மறந்துடேன், ஆயுள் தண்டனை கைதியை விட அதிகமான தண்டனை அனுபவிச்சிடேன் என்றான் வேண்டுதலாக மன்றாடும் குரலில்
எதுக்கு மறக்கணும், புருஷன்னா என்ன வேணா பேசலாம் அப்புறம் அவன் சமாதானம் செஞ்சா பொண்ணுங்க மறந்துட்டு ஈஈ ன்னு இளிக்கணும் அவனோட கொஞ்சி குலாவணும், படுக்கணும் புள்ள பெத்துக்கணும்… அவனுக்கு சமைக்கணும் துவைக்கணும் இப்படிப் பல இல்லையா
மத்தவங்களுக்கு மறக்கர மனசிருக்கலாம் எனக்கு கிடையாது…
ஏன்னா உங்களுக்கு என்னை புருஷன் ஆனதுக்கப்புறம் தெரியாது. என்னை பொறந்ததுல இருந்து தெரியும். என்னை விட மூணு வருஷம் தானே பெரியவங்க, என்னை மங்கம்மா பார்த்துக்க வந்தப்போ உனக்கும் மூணு வயசு தான்.
என்னை தொட்டில்ல போட்டு அவங்க கீழ தூங்கின போது, உங்கம்மா பக்கத்துல தானே படுத்து இருப்பீங்க, என்னை உங்கம்மா தூக்கி வைக்கும் போது, உங்கம்மா புடவையை தானே பிடிச்சு நிப்பீங்க, என்னை படுக்கைல போட்டு தூங்க வைக்கும் போதும், நீ உங்கம்மா செந்தாமரை எல்லோரும் என் ரூம்ல தானே கீழ படுப்பீங்க.
எனக்கு சரியா ஞாபகம் கூட இல்லை எத்தனை வயசு வரைன்னு. நான் மேல படுப்பேன், நீங்க எல்லோரும் என்னோட ரூம்ல கீழ படுப்பீங்க.
எனக்கு அப்போ பெருசா வயசு கிடையாது, அப்போ நிறைய சிக்கல்ல ல இருந்தேன், அதிகமா அந்த சமயம் உன்னை பார்த்தது இல்லை, எனக்கு தெரியலை என்ன நடந்ததுன்னு, தப்பாயிடுச்சே எல்லாம்ன்னு ஒரு ஆத்திரத்துல கோபத்துல ஆதங்கத்துல சொன்ன வார்த்தை, எவ்ளோ நாள் எனக்கிந்த தண்டனை, எனக்கு மட்டுமில்லை உனக்கும் தானே
எனக்கென்ன தண்டனை, எனக்கு வாழணுன்ற ஆசையே இல்லாம இருந்தது, எனக்கு வாழ்க்கைல பிடிப்பு வரணும்னு தான் எனக்கு குழந்தை வேணும்னு நினைச்சேன். பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை, முடிஞ்சது அது முடிஞ்சதாவே இருக்கட்டும்
எனக்கு ஒன்னும் பிரச்சனை கிடையாது, அதிக வயசெல்லாம் உங்களுக்கு இல்லை முப்பத்தேழு வயசு தான். நான் விடுதலை குடுக்கறேன் . இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க அந்த மனைவி மூலமா புள்ளையும் பெத்துக்கொங்க என்றாள் நிர்தாட்சன்யமின்றி ‘
ஆத்திரம் கோபம் வெகுவாக பெருகியது தமிழ்செல்வனுக்கு மிகுந்த கோபக்காரன், வாய் பேசுமுன்னே கை பேசும். அப்படியிருந்தவன் தான் சிறுது சிறிதாக தன்னை மாற்றிக் கொண்டான். கல்லூரி இறுதியாண்டில் இப்படித்தான், மாணவர்களுக்குள் பிரச்சனை, ஒரே கலவரம், ஏதோ மாணவன் இவனை ஆயுதத்தால் தாக்க வர, இவன் தடுக்க… அது அவன் மீதே பட்டு அவன் ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் இருக்க
இவன் மீது வழக்கு, ஒரு பதினைத்து நாட்கள் ஜாமீன் கூட கிடைக்கவில்லை. அவனோ பெரிய இடத்துப் பையன். இவனோ பெரியவரின் வீட்டில் வேலை செய்யும் மங்கம்மா வின் மகன். செந்தாமரையை கேசவ நாராயணன் திருமணம் செய்திருந்தாலும், அப்போது பெரியவர் தான் அமைச்சர், இவர் அவருடன் அவ்வளவே.
அந்த பையன் எப்படியோ அவன் பிழைத்துக் கொண்டான். ஆனால் அதற்குள் வருவோர் போவோர் என்று அத்தனை பேரிடம் அடி வாங்கியிருந்தான்.
இவன் மீது கடுமையான பிரிவுகளில் வழக்கு. பெரும் பணம் செலவு செய்து இவனை ஜாமீனில் எடுத்தார் கேசவ நாராயணன். அப்போது அவரிடம் அவ்வளவு பணம் கூட கிடையாது.
பெரியவரிடம் மங்கம்மா கேட்டிருந்தால் உதவியிருப்பாரோ என்னவோ ஆனால் மங்கம்மா கேட்கவில்லை.
ஜாமீனில் வந்தாலும் வழக்கு இருந்தது. எதிர்பாராத விதமாக நிலா வோடு திருமணம் நடக்க, பெரியவர் அதன் பிறகு அந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்து விட்டார்.
அந்த நன்றி தான் கேசவ நாராயணன் மீது. நிச்சயம் அவன் ஜெயிலில் இருந்திருந்தால் அவனை கொன்றிருப்பர். அவனை எப்படியோ வெளியில் எடுக்கவும் தான் பிழைத்தான்.
இன்று அவளின் வார்த்தைகளில் மீண்டும் பலவருடங்களுக்கு பிறகு கட்டுக்கடங்காத கோபம். எதிராளியை துவம்சம் செய்யும் கோபம் ஆனால் முடியாதே அவள் தானே அவனின் வாழ்க்கை ஆனாலும் வார்த்தைகள் கோபமாய் வந்தது.
உனக்கு கூட அதிக வயசில்லை முப்பத்தி நாலு வயசு தான், நான் கல்யாணம் பண்ணிக்கணும்னா திரும்பவும் உன்னையே பண்ணிக்கறேன் குழந்தையும் உன்னோடவே பெத்துக்கறேன்… ஆனா போன ரெண்டு முறை மாதிரி செயற்கையா இல்லாம இயற்கையா உன்னோட பெத்துக்கறேன் என்றான் ஆழ்ந்த குரலில்