அத்யாயம் 13:

நினைவுகளில் இருந்து மீண்ட வேதாவிற்கு , அழுது சிவந்திருந்த கண்கள் உறக்கத்திற்கு கெஞ்ச, தலையோ அதீத பாரமாய் இருந்தது. எதையும் அவளால் கடந்து செல்லவும் முடியவில்லை. அதை ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.

இன்று நடந்ததை மீண்டும் மீண்டும் மனதிற்குள் ஓட்டிப் பார்த்தாள். அவள் ஒன்றை நினைத்திருக்க, விதி வேறொன்றை நிகழ்த்தியிருந்தது. இதற்கும் அன்றைக்கு மாலில் நந்தகுமார் வாய் வார்த்தையாக எதையுமே சொல்லவில்லை. அவன்,அவளுடைய கைகளை இறுகப் பற்றிய அந்த நொடியே தெரிந்து போனது, அந்த உணர்வை, அந்த ஸ்பரிசத்தை அதற்கு முன் அவள் உணர்ந்ததில்லை என்று. மருத்துவமனையில் அவளுக்கு ஆறுதல் அளித்த கரங்களின் ஸ்பரிசம் அதுவல்ல. அது அவளுக்குள் ஆழப் புதைந்திருக்கும் ஸ்பரிசம் ஆகிற்றே. எப்படி அவளால் மறக்க முடியும். 

தனக்கு தாலி கட்டியவன் நந்தகுமார் இல்லை என்று உணர்ந்த அந்த நிமிடத்தில் தான் பதட்டத்தில் எழுந்து சென்றாள்.  அவள் கீழே விழும் முன் தடுத்து நிறுத்திய விஜய்யின் அந்த ஒற்றைத் தொடுதலே அவன் யார் என்று யாரும் சொல்லாமல் அவளுக்குத் தானாகவே விளங்கியிருந்தது. அறிந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் மயங்கியிருந்தாள்.

இத்தனை நாள் கணவன் என்று மனதில் ஒருவனை நினைத்திருக்க, அவன் கணவனே இல்லை என்று தெரிந்த நிமிடம் அவளும் உடைந்து போனாள். இதை ஏன் தன்னிடம் மறைக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு எழாமல் இல்லை. தாயின் இழப்பில் இருந்தே மீள முடியாமல் தவித்துக் கொண்டிருப்பவளுக்கு இப்போது இந்த தவிப்பும் சேர்ந்து கொண்டது. 

தெரிந்து கொண்டதை ஏற்றுக் கொள்வதா? இல்லை வேண்டாமா? எது உண்மை? எது பொய்? என்று மனம் ஒரு நிலையில்லாமல் குழம்பித் தவித்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் சரண் ஒருவனிடம் மட்டுமே பதில் இருக்கிறது என்று எண்ணினாள் வேதா.

“நாளைக்கு கண்டிப்பா சரண் அண்ணா கிட்ட பேசணும்” என்ற ஒரு தெளிவான முடிவை எடுத்த பிறகு தான் அவளுக்கு ஓரளவிற்கேனும், நிம்மதி ஏற்பட்டது. 

‘நாளைக்கு அகரனோட பிறந்த நாள். நான் இப்படியே இருந்தா அவனும் ரொம்ப சேடா பீல் பண்ணுவான். என்னால அவனோட டே ஸ்பாயில் ஆகக் கூடாது’ என்று எண்ணியவள் நேரத்தைப் பார்க்க, அது பனிரெண்டை நெருங்க அரைமணி நேரம் இருப்பதைக் காட்டிக் கொண்டிருந்தது.

‘எப்பவும் போல மிட்னைட் கேக் வெட்டலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். என்னோட பிரச்சனையில கேக் வாங்க மறந்துட்டேனே’ என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க, அதே நேரம்  அவள் போன் ரிங் ஆனது. சரண் தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

“சொல்லுங்கண்ணா..!” என்றாள் தயக்கத்துடன். அவனிடம் கோபமாய் பேசிய அனுப்பிய பிறகு இயல்பாய் பேசுவதற்கு தயக்கமாய் இருந்தது அவளுக்கு.

“தூங்கிட்டு இருக்கியா வேதா”

“இல்லண்ணா”

“கதவைத் திறம்மா” என்றான்.

அவள் வேகமாய் சென்று கதவைத் திறக்க, சரணும், கீர்த்தனாவும் நின்றிருந்தனர் கையில் கேக்குடன்.

“மாத்திரை போட்டதுல தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சு தான் கால் பண்ணேன்டா. இப்போ உடம்புக்கு ஓகே வா? பெட்டரா பீல் பண்றயா?” என்றான் சரண், அழுது வீங்கிய அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே.

“தூக்கம் வரலைன்னா..! அகரனுக்கு கேக் வாங்கலையேன்னு யோசிச்சுட்டு இருந்தேன். நல்லவேளை நீங்க வாங்கிட்டு வந்துட்டிங்க” என்றான் சன்னமான சிரிப்புடன்.

“என்ன பண்றான்?” என்றாள் கீர்த்தனா.

“நல்ல தூக்கத்துல இருக்கான் அண்ணி..! இருங்க எழுப்புறேன்” என்றாள்.

“இன்னும் நேரம் இருக்கு  இருக்கு வேதா..!” என்ற கீர்த்தனா, அங்கிருந்த டீபாய் மேல் கேக்கை பிரித்து வைத்துக் கொண்டிருக்க, சரணின் அருகில் சென்ற வேதா,

“சாரிண்ணா..! ஈவ்னிங் ஏதோ டென்ஷன்ல அப்படி பேசிட்டேன். ரொம்ப ஹெர்ட் பண்ணிட்டேனா?” என்றாள்.

“அதைப் பத்தி இப்போ பேச வேண்டாம் வேதாம்மா..! ஆனா, நீ ஒன்னை மட்டும் புரிஞ்சுக்கனும். எந்த சூழ்நிலையிலும், உன்னோட சந்தோஷமும், நிம்மதியும் தான் எங்களுக்கு முக்கியம். அதை மட்டும் எப்பவும் மறந்துடாத. நீ பழைய வேதாவா மாறுனா மட்டும் தான், நம்ம குடும்பமும் பழைய மாதிரி மாறும்.நாளைக்கு எல்லாத்தையும் பொறுமையா பேசிக்கலாம்” என்றான்.

“நடந்ததை என்னால ஏத்துக்க முடியும்னு தோணலைண்ணா…!” என்றாள் விரக்தியாய்.

“நாளைக்கு பேசிக்கலாம் வேதா” என்றான் அழுத்தமாய்.

“ம்ம்..!!” என்றவள், தன் பிரச்சனைகளை தள்ளி வைத்துவிட்டு,

“இந்த தடிமாடு எப்படி தூங்குறான் பாருங்க..! இவனை சாதரணமா எழுப்பக் கூடாதே? என்ன பண்ணலாம்?” என்றாள்.

“பாவம் வேதா விட்ரு. பர்த்டே பாய் வேற..” என்று கீர்த்தனா சிரித்தபடி சொல்ல,

“இருந்தாலும் பாசக்காரன் அண்ணி. அப்போ பாசக்கார அக்கா ஏதாவது செய்யணும்ல” என்றாள்.

“அம்மா தாயே! ஆளை விடும்மா..! நீங்க ஆரம்பிச்சா எங்க போய் முடிப்பிங்கன்னு தெரியும். எனக்கெல்லாம் தூக்கம் வருது. அவன் கேக் கட் பண்றது தான் மாயம். உடனே போய் தூங்கிடுவேன். செம்ம டயர்ட்.” என்றாள் கீர்த்தனா.

“சாரி அண்ணி..! இன்னைக்கு என்னால உங்க ஷாப்பிங் பிளான் எல்லாம் ஸ்பாயில் ஆகிடுச்சு” என்றாள்.

“தாயே நீ மறுபடியும் முதல்ல இருந்து ஆரம்பிக்காதமா..! போய் அவனை எழுப்பிட்டு வா” என்று சொல்ல, 

அவனின் அறைக்குள் சென்றவள்,

“டேய் அகரா..! தடிமாடு எந்திரிடா..” என்று அவனை உசுப்ப,

“இந்த பாசமா எழுப்புறது, கையை வச்சு கண்ணை மூடி சர்ப்ரைஸ் பண்றது இதெல்லாம் உங்க அகராதியிலேயே இல்லையா?” என்றாள் கீர்த்தனா நமட்டு சிரிப்புடன்.

“நாங்க எல்லாமே உல்ட்டாவா தான் பண்ணுவோம்..” என்றான் சரண்.

“என்ன வேதா..! உனக்கு இட்லி வாங்கி வச்சேன் சாப்பிட்டியா? டேப்லட் போட்டியா?” என்று தூக்கக் கலக்கத்திலும் அகரன் அவளைப் பற்றியே கேட்க, ஒரு நிமிடம் கண்கலங்கினாள் அவள்.

“பாசமலர் சிவாஜி இதெல்லாம் பார்க்க முடியாம தான் ஏற்கனவே செத்துட்டார் போல. எப்படிங்க அண்ணன், தம்பி எல்லாம் இப்படி ஓவர் பெர்பாமென்ஸ் பண்றிங்க?” என்றாள் கீர்த்தனா சிரித்துக் கொண்டு. 

“உனக்கு பொறாமைடி..” என்றான்.

“லைட்டா” என்றாள் அவளும்.

“எருமை.. இப்ப இட்லியா முக்கியம்? எந்திருச்சு வாடா..! அண்ணா, அண்ணி எல்லாம் வெய்ட் பண்றாங்க” என்றாள்.

“மிட்னைட் கேக்கா..? எனக்கு பிடிச்ச பிளேவர் தான வாங்குனிங்க?” என்றான்.

“ரொம்ப முக்கியம்.” என்றாள்.

“பிளேவர் ரொம்ப முக்கியம் சொல்லிட்டேன்” என்று சொல்லிக் கொண்டே வெளியே வர, அங்கே விஜய்யும் நின்றிருந்தான்.

“ரகு அண்ணா..! நீங்க எப்ப வந்திங்க?” என்றான்.

“ஜஸ்ட் நவ் “ என்றான் விஜய்.

அவனின் குரலைக் கேட்டவள் அப்படியே ஸ்தம்பித்து நிற்க, இயல்புக்கு திரும்பிக் கொண்டிருந்த உணர்வுகள் மீண்டும் ஆட்டம் ஆடத் தொடங்கியது. சில வினாடிகள் அவனை நிமிர்ந்து பார்த்தவள்,அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்று தெரிந்ததும் சட்டென்று பார்வையை மாற்றிக் கொண்டாள்.

“கீழ இருந்து மேல வர்றதுக்கு இவ்வளவு நேரமாடா?” என்றான் சரண், விஜய்யை பார்த்து.

“டைம்க்கு வர்றது தான் நல்லது. முன்னமே வந்து மத்தவங்க பிரைவேசிய ஏன் கெடுக்கணும். அப்பறம் இருக்குறவங்களுக்கு நாம கண்டவங்களா தெரிவோம்” என்றான் கோபத்துடன் பட்டுக் கத்தரித்தார் போல்.

“என்ன கண்டவங்க? என்ன பேசுற விஜய்? எனக்கு ஒன்னும் புரியலை” என்றான் சரண். மாலை, அவன் சென்ற பிறகு நடந்த எதுவும் சரணிற்கு தெரியாத படியால்.

“ஒண்ணுமில்லை..!!” என்றான். அந்த ஒண்ணுமில்லை என்ற வார்த்தை தான் ஓராயிரம் அர்த்தங்களைத் தாங்கி நிற்குமே.

அவன் பேசுவதை கேட்ட அகரனுக்கும் வேதாவுக்கும் விஷயம் புரிந்தது. அகரன் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க, அவளோ இயல்பாய் இருக்க முயற்சி செய்தாள்.

“ஹேப்பி பர்த்டே அகரா..!!ஹேப்பி குவா குவா டே..” என்று சரியா பனிரெண்டு மணிக்கு அவள் வாழ்த்து சொல்லி கவனத்தை மாற்றினாள். மற்ற மூவரும் வாழ்த்த கேக் கட் செய்து அனைவருக்கும் ஊட்டினான் அகரன். 

“இந்தாடா அண்ணனோட கிப்ட்” என்று சரண் ஒரு பெட்டியை நீட்ட,

“பார்சல் வெயிட்டா இருக்கே! எனக்குத் தெரியாம எப்போ வாங்குனிங்க?” என்று சண்டைக்குத் தயாரானாள் வேதா.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத அகரன் வேகமாக கிப்ட்டை பிரிக்க, அங்கே புத்தம் புதிய ஐபோன் இருந்தது.

“இவனுக்கு ஐபோனா..? அதுவும் லேட்டஸ்ட் வெர்ஷன்” என்று வாயைப் பிளந்தவள்,

“அண்ணா..! காலேஜ் படிக்கிறவனுக்கு எதுவுக்கு ஐபோன். ஒரு ப்ரொபசர் பண்ற வேலையா இது. அதுவும் இவ்வளவு காஸ்ட்லியா. இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்” என்றாள் வேதா கோபமும், ஆதங்கமுமாய்.

“வேதாக்கா..!!” என்று பல்லைக் கடித்த அகரன்,

“அவனே இப்போதான் மனசு வந்து ஏதோ வாங்கிக் கொடுத்திருக்கான். உனக்குப் பொறுக்காதே..!” என்றான்.

“விடு வேதா..! ரொம்ப நாளா கேட்குறான். அதான் வாங்குனேன். மத்தபடி காலேஜ்ல போன் அதிகம் யூஸ் பண்ணக் கூடாது அகரா” என்றான் சரண்.

“சரிண்ணா..!” என்றான் நல்ல பிள்ளையாய்.