிசொல்லனும். நாங்க உனக்கு நெறய புக்ஸ் வாங்கி குடுக்கிறோம். ஐடியா குடுமா தங்கம்.” என சுபாஷ் நல்லப்பிள்ளையாக கேக்க
“நாங்கன்னு இவங்கள ஏன் கூட்டு சேக்கறிங்க? போங்க போயி புக்ஸ் வாங்கிட்டு வாங்க. குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் இருக்கனும். என்னோட போன் சுவிச் ஆப். ஸோ உங்க போன் குடுத்துட்டு போங்க. கடைக்கு போய் போன் பண்ணுங்க. நான் தலைப்பு சொல்றேன்” என சுஜி விளையாட்டுப் போல அவனின் தனிப்பட்ட போன்-ஐ வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்க முறைத்தனர் அவளின் உடன்பிறப்புகள்.
“தம்பி பெரிய வில்லங்கத்துல மாட்டியிருக்கோம். விசாரணை கமிஷன்ல மாட்டப்போறோம்” ஈஸ்வர் பதற
“அப்பா ஈஸ்வரா எப்போதும் போலீஸாவே இருக்காதப்பா. விசாரணை கமிஷனாம். கொஞ்சம் நடப்புக்கு வாப்பா” சுகன் கிண்டலில் இறங்க
“அண்ணாஸ் விளையாட்டு பேச்சு போதும். அத்தான் கல்யாணத்திற்கு ரெடியாயிட்டார். சீர் செய்ய நீங்களும் ரெடியாகுங்க.” என சுஜா சுபாஷ் சென்ற திசையை பார்த்துக்கொண்டே கூற
“சுஜா… என்னடா சொல்ற? அத்தைகிட்ட சண்டை போட்ட. இப்ப சீர் ரெடி பண்ண சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல.” சுகன் பதற
“வேலைக்கு போகனும், விளக்கேத்தனுமுன்னு சொன்னதெல்லாம் விளையாட்டுக்கா பாப்பா? உங்கிட்ட இத நான் எதிர்பார்க்கல. வளர் அத்தையை உன்னால சமாளிக்க முடியுமா குட்டிமா?” என ஈஸ்வர் கவலையுடன் தங்கையின் முகம் பார்த்து பேச
“அண்ணாஸ் ஸாக்கை குறைங்க. அத்தானுக்கு கல்யாணமுன்னு சொன்னா இந்த ஊரு உலகத்துல என்னைத் தவிர பொண்ணே இல்லையா? அத்தானை கட்டிக்குற பொண்ணும் உங்க தங்கச்சி தான?” என்றவள்
“அண்ணா நீங்க குட்டிமா, குட்டிமான்னு கொஞ்சி இப்ப சுஜா குட்டி பாப்பா மாதிரி சம்பந்தமில்லாம பேசுது. அந்த பொண்ணு நம்பர் எதுக்கு?” என சுகன் நக்கலடிக்க
கண்ணன், “என்கிட்டயே இருக்கு சுஜா” என நம்பர் சொல்லவர
“அண்ணா எனக்கு அந்த நம்பர் வேணாம். ஆனா நீங்க அந்த நம்பருக்கு கால் பண்ணி நான் சொல்ற மாதிரி பேசுங்க.” என்றவள் கண்ணனிடம் பேச வேண்டிய வாசகங்களைச் சொல்ல, அவன் சுகனிடம் திரும்பி அனுமதி கேக்க, அவனும்
“நண்பா, என் தங்கையோட பார்முலா தெரியுமா உனக்கு? ‘செய் அல்லது செத்து மடி’. பேசு உனக்கு அதை தவிர வேறு வழியில்லை “ சுகனும் சுஜா என்ன சொன்னாள் என்பது தெரியாமலே அனுமதி கொடுக்க
கண்ணன் கால் செய்ய ராகினி எடுத்து பேசினாள். “ஹலோ யாருங்க வேணும்?” ராகினி கேக்க
“ராகினி நான் உங்க கிளாஸ் கண்ணன் பேசறேன். ராஜன் உங்கள தூக்க ஆள் ரெடி பண்றான்னு நியூஸ் கிடைச்சிருக்கு. இந்த சுஜா அவங்க அத்தான் கல்யாணம்னு அவங்க அத்தை கூட அண்ணனுங்கள கூட்டிட்டு போயிடுச்சி. அந்த போலீஸ்காரர் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம். அவரும் ஒரு வாரம் லீவு போட்டுட்டு கொஞ்ச நேரம் முன்னாடிதான் சுஜாவோட கிளம்பி போறாரு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”
“நாங்களும் கல்யாணத்துல கலந்துக்க நாளைக்கு காலையிலயே கிளம்புறோம்.” என பதட்டமாக பேசுவது போல பேச
சுபாஷின் போனில் அந்த நம்பர் “மை லைப்” என சேமிக்கப்பட்டிருந்தது.
பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்தபடி மௌனமாய் நின்றனர், சுபாஷ் வரும்வரை. அவன் வருவது தெரிந்தவுடன் சுஜா ஈஸ்வரை பார்க்க, “ ஓகே” என கையை குவித்து காட்டினான்.
“அத்தான் பாட்டி போன் போட்டாங்க. அத்தை அவங்கிட்ட ஒரே சண்டையாம். அதனால பாட்டி எங்க தங்கச்சியையே உங்களுக்கு உடனே கல்யாணம் பேச…..” பேசிக்கொண்டே வந்தவன் சுஜாவிடம் திரும்பி உதடுபிதுக்கி “முடியல” எனும் விதமாய் தலையாட்ட, சுகன் தொடர்ந்தான்
“எங்க தங்கச்சிகிட்ட கால்ல விழாத கெறைய கெஞ்சறப்ப அவ மட்டும் என்ன செய்ய முடியும்? பாவம் அத்தான் அவ… நீங்களும் உங்க அம்மாகிட்ட எங்கதங்கச்சி சம்மதிச்சா போதுமுன்னு சொன்னிங்களாம்…அதான் எல்லாரும் சேந்து எங்க தங்கச்சியை கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வச்சிட்டாங்க.” சுகன் கண்ணில் கண்ணீருடன் பேச
“பாப்பா இல்லடா. இது நடக்காது. நானும் உனக்கு ஒரு அண்ணந்தான்டா. ஏன்டா இப்படி செஞ்ச? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான. ஐய்யோ இப்ப நான் என்ன பண்ண?” தலையிலடித்து சுபாஷ் புலம்ப
“அத்தான் நீங்க ஏன் இவ்ளோ நேரமா போன் பண்ணல? உங்க போன் அடிச்சிது. நான் தாத்தாகிட்டயும் பாட்டிகிட்டயும் பேசுனதுல அத கவனிக்கவே இல்ல. சீக்கிரம் முடிவு செய்யிங்க. லீவுல வைக்கிறது போல…என்னால லீவு ரொம்ப நாளைக்கு போட முடியாது. டீச்சிங் பிராக்டிஸ் போகனும்” என்க
“அத்தை கல்யாணம் முடிஞ்சி உங்களோட எங்க தங்கச்சிய அனுப்பிட்டா அவ எப்படி படிப்ப தொடர முடியும்?” சுகன் கதற
“டேய் நிறுத்துங்கடா உங்க ஒப்பேரியை. எனக்கு இவங்க கிளாஸ்மேட் ராகினிய ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்கள பத்தி தாத்தாகிட்ட சொல்லி…” என சுபாஷ் இழுக்க
“இவங்களோட தினமும் சுத்தற எனக்கே அவங்கள பத்தி ஒன்னும் தெரியாது. நீங்க எப்ப பாத்திங்க? பேரு தெரியுமுன்னு அடிச்சி விடக்கூடாது அத்தான். பாப்பா மாதிரிதான் அவங்களும் நமக்கு” சுகன் போட்டு வாங்க
“ராகினிய எனக்கு நாலு வருசமா தெரியும். ஸாரிடா செல்லம். இதை எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு கூச்சப்பட்டுகிட்டு சொல்லாம விட்டுட்டேன். தாத்தாகிட்ட சொல்லிட்டியா பாப்பா? நீ கண்டுபிடிச்சிடுவன்னு தெரியும். ஆனா இன்னும் நாளாகுமுன்னு நினைச்சேன். ஒரு ஹின்ட் கூட நா குடுக்கலியே நீ எப்படிடா என்னோட மனச புரிஞ்சிக்கிட்ட?” தடுமாற்றத்துடன் சுபாஷ் சுஜாவை பார்க்க
“அத்தான், அத்தை வீட்டுக்கு போயிட்டாங்களா? கன்பார்ம் செஞ்சிக்கிங்க. திரும்பி கிரும்பி வந்திருந்தா போச்சி. நீதான் யேன் மகன் கண்ணசைவிலேயே அவன் நெனச்சதை கண்டுபிடிக்கிற ஸோ நீயே அவன கட்டிக்கன்னு காலுல விழுந்தாலும் விழுந்துடுவாங்க உங்கம்மா” என ஈஸ்வர் அவனை வார
“தங்கங்களா உங்கள நம்பி நானிருக்கிறேன். என்னை கைதூக்கி விட்டுடுங்க ப்ளீஸ்டா… “ முகத்தை பாவமாக வைத்து கெஞ்ச