“இனிமேல் பழகிக்கலாம்னு இருக்கேன்” என்றவனின் பார்வை என்னவோ வேதா மேல் இருந்தது. அதை கவனித்த சரண்,
“மச்சான் சொல்லவே இல்ல. நிஜமாவா?” என்றான். சரணின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம்.
“உனக்கு எப்படி தோணுது?” என்றான்.
“எனக்குத் தோணுறதை விடு, நீ சொல்லு. வேதாகிட்ட சொல்லிடலாமா?” என்றான் சரண்.
‘இவன் என்ன சொல்லிடலாமான்னு கேட்குறான். அப்போ இவனும் சொல்லைன்னா யார் சொல்லியிருப்பா. அந்த நந்தா எதுவும் சொல்லியிருப்பானோ?ஆனா, நடந்த விஷயம் எதுவும் அவனுக்குத் தெரியாதே’ என்று விஜய் யோசிக்க,
“மச்சான் உன்னைத்தான்” என்றான்.
“சொல்லனும்னு அவசியம் இல்ல போல. தெரிஞ்ச மாதிரி தான் தெரியுது” என்றான், அதி கவனமாக டீயைக் குடித்தபடி.
‘அது உனக்கெப்படி தெரியும்?’ என்ற ரீதியில் வாயைப் பிளந்த சரண்,
இருவரையும் ஆச்சர்யமாக பார்த்தான் . சொல்லாமலேயே புரிந்து கொள்ளும் அளவிற்கு இருவருக்கும் புரிதல் இருக்கா? என்ற ஆச்சர்யம் தான் அவனுக்கு.வேதா ஒரு வகையில் அவனை ஆச்சர்யப் படுத்தினாள் என்றால் விஜய் ஒரு வகையில் ஆச்சர்யப்படுத்துகிறான்.
வேத வர்ஷினியும், கீர்த்தனாவும் அதி தீவிரமாக பேசிக் கொண்டிருக்க, தன்னை யாரோ பார்ப்பதை போன்று தோன்றவும் சட்டென்று திரும்பிப் பார்த்தாள் வேதா.
விஜய் அதி முக்கியமாக சரணுடன் பேசி கொண்டிருக்க,
“யார் பார்த்தது?” என்று குழம்பிப் போனாள். அவளைப் பார்த்தும் பார்க்காததும் போல் இருந்த விஜய், முகத்தில் எதையும் காட்டிக் கொள்ளாமல் தனக்குள் மந்தகாசமாய் சிரித்துக் கொண்டான்.
வெளியே சென்றிருந்த ராமச்சந்திரனும் வந்துவிட்டிருந்தார். விஜய்யை அங்கு கண்ட சந்தோஷத்துடன்,
“வாங்க தம்பி..! எப்ப வந்திங்க? வரேன்னு நீங்க சொல்லை. சிவா கூட ஒரு வேலையா வெளிய போயிருந்தேன்.” என்றார்.
“இருக்கட்டும் அங்கிள்..! ஏன் இவ்வளவு பார்மாலிட்டிஸ்..! நான் என்ன புதுசாவா வர்றேன்? பீல் ப்ரீ அங்கிள்” என்றான் சாதரணமாக. எத்தனை முறை வந்திருந்தாலும், அவன் வேதாவின் வீட்டிற்கு அதிகம் வந்ததில்லை. ஒரு முறை தான் வந்திருப்பான்.
“மச்சான் என்ன இருந்தாலும் இப்போ நீ அவர் மாப்பிள்ளை . அந்த உபசரிப்பை மாமனார் குடுக்குறார்” என்று சரண் மற்றவர்களுக்கு கேட்காத வகையில் சொல்ல, சிரித்துக் கொண்டான் விஜய்.
“அம்மா நல்லா இருக்காங்களா தம்பி” என்றார்.
“நல்லா இருக்காங்க அங்கிள்” என்றான்.
“வேதாம்மா..! தம்பிக்கு சாப்பாடு ரெடி பண்ணுமா? குடிக்க ஏதாவது குடுத்தியாடா?” என்றார். மருமகனை கவனிக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு.
‘மாப்பிள்ளை உபசரிப்பு நடக்குதோ. அடுத்து வெளிய போன ஒவ்வொருத்தரா வந்து இந்த அலும்பு தான் பண்ண போறாங்க’ என்று மனதிற்குள் நினைத்தவள்,
“அப்பா..! கொஞ்சம் பொறுமை. ஓவர் எக்சைட்மென்ட் ஆகாதிங்க. அவர் ஒன்னும் நம்ம வீட்டுக்கு கெஸ்ட்டா வரலை. சரண் அண்ணா வீட்டுக்குத்தான் வந்திருக்கார்.இங்க கூப்பிட்டும் வரலை. நான் தான் வம்பா இங்க கூட்டிட்டு வந்தேன்” என்றாள் நக்கலாய்.
“என்னமா நீ இப்படி பேசிட்டு இருக்க? அதென்ன நம்ம வீடு? சரண் வீடு? எப்ப இருந்து இப்படி பிரிச்சு பேச ஆரம்பிச்ச?” என்று ராமச்சந்திரன் கடிந்து கொள்ள,
‘இப்ப எதுக்கு நம்மளை நோக்கி திருப்பி விடுறா? எதுவோ சரியில்லையே?’ என்று நினைத்த விஜய்,
“எப்பவும் நான் வந்தா அங்க தங்குறது தான அங்கிள் வழக்கம். அதான் அப்படி சொன்னேன்” என்றான் விஜய் புரியாமல்.
“இங்க தங்குனா என்ன? அங்க தங்குனா என்ன தம்பி? எல்லாமே நம்ம வீடு தான். எப்படியும் இன்னைக்கு சாயந்தரம் சொந்த பந்தம் கொஞ்ச பேர் வந்துடுவாங்க. அங்க ரெண்டு வீட்லயும் ஆட்கள் நிறைய பேர் இருப்பாங்க. நீங்க இங்கயே தங்கிக்கங்க. சரணும், கீர்த்தனாவும் கூட இங்கயே தங்கட்டும்” என்றவர்,
“வேதாம்மா..! தம்பி தங்குறதுக்கு ரூமை ரெடி பண்ணி குடுமா” என்றார்.
விஜய், வேதாவை பார்க்க, அவள் உதட்டோரம் புன்னகை பூத்து, சட்டென்று அதை மறைத்ததைப் போல் இருந்தது.
‘இங்க தான் தங்கணும்னு அவங்க அப்பா வாயால சொல்ல வைக்கிறாளோ?’ என்று எண்ண,
“ஆமா மச்சான்..! எங்களுக்கும் இன்னைக்கு ஜாகை இங்க தான்..!” என்ற சரண்,
“மச்சான் என்ன இருந்தாலும் இனி இதுதான் உன் மாமனார் வீடு. இங்க தான் தங்கியாகனும். அதை சொல்றதுக்கு ராம் அப்பா எப்படி சுத்தி வளைக்குறார் பாரு” என்றான் அவனுக்கு மட்டும் கேட்கும்படி. அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, சிவச்சந்திரன் வர,
“வாங்க தம்பி..!” என்று ஆரம்பித்தார்.
“மறுபடியும் முதல்ல இருந்தா” என்று விஜய் பேச ஆரம்பிக்க, வேதாவிற்கு இப்போது நன்றாகவே சிரிப்பு வந்தது.
“பெரிய குடும்பம்னா அப்படித்தான் ப்ரொபசர். உபசரிப்பு கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கும். இதென்ன பிரம்மாதம்? அடுத்து மனோ அண்ணா வருவார்.பாலப்பா வருவார். கிரி அண்ணா வருவாக. அப்பறம் நம்ம சொந்த பந்தமெல்லாம் வருவாக” என்றாள் சிரிப்புடன்.
அவள் சொன்ன தொணியில் அனைவருக்கும் சிரிப்பு வர, அவன் சிரிப்பை அடக்க,
“சிரிக்கலாம் தப்பில்லை” என்றாள்.
வேதாவையும், விஜயையும் வித்யாசமாய் பார்த்த கீர்த்தனா, சரணிடம் ஜாடை காட்ட,
‘இவ ஒருத்தி..! எப்பவுமே லேட் பிக்கப்’ என்று முனுமுனுத்தான்.
“அண்ணா..! வேனுக்கு சொல்லிட்டேன். நமக்கும் வேன் சொல்லிடவா? இல்லை கார்லயே போய்க்கலாமா?” என்று சிவச்சந்திரன் அவர் அண்ணனிடம் பேசிக் கொண்டிருக்க,
“வேதாம்மா, நீ ஒன்னும் செய்ய வேண்டாம்டா. மைதிலிம்மா செஞ்சுடுவாங்க. நீ ரெஸ்ட் எடு. நாம நாளைக்கு நைட் சென்னை கிளம்பனும்.” என்றான்.
“சரிண்ணா..! நானும் கீர்த்தனா அண்ணியும் போய் மைதிலிம்மாவுக்கு ஹெல்ப் பண்றோம். நீங்க இங்க பார்த்துக்கோங்க” என்றவள், விஜயை ஒரு பார்வை பார்த்தபடி சென்று விட்டாள்.
மேலே வராண்டா போன்ற அமைப்பும், மூன்று படுக்கை அறைகளும் நன்கு விஸ்தாரமாய் இருந்தது. பழமையும், புதுமையும் கலந்து கட்டப்பட்டிருந்தது அந்த வீடு.சுவர் முழுவதையும் நிறைத்திருந்தது வேதாவின் புகைப்படங்களே.
ஒவ்வொரு புகைப்படமும் ஒவ்வொரு கதை சொல்ல, அதிகமாய் காதம்பரியுடன் எடுத்த புகைப்படங்களே இருக்க, விஜய்க்கு ஆச்சர்யமாய் இருந்தது.
“இதென்னடா ஆர்ட் கேலரி மாதிரி சுவர் முழுக்க போட்டோஸ்” என்றான்.
“மேடம் போட்டோவா எடுத்து தள்ளுவாங்க, காதும்மா அதை பிரேம் பண்ணி மாட்டிடுவாங்க. காதும்மா கூட இருந்த நிறைய போட்டோஸ் இல்லை. எனக்குத் தெரிஞ்சு வேதா அதையெல்லாம் எடுத்து உள்ள வச்சிருக்கனும்” என்றான் சரண்.
வேதா பரதநாட்டிய உடையில் இருந்த அந்த அரங்கேற்ற புகைப்படம் விஜய்யை அதிகமாக ஈர்த்தது. அதில் அவளைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தவன்,
“மதர்ஸ் லிட்டில் பிரின்சஸ்ஸோ?” என்றான் சிரிப்புடன்.
“அட நீ வேற? பாமிலிக்கே லிட்டில் பிரின்சஸ். அவ பண்ண சேட்டையெல்லாம் சொன்னா ஒரு நாள் பத்தாது மச்சான். இப்போ தான் இப்படி ரொம்ப அமைதியாகிட்டா” என்றான் வருத்தமான குரலில்.
விஜய் புகைப்படங்களில் இருந்த வேதாவை ரசித்துக் கொண்டிருக்க, மேலே தங்கள் அறைக்கு செல்ல வந்த சந்தியா அங்கே இவர்களை பார்த்து விட்டு அப்படியே நின்றுவிட்டாள்.
“நான் அப்பவே வந்துட்டேன். நீங்களும் உங்க சின்ன அத்தையும் கூட பார்த்திங்களே?” என்றான் விஜய் நக்கலாக.
“மாட்டிகிட்டோமா?” என்று நினைத்தவள்,
“ஆமாமா பார்த்தேன்..! நாளைக்கு கனி வீட்டுக்கு கொண்டு போற பொருளை எல்லாம் எடுத்து வச்சுட்டு இருந்தோம். அதான் உடனே வர முடியலை. நீங்க ஒன்னும் நினைச்சுக்காதிங்க” என்றாள்.