அத்யாயம் 14:

வேதா எதுவும் பேசாமல் அமைதியாய் நடந்து கொண்டிருக்க, சரணுக்கு தூக்கமாய் வந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டு அவனும் நடந்து கொண்டிருந்தான்.

“என்னண்ணா? அமைதியா வரீங்க?” என்றாள் வேதா.

“நீதானடா வேதாம்மா… சும்மா ஒரு வாக் போகலாம்னு சொன்ன. அதான் சும்மா வரேன்” என்றான்.

“இந்த அதிகாலை காமெடிக்கு நான் இப்ப கண்டிப்பா  சிரிக்கணுமா?” என்றாள் எரிச்சலுடன்.

“நான் எங்க இதை காமெடின்னு சொன்னேன்” என்றான்.

“பூஜா ஹாலிடேஸ்க்கு ஊருக்கு போறேன்னு சொன்னேன். நீங்களும் வரீங்களா? உங்களுக்கும் காலேஜ் லீவ் தான?” என்றாள்.

“அண்ணிக்கு ஆபீஸ் இருக்குமே வேதாம்மா? அண்ணி ஓகே சொன்னா வர வேண்டியது தான். நீயும், அகரனும் கண்டிப்பா போயிட்டு வாங்க. நான் முடிஞ்ச அளவுக்கு வரப் பார்க்குறேன்” என்றான்.

“நீங்க மறந்துட்டிங்கன்னு நினைக்கிறேன். கனிக்கு இந்த வாரம் தான் வளைகாப்பு” என்றாள்.

“அட ஆமா..!! இருந்த டென்சன்ல அதை மறந்துட்டேன் பாரு. அப்போ கன்பார்மா ஊருக்கு வந்து தான் ஆகணும்.” என்றான்.

“அண்ணா ஒரு விஷயம்” என்று நிறுத்தினாள்.

‘என்ன பூகம்பம் வரக் காத்திருக்கோ’ என்று மனதிற்குள் நினைத்தவன்,

“சொல்லுடா” என்றான்.

அவனை ஓரக்கண்ணால் பார்த்தவள்,

“நேத்து நந்தகுமாரை பார்த்தேன்ல…” என்று இழுக்க, சரணுக்கு ஒரு பக்கமாய் இழுத்துக் கொண்டு போனது.

“அதுக்கு என்ன” என்றான் வேகமாய்.

“அது, அவர் அமெரிக்கா போன வேலையெல்லாம் முடிஞ்சிடுச்சாம். இனி இங்க தான் இருப்பாராம்.” என்று நிறுத்தினாள்.

“சொல்ல வர்றதை இழுக்காம சொல்லு வேதா!” என்றான் கடுகடுப்பாய்.

“அவங்க அம்மா அப்பா கோபம் குறையிற வரைக்கும் தனியா வீடு எடுத்து தங்கிக்கலாம்னு இருக்கோம்..” என்றாள் பட்டென்று.

“வாட்!!!!” என்று அதிர்ந்து நின்றான்.

“ஏன்? இவ்ளோ ஷாக் ஆகுறிங்க?” என்றாள் புரியாத பாவனையுடன்.

“என்ன பேசிட்டு இருக்க வேதா நீ? நீ எதுக்கு அவன் கூட தனியா தங்கணும்?” என்றான் கோபமாய்.

“என்னண்ணா? யார் கூடவோ தங்கப் போற மாதிரி பேசுற? அவர் என் புருஷன் தான? அவர் கூட தங்குனா என்ன தப்பு?” என்றவள், கீழ் கண்ணால் அவனை நோட்டம் விட, சரணுக்கு படபடப்பு கூடியது. தூக்கம் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் ஓடிப் போக, என்ன செய்வது? என்ன சொல்வதென்று புரியாமல் நின்றான்.

“ஏன் இவ்ளோ அதிர்ச்சி உங்களுக்கு?” என்றாள் புருவத்தை உயர்த்தியபடி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. நேத்து, நீ வேற என்னமோ என்கிட்டே கேட்ட மாதிரி இருந்தது. அதான் அதை யோசிச்சுட்டு இருந்தேன்” என்றான் பட்டும் படாமல்.

“ஆமால்ல..! நான் கேட்டேனோ? மறந்துட்டேன் பார்த்திங்களா?” என்று நக்கலாய் கூறியவள்,

“நைட் எல்லாம் நல்லா யோசிச்சு பார்த்தேன் சரண் அண்ணா..! நீங்க சொன்னப்ப புரியாதது கூட அப்பறம் தான் புரிஞ்சது. எனக்குப் புரிஞ்சது உங்களுக்கும் புரிஞ்சிருக்கான்னு தெரியத்தான் வாக்கிங் கூட்டிட்டு வந்தேன்” என்றாள்.

“தெளிவா குழப்புறது எப்படின்னு உன்கிட்ட தான் கத்துக்கணும்” என்றான்.

“உங்களை விடவா?” என்றாள் அவளும் விடாமல்.

“வேதாம்மா..! நீ படிச்சு முடிக்கிற வரைக்கும் எங்க கூடவே தான் இருக்கணும். திடீர்ன்னு வந்த நந்தகுமார் உனக்கு பெரிசா போயிட்டானா? அவன் கூட பேசுற வேலையெல்லாம் வச்சுக்காத” என்றான் படபடப்புடன்.

“இன்னைக்கு பேசக் கூடாதுன்னு சொல்ற நீங்க காலேஜ் அட்மிஷன் போட்ட அன்னைக்கு எதுக்கு நந்தா கூட பேசுமான்னு சொன்னிங்க அண்ணா?” என்றாள் கூர் பார்வையுடன்.

“அது..அன்னைக்கு நீ இருந்த மன நிலைமைக்கு பேசுனா கொஞ்சம் சரியாவன்னு நினைச்சு அப்படி சொன்னேன்..” என்று உளறிக் கொட்ட,

‘அய்யோ..! இன்னைக்குன்னு பார்த்து இவ்வளவு தெளிவா கேள்வி கேட்குறாளே? எல்லாம் இந்த விஜய்யாலா வந்தது. சொன்னா அவன் மிதிப்பான். சொல்லலைன்னா இவ மிதிப்பா? எனக்கு போய் இப்படி ஒரு நிலைமையா?’ என்று உள்ளுக்குள் அவன் புலம்பிக் கொண்டிருந்தான்.

“இன்னைக்கும் அதே மன நிலமையில தான் இருக்கேன். எனக்கு நந்தா கூட இருந்தா சரியாகிடும்னு தோணுது. அதுமட்டுமில்லாம ஒரு பொண்ணு கல்யாணத்து அப்பறம் புருஷன் வீட்ல இருக்குறது தான முறை” என்றாள் நக்கல் கலந்த பாவனையில்.

‘புருஷன் வீட்ல தானமா இருக்க?’ என்றான் மனதிற்குள்.

“ஏதாவது சொன்னிங்களா?” என்றாள்.

‘நான் என்னத்தை சொல்ல? எப்படி சொல்ல?’ என்று புலம்பியவன்,

“நான் சொல்றது உனக்கு புரியலையா வேதாம்மா..! அவங்க அப்பா- அம்மா கோபமா இருக்காங்க. இந்த நேரத்துல நீங்க தனியா வீடெடுத்து, அது அவங்களுக்கு பிடிக்காம போய், ஏன் தேவையில்லாத பிரச்சனை? பேசாம நீ இங்க இருந்தே படிச்சு முடியேன். அதுக்குள்ளே உனக்கு உடம்பும் பூர்ணமா சரியாகிடும். அப்பறம் எதுன்னாலும் பேசி முடிவெடுத்துக்கலாம்.” என்றான் சரண்.

‘எப்படி பேசினாலும் வாயையே திறக்காத அவன் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டாள். ஆனால் அவள் எதிர்பார்த்தது அந்த பதில் இல்லையே?’ என்று யோசித்தபடி நடந்தவள் சட்டென்று நின்றாள்.

“என்னடா?” என்றான்.

“எனக்கு நிஜமா நந்தகுமார் தான் தாலி கட்டுனாரா?” என்றாள் பட்டென்று.

அவளின் வெளிப்படையான கேள்வியில் அதிர்ந்தவன்,’இப்ப நான் என்ன சொல்லுவேன்’ என்று எண்ணியபடி,

“வேதா அது..” என்று அவன் தயங்க, அந்த தயக்கத்திலேயே அவளுக்கு நூறு சதவிகதம் உறுதியானது.

“நந்தா கட்டலைன்னா? வேற யார் கட்டியிருப்பா?” என்றாள் அவனின் முகத்தைப் பார்த்துக் கொண்டே. சரண் முகம் காட்டிய பாவனையும், அதிர்ச்சியும் அவளுக்கான பதிலை பெற்றுத் தந்தது போலும்.

“வேதாம்மா..!!!” என்று அவன் தயங்க,

“இல்லண்ணா, நந்தா கட்டலைன்னா வேற யார் கட்டியிருக்க முடியும். இந்த யோசனையே முட்டாள் தனமான யோசனை தான?” அதை சொல்ல வந்தேன் என்று சமாளித்தாள்.

அவள் கேட்ட விதமும், கேட்ட கேள்வியும், அதை சமாளித்த விதமும் புரியாத அளவிற்கு சரணும் ஒன்னும் தெரியாதவன் அல்லவே. அவனைப் பொறுத்தவரை விஜய்யிடம் சத்தியம் செய்ததைப் போல் அவனாக சொல்லவில்லை என்றாலும், அவளாகத் தெரிந்து கொள்வதில் தப்பில்லை என்று நினைத்தான் சரண்.

அதற்கு காரணமும் இருந்தது. நந்தாவும் அதே ஊரில் இருக்க, எங்கே சொன்ன பொய் உண்மையாகி விடுமோ என்ற பயமும் இருந்தது சரணுக்கு.

ஏற்கனவே ‘இவளுக்கு நந்தகுமார் மீது விருப்பம் இருந்தால், தானே அவளை அவனுடன் சேர்த்து வைப்பேன்’ என்று விஜய் கூறியது வேறு சரணுக்கு ஞாபகத்தில் வந்து தொலைத்தது.