அப்போதே ருத்ரனுக்கு வயது இருபத்தியொன்பது. சொந்தத்தில் பெண் இருந்தால் வயது வித்தியாசம் எல்லாம் அங்கே பார்க்க மாட்டார்கள்.
சதாசிவம் மங்களத்தம்மாளின் மூத்த மகள் கொஞ்சம் அடாவடி பேர்வழி, பிறந்த வீட்டின் எல்லா எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைப்பவர். அவரது மகளை தன் மகனுக்கு செய்வதா என வள்ளிக்கு விருப்பமே இல்லை. மாமியார் மட்டுமல்லாது மாமனார் கூட ஆசைப்பட, பிறைக்கும் தனக்கும் இருந்த வயது வித்தியாசத்தை காரணம் காட்டிய மகனையும் சமாளித்து நிச்சயம் வரை கொண்டு வந்திருந்தார் வள்ளி.
தன் நாத்தனார்தான் அப்படி, பிறை பதிவிசாகத்தான் இருப்பாள், லட்சணம் நிறைந்தவள், படித்தவள், உறவாக இருக்க குடும்பத்தையும் அனுசரித்து நடப்பாள் என நேர்மறையாக நிறைய காரணங்களை மகனிடம் அடுக்கி சொல்லி ருத்ரனை சம்மதிக்க வைத்திருந்தார் வள்ளி.
ருத்ரனுக்கு அடுத்து பிறந்தவளான வைதேகி, அண்ணனின் நிச்சயத்தை சிறப்பிக்க தன் இரு பிள்ளைகளுடன் ஒரு வாரத்திற்கு முன்பே பிறந்த வீட்டுக்கு வந்து விட்டாள்.
சதாசிவம் வீட்டு வாசல்படி ஏறவுமே, “இப்பதான் சாப்பிட உட்காருறான் உம்ம பேரன், அவனை இம்புட்டு நேரமா உங்களோடவே நிறுத்தி வைப்பீய?” என நொடித்தார் மங்களத்தம்மாள்.
“ஊர் விஷயம் உனக்கென்னத்த தெரியும்?” என மனைவியிடம் கேட்டவர், “லேய் சொக்கா, வெள்ளையனுக்கு மூக்கணாங்கயிறு மாட்டணும்லடா, நட அங்க” என சொல்லி அவனோடு மாட்டுக் கொட்டகைக்கு புறப்பட்டு விட்டார்.
மங்களத்தமாளுக்கு வயோதிகம் காரணமாக காது சரியாக கேட்பதில்லை. மற்றபடி இப்போதும் மாட்டுக் கொட்டகைக்கு தினம் இரண்டு முறை சென்று மாடுகளை பார்த்து விடுவார். வேலை செய்யும் ஆட்களை ஏதாவது நொட்டம் சொல்லி சத்தம் போடுவார்.
“துளி சுண்ணாம்பா இருந்தாலும் ரெண்டு முறை ரோசிச்சு பார்த்திட்டுத்தான் தரணும்” என வாய்க்கு வாய் சொல்வார்.
இப்போது பண வரவுக்கு குறைவில்லை என்ற போதும் இந்தக் காலத்தில் எல்லா வீடுகளிலும் இருக்கும் நவீன சாதனங்களை மருமகள்கள் வாங்கும் போது “வெட்டி செலவு, குடும்பம் எப்படி முன்னேறும், சொகுசா இருக்காளுக” என ஏதாவது சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார்.
வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கும் வேலையை பெண்மணியாக பல வருடங்களாக திறம் பட செய்கிறார் வள்ளிக்கண்ணு, கடன் வாங்குபவர்களிடம் கறார் பேர்வழிதான், ஆனாலும் மாமியாருக்கு முன் பவ்யமாகி விடுவார்.
வள்ளியின் கடைசி ஓர்ப்படி வந்தார். நிச்சயத்திற்கு எடுத்த புடவை நகைகளை காண்பிக்கவென வள்ளிதான் அவரை அழைத்திருந்தது.
சித்தியை வாங்க என அழைத்தான் ருத்ரன். இப்போதுதான் சாப்பிடுகிறாயா என விசாரித்துக் கொண்டே வைதேகியை தேடிக் கொண்டு சென்று விட்டார்.
சாப்பிட்டு எழுந்த ருத்ரன் மாட்டின் சத்தம் கேட்கவும் வெளியே நடந்தான்.
“மூக்கணாங் கயிறு போடுறாங்க ப்பா, நீ போய் செத்த படுத்து எந்திரி” என்றார் வள்ளி.
“எந்த மாட்டுக்கும்மா? எதுக்கு இப்ப?” என அலுத்துக் கொண்டே வெளியேறி விட்டான் ருத்ரன்.
மங்களத்தமாளுக்கு மாட்டின் சத்தம் காதில் விழாத காரணத்தால், “எங்கடா போற?” என அவரும் பேரனை விசாரித்தார்.
பாட்டியை நெருங்கி விவரம் சொல்ல, அவரும் அவனுடன் கிளம்பி விட்டார்.
வெள்ளையன் காளை போன மாதம் வேறொரு இடத்திலிருந்து வாங்கப்பட்டது. மேய்ச்சலுக்கு அனுப்பும் போது கட்டுப் படுத்தவே முடியவில்லை என மேய்ப்பவன் மூக்கால் அழுகிறான், ஊரார்களும் முட்ட வருகிறது என நிறைய புகார் சொல்கிறார்கள்.
இங்குள்ள மாடுகளுக்கு மூக்கணாங்கயிறு போடுவதெல்லாம் எப்போதும் சொக்கன்தான். இந்த மாட்டை அவனால் கையாள முடியவில்லை.
“என்னத்தடா பூ பறிச்சுக்கிட்டு நிக்கிற! தள்ளு நீயி” கடிந்த பெரியவர் காளையின் அருகில் சென்றார்.
காளை சீற, “கெழவனுக்கு எளமை ஊஞ்சல் ஆடுதுன்னு நெனப்போ!” என கடிந்தார் மங்களத்தம்மாள்.
சொக்கனின் கையிலிருந்த கயிறை தன் கையில் வாங்கிக் கொண்டான் ருத்ரன். காளையின் முகத்தையும் உடம்பையும் தடவிக் கொடுத்து கொஞ்சம் அதை சமாதானம் செய்தான்.
ருத்ரன் சொக்கனுக்கு கண் காட்ட, அவன் மாட்டின் தலையை அசைய முடியாதபடி பிடித்துக்கொண்டான். அரை நிமிடத்திற்குள் மூக்கணாங்கயிறை இலகுவாக காளைக்கு போட்டு விட்டான் ருத்ரன்.
அவஸ்தைக்குள்ளான காளையை தடவிக் கொடுத்து, “அவ்ளோதான் டா, அவ்ளோதான்… என்ன ஓவர் சேட்டையாம்ல நீயி? என்னடா கோவம் உனக்கு?” எனக் கேட்டான் ருத்ரன்.
“அட ஏன் ண்ண அதை கேட்குறீய?” என்ற சொக்கன், காளையால் பயந்து போனவர்களை பற்றி கதை வைத்தான்.
“கயிறு கட்டியாச்சுல்ல, இனி சரியாதாத்தான் ஆகணும். பேரா உன் நிலைமையும் இப்படித்தான் டா” என சொல்லி சத்தமாக சிரித்தார் சதாசிவம்.
கணவர் பேசியது புரியாமல் சொக்கனிடம் என்னவென பாட்டி கேட்க, என்னவென விளக்கினான் அவன். பாட்டியும் தன் பங்குக்கு பேரனை கிண்டல் செய்ய, ஒட்ட வைத்த சிரிப்புடன் வீடு நோக்கி நடந்தான் ருத்ரன்.
நிச்சயத்திற்காக அம்மா செய்து கொண்டிருக்கும் ஏற்பாடுகளை பார்த்த வண்ணம் மாடியில் இருக்கும் தனதறைக்கு சென்று விட்டான்.
நூற்றியோரு வரிசைத் தட்டுக்கள் எடுக்க ஏற்பாடு செய்திருந்தார் வள்ளி.
“இத்தனை தட்டு எடுக்க ஆள் வேணாமா க்கா? நம்ம சொந்தத்துல பாதி ஆளுக அத்தாச்சி பக்கத்துலல்ல போயி நிக்கும்?” எனக் கேட்டார் கடைசி ஓர்ப்படி.
ஊரில் உள்ள அனைவருக்கும் அழைப்பு இருக்கிறது, அவர்கள் போதாதா என சிரிப்புடன் கேட்டார் வள்ளி.
“அத்தனை பேரையும் எப்படி கொண்டு போய் சேக்கிறது?”
அருகில் உள்ள ஊர்தான் என்பதால் இரண்டு வாடகை வேன்கள் மற்றும் சொந்தங்களிடம் உள்ள கார்கள் என இரண்டு மூன்று முறை ட்ரிப் அடிக்க சொல்லியிருக்கிறார் அண்ணன் என்றாள் வைதேகி.
வள்ளியின் முதல் ஓர்ப்படியும் அவர்களின் பேச்சில் சேர்ந்து கொண்டார்.
விஷேஷம் குறித்த பேச்சாக வீடே கல கலத்து கிடந்தது.
அப்பாவுடன் சேர்ந்து மதிய உணவை முடித்துக் கொண்ட சிவரஞ்சனி, “அந்தாளு சரியான முரடன் ப்பா” என்றாள்.
“அப்படிலாம் இல்ல ஆயி, நல்ல மனுஷந்தான்” என்றார் உத்தமன்.
“ஏட்டி இந்த புடவை நல்லாருக்கா, நாளைக்கு ருத்ரன் தம்பி நிச்சயத்துக்கு கட்டிக்கவா?” கையில் ஒரு புடவையை வைத்துக்கொண்டு நின்றார் சிவாவின் அம்மா.
“நல்லாருக்குனு நான் சொன்னா உனக்கு பத்தாது, அவதான் சொல்லணும்” குறை பேசினாள் சிவாவின் அக்கா.
“நீயும் போறியாமா?” என வியந்தாள் சிவா.
“ஓட்டலுக்கே லீவு விட்டாச்சு டி நாளைக்கு” என மகிழ்ச்சியாக சொன்னாள் சிவாவின் அக்கா.
“ஆமாம் பெரிய ஓட்டலு! நாம ஊர்ல இருந்தா மட்டும் நாளைக்கு யார் வருவா சாப்பிட, ஊரே அங்குட்டு போகத்தான் ரெடியாகிட்டு இருக்கு” என்ற சிவாவின் அம்மா, புடவைக்கு தகுந்த ரவிக்கை இருக்கிறதா என பார்க்க சென்று விட்டார். உத்தமன் வெளியில் கிடந்த ஒற்றை மரப் பெஞ்சில் படுத்து விட்டார்.
இன்னும் எழுந்து கொள்ளாத சிவா ஏதோ யோசனையாக இருந்தாள். அவளின் தோளில் தட்டி என்னவென கேட்டாள் அக்கா.
ருத்ரனின் சித்தப்பா மகனோடு ஊரை விட்டுச் சென்று திருமணம் முடித்துக் கொண்டாள் பிறைநிலா என்ற செய்தி அடுத்த நாள் ஊரெங்கும் பரவியிருந்தது. யாராலுமே நம்ப முடியவில்லை, ஆனால் அது ஊர்ஜிதமாகி விடவும் சிவரஞ்சனிக்கு ருத்ரனை நினைத்து மிகவும் பாவமாகி விட்டது.