“நான் சொல்றதை நம்புங்க. நான் அப்படியெல்லாம் சேகர் மாப்பிள்ளைகிட்ட சொல்லவே இல்லை. அவர் தான் வேதா கூட பேசணும்னு சொன்னார். நான் தனியா கூட்டிட்டு போய் பேசுங்கன்னு சொன்னேன். வேற எதுவும் சொல்லலை” என்றார் நீலாவதி வாயைத் திறந்து.

“சேகர் மாப்பிள்ளையாமே? அந்த பன்னாடைக்கு மாப்பிள்ளைன்னு அடைமொழி வேற தேவையா?” என்றான் கிரி கோபமாக.

“அந்த இடத்துல கனி இருந்திருந்தா அப்படி சொல்லியிருப்பிங்களா?” என்றான் மனோ.

“நான் என்ன தப்புப் பண்ணிட்டேன்னு இப்படி ஆளாளுக்கு பேசுறிங்க? தனியா கூட்டிட்டு போய் பேசுன்னு சொன்னது தப்புத்தான். இல்லைன்னு சொல்லலை. ஆனா, வேதா நல்லதுக்காகத் தான் பண்ணேன்” என்றார் நீலாவதி.

“நீங்க நல்லது பண்ணிட்டா அன்னைக்கே உலகம் அழிஞ்சுடும்” என்றாள் கீர்த்தனா வெடுக்கென்று.

“என்ன கீர்த்தனா வாய் நீளுது?”

“அவ சொல்றது உண்மைதானே?” என்றார் மைதிலியும்.

“இப்போ எல்லாரும் ஒன்னு சேர்ந்துட்டிங்க. நான் மட்டும் தான் ஆகாதவ.சேகருக்கு ஏற்கனவே வேதாவைக் கேட்டாங்க தான. அப்பவே குடுத்திருந்தா இவ்வளவு பிரச்சனை நடந்திருக்குமா? கனியும் இவளும் ஒரு வீட்ல வாக்கப்பட்டு இருப்பாங்க. அப்ப தான் நடக்கலை. சரி இப்ப இவ இப்படி இருக்காளே அவளுக்கு ஒரு நல்லதைப் பண்ணுவோம்னு நினைச்சேன்” என்றார் நீலாவதி அசராமல்.

நந்தகுமாரின் பெற்றோரை வரவழைத்த காரணமும் அது தான். குழப்பம் வரும். விஜய் விலகிப் போவன். சேகரையும் வேதாவையும் ஒன்றாகப் பார்த்தால் நந்தகுமார் குடும்பமும் ஓடிப் போகும். கடைசியில் அவளை சேகருக்கே மணம் முடித்து வைப்பது தான் அவரின் திட்டமாக இருந்தது. அவரின் திட்டத்தில் சேகர் மண்ணை அள்ளிப் போட்டிருந்தான்.

“ஏன் அவளுக்கு கல்யாணம் ஆனது உங்களுக்கு மறந்துடுச்சோ?” என்றாள் கீர்த்தனா.

“அதெல்லாம் யாரும் மறக்கலை கீர்த்தனா. நீங்க தான் உங்க வசதிக்கு எல்லாத்தையும் மறந்துட்டு பேசுறிங்க.” என்றாள் சந்தியா வெடுக்கென்று.

“வாயை மூடு சந்தியா! பிரக்னன்ட்டா இருக்கன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று மனோகரன் அவளை அடிக்க வர, அவனைத் தடுத்தாள் வேதா.

“என்னைய வச்சு மறுபடியும் பிரச்சனையை ஆரம்பிக்காதிங்க.” என்றாள் சோர்வாய்.

“நான் எதுக்கு வாயை மூடனும்? நீலா அத்தை பண்ணது தப்பாவே இருந்தாலும், இவளுக்கு நல்லது செய்யணும்னு தான அப்படி பண்ணியிருக்காங்க. இதோ இவளோட அண்ணன் ஒழுங்கா இருந்திருந்தா நீலா அத்தை ஏன் அப்படி பண்ணியிருக்கப் போறாங்க?” என்று சந்தியா கேட்க,

“என் அண்ணாவைப் பத்தி பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க” என்றாள் கீர்த்தனா பட்டென்று.

“அப்படித்தான் பேசுவேன். என்னமோ உங்க அண்ணன் இவளை விருப்பப்பட்டு கட்டிக்கிட்ட மாதிரி எல்லாரும் அவருக்கு சப்போர்ட் பண்ணி பேசிட்டு  இருக்கீங்க. காதம்பரி அத்தை காலைப் பிடிக்காத குறையா கெஞ்சினதால தான் உங்க அண்ணன் வேதா கழுத்துல தாலியைக் கட்டினார்.அதை மறைக்கவும் செஞ்சார். இப்போ உங்க வசதிக்கு எல்லாத்தையும் மறந்துட்டு பேசுறிங்க.” என்ற சந்தியா.

“இங்க பாரு வேதா..! இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகலை.வேண்டா வெறுப்பா தாலி கட்டுன விஜய் வேணுமா? இல்லை நீ தான் வேணும்னு இருக்குற சேகர் வேணுமா? இதுல நந்தாவும் அடக்கம். சேகர், நந்தா இந்த ரெண்டு பேருல நீ யாரைக் கட்டினாலும் உன் லைப் நல்லா இருக்கும். நான் சொல்றதை சொல்லிட்டேன். அப்பறம் உன் விருப்பம். ஆனா, அந்த விஜய் உனக்கு வேண்டாம்” என்றாள் சந்தியா.

‘விருப்பட்டு தாலி கட்டலை’ என்ற வார்த்தையில் உடைந்திருந்தவளுக்கு சந்தியாவின் பேச்சைக் கேட்டு கோபம் வந்தது.

“நான் எனக்கு நல்லது செய்ங்கன்னு யாரையும் கேட்கலை அண்ணி.  எனக்கு நீங்க செஞ்சது வரைக்குமே போதும். தயவு செஞ்சு இந்த பேச்சை இதோட விடுங்க” என்றவள்,

“அப்பறம் ஒரு விஷயம்..!” என்று சந்தியாவை நிதானமாகப் பார்த்தவள்,

“ஆக்சிடென்ட் ஆனதும் பேரண்ட்ஸ் பேச்சைக் கேட்டு கோழைத்தனமா போன நந்தகுமார் நல்லவர்தான். ஆனா, சந்தர்ப்பவாதி. சொந்த பந்தம் அத்தனை பேர் இருக்கும் போதே, என்கிட்டே தப்பா நடக்கப் பார்த்த சேகர் ஆகச்சிறந்த யோக்கியன் இல்லை. இவங்கல்லாம் விஜய் சாரோட கால் தூசிக்கு கூட பெற மாட்டாங்க. அதுலயும் அந்த சேகர் நாயோட, என் புருஷனை கம்பேர் பண்ணி பேசுற வேலையெல்லாம் வச்சுக்காதிங்க.

புடிச்சு கட்டினாரோ, புடிக்காம கட்டினாரோ இந்த ஜென்மத்துக்கு அவர் தான் என் புருஷன். நான் தான் அவர் பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்லை. எங்களுக்குள்ள இருக்குற பிரச்சனையை நாங்க பார்த்துக்குறோம். வேற யாரும் உள்ள நுழைஞ்சு நாட்டாமைத் தனம் பண்ண வேண்டாம். எனக்கு நல்லது பன்றேன்னும் யாரும் கிளம்ப வேண்டாம்.” என்றவள் மனோகரனின் அருகில் சென்று,

“என் புருஷனைப் பத்தி பேசுற அருகதை இங்க யாருக்கும் இல்லை. சொல்லி வச்சுக்கங்க உங்க பொண்டாட்டிகிட்ட. பழைய வேத வர்ஷினியைத் தான் பார்ப்பேன்னு அவங்க அடம் பிடிச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது. பாவ புண்ணியம் எல்லாம் பார்க்க மாட்டேன். அவர் இந்த வீட்டு மாப்பிள்ளை. அவருக்கு குடுக்குற மரியாதை கொஞ்சமும் குறையக் கூடாது.” என்றவளை அணைத்துக் கொண்டான் மனோகரன்.

“அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுடா. நீ இப்படி தெளிவா இருக்கணும்னு தான் ஆசைப் படுறேன்” என்றான் மனோ.

“தேங்க்ஸ்ண்ணா! என்னை புரிஞ்சுகிட்டதுக்கு” என்றவள், நீலாவதியின் அருகில் சென்றாள்.

“நான் உங்களுக்காக வேண்டி அவர் கூட சண்டை போடலை. சிவாப்பாவுக்கு மனைவியா போயிட்டிங்கன்ற ஒரே காரணத்துக்காகத் தான் பிரச்சனையை பெருசாக்காம விட்டேன். அப்பறம் கனி அக்கா. எப்படி இருந்தாலும் அவ அங்க தான் வாழ்ந்தாகணும். சேகர் பண்ண தப்புல அவ வாழ்க்கை ஏன் பாதிக்கப்படனும்? சபரி மாமாவும் நல்லவர். அவர் தம்பியால ஏன் அவர் தலை குனியனும்? இதையெல்லாம் யோசிச்சு தான் நான் போலீஸ் கம்ப்ளெயின்ட் வேணாம்னு சொன்னேன். ஆனா, எல்லா நேரமும் இப்படியே இருக்க மாட்டேன்.” என்று தீர்மானமாய் சொன்னவள்,

“அப்பறம் சந்தியா அண்ணி..! இவங்களோட சேர்ந்து நீங்க போட்டு வச்சிருக்கிற திட்டம் எல்லாம் எனக்குத் தெரியாம இல்லை. என் அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக அமைதியா இருக்கேன். இந்த சொத்துல எனக்கும் சம உரிமை இருக்கு. நான் மனசு வைக்காம நையா பைசா தேறாது உங்களுக்கு. என் அண்ணன் என்கிட்டே வேணும்ன்னு கேட்டா மட்டும் தான் அது கிடைக்கும்.” என்றாள்.

“அதுக்கு அவசியம் இல்லடா. எல்லாமே சரி பாதி தான்” என்று மனோகரன் யோசிக்காமல் சொல்ல, அவனின் அன்பில் ஒரு நிமிடம் ஆடித்தான் போனாள் வேதா. காதம்பரியின் இழப்பிற்கு பிறகு பழைய மனோகரனைப் பார்க்கிறாள்.

“கிரி அண்ணா, இவங்க சொல்றாங்கன்னு இனி என் கூட பேசாம இருப்பிங்களா?” என்றாள் கண்ணீருடன்.

“யார் என்ன சொன்னாலும் வேதாகிட்ட பேசாம இருக்க மாட்டேண்டா” என்றான் அவனும்.

“சாரி கனி அக்கா..!” என்றாள் அவளிடமும்.

“நான் தாண்டி உன்கிட்ட சாரி கேட்கணும். சின்ன பொண்ணு உன்கிட்ட இருக்குற குணம் என்கிட்டே இல்லாம போய்டுச்சு. எல்லாரும் ஏன் வேதா புராணம் பாடுறாங்கன்னு கோபப்பட்டிருக்கேன். ஆனா, காரணம் இப்போ தான புரியுது. இப்படி நடந்திருக்க வேண்டாம். சாரிடி” என்றாள் கனியும்.

“போனதை விடு கனியக்கா..! பாப்பாவை பத்திரமா பார்த்துக்கோ.” என்று அவளின் வயிற்றைத் தடவிக் கொடுக்க, அவளை அணைத்துக் கொண்டாள் கனி.

அந்த வீட்டின் ஆறு வாரிசுகளின் ஒற்றுமையைக் கண்டு பெரியவர்களுக்கு கண் கலங்கியது.

“முதல்ல பிள்ளைங்களுக்கு சுத்திப் போடணும்” என்ற மைதிலியிடம்

“அப்பத்தா எங்க மைதிலிம்மா?” என்றாள்.

“அவங்களுக்கு உடம்புக்கு முடியலைடா. தூங்குறாங்க” என்றார் மைதிலி.

“பாசமலர் படமெல்லாம் முடிந்து விட்டதா தங்கையே?” என்று அவளின் தோளில் கைப்போட்டபடி சரண் கேட்க,

“அது எப்பவும் முடியாது அண்ணா” என்றாள் சன்ன சிரிப்புடன்.

“நீ போய் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுடா” என்றான்.

“அண்ணா.. ” என்று வேதா தயங்க,

“என் தங்கச்சி, அவ புருஷனோட மரியாதை கொஞ்சம் கூட குறையக் கூடாதுன்னு சொல்லியிருக்கா. அதனால” என்று சொல்லி நிறுத்த,

“அதனால”

“அதனால வேற வழியில்லை. நானும் அவன் கூடவே போய் கார்லயே ரெஸ்ட் எடுக்குறேன்னு சொல்ல வந்தேன்” என்றான் சிரிப்புடன்.

அவள் அறைக்கு வர, அவளின் பின்னோடு வந்தாள் கீர்த்தனா.

“தேங்க்ஸ் வேதா” என்றாள்.

“எதுக்கு அண்ணி?”

“விஜய் அண்ணாவை விட்டுக் குடுக்காம பேசுனதுக்கு. அவர்மேல் கோபம் போய்டுச்சு தான?” என்றாள் மகிழ்ச்சியுடன்.

“நீங்க தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க அண்ணி. அவர் மேல கோபம் அவ்வளவு சீக்கிரம் போகாது. அதுக்காக அவரை வெளிய விட்டுக் குடுக்கனும்னு அவசியம் இல்லையே. ஆனா, எனக்கு நாள் எடுக்கும். ஏன் அது வருஷமா கூட மாறலாம்.” என்றாள் வேதனையுடன்.

“நான் என்ன சொல்ல வரேன்னு” என்று கீர்த்தனா நிறுத்த,

“வேண்டாம் அண்ணி..! பிளீஸ்” என்று வேதா சொல்லிய பிறகு, அங்கிருந்து கிளம்பிவிட்டாள் கீர்த்தனா.

 வேதா, தன் அறையின் ஜன்னலைத் திறக்க, வேப்ப மரத்தின் அடியில் கார் கதவின் கண்ணாடியை இறக்கி விட்டுவிட்டு, இயற்கை காற்றில், சீட்டில் நன்கு சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்த விஜய் தான் கண்ணில் பட்டான்.

தூரத்தில் இருந்து பார்த்தாலும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.