கேசவ நாராயணனை அழைத்து தான் இன்று எங்கும் செல்லவில்லை, அங்கும் வரவில்லை என்று சொல்லிவிட்டான் தமிழ்செல்வன்.
மதியமும் மக்களுடன் தான் உணவு. மிகவும் சுவையான மட்டன் பிரியாணி, அது உணவல்ல அது ஒரு எமோஷன் என்று சொல்லும்படி அற்புத சுவையில் இருந்தது. உடன் சிக்கன் சுக்காவும்.
ஆனால் அவனுக்கு உணவு சற்றும் இறங்கவில்லை. இன்னும் பைக் எரித்தது அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. ‘எப்படி இப்படி முடியும். அப்படி என்ன ஆவேசம். சொன்னால் சொல்லிவிட்டு போகிறான், அதற்கு அவனை பேசினால், அதையும் மீறி அடித்தால் கூட வேறு, ஒரு பொருளை எப்படி நாசம் செய்ய முடியும்’
மனதில் ஏன் இவ்வளவு ஆத்திரமும் கோபமும், எதிராளியின் புறம் அவனின் கவனம் சிறிதும் இல்லை. அவனுக்கு முக்கியம் நிலா, நிலா மட்டுமே.
அவன் சரியாய் உண்ணவில்லை என்பதனையும் கவனித்தாள். திரும்ப எதிர்வீடு செல்லவில்லை, வீட்டிலேயே இருக்கிறான் என்பதனையும் கவனித்தாள்.
‘எப்படி இந்த நேரம் அவனுக்கு வேலை வைத்திருப்பார்களே எப்படி விட்டார்கள்’ என்ற யோசனை தான்.
அங்கே வீட்டில் கேசவ நாராயணன், ராஜ நாராயணனையும் வாசவியையும் அழைத்து அமரவைத்தார்.
அவருக்கும் அவர்களிடம் பேச வேண்டி இருந்தது. அதனால் தான் தமிழ்செல்வன் இன்று தான் வரவில்லை என்றதற்கு கூட ஒன்றும் சொல்லவில்லை.
“இன்னும் நீங்க சின்ன பிள்ளைங்க கிடையாது. பேசற ஒரு ஒரு வார்த்தையும் என்ன என்ன விளைவுகளை ஏற்படுத்தும்னு உங்களுக்கு தெரியணும்”
“நாங்க என்ன பண்ணினோம் எதுவும் பண்ணலையே” என்றாள் வாசவி. அவள் அப்பாவின் செல்லம்.
“அது தான் சொல்றேன், நீ என்ன பண்றேன்றது உனக்கு தெரியலைன்னு சொல்றேன்”
“முதல்ல தமிழ்செல்வனை மரியாதையா நடத்துங்க… அவன் உங்க அம்மாவோட தம்பியா இருக்கலாம், என்கிட்டே பல வருஷமா இருக்கலாம், அதுக்காக அவனை நீங்க அப்படி பேச முடியாது”
“நான் பேசுவேன் அது வேற, அவனுக்கும் எனக்கும் இருக்குற விஷயங்கள் வேற. என்னோட அரசியல் வாழ்க்கைல கூடவே பயணிக்கறான்”
“நீங்க பேசக்கூடாது, ஏன்னா அவன் நிலா வோட புருஷன் அதை ஞாபகம் வெச்சிக்கோங்க”
“என்ன பெரிய நிலா நிலா ன்னு பூச்சாண்டி. அவங்க என்ன பண்ணிடுவாங்க நம்மளை, நான் தாத்தாக்கிட்ட சொல்லுவேன், அவர் பார்த்துக்குவார் அவங்களை”
“இது தான் நீங்க செய்யற தப்பு, தாத்தா என்ன தான் நமக்கு சப்போர்ட் பண்ணினாலும், அவ மேல கோபமா இருந்தாலும், ஓரளவுக்கு மேல அவளை அடக்க மாட்டார். அதுவும் இன்னைக்கு நீங்க சொன்ன வார்த்தையை அவர் விரும்பவே மாட்டார்”
என்ன என்று புரியாமல் மக்கள் இருவரும் பார்க்க…
“உன் தம்பி ஒரு வார்த்தையை விட்டான். இது எங்கப்பா வாங்கி குடுத்த வண்டி, நீங்க இதுல கத்துக் குடுக்காதீங்கன்னு”
“எங்களுக்கு மட்டுமில்லை, நீங்க தான் அவங்களுக்கு அப்பா, ஏன் கேட்க முடியாது” என்றாள் கோபமாக.
“ப்ச், அந்த உறவு முறிஞ்சு பலவருஷமாச்சு. எனக்கும் அவளுக்கும் பெருசா தொடர்ப்பு அவ பொறந்ததுல இருந்தே இருந்ததில்லை. அதை இப்போ பேசறது முட்டாள்தனம்”
“அப்போ, அப்போ, அவங்க என்ன வேணுனாலும் பண்ணுவாங்களா?”
“எஸ், என்ன வேணுனாலும் பண்ணுவா? இதெல்லாம் அவளுக்குரியது. பெரியவர் நம்ம மேல வெச்ச பாசத்தால நாம அனுபவிச்சிட்டு இருக்கோம். வீணா ஏதாவது செஞ்சு உள்ளதை கெடுத்துக்காதீங்க”
“சொத்து இங்க விஷயம் கிடையாது. இப்போ நம்ம கிட்ட நிறைய சொத்திருக்கு, இவங்க பரம்பரை சொத்தெல்லாம் ஒன்னுமே இல்லை. ஆனா இங்க இருக்கும் போது கிடைக்கற இந்த மரியாதை வேற”
“இங்க உள்ளே இருக்குற உனக்கு இதோட மதிப்பு தெரியாது, வெளில இருந்து பார்க்கறவங்களுக்கு தான் இதோ மதிப்பு புரியும்” என்றவர் சொல்லும் போது அவரின் கண்களில் தெரிந்த பளபளப்பு…
இதற்காக ஏங்கி, உழைத்து, பெரியவரின் நன்மதிப்பை பெற்று, அவருக்காக கத்திக் குத்து வாங்கி, அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாகி, அவரின் இனம் என்ற ஒரே காரணத்தினால் ஓட்டாண்டியாக இருந்த போதும் அவரின் ஒரே மகளுக்கு மாப்பிள்ளையாகி, அவரின் ஜமீன் மரியாதையை அனுபவித்து, அவரின் அரசியல் வாரிசாக பரிமளித்து…
இதற்காக பெரியவரிடம் நடித்து நடித்து எது அசல் எது போலி என்று தெரியாத அளவிற்கு அவரை மாற்றிக் கொண்டார்.
உண்மையில் கடவுளை தவிர கேசவ நாராயணனைப் பற்றி தெரிந்தவர் வேறு எவரும் கிடையாது.
ஆனால் என்ன? முழுதாக அனுபவிக்க முடியாமல் நிலா இருந்தாள். அவருக்கு சற்றும் அவள் மேல் ஒட்டுதலும் இல்லை, மகள் என்ற கடமை உணர்ச்சியும் இல்லை.
செந்தாமரை அவரின் இரண்டாவது மனைவி. பெரியவர் செய்து வைத்த திருமணம் தான். நிலாவை பார்த்துக் கொள்ள இந்த வீட்டிற்கு வந்தவர் தான் மங்கம்மா.
குழந்தையில் இருந்து அவளை வளர்த்தவர். அதே ஊர் தான். கணவனை இழந்தவர். அவரின் மக்கள் தான் செந்தாமரையும் தமிழ்செல்வனும். ஒரே இனம் சுற்றிவளைத்து தூரத்து உறவு. அதனால் நிலாவை வீட்டிலேயே தங்கி பார்த்துக் கொண்டார் முழு நேரமும். அங்கேயே பின்னால் இருந்த சிறிய வீட்டில் செந்தாமரையும் தமிழ்செல்வனும் தங்கியிருந்தனர்.
மங்கம்மா வை போல செந்தாமரையும் குணமான பெண். இந்த பத்து வருடங்களாக அவளை பார்த்திருந்தார் பெரியவர். அவளின் படிப்புக்கும் அவர் தான் உதவினார். அதனால் அவள் கலூரி முடித்ததும் கேசவ நாராயணன் தனியாக இருப்பதை பார்த்து பெரியவர் செய்து வைத்த திருமணம் தான் அது.
கேசவநாராயணன் மக்களிடம் சொன்னது இது தான். “நிலா கிட்ட எந்த வம்பு தும்பும் வேண்டாம். அவங்க பசங்களை மறந்தும் கூட சீண்டாதீங்க. தமிழ்செல்வனுக்கு அவனுக்குரிய மரியாதை குடுங்க” என்பதே.
“என்ன இருந்தாலும் நிலா பெரியவரோட ரத்தம். நாம அசல் தான் என்னைக்கும் மறந்துட வேண்டாம்” என்றார் கறாராக. இதனை சொல்லும் அவருக்கு அவள் அவரின் ரத்தமும் கொண்டவள் என்றது ஞாபகத்தில் இல்லை. அவர் இத்தனை யோசிக்கும் போதும் நிலா எத்தனை யோசிப்பாள் என்ற புரிதலில்லை.
இதெல்லாம் அவரின் மக்களுக்கு தெரியாதது ஒன்றமில்லை. ஆனால் பெரியவர் அவர்களின் மீது கொண்ட பாசத்தினால், நிலா இந்த வீட்டிற்கு வராத காரணத்தினால், அவளின் மக்களையும் இங்கு விடாததினால், அவர்கள் அதிக உரிமை எடுத்துக் கொள்கிறார்கள். எல்லாம் தங்களது என்ற மாயை கொண்டுள்ளார்கள்.
அன்று மாலை ஒரு புது வண்டி வந்து இறங்கியது, கருப்பு கலர் ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன்.
முன்பு தமிழ்செல்வன் வைத்திருந்தது ஒரு பழைய யமாஹா பைக். அவனுடைய பைக் எல்லாம் இல்லை, கேசவ நாராயணன் முன்பு வைத்திருந்தது. அது பெரியவர் அவருக்கு வாங்கிக் கொடுத்தது. அவன் உபயோகித்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கென்று எதுவுமில்லை. உண்மையில் எதுவுமே இல்லை. பணம், பொருள், சொத்து, ம்கூம் பெரிய பூஜ்ஜியம் அவன். ஆனால் பூஜ்ஜியம் இல்லாமல் எந்தக் கணக்கும் இல்லை என்பதால் அவனின் முக்கியத்துவம் அவன் இருக்குமிடத்தில் அதிகம்.
எப்போதும் பெரும்பாலும் கட்சி பணிகள் இல்லை கேசவ நாராயணனுடன் பயணம் அதனால் டிரைவர் இருப்பான், ஏதாவது கார் வீட்டிலிருப்பது எடுத்துக் கொள்வான்.
மகன்கள் அப்பாவைப் பார்க்க, “கோவிலுக்குப் போய் பூஜை போடலாம்”
“சரி போங்க” என்று அனுமதி கொடுக்க, அவனும் மகன்கள் இருவரும் உட்காரவுமே வண்டி நெருக்கி அடித்தது. இதில் ஸ்ராவணி “நானுப்பா” என்று கேட்க, மகளை பேனட்டில் உட்கார வைத்தான்.
எப்படிப் போவான் என்ற கவலை நிலா விற்கு, விழுந்து விட்டாள், அவளின் மக்கள் இருக்கிறார்களே. அது அவளின் முகத்தில் தெரிந்தது.
“பத்திரமா போய்டுவோம்” என்றபடி தமிழ்செல்வன் மெதுவாக வண்டியை நகர்த்தினான். அவன் கோவில் சென்று பூஜை போட்டு பைக்கில் வரவும், எதிரில் அவர்களின் இன்னோவா காரில் ராஜ நாராயணன் கார் ஓட்ட, பக்கத்தில் வாசவி பின்புறம் கேசவ நாராயணனும் செந்தாமரையும்.
இவனும் குடும்பமாய், அவர்களும் குடும்பமாய். இவனை விட்டு அவர்கள் சென்றதில்லை. பாதுகாப்பிற்கோ வேலைக்கோ எதற்காக ஒன்றோ உடன் செல்வான். இவன் குடும்பமாய் செல்வது அரிது.
வழக்கமில்லாத வழக்கமாய் இரண்டும் நடந்தது.
அவர்களுக்கு பின் காரில் ஆட்கள் பின் தொடர்ந்தனர்.
அதனைப் பார்த்த சுதர்ஷன் சொல்லவே செய்து விட்டான். “நீங்க இல்லைனாலும் அங்கே வேலை நடக்கும் தானே அப்பா. நீங்க ஏன் எப்பவுமே அங்கேயே இருக்கீங்க, நம்ம வீட்லயும் இருக்கணும்”
ஏனென்றால் குடும்பமாய் செல்லும் இடங்களை வேலை இருக்கிறது என்று தவிர்த்து விடுவான் நிலாவிற்காக.
கெளரிஷ் “பா இந்த மாதிரி அம்மாவையும் கூட்டிட்டு நாமளும் வெளில போகலாம்”
“போகலாம்டா” என்று மகன்களிடம் முடித்துக் கொண்டான்.
நிலா அவனுடன், ‘நடக்கும் காரியமா, நடந்தால் எவ்வளவு நன்று’ நினைக்கும் போதே அந்த வாழ்க்கைக்கு ஏங்கியது மனது.
இவ்வளவு பிடிவாதமான பெண், எங்கேயும் இருப்பார்களா என்று அவனுக்கு தெரியவில்லை.
நடந்தவைகள் நடந்துவிட்டன, ஆனால் ஒருக்ஷணமும் அவள் அதனை மறந்தாளா தெரியாது.
வீட்டிற்கு வந்தவுடன் நிலாவின் காதுபட சொன்னான், “இன்னைக்கு கத்துக்க வேண்டாம் இன்னொரு நாள் கத்துக்கலாம்” என்று.
“ஏன்? ஏன் இன்னைக்கு வேண்டாம்?” என்று நிலா கேட்க…
“மனசு சரியில்லை, வண்டி அப்படி ஆகிடுச்சு, இன்னொரு நாள் சொல்லிக் குடுக்கறேன்” என்றான் அவளிடம் நேரடியாக.
பின் நேரம் செல்ல, மக்கள் உண்டு உறங்க, இவன் எப்போதும் போல கட்டாந்தரையில்.
மக்கள் உறங்கியதை உர்ஜிதம் செய்து சோபாவில் வந்து அமர்ந்தவள் “ஏன் வண்டி அப்படி ஆனா என்ன? அதுக்காக நீங்க ஏன் சொல்லிக் குடுக்கமாட்டீங்க. ஒரு வேலை பசங்களுக்கு கத்துக் குடுக்க பிடிக்கலையோ?”
இவள் சண்டைக்கு இழுக்கிறாள் என்று புரிந்தது.
“தப்பு நிலா. நீ வண்டியை எரிச்சது ரொம்ப ரொம்ப தப்பு. அதை எந்த வகையிலையும் சரி செய்ய நினைக்காத”
“நான் அப்படி தான். அப்படி தான் செய்வேன்”
“இதுவரை நீ அப்படியில்லையே. இப்போ என்ன வந்துச்சு? இப்போ என்ன புதுசா எதுவும் நடக்கலையே? எப்பவோ நடந்தது, இப்போ அதை மனசுல வெச்சு ராஜ் பேசினான்னு இப்படி ஏன் செய்யனும்?”
“யாரவன் ராஜ்? எனக்கு எவனும் கிடையாது. அவன் எங்கப்பா வாங்கிக் குடுத்த வண்டி அதுல கத்துக் குடுக்காதீங்கன்னு சொன்னா, உங்களை யார் வாயை மூடிட்டு சும்மா வரச் சொன்னா?”
“நீங்க பேசியிருந்தா நான் செஞ்சிருக்க மாட்டேன்”
“இது வார்னிங் அவங்களுக்கு இல்லை. உங்களுக்கு. நான் தான், என் பசங்க தான் இங்கே. உங்களுக்கு புரியுதா? அவன் பேசினா, ஏதாவது பேசியிருக்கணும். ஏன் அவன் அப்பன் வீட்டு வண்டியாமா, அவங்கப்பன் கொண்டு வந்து இறக்கினாராமா? கேட்கவேண்டாம்”
“நீ அங்க அடிமையா இரு, என்னவாவும் இரு. எனக்குக் கவலையில்லை, ஆனா என் பசங்களை பேசும் போது சும்மா வந்தா இந்த மாதிரி பல நிகழ்வுகள் நடக்கும்”
“கண்ணு” என்றான் நிராசையாய்.
“கண்ணு, ஏன் சொல்ற என்னை? சொல்லாத” என்று ஆவேசமாய் எழுந்து நின்றவள்…
“புதுசா நடந்துச்சா கேட்கற? பழசு, பழசு, அதை நான் எப்போ மறந்தேன்”
“துரோகங்களும், அவமானங்களும் மறக்க முடியாது. அதெல்லாம் எனக்கு மன்னிக்க முடிஞ்சாலும் மறக்க முடியாது” என்றாள் ஆத்திரமாய்.
“நண்பன்ன்னு நம்பினவன் எனக்கு செஞ்சது துரோகம்னா. நீங்க எனக்கு செஞ்சது அவமானம். நிச்சயமா நீங்க எனக்கு செஞ்சது யாருக்கும் தெரியாது. ஆனா எனக்குத் தெரியும் தானே”
“என்ன பிறவி நீயெல்லாம்? எங்கம்மா சொன்னா… சீவி சிங்காரிச்சு என் முன்ன வந்து நிப்பியா? அடுத்து என்னோட படுக்க போற… உனக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்ச நாச்சமே கிடையாதான்னு கேட்டீங்க?”
“மறக்காது எனக்கு….”
‘அம்மாடி! அட்சரம் பிசகாமல் சொல்கிறாள்…’
அதை சொல்லிவிட்டு ஆத்திரம் மீதுற அவள் பார்த்த பார்வை…