“மன்னிச்சுடுங்க தம்பி. உங்களைப் பார்த்தாலும் எங்களுக்கு கஷ்ட்டமா தான் இருக்கு. ஆனா, இதுக்கு மேல கண்டிப்பா நடக்காது. உங்க வீட்ல எங்க பொண்ணால நிம்மதியா இருக்க முடியாது. இனி இதைப் பத்தி பேசாதிங்க. தயவு செய்து வேதாவைப் பார்க்க வராதிங்க..” என்றார் மைதிலி முடிவாய்.
“அதை நீங்க சொல்லாதிங்க..! வேதாவோட அப்பா சொல்லட்டும்” என்றான் அவன் வேகமாக.
“எங்க எல்லார் பதிலும் ஒன்னு தான் தம்பி…! ஏற்கனவே நாங்க வேதனையில இருக்கோம். தயவு செய்து அதை அதிகப்படுத்துற மாதிரி எதுவும் பண்ணிடாதிங்க” என்றார் ராமச்சந்திரன், கையெடுத்து கும்பிட்டவராய்.
“அதான் தெளிவா சொல்லிட்டாங்கள்ல..! வா நந்தா..!” என்று அவனை தள்ளாத குறையாக நடத்திக் கொண்டு சென்றார் அவனின் அம்மா.
மருத்துவரைப் பார்த்துவிட்டு வந்த விஜய்யின் கண்களில் இவை அனைத்தும் பட, முக்கியமாக நந்தகுமாரின் வார்த்தைகளை கேட்டு அவன் எப்படி உணர்ந்தான் என்றே தெரியவில்லை. அவனை மீறி அவன் உடல் இறுகியது.
அடுத்து நடந்தது எல்லாம் ஜெட் வேகத்தில் நடந்திருந்தது. காதம்பரி இருந்த அறைக்குள் வேதாவை ஸ்ட்ரச்சரில் அழைத்துக் கொண்டு வர, மனோவையும் அழைத்து வந்திருந்தனர்.
காதம்பரி தன் இறுதி நிமிடங்களில் மகளை கண்குளிர பார்த்திருந்தார். மனோவின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டார். அந்த ஆத்மா விடைபெறும் முன், இன்னும் சிறிது நேரம் உயிருடன் இருக்க மாட்டோமா என்ற ஏக்கத்துடன் அனைவரையும் சுற்றி வர, நொடியும் தாமதிக்காமல் வேதாவின் கழுத்தில் தாலியைக் கட்டி தன் சரி பாதியாக ஏற்றுக் கொண்டிருந்தான் விஜய ரகு நந்தன்.
வேதாவிற்கு மயக்கம் இப்போது நன்றாக தெளிய ஆரம்பிக்க, அவள் அசைவதைக் கண்ட காதம்பரி, கையை நீட்டி அவளின் கையைப் பற்றினார்.
“வே..வேதா..!”
“ம்ம்..ம்மா..!” என்ற அவளின் அழைப்பில் தான் எத்தனை ஜீவன்.
“உன் கல்யாணத்தை அம்மா பார்த்துட்டேன்டா..!எனக்கு அது போதும். அம்மா கிளம்புறேன். பார்த்து இருந்துக்கடா..! அப்பாவை நீதான் பார்த்துக்கணும். அம்மா சொல்றது கேட்குதா?” என்றவரின் உயிர் அந்த நிமிடம் பிரிந்திருந்தது.
“ம்மா..ம்மா..!” என்றவளுக்கு என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. அவள் உலகம் இருண்டிருந்தது அப்போது தான் தெரிந்தது. கண்களை சுற்றி கட்டுப் போட்டிருக்க, கண்களைத் திறக்க முயன்றவளுக்கு அப்போது தான் உண்மை உரைத்தது.
“எ..எனக்கு என்னாச்சு? ஏன் என்னால பார்க்க முடியலை..!ம்மா.. நீங்க எங்க இருக்கீங்க?” என்றாள் திணறியபடி.
“வேதாம்மா..!” என்ற சரணின் கமறிய குரலில், என்ன தெரிந்து கொண்டாளோ..
“அம்மா எங்க? அம்மாக்கு என்னாச்சு..? என்னை வேகமாக கார்ல இருந்து தள்ளி விட்டாங்களே..! அவங்க உடம்பு முழுக்க ரத்தம், நான் பார்த்தேன்..” என்று கத்தியவளுக்கு கண்ணீர் கூட விட முடியாத நிலை. ஆனால் அவளின் நிலை கண்டு சுற்றி இருந்த அனைவரும் கண்ணீர் வடிக்க,
அவளின் தவிப்பை பார்க்க முடியாத விஜய்…அவளின் இரண்டு கைகளையும் தன் கைகளுக்குள் அடக்கிக் கொண்டு, அவள் கைகளை ஆறுதலாய் தட்டிக் கொடுக்க,
“நந்தா..! நந்தா..! என்று அவனின் கைகளைப் பற்ற, அதிர்ந்து போனான் விஜய்.
“ என் அம்மாவுக்கு என்னாச்சு?கல்யாணம்னு சொன்னாங்களே? நீங்க சொன்ன மாதிரி உங்க அம்மா அப்பாவையும் மீறி எனக்கு தாலி கட்டியிருக்கிங்களா..? ஏன் பேச மாட்டேங்கிறிங்க..?” என்ற அவளின் வார்த்தைகளிள் மொத்தமாய் இறுகிப் போனவன், அவளின் கைகளுக்குள் இருந்து தன் கையை விடுவித்துக் கொண்டான்.
“சரண் அண்ணா..! அண்ணி..! அம்மாக்கு என்னாச்சு?” என்று ஒவ்வொருத்தரையும் அழைத்தவள் மீண்டும் மயக்கத்திற்கு சென்றாள். அதீத பதட்டமும், காதம்பரியின் குரலும் அவளை மீண்டும் மயக்கத்தில் தள்ளியிருந்தது.
காதம்பரியின் இறப்பிற்கு அழுவதா? வேதாவின் நிலை கண்டு அழுவதா என்று யாருக்கும் தெரியவில்லை. எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக் கூடாது என்று எண்ணிக் கொண்டனர்.
காதம்பரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ராமச்சந்திரன் தலையில் அடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தார்.
“சரண் நீ அடுத்து நடக்க வேண்டியதைப் பாரு. எல்லாரும் இப்படி உடைஞ்சு போய் நின்னா போனவங்க திரும்பி வரப் போறதில்லை. நீ ஊருக்கு போய் அவங்க இறுதிக் காரியத்துக்கு ஆக வேண்டியதைப் பாரு..” என்றான்.
“இங்க வேதாவை விட்டுட்டு” என்று சரண் இழுக்க,
“நான் இங்க இருந்து பார்த்துக்கறேன்.” என்றான் மரத்துப் போன குரலில்.
“விஜய், அது வேதா ஏதோ தெரியாம, நந்தான்னு நினைச்சு பேசிட்டா” என்று சரண் தயங்க,
“இப்ப தயங்கி ஒரு பிரயோஜனமும் இல்லை. இதுக்கு தான் நான் படிச்சு படிச்சு சொன்னேன். நீங்க கேட்கலை. இப்போ இன்னொருத்தன் இடத்துல நான் இருக்குற மாதிரி இருக்கு. இந்த குற்ற உணர்ச்சியே என்னை ஒண்ணுமில்லாம பண்ணிடும்” என்றவன்,
“அப்பறம் ஒரு விஷயம்..! எந்த அதிர்ச்சியையும் அந்த சின்ன பொண்ணு தாங்கும்னு எனக்குத் தோணலை. உங்க வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி வை. இப்போதைக்கு நான் தான் தாலி கட்டுனேன்னு அவளுக்குத் தெரிய வேண்டாம். முதல்ல உடம்பும், மனசும் சரியாகி வந்து அவ படிப்பை முடிக்கட்டும். அதுவரைக்கும் எக்காரணம் கொண்டும் யார் மூலமாவும் இந்த விஷயம் அவளுக்குத் தெரியக் கூடாது. முக்கியமா உன் மூலமா. இது என் மேல சத்தியம். அவ இப்போ எப்படி நினைச்சிருக்காளோ அப்படியே நினைச்சுக்கட்டும். அதையும் மீறி அவளுக்கு அந்த நந்த குமார் தான் வேணும்னா.. நானே அவன் கூட சேர்த்து வச்சுடுவேன். அப்போ நீ எதுவும் சொல்லக் கூடாது.” என்றான் உறுதியாக.
“அது எப்படி விஜய் சரியா வரும்?” என்றான் சரண் புரியாமல்.
“சரியா வரணும். இவ்வளவு நேரம் நீங்க சொன்னதை நான் கேட்டேன்ல. இப்போ நான் சொல்றதை நீங்க கேளுங்க..!” என்றான் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு.
“கண்டிப்பா நான் சொல்ல மாட்டேன். வேற யார் மூலமாவது தெரிய வந்தா வேதா எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு தெரியாது. ஏன்னா? அவளைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்” என்றான் சரண்.
“என்னைப் பத்தியும் உனக்கு நல்லாத் தெரியும் தான?” என்றான் விஜய். அதற்குமேல் சரணால் ஒன்றும் பேச முடியவில்லை.
ஆக வேண்டிய காரியங்கள் துரித கதியில் நடந்தது. காதம்பரியின் இறுதிச் சடங்குகள் அவரின் ஆசை மகள் வேத வர்ஷினி அருகில் இல்லாமலேயே, அவளுக்குத் தெரியாமலேயே நடந்து முடிந்திருந்தது.
நினைவு தப்பிப் போவதும், வருவதுமாக இருந்தாக வேதா, காதம்பரி இறந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு முழுதாக தெளிந்திருந்தாள். அதுவரை விஜய் தான் அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டான். ஒரு வார்த்தை கூட அவளிடம் பேசவில்லை.
இப்படியே ஒரு வாரம் சென்றிருக்க,சரணிடம், மீண்டும் நந்தாவைப் பற்றி அவள் கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்தான் சரண்.
“என்னண்ணா? அம்மாவைப் பத்தி பேசுனாலும் பதில் சொல்ல மாட்டேங்குறிங்க? நந்தாவைப் பத்தி பேசுனாலும் வாயைத் திறக்க மாட்டேங்குறிங்க?” என்றாள் பொறுமை இழந்து.
ஒரு வழியாக அவன் வேலை விஷயமாக அமெரிக்கா சென்றிருப்பதாக சொல்ல, அதையும் அப்படியே நம்பி வைத்தாள் வேதா. ஆனால் காதம்பரியைப் பற்றி வாயைத் திறக்கவில்லை.
அனைவரின் மௌனத்திலும்,அவளுக்கு அவளுடைய சந்தேகம் ஊர்ஜிதமானது. காதம்பரி கடைசியாக பேசிய வார்த்தைகளை மீண்டும் மீண்டும் தனக்குள் ஓட விட்டு பார்க்க, புரியாத அளவிற்கு அவள் ஒன்றும் சின்னப் பெண்ணில்லையே. ஆனால் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் முடியவில்லை அவளால்.
“அம்மாவை கடைசியா பார்க்கக் கூட முடியாத துரதிஷ்டசாலி ஆகிட்டேன்ல அண்ணா நானு..” என்றவளின் வார்த்தைகளில் அனைவரும் அவளை அதிர்ந்து பார்க்க, விஜய்க்கு பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை. அவள் தானாகவே புரிந்து கொள்வாள் என்று அவன் நினைத்தது சரியே என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தாள் வேத வர்ஷினி விஜய ரகு நந்தன்.