கனிமொழியின் வீட்டினர் இவர்களை வரவேற்க, அங்கிருந்த கூட்டத்தைப் பார்த்த விஜய் மலைத்துப் போனான்.
“இதென்ன சரண் இவ்வளவு கூட்டம். இது சிம்பிளான வளைகாப்பு பங்க்ஷன் தானே?” என்றான்.
“இது கிராமம் மச்சான். அதுலயும் நாமளும் பெரிய குடும்பம். கனியைக் கட்டிக் குடுத்ததும் பெரிய குடும்பம். கனி அவங்க வீட்டு மூத்த மருமக வேற. அப்போ வீட்டுக்கு மூத்த வாரிசு மேல ஒரு எக்ஸ்பட்டேஷன் வரத் தானே செய்யும்” என்றான்.
“அதுக்காக கல்யாண கிரவுட் மாதிரி இப்படியா?” என்று வியந்து கொண்டான் விஜய்.
“ஏங்க? இதுக்கு கனி வீட்ல மண்டபமே புக் பண்ணியிருக்கலாம். இப்போ பாருங்க, இவ்வளவு பேரையும் வீட்ல எப்படி சமாளிக்க முடியும்?” என்றாள் கீர்த்தனா.
“அங்க பார்..! பந்திக்கு எல்லாம் தனியா செட் போட்டுட்டாங்க. நானும் சிவாப்பாவும் சொல்லிப் பார்த்தோம். அவங்க தலைப்பிள்ளைக்கு வீட்ல தான் வளைகாப்பு பண்ணனும்னு சொல்லிட்டாங்க. அதுக்கு மேல நாம என்ன பண்ண முடியும்?” என்றான்.
“சரி சரி! வா வேதா உள்ள போவோம். தட்டெல்லாம் எடுத்து வைக்கணும். நாம இங்க நின்னு பேசிட்டு இருந்தா, நீலா அத்தை அதுக்கும் ஏதாவது பேசுவாங்க. சந்தியா அக்காவும் எதுவும் செய்ய முடியாது. சோ நாம தான் போயாகனும்” என்றாள் கீர்த்தனா.
“அண்ணி..! கனி என்கிட்டே பேசமாட்டா. நான் எப்படி வர்றது. நீங்களும் போக வேண்டாம். நாம இங்கயே இருப்போம்” என்று வேதா சொல்ல,
“அதெப்படி வேதா? நீயென்ன மூணாவது மனுஷியா? அவளோட தங்கச்சி. ரெண்டு பேரும் உள்ள போங்க முதல்ல” என்று சரண் அதட்டிக் கொண்டிருக்கும் போதே, கனியின் கணவன் சபரியும் அவனின் தம்பி சேகரும் வந்து அவர்களை அழைத்தனர். சேகரின் பார்வை என்னவோ வேதாவின் மீது தான் இருந்தது.
“என்ன இங்கயே நின்னுட்டிங்க? உள்ள வாங்க” என்றான் சேகர் பொதுப்படையாய். வேதா அவனைப் பார்த்தும் பார்க்காததும் போல் இருக்க,
“என்னம்மா வேதா நல்லா இருக்கியா?” என்றான் சபரி.
‘என்கிட்டயா பேசுனிங்க?’ என்ற ரீதியில் அவள் பார்க்க,
“உன்கிட்ட தான்மா கேட்டேன்” என்றான் அவனும்.
“நான் நல்லா இருக்கேங்க” என்றாள்.
“என்ன? யார்கிட்டயோ பேசுற மாதிரி பேசுறமா? நான் உனக்கு அக்கா புருஷன். அப்ப உரிமையா மாமான்னு சொல்லு. என் தம்பிக்கு பொண்ணுக் கேட்டப்பவே பெரிய மாமா பொண்ணு குடுத்திருந்தா இப்ப இப்படி நீ தயங்கி நிக்க தேவையில்லை. அது சரி யாருக்கு என்ன எழுதியிருக்கோ அது தான நடக்கும்.” என்றான் அவன்.
“இப்ப எதுக்கு மாமா பழசெல்லாம்” என்றான் சரண்.
“ஆதங்கம் இருக்கத்தான செய்யும் மச்சான். எல்லாம் ஒன்னுக்குள்ள ஒண்ணுன்னு ஆகியிருப்போம்ல. அதைத்தான் சொல்ல வந்தேன். எங்க வீட்டுக்கு வரலைன்னா என்ன? வேதா எங்க இருந்தாலும் நல்லா இருந்தா சரி தான்.” என்றான்.
ஆனால் அவனுடன் இருந்த அவனின் தம்பி சேகருக்கு அப்படி பெரிய மனமெல்லாம் இல்லை என்பது அவன் பார்வையில் தெரிந்தது. வேதாவை சுற்றியே அவன் பார்வையும் சென்றது.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த விஜய்க்கு தான் அங்கு நிற்பது எரிச்சலாய் இருந்தது. ஏற்கனவே அவனுக்கு கூட்டம் என்றாலே அலர்ஜி. இதில் ஒவ்வொருத்தராய் நிறுத்தி பேசிக் கொண்டிருக்க, அவனுக்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது. அவனின் முகத்தைப் பார்த்த வேதாவிற்கு அது நன்றாக புரிந்தது.
வேதாவைப் அங்கு பார்த்த கனிக்கு எரிச்சல் வர, அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் நீலாவதியை முறைத்தாள்.
“என்னைய எதுக்குடி முறைக்கிற?” என்றார் நீலாவதி.
“இப்ப இவ எதுக்குமா இங்க வந்தா? இனி பாருங்க எங்க வீட்டு ஆளுங்களும் இவ பின்னாடியே சுத்துவாங்க. இன்னைக்கு எனக்கான நாள். அதுலயும் இவ தான் ஹீரோயின் மாதிரி சுத்துவா” என்றாள் கடுப்புடன்.
“கனி..! வேதா உன்னோட சிஸ்டர். இந்த மாதிரி நேரத்துல இப்படி யோசிக்கக் கூடாது. முக்கியமா கோபம், வெறுப்பு இந்த உணர்வெல்லாம் கூடவே கூடாது. உள்ள இருக்க குழந்தையும் அதைத்தான் கத்துக்கும்” என்றாள் கீர்த்தனா பொறுக்க மாட்டாமல்.
“நீங்க இருக்கிங்கன்னு தெரியாம பேசிட்டேன் அண்ணி. உடனே அவளுக்கு வால் பிடிக்க வந்துடுவிங்களே.” என்றாள்.
“அப்படியென்ன அவமேல வெறுப்பு உனக்கு?” என்றாள்.
“எனக்கு அப்படியெல்லாம் இல்லை. அவதான் என்கிட்டே பேசக் கூட கூலி கேட்பா. ஆனா, மத்தவங்ககிட்ட எல்லாம் வாய்கிழிய பேசுவா” என்றாள்.
“சரிசரி..! ஜிவெல்ஸ் எல்லாம் போட்டாச்சா? இன்னும் எதுவும் போடணுமா?” என்றாள்.
“அந்த பெரிய ஆரத்தை போட்டு விடு கீர்த்தனா” என்றார் நீலாவதி.
‘ஏற்கனவே நகைக்கடை பொம்மை மாதிரி தான் இருக்கா. இதுல இன்னுமா?’ என்று நொந்து கொண்ட கீர்த்தனா, நீலாவதி சொன்னதை செய்தாள். மகளை, நகையாய் பூட்டி அழகு பார்ப்பதில் அவருக்கு அப்படி ஒரு பெருமை. நகை மட்டுமே குடும்ப பாரம்பரியத்தை தெரியப்படுத்தும் என்ற பழமையில் ஊறியிருந்த அவர் மீண்டு வர இன்னும் பல காலம் எடுக்கும் என்பது கீர்த்தனா அறியாதது.
நல்ல நேரத்தில் கனியை அழைத்து மனையில் அமர வைத்து சந்தனம் குங்குமம் பூசி, வளையல் பூட்டினர்.நீலாவதியும் சிவச்சந்திரனும் பிறந்த வீட்டின் சார்பில் மகளுக்கு தங்க வளையலைப் போட,பெற்றோரை பெருமையுடன் பார்த்தாள் கனி.
மற்றவர்கள் அடுத்தடுத்து வளையல் போட்டுக் கொண்டிருக்க, வேதா எதிலும் தலையிடாமல் அமைதியாக தனியாக அமர்ந்திருந்தாள். மற்ற குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தனர். ராமச்சந்திரன் வழக்கம் போல் பந்தி பரிமாறும் இடத்தில் இருந்தார். ஒவ்வொருவரும் வேலையைப் பிரித்துக் கொண்டு செய்வது தான் அவர்கள் குடும்பத்தின் வழக்கம்.
கீர்த்தனா அவளுக்கு வளையல் போட்டு விட, சரண் கையில் தங்கைக்கு ஏதோ பரிசுப் பெட்டியை கொடுத்துக் கொண்டிருந்தான்.
“வேதா நீயும் வந்து கனிக்கு வளையல் போடு” என்றபடி வந்து நின்றான் கிரி. இத்தனை நாட்களுக்குப் பிறகு தங்கையுடன் உரிமையுடன் பேசுகிறான். எப்போதும் நீலாவிற்கு பயந்து அதிகம் பேச மாட்டான்.
“அண்ணா பெரியவங்க எல்லாரும் போடட்டும். நான் எதுக்கு?” என்று தயங்கினாள்.
“அக்காவுக்கு நீ போட வேண்டாமா? வா முதல்ல” என்று அவளின் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றான்.