“ஏன்னா உங்களுக்கு என்னை புருஷன் ஆனதுக்கப்புறம் தெரியாது. என்னை பொறந்ததுல இருந்து தெரியும். என்னை விட மூணு வருஷம் தானே பெரியவங்க. என்னை மங்கம்மா பார்த்துக்க வந்தப்போ உங்களுக்கும் மூணு வயசு தான்”
“என்னை தொட்டில்ல போட்டு அவங்க கீழ தூங்கின போது, உங்கம்மா பக்கத்துல தானே படுத்து இருப்பீங்க. என்னை உங்கம்மா தூக்கி வைக்கும் போது, உங்கம்மா புடவையை தானே பிடிச்சு நிப்பீங்க, என்னை படுக்கைல போட்டு தூங்க வைக்கும் போதும், நீ உங்கம்மா செந்தாமரை எல்லோரும் என் ரூம்ல தானே கீழ படுப்பீங்க”
“எனக்கு சரியா ஞாபகம் கூட இல்லை எத்தனை வயசு வரைன்னு. நான் மேல படுப்பேன், நீங்க எல்லோரும் என்னோட ரூம்ல கீழ படுப்பீங்க”
இயலாமையோடு “எனக்கு அப்போ பெருசா வயசு கிடையாது. அப்போ நிறைய சிக்கல்ல இருந்தேன், அதிகமா அந்த சமயம் உன்னை பார்த்தது இல்லை. எனக்கு தெரியலை என்ன நடந்ததுன்னு, தப்பாயிடுச்சே எல்லாம்ன்னு ஒரு ஆத்திரத்துல கோபத்துல ஆதங்கத்துல சொன்ன வார்த்தை, எவ்ளோ நாள் எனக்கிந்த தண்டனை, எனக்கு மட்டுமில்லை உனக்கும் தானே” என்றான்.
“எனக்கென்ன தண்டனை, எனக்கு வாழணுன்ற ஆசையே இல்லாம இருந்தது. எனக்கு வாழ்க்கைல பிடிப்பு வரணும்னு தான் எனக்கு குழந்தை வேணும்னு நினைச்சேன். பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை, முடிஞ்சது அது முடிஞ்சதாவே இருக்கட்டும்” என்றாள் கடுமையாக.
“எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது, அதிக வயசெல்லாம் உங்களுக்கு இல்லை முப்பத்தேழு வயசு தான். நான் விடுதலை குடுக்கறேன். இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க. அந்த மனைவி மூலமா புள்ளையும் பெத்துக்கோங்க” என்றாள் நிர்தாட்சன்யமின்றி.
வலித்தது, மிகவும் வலித்தது அவனுக்கு. அவன் உபயோகப் படுத்திய வார்த்தைகள் மிக மிக தப்புத் தான். ஆனால் அதற்கு எத்தனை காலங்கள் தண்டனை. சொல்கிறாள் அல்லவா உனக்கு என்னை தெரியாதா? எப்படி அப்படி பேசலாம் என்று.
அதே தானே அவளுக்கும், அவளுக்கு என்னைத் தெரியாதா? நான் எப்படி என்று. என்ன குணக் கேடு கண்டுவிட்டால் என்னிடம். இவளுக்கும் இவளுடைய குடும்பத்திற்கும் எந்த லாப நோக்கமுமின்றி இரவு பகல் பாராது உழைக்கிறேன். அதற்கு எந்த மரியாதையும் கிடையாதா?
என்னவோ ஏமாற்றப்படுவது போல உணர்ந்தான், இந்த இன்னொரு கல்யாணம் செஞ்சிக்கோ என்ற வார்த்தைகளில்.
ஆத்திரம் கோபம் வெகுவாக பெருகியது தமிழ்செல்வனுக்கு. மிகுந்த கோபக்காரன், வாய் பேசுமுன்னே கை பேசும். அப்படியிருந்தவன் தான் சிறிது சிறிதாக தன்னை மாற்றிக் கொண்டான்.
கல்லூரி இறுதியாண்டில் இப்படித்தான், மாணவர்களுக்குள் பிரச்சனை. ஒரே கலவரம், ஏதோ மாணவன் இவனை ஆயுதத்தால் தாக்க வர, இவன் தடுக்க… அது அவன் மீதே பட்டு அவன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட…
இவன் மீது வழக்கு. ஒரு பதினைத்து நாட்கள் ஜாமீன் கூட கிடைக்கவில்லை. அவனோ பெரிய இடத்துப் பையன். இவனோ பெரியவரின் வீட்டில் வேலை செய்யும் மங்கம்மா வின் மகன்.
செந்தாமரையை கேசவ நாராயணன் திருமணம் செய்திருந்தாலும், அப்போது பெரியவர் தான் அமைச்சர், இவர் அவருடன் அவ்வளவே.
அந்த பையன் எப்படியோ தெய்வத்தின் செயலாய் பிழைத்துக் கொண்டான். ஆனால் ஜெயிலில் அதற்குள் வருவோர் போவோர் என்று அத்தனை பேரிடம் அடி வாங்கியிருந்தான்.
இவன் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு. பெரும் பணம் செலவு செய்து இவனை ஜாமீனில் எடுத்தார் கேசவ நாராயணன். அப்போது அவரிடம் அவ்வளவு பணம் கூடக் கிடையாது. யார் யாருக்கோ பணத்தை தண்ணீராய் செலவழித்து வெளியில் எடுத்தார்.
பெரியவரிடம் மங்கம்மா கேட்டிருந்தால் உதவியிருப்பாரோ என்னவோ ஆனால் மங்கம்மா கேட்கவில்லை.
ஜாமீனில் வந்தாலும் வழக்கு இருந்தது. எதிர்பாராத விதமாக நிலா வோடு திருமணம் நடக்க, பெரியவர் அதன் பிறகு அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
அந்த நன்றி தான் கேசவ நாராயணன் மீது. நிச்சயம் அவன் ஜெயிலில் இருந்திருந்தால் அவனைக் கொன்றிருப்பர். அவனை எப்படியோ வெளியில் எடுக்கவும் தான் பிழைத்தான்.
இன்று அவளின் வார்த்தைகளில் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு கட்டுக்கடங்காத கோபம். எதிராளியை துவம்சம் செய்யும் கோபம். ஆனால் முடியாதே அவள் தானே அவனின் வாழ்க்கை. ஆனாலும் வார்த்தைகள் கோபமாய் வந்தது.
“உனக்குக் கூட அதிக வயசில்லை முப்பத்தி நாலு வயசு தான். நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா திரும்பவும் உன்னையே பண்ணிக்கறேன். குழந்தையும் உன்னோடவே பெத்துக்கறேன். ஆனா போன ரெண்டு முறை மாதிரி செயற்கையா இல்லாம இயற்கையா உன்னோட பெத்துக்கறேன்” என்றான் ஆழ்ந்த குரலில்.
“ஏய், ரொம்ப பேசாத!” என்றாள் ஆத்திரம் மீதுற. குரலும் நடுங்கிவிட்டது. இது அவனும் அவளும் மங்கம்மாவும் மட்டுமே அறிந்த ரகசியம். வேறு எவருக்கும் தெரியாது.
வேகமாக சுற்றம் பார்த்தால் மக்கள் எவரும் கேட்கும் வாய்ப்பு இருக்கிறதா என்று. அவர்களின் அறைக்கதவு எல்லாம் மூடி தான் இருந்தது.
ஆம், அவளின் மக்கள் மூவரும் உருவானது, செயற்கை கருத்தரிப்பு IVF முறையில் தான். அவள் தான் அம்மா. அவன் தான் அப்பா. அவன் மூலம் தான் உருவானது தான். பதினெட்டு முடியும் வயதில் அதெல்லாம் செய்து கொள்வது சாத்தியமே இல்லை.
ஆனால் பணமிருந்தால் சில சமயம் சாத்தியமில்லாதது கூட சாத்தியம். எந்த விதிமுறைகளும் மீறப்படும் சாத்தியமுண்டு.
அப்படி நடந்ததே அவளின் IVF மூலம் கருத்தரிப்பு.
பேசிக்கொள்வதில்லை தான், பேசும் சந்தர்ப்பமும் அவள் கொடுப்பதில்லை தான். இவனும் தள்ளி நின்று அவளை ஏங்கிப் பார்த்தே பழகிவிட்டான்.
ஆனால் இன்று பேசிவிடும் முடிவோடு பேசிக் கொண்டிருந்தான்.
“நான் தப்பா பேசினதாவே இருக்கட்டும், அது தெரியாம செஞ்ச ஒரு விஷயம். அதுக்காக தான் இத்தனை வருஷம் நீ சொன்னதை நான் செஞ்சேன். மறு ஜென்மம் இருக்கா இல்லையான்னு எல்லாம் தெரியாது. எனக்கு இருக்குறது இந்த ஒரு ஜென்மம் தான். இந்த ஜென்மத்துல உன்னோட வாழாம என்னோட கட்ட வேகாது”
“இப்படி எல்லாம் பேசறரையே உனக்கு அசிங்கம்மா இல்லை”
“இல்லை”
“ஏய் என்ன ஆச்சு உனக்கு?” என்றாள் அத்தனை ஆக்ரோஷமாக.
அவனோ நிதானமாக “பேய் பிடிச்சிடுச்சு, நிலான்ற பேய்”
“அதையும் பார்த்துடலாம்” என்று நிலா பார்த்த பார்வை…
அவளையே பார்த்திருந்தவன் சட்டென்று ஒப்புக் கொடுத்தான். “வேணாம், நீ என்னோட வாழ வேண்டாம். உன் விருப்பம் தான். உன் விருப்பம் மீறி நான் எதையுமே எப்பவுமே செய்ய மாட்டேன்னு அம்மாவுக்கு சத்தியம் பண்ணி குடுத்திருக்கேன். அதுவும் நம்ம பசங்க மேல, மீறவே மாட்டேன்”
“ஆனா என்னை போ போ ன்னு சொல்லாத. எங்கேயும் போக மாட்டேன்”
“எனக்கு போக இடம் கிடையாது. வீடு கிடையாது, சொத்து சுகம் எதுவும் கிடையாது. நீ போடற சாப்பாடு தான், இவ்வளவு நாளா சாப்பிட்டு இருக்கேன். நீ செலவுக்கு எனக்கு குடுக்கற பணம் தான் எனக்கு”
“எதிர் வீட்ல இருந்து எனக்குன்னு எந்த பணமும் நான் எடுக்கறது கிடையாது. ஐயா பீரோ ல இருந்து பணம் எடுப்பேன், ஆனா அது கட்சி வேலைக்காக மட்டும் தான்”
“அம்மா இருந்தவரை அவங்க குடுத்தாங்க, இப்போ என்னோட பீரோல பணம் குறைஞ்சா நீ வெச்சிடற. அது தான் செலவு பண்றேன்”
“என்கிட்டே எதுவுமே கிடையாது. என் பசங்களை விட்டு என்னால இருக்க முடியாது என்றவன் நிறுத்தி…
“அதுவும் கண்ணு, உன்னை விட்டு என்னால இருக்கவே முடியாது” என்ற போது கண்கள் கலங்கினவோ எதுவும் பேசாது வார்த்தைகளை நிறுத்தி விட்டான்.
சில நொடிகள் பேச்சு வரவில்லை.
“ஒரே வீட்டில வளர்ந்திருந்தாலும், நான் மங்கம்மாவோட பையன் என் எல்லை தெரிஞ்சு அதுக்குள்ள தான் நின்னேன். என்னைக்கும் உன்னை உரிமையோட கூட பார்த்தது கிடையாது. நீ ரொம்ப அழகான பொண்ணு. ஒரு நாளும் நீ அழகா இருக்கேன்னு ரசிச்சது கூட கிடையாது. எனக்குத் தெரியும், நான் உங்க வீட்ல வேலை செய்யறவங்களோட பையன்னு”
“இந்த கல்யாணம் நான் எதிர்பாராத ஒன்னு. இந்த மாதிரி பெரியவர் செஞ்சிருக்க வேண்டாம்”
“பிடிச்சு இந்த கல்யாணம் நடக்கலை. ஆனா இனி எனக்கு யாரையும் பிடிக்காது நீ மட்டும் தான்”
“எமொஷனலா டிஸ்டர்ப் பண்றான்” என்று மனதினில் நினைத்த போதும் அவள் அசையவில்லை.
நேராய் படுத்து கண்களை மூடிக் கொண்டான்.
அவள் நினைத்த வாழ்க்கை அல்ல இது. ஆனாலும் அமைந்து விட்டது என்று அவள் சரி செய்து கொள்ள நினைத்த போது அவனின் இந்த வார்த்தைகள் ஆறாத காயமாய் நின்று, மாறாத வடுவை ஏற்படுத்தி விட்டன.
மறக்கவே முடியவில்லை எதையும்.
எதுவும் தப்பு செய்திருந்தால் கூட சரி, ஆனால் எதுவுமே செய்யவில்லையே, ஏன் என்னை யாரும் நம்பவில்லை?
மங்கம்மா என்ற பெண்மணி இல்லாதிருந்தால், இந்நேரம் அவளை புதைத்த இடத்தில் மரமே செழித்து ஓங்கியிருக்கும்.
அதுவும் அவளின் தாத்தா அவளை நம்பாதது பெரிய அடி.
இதோ எல்லாம் மறந்து, இன்றைய அவளின் நிலையில் மகிழ்ந்து, பெருமையாய் நினைத்து, பேச வருகிறார். அவள் பேசுவதில்லை. மக்களையும் விடுவதில்லை.
எதற்கு இத்தனை வைராக்கியம், விட்டு கொடுப்பது தான் வாழ்க்கை என்று அடுத்தவர்களுக்கு அவளால் அறிவுரை சொல்ல முடியும். ஆனால் அவளால் அதை செயல்படுத்த முடியாது.
ஒன்று மட்டும் நிஜம். அவளின் இன்றைய தொழில் வெற்றிக்குப் பின்னால் தமிழ்செல்வனின் பங்கு வெகுவாக உண்டு.
அவன் அவளின் பின்னால் இருக்கிறான் என்ற ஒன்று. எத்தனை நடந்துவிட்டாலும் யாரையும் வம்பு பேச விடவில்லை, வம்பு செய்யவும் விடவில்லை.
ஏன் அவர்களின் திருமணம் முடிந்து விட்ட பிறகு, அவன் சொன்னது இது தான். “கண்ணு என்னோட பொறுப்பு. யாரும் அவளை இனி பார்க்கணும்னு இல்லை நான் பார்த்துக்குவேன். அதனால யாரும் பேச வேண்டியதில்லை” என்று.
அதன் பிறகு பெரியவரோ, கேசவ நாராயணனோ நடந்த எதையும் பேசியதில்லை.
வேறு எந்த பிரச்னையும் அவளுக்கு வரவிட்டதுமில்லை.
“இந்த வேலையை உங்க பையனை செய்ய சொல்லுங்க” என்று மங்கம்மாவிடம் சொல்லிவிட்டால் வேலைகள் கச்சிதமாக நடந்துவிடும்.
ஆரம்ப காலங்களில் அவன் இருக்கும் தைரியத்தில் தான் வேலைகள் செய்வாள்.
இப்போது அவளாக எல்லாம் உருவாக்கிக் கொண்டாள். ஆனால் அவன் இல்லையென்றால் இதெல்லாம் சாத்தியமில்லை என்பது நிதர்சனமான உண்மை. அவளுக்கும் அது தெரியும்.
ஆனால் அதனை தாண்டி வேறு எதையும் அவள் சிந்திப்பதற்கு தயாராய் இல்லை.
ஏன் இவ்வளவு பிடிவாதம்! உண்மையில் அவன் பொய்த்துப் போனதை தாள இயலவில்லை. அவன் மேல் காதல் வைக்கவில்லை. அவள் வைத்தது நம்பிக்கை. இப்போதும் அது இருக்கிறது. ஆனாலும் எது தடுக்கிறது தெரியவில்லை.
காலம் எல்லாம் மறக்கச் செய்யும் என்பது சத்தியமான உண்மை, ஆனால் இன்னும் அந்தக் காலம் அவளுக்கு வரவில்லை போலும்.
சில நிமிடங்கள் அந்த சோஃபாவில் அமர்ந்திருந்தவள், எழுந்து கிச்சன் சென்று அதனை ஒதுங்க வைத்து, பின் அவளின் அறைக்கு செல்லும் போது எப்போதும் போல பாடல் ஒலிக்க அதோட அவனும் குரலும் மெலிதாக ஒலித்தது.
காளிதாசன் பாடினான்
மேகதூதமே..
தேவிதாசன் பாடுவான்
காதல் கீதமே
இதழ்களில் தேன்துளி
ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையேல்
நான் இல்லையே
ஊடல் ஏன் கூடும் நேரம்
நீல வான ஓடையில்
நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள்
நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
சற்றும் அவளை அது பாதிக்காமல் அவள் கடந்து சென்றாள்.