அவளை இறுக்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று தோன்றிய உணர்வுகளை கட்டுப் படுத்த முடியாமல், அதன் கனத்தை தாங்க முடியாமல், எங்கே இருந்தால் எல்லை மீறி விடுவோமோ என்ற எண்ணம் தோன்றிய அடுத்த நிமிடம் அங்கிருந்து வெளியேறி விட்டான் விஜய்.

அவன் வெளியே சென்ற அடுத்த நிமிடம் சரணும் கீர்த்தனாவும் உள்ளே வர,  அவர்களைப் பார்த்து மெலிதாய் சிரித்து வைத்தாள். அந்த சிரிப்பில் மருந்துக்கும் மகிழ்ச்சி இல்லை.

“இப்போ ஓகே வா வேதா?” என்றனர்.

“உங்களை நான் ரொம்ப சிரமப்படுத்துறேன் இல்லையாண்ணா? அந்த ஆக்சிடென்ட்லையே நானும் போயிருந்தா நல்லா இருந்திருக்கும். இப்போ பாருங்க என்னால எத்தனை பேருக்கு கஷ்ட்டம். எப்ப பார்த்தாலும் ஹாஸ்பிட்டல்ல வந்து படுத்துக்கிறேன்” என்றாள் விரக்தியாய்.

சரண் அவளை முறைக்க,

“என்னண்ணா? என்ன யோசிக்கிறிங்க?” என்றாள் வேதா.

“விஜய் உன்னை அடிச்சதுல தப்பே இல்லைன்னு யோசிக்கிறேன்” என்றான் கோபமாய்.

“சரண் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க. அவளே இப்ப தான் கண்ணை முழிச்சிருக்கா. நீங்க மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதிங்க” என்ற கீர்த்தனா, வேதாவிடம் திரும்பினாள்.

“எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வேதா. பேசலாமா?” என்றாள் கீர்த்தனா.

“இப்ப என்ன பேசணும் கீர்த்தனா. எதுவும் பேச வேண்டாம். அதான் விஜய் அவங்க விஷயத்துல யாரும் தலையிட வேண்டாம்னு சொல்லிட்டான்ல. அவங்க பிரச்சனையை அவங்களே பார்த்துப்பாங்க” என்றான் சரண். அவனை முறைத்த கீர்த்தனா,

“கொஞ்ச நேரம் வாயை மூடுறிங்களா?” என்றாள்.

“விஜய் சார் பத்தின்னா எதுவும் பேச வேண்டாம் அண்ணி” என்றாள் வேதா.

“நான் உன்னோட ஹெல்த்தைப் பத்தி பேசணும். பேசவா வேண்டாமா?” என்றாள் பட்டென்று.

“சொல்லுங்க அண்ணி!”

“உனக்கு கொஞ்சமாவது உன் குடும்பத்து மேல, குடும்பத்து ஆட்கள் மேல அக்கறை இருந்தா உன்னோட ஹெல்த்தை ஒழுங்கா பார்த்துக்கோ. எதையுமே அசால்ட்டா நினைக்காத. பெரிய மாமா இருக்குறதே உனக்காகத் தான். தேவையில்லாம டென்ஷன் ஆகாத. அப்பறம் உடம்புக்கு ஏதாவது பண்ணினா தயவு செஞ்சு சொல்லிடு. நீ ஆரோக்கியமா இருக்குறது தான் மத்தவங்களுக்கு நீ பண்ற பெரிய நல்ல விஷயம்” என்றாள் பட்டென்று.

“என்னாச்சு அண்ணி? எனக்கு எதுவும் பெரிய பிரச்சனையா? நீங்க எப்பவும் இப்படி பேச மாட்டிங்களே? யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுறிங்க?” என்றாள் வேதா புரியாமல்.

“பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை. உனக்கு உன்னோட அண்ணனுங்க எவ்வளவு முக்கியமோ, அதே மாதிரி எனக்கு என் அண்ணா ரொம்ப ரொம்ப முக்கியம். உனக்கு முடியாமப் போனா, விஜய் அண்ணா படுற அவஸ்தையெல்லாம் என்னால பார்க்க முடியலை, அதான்.” என்றாள். ஏனோ கீர்த்தனாவின் குரலில் ஒரு விலகல் தன்மை தெரிந்தது.

“கீர்த்தனா ஏன் இப்படி பேசுற?” என்றான் சரண் புரியாமல்.

“இவளுக்கு ஒண்ணுன்னா துடிக்க நீங்க இத்தனை பேர் இருக்கீங்க. ஆனா, விஜய் அண்ணாவுக்கு நான் மட்டும் தான இருக்கேன்.” என்றவள்,

“ஆனா ஒன்னு வேதா, தப்பு செஞ்சவன், தப்புக்கு துணை போனவங்கன்னு உன் குடும்பத்துல இருந்த எல்லாரையும் மன்னிச்சுட்டு, தப்பே செய்யாத என் அண்ணாவை நீ இவ்வளவு பேசியிருக்க வேண்டாம். எனக்கு எதையும் மனசுல வச்சுக்கத் தெரியாது. அதான் கேட்டுட்டேன். இது இதோட முடிஞ்சு போச்சு. நீ இதையே நினைச்சு பீல் பண்ணனும்னு எந்த அவசியமும் இல்லை.” என்றவள் வெளியே சென்று விட்டாள்.

“அண்ணா..!” என்று திகைக்க,

“கீர்த்தனா ஏதோ கோபத்துல சொல்லிட்டு போறாமா. நீ அதைப் பத்தி வொர்ரி பண்ணிக்காத. எல்லாம் சரியாகும்.” என்றான் சரண்.

அடுத்த ஒரு மணி நேரத்திற்கு பிறகு,

“நீங்க அவங்களை கூட்டிட்டு போகலாம்” என்று நர்ஸ் வந்து சொல்ல,

“நான் பில் பே பண்ணிட்டு வரேன்” என்று சொல்லி சென்றான் விஜய்.

“நான் பே பண்ணிட்டு வர்றேன் விஜய்” என்று சரண் சொல்ல,

“சார் ஒரு ஆணியும் புடுங்கத் தேவையில்லை” என்று கடுப்புடன் சொல்லிவிட்டு சென்றான்.

அதற்குள் சரண் அவளை அழைத்துக் கொண்டு  வந்து காரில் அமர்ந்திருக்க, விஜய் வந்ததும் காரை எடுத்தான் சரண்.

“நாம நேரா சென்னைக்கு போறோம் சரண்” என்றான் விஜய்.

“என்ன மச்சான் திடீர்ன்னு? நாம நைட் கிளம்புறதா தானே இருந்தது.” என்று சரண் கேட்க,

“இப்பவே ஈவ்னிங் ஆகப் போகுது. எனக்கு அங்க போறதுல விருப்பமில்லை” என்றான்.

“டேய்..! அங்க வேதாவுக்கு என்னாச்சுன்னு எல்லாம் கவலைப்பட்டுகிட்டு இருப்பாங்க. எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க. போயிட்டு கொஞ்ச நேரம் இருந்துட்டு கிளம்பலாம். நாங்க லக்கேஜ் எல்லாம் எடுக்க வேண்டாமா? கீர்த்தனா லேப்டாப் எடுக்கணும். என்னோட திங்க்ஸ், வேதா திங்க்ஸ் எல்லாம் எடுக்கணும். அகரனும் வீட்ல இருக்கான்” என்று சரண் காரணங்களை அடுக்க, கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்து கொண்டான் விஜய்.

“அண்ணா, நான் சென்னைக்கு வரலை” என்றாள் வேதா மெதுவாக.

“ஏன்?” என்ற கேள்வி கோபமாய் சரணிடம் இருந்து வருவதற்கு பதிலாக விஜயிடம் இருந்து வந்தது.

“எனக்கு அங்க வர விருப்பமில்லை” என்றாள்.

“ரைட்” என்றதோடு பேச்சை முடித்துக் கொண்டான் விஜய். அதற்கு பிறகு ஒரு வார்த்தை பேசினான் இல்லை. அவன் இறுகிப் போனால் மட்டுமே இப்படி இருப்பான் என்று சரணுக்குத் தெரியும்.

“விளையாடுறியா வேதா? காலேஜ் மாத்தி ஒரு செம் கூட எழுதலை. இப்போ வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்?சொந்த பிரச்சனையில ஸ்டடீஸ் ஏன் ஸ்பாயில் ஆகணும்? ஒரு ப்ரொபசரா இதை என்னால அலோ பண்ண முடியாது. நீயும் வர, அவ்வளவு தான்” என்று பேச்சை முடித்தான் சரண்.

வேதா விஜயின் முகம் பார்க்க, அவனோ சீட்டில் சாய்ந்து கண்களை இறுக மூடியிருந்தான். முகம் பழையபடி இறுகிப் போயிருந்தது. அவள் பார்ப்பது தெரிந்தும் அவன் கண்ணைத் திறக்கவில்லை.

அவள் வரமாட்டேன் என்று சொன்னவுடன், கட்டாயம் வரவேண்டும் என்று சொல்லுவான் என அவள் மனம் எதிர்பார்த்ததோ என்னவோ.

அவனின் ‘ரைட்’ என்ற ஒரு சொல் அவளை ஏதோ செய்ய, அது என்னவென்று தான் தெரியவில்லை அவளுக்கு.

சரண் வீட்டின் முன் காரை நிறுத்த, அனைவரும் வந்துவிட்டனர். கனியின் வீட்டில் இருந்து ஏற்கனவே அவளை அழைத்துக் கொண்டு  வீடு வந்திருந்தனர்.

“கீர்த்தனா, என்னோட திங்க்ஸ் பேக் எல்லாம் மேல ரூம்ல இருக்கு. அதை மட்டும் எடுத்துட்டு வாடா” என்றான் விஜய். அவனின் பேச்சில் அதிர்ந்த வேதா வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.

“மச்சான் வாடா..! ஜஸ்ட் பியூ ஹவர்ஸ்ல கிளம்பிடலாம்.” என்றான் சரண்.

“நீங்க போயிட்டு வாங்க. நான் கார்ல வெயிட் பண்றேன். அன்ட் கொஞ்ச நேரத்துக்கு என்னைய யாரும் டிஸ்டர்ப் பண்ணாதிங்க.” என்றான்.

“எவ்வளவு நேரம் கார்ல வெயிட் பண்ணுவ? சரி இங்க வர வேணாம்.” என்றவன்,

“கீர்த்தனா அவனை அங்க நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு போ” என்றான்.

“சரண்..! இப்போ நான் இருக்குற மனநிலைக்கு யாரையும் பார்க்காம இருக்குறது நல்லது. சோ, பிளீஸ்” என்றவன் சீட்டை சாய்த்து அதில் சாய்ந்து, கண்களை மூடிக் கொண்டான். வேதா அவனையே பார்த்துக் கொண்டு நகராமல் அதே இடத்தில் நிற்க, பட்டென்று கண்ணைத் திறந்தவன்,

“போய், கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுமா” என்றவன் மீண்டும் கண்களை மூட, அவனைப் பார்த்துக் கொண்டே சென்று விட்டாள்.

வீட்டினர் ஒருவர் மாத்தி ஒருவர் வந்து அழைத்துக் கொண்டே இருக்க, யாருக்கும் அசையவே இல்லை விஜய். அவன் கோபத்தின் அளவை அன்று நேரில் கண்டு கொண்டனர் அனைவரும்.

விஜய் வீட்டிற்குள் வராதது அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைத்தது.

“இப்ப உனக்கு சந்தோஷமா? இதுக்குத் தான ஆசைப்பட்ட?நீயெல்லாம் என்ன பொம்பளைடி?” என்ற சிவச்சந்திரன் நீலாவதியை மீண்டும் அடிக்கச் செல்ல,

“அமைதியா இரு சிவா. எதுக்கெடுத்தாலும் கையோங்குறது என்ன பழக்கம்?” என்று சத்தம் போட்டார் ராமச்சந்திரன்.

“பின்ன என்னண்ணா? இவ பண்ணது சாதாரண காரியமா? விஜய் மாப்பிள்ளை சொன்ன மாதிரி இவளையும், அந்த சேகரையும் தூக்கி உள்ள வச்சிருக்கணும்” என்றார் சிவச்சந்திரன்.

‘இந்த கூட்டம் எல்லாம் இங்க தான் இருக்கா? நல்ல வேளை விஜய் அண்ணா உள்ள வரலை’ என்று நினைத்துக் கொண்டாள் கீர்த்தனா.