சர்வேஷ், தான் கைகளில் திணித்த இனிப்பினை மனதேயில்லாமல் ஏந்திக் கொண்ட வர்ஷினியின் ஏக்கத்தை இப்போதுதான் உணர்ந்துக் கொண்டான். பனிபடலம் போல.. காரணமே இல்லாமல் அடிவாங்கிய குழந்தையென விழித்தவளின் முகம் இப்போது நினைவு வந்தது. அவனால் சமாதானமே ஆக முடியவில்லை இப்போது.. ‘என்ன தெரியும் அவளுக்கு அப்போது.. எப்படி என்னை எதுவுமே சொல்லாமல்.. அன்று அமைதியாக இருக்க முடிந்தது அவளால்’ என இப்போதுதான் யோசனை அவனிடம்.
சர்வேஷ், அமைதியாக காலை காபியை பருகிக் கொண்டிருக்க.. அவனின் அக்கா வரலக்ஷ்மி வந்திருந்தார்.. “எத்தனாவது காபி..” என கேட்டுக் கொண்டே.
சர்வேஷ் சிரித்துக் கொண்டே “வா வா.. என்னை உன் போல நினைக்காத.. நான் லிமிட்தான்.” என்றவன்.. “என்ன காலையில் வந்திருக்க.. பசங்களோட ஈவ்னிங்தானே வருவ நீ” என்றான்.
வரா “ஏன் நான் சீக்கிரம் வர கூடாதா.. நிம்மதியா அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுக்கு வந்திருக்கேன் டா.. லீவ்க்கு மட்டும் வீடு வரவனுக்கு அந்த சுகம் புரியுமா.. பேசுறான் பாரு” என்றாள்.
“அஹ.. உண்மைதான்.. வரா” என்றான் புன்னகையோடு.
“அம்மா எங்க டா” என்றாள்.
“கோவில்” என்றான்.
வரா “சாப்பிட்டியா” என கேட்டுக் கொண்டே.. பிரிட்ஜ் திறந்தாள்.
“இல்ல.. கொஞ்ச நேரமாகட்டும்.. நீ சாப்பிடு” என்றான்.
வரா புன்னகையோடு தோசை வார்க்கத் தொடங்கினாள்.
தம்பி சும்மா இல்லாமல் “சரி, கார்த்திக்கு ஏதாவது டிபன் கொடுத்தியா.. இல்ல.. பட்னி போட்டியா..” என்றான்.
“ஏன் டா..” என்றாள்.
புன்னகையோடு “இல்ல.. நீயே இங்கவந்துதான் சாப்பிடுற.. பிள்ளையையும் புருஷனையும் என்ன பண்ணியோன்னு கேட்டேன்” என்றான் கால்மேல் கால் போட்டுக் கொண்டு.. நக்கலாக.
“ஏன் டா சொல்லமாட்ட.. என் நேரம். எல்லாம் இன்னம் கொஞ்சநாள்தான்..” என வாய்விட்டாள் பெண்.
தம்பிக்கு எதோ காரணம் இருக்கிறது என முன்பிருந்த சந்தேகம் உறுதியாக, இப்போது “என்ன என்ன கொஞ்சநாள்” என்றான்.
“ஒண்ணுமில்ல தம்பி.. நீ இப்படி ஜாலியா எதை பற்றியும் கவலையேபடாமல் இருக்கல்ல.. அதான் சீக்கிரமாக உன்னை குடும்பஸ்த்தன் ஆக்க போறோம்” என்றாள்.
இதுவரை முகத்திலிருந்த புன்னகை இப்போது காணமல் போனது அவனிடமிருந்து.. அமைதியாகிவிட்டான், சர்வா. எதோ பழைய நினைவு.. ஆனால், இரண்டு நொடிகள்தான் அதில் இருந்தான்.. பின் தலையை உலுக்கிக் கொண்டான்.
வரா “டேய்.. இந்த ஜோக்ஸ் எல்லாம் விட்டுடு. கல்யாணம் செய்துக்கோடா வாழ்க்கை நல்லா இருக்கும்..” என்றாள், மேட்ரிமனி மேளாளர் போல.
பதிலில்லை.. தம்பியிடமிருந்து.
திரும்பி பார்த்தாள் வரலக்ஷ்மி.. எங்கோ பார்த்துக் கொண்டிருந்தான் சர்வா.. வரா “டேய்.. என்ன பழைய யோசனையா” என்றாள்.
அக்கா “டேய்.. பழசினை இன்னமும் நீ மறக்கலையா.. உனக்கு தேவையான நேரம் கொடுத்தாச்சு.. அம்மா கவலைபடுறாங்க.. ஒழுங்கா பார்க்கிற பெண்ணை கல்யாணம் செய்துக்க” என்றாள்.. தோசை வித் அட்வைஸ் என.
சர்வா “வரா” என்றான் அதட்டலாக.
“பின்ன என்னடா.. எதோ ஒருமுறை தவறாக நடந்திடுச்சின்னா.. எல்லாம் அப்படியே அடக்குமா. நீ அதிலிருந்து வெளிய வா.. போதும் சோகமா இருந்தது. கல்யாணம் செய்துக்கோ.. நீ தனியாவே இருக்க ரொம்ப வருஷமா.. அம்மாக்கும் எங்களுக்கும் கஷ்ட்டமா இருக்குல்ல.. உனக்குன்னு ஒருத்தி கண்டிப்பா இருப்பா.. ம்.. அவளை நாங்க கண்டுபிடிச்சி உன் கையில் கொடுக்கும் போது.. எதையவாது யோசிச்சி.. கெடுத்துக்காத..” என்றாள்.
தம்பி பதிலே பேசவில்லை.. வர்ஷாவின் நினைவுதான். தான் ஏமாந்த கதையை நினைக்க கூட விரும்பாமல் தலையை உலுக்கி அதனை தள்ளி வைத்துவிட்டான். ஆனால், தெரிந்தே இப்போது வர்ஷினியை விட்டிடகூடாது என எண்ணிக் கொண்டிருந்தான்.
தம்பியின் அமைதி பார்த்து.. வரா “டேய், உனக்குத்தான் அப்போவே அந்த கல்யாணம் பிடிக்கலையே.. அப்புறம் என்ன.. மாமாவே தன் பெண்ணிடம் இப்போது பேசுகிறார்.. செய்கிறார்.. உனக்கு என்ன.” என்றாள்.. கோவமாக.
சர்வா “அதெல்லாம் இல்ல.. இனி அதைபற்றி பேசாத” என்றான்.
“அப்புறம் என்ன டா.. பிரச்சனை..” என்றாள்.
தம்பி அக்காவின் முகத்தை தீவிரமாக பார்த்தான்.. வரா இரண்டு நொடி.. தம்பியின் பார்வையை எதிர்கொண்டாள்.. பின் அவனின் பார்வை அகலாததை கண்டு.. “என்ன டா.. சொல்லு..” என்றாள்.
இதுக்குமேல நான் இங்கிருந்தாலும் உளறிடுவேன் என எண்ணி.. எழுந்து அறைக்கு சென்றுவிட்டான், சர்வா.
வராவிற்கு சந்தேகமானது.
வரலக்ஷ்மி கார்த்திக்’க்கு இரண்டு பிள்ளைகள், நான்காம் வகுப்பு.. முதல் வகுப்பு.. படிக்கிறார்கள். இரண்டு பெண் பிள்ளைகள். வரா வொர்க் பிரோம் ஹோம் எனதான் இருக்கிறாள். அதனால் பிள்ளைகளை பள்ளி அனுப்பிவிட்டு வந்துவிட்டாள், அம்மா வீட்டுக்கு.
முத்துவும், மகன் வந்திருப்பதால்.. தினமும் தடபுடலாக சமைப்பவர்.. இன்று தன் மகனுக்கு என பெண் பார்த்திருக்கிறார்.. ஜாதகம் பார்த்து.. அவர்களை பற்றி சொந்தங்களிடம் விசாரித்து.. என எல்லாம் ஒத்து போயிருக்கிறது. அதனை மகனிடம் சொல்லுவதற்கு.. மகளையும் மாப்பிள்ளையும் அழைத்திருக்கிறார். அதனால், சமையல் ஆர்பாட்டமாக இருந்தது. காலையில் சமையல் முடித்து கோவிலுக்கு சென்றிருக்கிறார்.
சர்வேஷ், திருமணத்திற்கு இன்னமும் ஒத்துக் கொள்ளவில்லை. அன்னையோ வயது ஏற ஏற.. பயத்தில் இருக்கிறார். மகன் திருமணம் என சொன்னாலே.. போனில் கூட பேசுவதில்லை. இப்போது நேரில் வந்திருக்கும் போது, எப்படியேனும் பேசி, அவனை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்திட வேண்டும் என எண்ணிக் கொண்டே இருக்கிறார்.
பெரிய பெண் மாப்பிள்ளை இருவரும் மதியமாக வீடியோ காலில் வந்து சேர்ந்துக் கொள்ளுகிறோம் என்றிருந்தனர். அதனால், வீட்டில் சர்வேஷினை இன்று விட்டிட கூடாது என முடிவோடு இருந்தனர்.
சர்வா, உள்ளே சென்று வர்ஷாவிற்கு அழைத்தான் அவள் இன்று முதல்நாள் வேலைக்கு செல்லுகிறாள் என. அழைப்பினை எடுக்கவில்லை பெண்.
நீண்ட நேரம் யோசித்து.. வயது பையன் போல.. ஒரு கிட்ரீடிங் மேசேஜ் அனுப்பினான். பின் வேலை அவனை அழைத்தது.
சற்று முடித்துவிட்டு வந்து போனினை பார்க்க, அதற்கும் பதிலில்லை.. அவளிடமிருந்து. ஒருமாதிரி டென்ஷனாக இருக்கிறான் காலையிலிருந்து. இன்னமும் மூன்று வாரங்களில் ஊர் போக வேண்டும்.. இவளிடம் எப்படி பேசுவது என.. அங்கும் இங்கும் நடந்துக் கொண்டே ஆபீஸ் அழைப்புகளை ஏற்று பேசிக் கொண்டிருந்தான்.
முத்துநாயகி திட்டமிட்டப்படி.. மதியம் மூன்று மணிக்கு.. சர்வேஷ் உண்பதற்காக வந்தான். கார்த்திக் உண்டு முடித்து போனில் பேசிக் கொண்டிருந்தார். சர்வா உண்டுக் கொண்டே.. அக்காவிடம் அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தான்.
கார்த்திக் வந்தார்.. “வாங்க மாம்ஸ்” என்றான்.
கார்த்திக் புன்னகையோடு வரவேற்பினை ஏற்றுக் கொண்டார்.
வரா “மாமாக்கு தெரிந்த இடத்திலிருந்து உன்னை மாப்பிள்ளை கேட்டு வந்திருக்காங்க” என்றாள்.
சர்வா இதை எதிர்பார்த்திருந்தான் காலையில் என்பதால் அதிரவெல்லாம் இல்லை.. உண்டுக் கொண்டிருந்தான். பெண்ணின் படிப்பு வேலை.. எந்த இடம் என எல்லாம் சொல்லித் தொடங்கினாள்.
அன்னை, பெரிய பெண்ணுக்கு அழைத்தார்.. வீடியோ அழைப்பில். வரா.. போனோடு தம்பியின் அருகே வந்து அமர்ந்துக் கொண்டு.. “துர்கா, நான் காலையிலேயே சொல்லிட்டேன்.. இப்போவெல்லாம் பொண்ணு கிடைப்பதே பெரிது.. கல்யாணம் செய்துக்கோடான்னு.. என்னோமோ மழுப்பறான்.. கேளு” என்றாள்.
துர்கா “உன்னை இத்தனை வருஷம் விட்டாச்சி சர்வா.. இவங்க நமக்கு ஏற்ற இடமாக இருக்காங்க.. பெண்ணை பாரு கண்டிப்பா பிடிக்கும்.. இன்னும் அம்மாவை எவ்வளவு கவலைப்பட வைப்ப.. முடிவு சொல்லிடு” என்றாள் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக.
சர்வா “இப்போ எதுக்கு இவ்வளவு சீரியஸாக இதை டிஸ்கஸ் பண்ணனும்.. எனக்கு புரியலை. எனக்கு அப்படி என்ன வயசாகிடுச்சி. அம்மா எப்போது போன் செய்தாலும் இதே பேச்சு.. இப்போது லீவ்லில் தானே இருக்கேன்.. நிம்மதியா இருக்க முடியுதா..” என்றான் எரிச்சலாக.
துர்கா “என்ன டா கத்தற.. உனக்கு வீட்டு நிலைமை தெரியுமில்ல.. என்ன கத்தற.. கல்யாணம் செய்துக்கோ.. தேடி தேடி பெண் பார்த்திருக்கு.. எல்லோருக்கும் கவலைபட நேரமில்ல சொல்லிட்டேன். கல்யாணம் செய்துதானே ஆகணும்.. என்ன அப்படியே இருந்திடலாம்ன்னு நினைக்கிறீயா.. சொல்லிடு” என்றாள்.
சர்வா அமைதியானான்.
துர்கா “முதலில் பெண்ணை பார்த்தியா” என்றாள்.
சர்வா ஒரு பெருமூச்சு எடுத்துவிட்டுக் கொண்டு “நேரமில்ல என்றால் எதற்கு பார்க்குறீங்க.. விடுங்க.. நான் என்னமோ ஆகிட்டு போறேன்” என்றான்.. எகிறிக் கொண்டு.
வரா “டேய் அவ அப்படி சொல்லலை.. நீ அங்க தனியா இருக்க.. என்ன சாப்பிட்ட.. தெரியலை, எப்போ வீடு வர.. தெரியலை, உன்னை கவனிச்சிக்கறதே இல்லை.. பார்க்க நல்லா இருக்க.. ஆனால், சந்தோஷமா இருக்கியா? தெரியலை டா.. எங்களுக்கு.” என்றாள்.. இளகிய குரலில்.
சர்வேஷ் எழுந்தான்.. உண்டு முடித்திருந்தான், போன் அவனை பின் தொடர்ந்தது.. வரா விளையாட்டாகத்தான் செய்தாள். தம்பியோ பல யோசனையில் இருக்க.. “எதுக்கு இப்படி பின்னாடியே வர” என்றான் கடுப்பாக.