அத்தியாயம் ஆறு:

அடுத்த நாள், அன்று பிள்ளைகளை அழைத்து செல்லும் கார் ஓட்டுனரான மேகலா வரவில்லை. அவள் தான் நிலாவிற்கும் கார் ஓட்டுனர். அவர்களின் காரில் தான் பள்ளிக்கு அனுப்புவாள். பின்பு மாலையும் சென்று அழைத்துக் கொள்வார்கள்.  

“அப்பாவை உங்களை விடச் சொல்லு” என்று காலையிலேயே உத்தரவு வந்துவிட… இதோ பிள்ளைகளை விட்டு வந்துவிட்டான்.

“சாயந்தரம் எப்படி வருவாங்க” என்றான் நேரடியாக அவளிடம்.

ஆம்! நேற்று இரவே முடிவு செய்து விட்டான். அவள் பதில் கொடுத்தாலும் சரி கொடுக்காவிட்டாலும் சரி இனி நேரடியாக தான் அவளுடன் பேச்சுக்கள் என்று.

பிள்ளைகள் மூலமாக கிடையாது.

“மேகலா பதினோரு மணிக்கு மேல வந்துடுவா” என்று எங்கோ பார்த்து சொல்ல…

அவள் எந்த திக்கில் பார்த்து சொன்னாளோ அங்கே முன்னே சென்று நின்றான்.

என்றும் இல்லாத நாளாக இது என்ன என்று அவளின் முகம் அதிருப்தியை காண்பிக்க, கண்களும் கண்டனத்தை காண்பித்தது.

அதனை கண்டுகொள்ளாமல் அவளை பார்த்து புன்னகைத்து சென்றான்.

உன்னை நினைதேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடு தான்

என்று பாடல் வரிகள் வேறு முணுமுணுத்தான் அவளுக்கு கேட்கும்படி…  

புன்னகைத்து நிற்கத்தான் ஆசை. ஆனால் காலையில் அவளை எதற்கு டென்ஷன் படுத்தவேண்டும் என்று சென்று விட்டான்.

அவன் செல்வதை முறைத்து பார்த்து நிற்க, பைக்கில் அமர்ந்து அதனை எடுத்துக் கொண்டு எதிர் வீடு சென்றான்.

கல்லூரிக்கு விடுமுறை எடுத்து ராஜ நாராயணன் தொகுதிக்கு செல்ல தயாராக நிற்க… புது பைக்கை ஜமீன் மாளிகையின் கேட்டின் உள் கொண்டு சென்று நிறுத்தி அதன் உள்ளே சென்றான் தமிழ்செல்வன்.

அதனை அத்தனை நேரம் அவளறியாமல் நின்று பார்த்திருந்தாள். ‘இது கொஞ்சம் ஓவர் தான்’ என்று தான் தோன்றியது அவளுக்கு. அவனை ஒதுக்கி வைத்து தயாராக சென்றாள்.

ஆம்! ருத்ரா டெக்ஸ்டைல் மில்ஸ் ஸின் நிர்வாகி அவள். அவளின் தாத்தாவின் பெயர் ருத்ரமூர்த்தி, அவரின் பெயரின் சுருக்கம் தான் ருத்ரா டெக்ஸ்டைல் மில்ஸ். 

முன்னின்ற ஞாபக காலத்தில்,

பிரச்சனைகளுக்குப் பின் அவளின் திருமணம் முடிந்து ஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு, அவளின் தாத்தாவின் முன் நின்றாள்.

அப்போது தான் மெதுவாக நடக்க முடிந்து, சற்று உடலும் தேறியிருந்தாள். 

“என் படிப்பை நிறுத்தி என்னைக் கல்யாணம் செஞ்சி வெச்சிட்டீங்க”

“ஆனா எனக்கு வருமானம் வேணும், உங்க கிட்ட வந்து காசு செலவுக்கு வேணும்னு முன்ன மாதிரி எனக்கு கேட்க விருப்பமில்லை. எவனும் எனக்கு சம்பாரிச்சு குடுக்கணும்னு அவசியமில்லை” என்று நிறுத்த…

இப்போது என்ன கலாட்டா செய்கிறாள் என்று அதிருப்தியாய் பார்த்தார் அவர்.

அந்த பார்வைக்கெல்லாம் சற்றும் அசரவில்லை.

“நீங்க நினைச்சதை நடத்திட்டீங்க, அப்போ நான் கேட்டதை நீங்க செஞ்சு தான் ஆகணும். என் பேருக்கு ஏதாவது தொழிலை மாத்தி அதுல வருமானம் எனக்கு வர்ற மாதிரி செய்ங்க”

“எனக்கு உங்ககிட்ட காசுக்காக வந்து நிக்கறது பிடிக்கலை. மங்கம்மா கிட்டையோ மங்கம்மா பையன் கிட்டையோ காசு வாங்க வைக்காதீங்க…”

கேசவ நாராயணனின் காதுகளில் இது விழ… தள்ளி இருந்தவர், இவளின் பேச்சுக் கேட்டு அருகில் வந்தார்.

“நீ அடங்கவே மாட்டியா? இப்போ தான் கொஞ்சம் எல்லாம் அடங்கியிருக்கு”

“நான் என் தாத்தாக்கிட்ட பேசறேன். நீங்க இதுல தலையிட வேண்டாம். இல்லை தலையிடுவேன்னு சொன்னா, நீங்களும் சேர்ந்து தானே அவனைக் கல்யாணம் செஞ்சு வெச்சீங்க. அப்போ சொத்து குடுங்க. எதுவும் குடுக்காம எல்லாததையும் நீங்க எடுத்துக்க ப்ளான் பண்றீங்களா?” என்று பளிச்சென்று கேட்க…

‘ஐயோ, இதென்ன பெரியவர் முன்பு இவள் இப்படி பேசுகிறாள்’ என்று அவர் பதைத்துவிட்டார்.

“ஒன்னு சொத்து குடுங்க, இல்லை நான் அவர்கிட்ட பேசும் போது நடுவுல வரவேண்டாம். எனக்கு நீங்க பொறுப்பில்லை அவர் தான் பொறுப்பு. இத்தனை நாள் அப்படி தானே இப்போ எதுக்கு நீங்க வர்றீங்க?”

அவளின் வார்த்தைகளில் கேசவ நாராயணன் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டார்.

“அப்பாக்கிட்ட இப்படி பேசக் கூடாது” என்று பெரியவர் அவளை அடக்க…

“அப்பா” என்று சலிப்பது போல சலித்தவள் நீண்ட நேரம் நிற்க முடியாமல் அமர்ந்து விட்டாள். காலில் சுளீரென்ற வலி…

அது முகத்திலும் தெரிய… பெரியவர் அதனைப் பார்த்திருந்தார். இவளாய் என்னென்னே இழுத்து விட்டுக் கொண்டாள் என்று.  

அமைதியாக கைகட்டி அமர்ந்தவள் வலி சற்று மட்டுப்பட்டதும் அவளின் தாத்தாவை பார்த்து கேட்டது இது தான்,

“நீங்க என்னை நம்பலைல்ல”  

“நம்பறேன், நம்பலை வேற. நீ என் பேச்சை கேட்கலை. அதனால நமக்கு இவ்வளவு அவமானம்”

“என்ன பெரிய அவமானம்? நீங்க என்னை விட்டுக் குடுத்துட்டீங்க” என்று வலிக்கும் காலை எடுத்து மற்றொரு காலின் மேல் போட்டு மெதுவாக நீவி விட்டாள்.

ருத்ரமூர்தியும் இங்கு பாவப்பட்ட ஜீவனே, அவரொன்றும் கெட்டவரில்லை, அவரின் சூழ்நிலை அவரை மூர்கனாய் மாற்றி செயல்பட வைத்தது.

இளம்கன்று பயமறியாது என்ற பழமொழி நிலா விற்கு கச்சிதமாய் பொருந்தும்.

அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று காதில் விழவில்லை. ஆனால் அவள் காலை தூக்கி நீவி விடுவதை பார்த்ததும் மங்கம்மா வந்துவிட்டவர் “என்ன கண்ணு செய்யுது?” என்றார்.

இந்த ‘கண்ணு’ என்ற அழைப்பு, மங்கம்மாவிற்கு உரியது. அவரை கொண்டு தான் தமிழ்செல்வனும் அந்த அழைப்பு, செந்தாமரையும் அப்படித்தான் அழைப்பாள்.

“கொஞ்சமா வலிச்சிச்சு, சரியாப் போச்சு. நீங்க போங்க, நான் தாத்தாவோட பேசணும்” என்று காலை கீழே விட்டு விட்டாள்.     

‘அச்சோ, இந்தப் பெண் மீண்டும் பிரச்சனை இழுத்துவிடுவாளோ’ என்று பார்த்து நிற்க…

“நீங்க போங்க” என்ற அவளின் சத்தத்தில் தமிழ்செல்வன் வந்துவிட்டான்.

“என்னம்மா?” 

“ஒண்ணுமில்லை தமிழு” என்று அவர் அகன்று விட…

“ம்ம், சொல்லுங்க, எனக்கு என்னக் குடுப்பீங்க?” என்று மீண்டும் கேட்க, அது தமிழ்செல்வன் காதிலும் விழுந்தது. அவன் அந்த இடத்தை விட்டு அகல முற்பட்டான்.

“இருங்க” என்றாள் அதிகாரமான குரலில். அவளுக்கு அப்படித்தான் பேச வரும்.

திமிர், பிடிவாதம், அதிகாரம் என்று வளர்ந்தவள் தான் அவள். புத்திசாலி, சறுக்கியது ஏமாந்தது எல்லாம் தோழமையிடத்தில். அது அவளின் வாழ்க்கையை முற்றிலும் அவள் எண்ணிப் பார்க்காத அளவில் மாற்றிவிட்டது. நம்பினாள், நம்பிக்கை பொய்த்துப் போனது.

எப்படியும் தனியாக எதுவும் பெரியவர் கொடுப்பார் என்று தோன்றவில்லை. அதனால் அவனை இரு என்று சொல்லிவிட்டாள்.

அவன் எதுவுமே பேசவில்லை, அவள் அமர்ந்திருக்க அவளின் பின் சென்று கை கட்டி நின்று கொண்டான்.  

“தொழிலைக் குடுத்து என்ன பண்ண? உனக்கு என்னத் தெரியும்? எப்படிப் பார்ப்ப?” என்றார்.   

“நான் பார்க்கறேன்னு எங்கே சொன்னேன். இப்போ நீங்க என்ன போய் பார்க்கறீங்களா? ஆளுங்க இருக்காங்க தானே! உங்களுக்கு வருமானம் வருது தானே! எனக்கு அது போதும்!”

“கொஞ்சமும் தெரியாம எப்படிப் பண்ணுவ?”

“கத்துக்கலாம், இதுலயாவது என்னை நம்புங்க. உங்கக்கிட்ட என்ன சொத்தா இல்லாம இருக்கு. ஒன்னு என்கிட்டே குடுத்து அது ஒண்ணுமில்லாம போனா என்ன ஆகப் போகுது? ரிஸ்க் எடுக்கலாம் குடுங்க!” என்றாள் தெளிவாக.

“பணம் வந்ததும் நீ எதுவும் கலாட்டா பண்ணினா?” என்றார் அவர்.

“என்ன பண்ணுவேன்?” என்று கோபத்தில் வேகமாக எழுந்து நிற்க, பாதத்தில் தசைகள் இழுத்துப் பிடிக்க, சுளீரென்ற வலி. அப்படியே அமர்ந்து விட்டாள் கண்களில் நீர் நின்றது.

அப்படியே அவரை ஆத்திரத்தோடு பார்த்து இருந்தாள்.

எப்படியெல்லாம் வளர்த்தார், தப்பாகிப் போனது. ‘எனக்கு எல்லாம் தெரியும்’ என்ற அகம்பாவம்.

இப்படி இழுத்துக் கொண்டாளே என்று அவருக்கு மனம் ஆறவில்லை.  

“என்ன ஓடிப் போவேன்னு சொல்றீங்களா? அது தான் நான் ஓடிப் போகக் கூடாதுன்னு என் கால்ல சூடு வைக்க வெச்சு, வெச்சவனுக்கே என்னைக் கல்யாணமும் பண்ணி குடுத்துட்டீங்களே”

“என் கூடவே தானே இருக்கான், நீங்க நினைக்கற மாதிரி திரும்ப போனா திரும்ப என்னைக் கண்டுபிடிச்சு தூக்கிடுவான், தூக்கிட்டு வந்து சூடு வைப்பான் தானே” என்று கண்களில் நீர் இறங்க இறங்க அவள் பேச…

பெரியவர் மனம் துடிக்க பார்த்திருந்தார். அவள் தானே அவருக்கு எல்லாம். சொல்லச் சொல்ல கேட்காமல் எத்தனை அவமானங்களை இழுத்துவிட்டுவிட்டாள்.

“வலிக்கும் போகமாட்டேன், நிறைய வலி அனுபவிச்சிட்டேன்… உடம்பு வலியை விட மனசுல நிறைய வலி, என்னால இதுக்கு காரணமான யாரையும் எதையும் செய்ய முடியலைன்னு…”    

தமிழ்செல்வன் கட்டிய கையை இறக்கவில்லை. இரும்பாய் இறுகி நின்றிருந்தான் இயலாமையில். பின்னால் நின்றிருந்ததால் அவளின் குரல் மட்டுமே கேட்டது. முகம் தெரியவில்லை. பரிதவித்து நின்றிருந்தான்.

அவனை திரும்பியும் பார்க்கவில்லை. தாத்தாவை பார்த்தே பேசினாள்.   

“எந்த சொத்து வேணும் உனக்கு?” என்றார் உடனே.

சிறிது நேரம் அவளால் பேசக்கூட முடியவில்லை. மங்கம்மா தூரமாய் நின்று பார்த்திருந்தார்.

முயன்று நிதானமானவள் “எனக்கு வருமானம் வேணும் அவ்வளவு தான். தோப்பு விவசாய நிலம்னு இல்லாம தொழிலா குடுங்க…” என்று விட்டாள்.

அப்படி கிடைத்தது தான் இந்த மில்…

ஆரம்பத்தில் தடுமாற்றம் தான். ஒரு பக்கம் தொழில், மறுபக்கம் கருத்தரிப்பு என தன்னை முயன்று மாற்றினாள். அந்தக் காலங்களில் மில்லின் பொறுப்பு தமிழ்செல்வனிடம் கொடுத்துவிட்டாள்.

அவனிடம் சொன்னது இதுதான், “தொழில் சரியா நடக்கணும், ஒரு பைசா பாக்கி இல்லாம கணக்கும் பணமும் எனக்கு சரியா வந்துடணும்”  

மிகச் சிறிய மில்லாய் அவர் கொடுத்தது இன்று அதனை விட பல மடங்கு பெரிதாகி விட்டது.  

முதல் இரண்டு மூன்று வருடங்கள் அவ்வப்போது செல்வாள். கர்ப்பகால சிரமங்கள் பின்பு இரட்டையர்கள் என்று அவளின் கவனம் முழுவதும் அதில் தான். அவர்கள் ப்ளே கிளாஸ் செல்ல ஆரம்பித்ததும் அந்த நேரத்தில் மில் செல்ல ஆரம்பித்தாள்.

அவள் செய்தது எல்லாம் ஒன்றே ஒன்று தான், திறமையானவர்கள் யார் என்று கண்டு கொண்டு அவர்களுக்கு அதிகாரங்கள் கொடுத்து செயல்படுத்தினாள்.

அவளுக்கு சற்று வேலைகள் பிடிபட்ட பிறகு, “நீங்க வரணும்ன்றது இல்லை நான் பார்த்துக்குவேன்” என்றுவிட்டால் தமிழ்செல்வனிடம்.

எந்த வகையிலும் அவனின் அருகாமையை தவிர்த்து விடுவாள்.

தமிழ்செல்வனுக்கு மட்டும் என்ன வேலைகள் தெரியும். அவன் வந்த போது ஏதோ உருட்டி பிரட்டி, இந்த வருடம் தான் சற்று சிறப்பாய் எல்லாம் கையிலெடுத்தான்…

அவள் வந்துவிட்டாள்.

இப்படி தன்னை வராதே என்று சொல்லுவாள் என்று அனுமானிக்கவில்லை. தன்னை அவளோடு வைத்துக் கொள்ள பிரியப்படவில்லை என்று புரிந்தது.  

தேவதை இளம் தேவி
உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணீர்
காணவில்லையா
ஓ நீயில்லாமல் நானா