“சரண் புரியாம பேசாத. அவங்களோட கடைசி ஆசைன்னு சொல்லி, உன் தங்கச்சியோட ஆசையை குழி தோண்டி புதைக்க சொல்றியா?அவளோட வாழ்நாளை நரகமாக்க சொல்றியா? வேதாவுக்கு நந்தகுமாரை பிடிச்சிருக்குன்னு என்னை விட உனக்கு நல்லாத் தெரியும். இப்ப, இப்படி ஒரு விஷயம் நடந்தா அது அந்த சின்ன பொண்ணுக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியைத் தரும்னும் தெரியும். இதெல்லாம் தெரிஞ்சு என்னால எப்படி முடியும்?” என்றான் நிதனாமாக. அது சரணுக்காகச் சொன்னானா? இல்லை அவனுக்கு அவனே சொல்லிக் கொண்டானா? என்பது அவனுக்குத் தான் தெரியும்.
“எங்களுக்குப் பிடிச்சதால அவளுக்குப் பிடிச்சது. மத்தபடி அவளா விருப்பப்படலை. இப்பவும் அவங்க தான் முடியாதுன்னு சொல்றாங்க. இன்னைக்கு இந்த பிரச்சனைக்கு வேணாம்னு சொல்றவங்க, நாளைக்கு வேற எந்த பிரச்சனை வந்தாலும் அப்படித்தான் சொல்லியிருப்பாங்க. எனக்கென்னவோ வேதா அவங்ககிட்ட இருந்து தப்பிச்ச மாதிரி தான் தோணுது.” என்றான் சரண்.
“அப்படி சொல்ல முடியாது சரண். அது அவங்களோட சூழ்நிலை. நமக்கேத்த மாதிரி தான் அவங்க யோசிக்கணும்னு நாம சொல்ல முடியாது. எப்படி இருந்தாலும் அந்த நந்தகுமார் வேண்டாம்னு சொல்லலையே?” என்றான் விஜய்.
“அவனே வந்து வேதா வேணும்னு சொன்னாலும், இனி அவனுக்கு வேதா இல்லை. அதுல நான் உறுதியா இருக்கேன். காதும்மாவும் அப்படி நினைச்சதால தான் உன்கிட்ட அப்படி கேட்டாங்க. எனக்காக ஏதாவது செய்யணும்னு நினைச்சா, நீ வேதாவை கல்யாணம் பண்ணிக்கோ. காதும்மாவோட கடைசி ஆசையை நிறைவேத்துன புண்ணியமாவது சேரட்டும்” என்றான்.
“நான் புண்ணியம் சேர்க்க, ஒரு பொண்ணோட மனசை உடைக்க முடியாது சரண்” என்றான் விஜய் பட்டென்று.
“அண்ணா..!பிளீஸ்..! எனக்காக..! அம்மா-அப்பாக்கும் அது தான் விருப்பம். அம்மா இன்னைக்கு கூட சொல்லிட்டு இருந்தாங்க. நம்ம விஜய்க்கு வேதாவை பார்த்திருந்தா என்னன்னு? ஒருவேளை அவளுக்கு கண்ணு சரியாகாமப் போய்டும்னு யோசிக்கிறிங்களா?” என்றாள் கீர்த்தனா.
“என்னை புரிஞ்சு வச்சிருக்கிறது அவ்வளவு தானா கீர்த்தனா?” என்றான் விஜய்.
“எனக்குத் தெரியலைண்ணா..!” என்றாள் விரக்தியாய்.
“இங்க விஜய்ன்றது..” என்று அந்த நர்ஸ் அழைக்க,
“நான் தான்” என்றான்.
“பேஷன்ட் உங்களைப் பார்க்கனும்னு சொல்றாங்க..!” என்றார் அந்த நர்ஸ்.
விஜய் சரணைப் பார்க்க,
“போடா..!போய் திரும்பவும் அவங்க மனசை உடைச்சுட்டு வா” என்றான். அவனை முறைத்து விட்டு சென்றான் விஜய்.
“ஆன்ட்டி..”
“எ..எனக்கு நடந்த எல்லா விஷயமும் தெரியும் தம்பி” என்றார் காதம்பரி திணறியபடி.
அவன் புரியாமல் திகைக்க,
“கீர்த்தனா ஏற்கனவே சொல்லியிருக்கா” என்றார்.
“ஆன்ட்டி..! அதுக்காக..நான்..” என்று அவன் தயங்க,
“எனக்கு நேரம் அதிகம் இல்லை தம்பி. என்னால பேச முடியலை. என் பொண்ணு நல்ல பொண்ணு தம்பி. வயசுக்கு மீறின பொறுப்பு.எல்லாம் என்னால தான்.பொண்ணுங்களுக்கு அப்பா தான பிடிக்கும். ஆனா, வேதாவுக்கு நான் தான் எல்லாம். என் பின்னாடியே சுத்துனதுனால எல்லாத்துக்கும் நான் வேணும் அவளுக்கு. இனி எதுக்குமே நான் இருக்க மாட்டேன்னு அவளுக்குத் தெரிஞ்சா தாங்க மாட்டா. இந்த காயம் மனசுல விழுந்துட்டா, அடுத்து கல்யாணம் பண்ணிப்பாளான்னு கூட தெரியலை. உங்களை இப்படி ஒரு இக்கட்டுல வச்சு கேட்குறேன்னு நினைக்காதிங்க..” என்று அவர் ஒவ்வொரு வார்த்தையையும் திணறியபடி பேச,
ஆழ்ந்து மூச்செடுத்தவனுக்கு, அவரிடம் மறுத்து பேச முடியாத சூழ்நிலை. இரண்டு நிமிடம் நிதானமாய் யோசித்தவன்,
“சரிங்க ஆன்ட்டி..! வேதா இனி என் பொறுப்பு. உங்க அளவுக்கு இல்லைன்னாலும், அவளை நான் சந்தோஷமா பார்த்துக்கறேன். எந்த காரணத்துக்காக உங்களுக்கு என்மேல இவ்வளவு நம்பிக்கை வந்துச்சுன்னு தெரியலை ஆன்ட்டி. ஆனா, உங்க நம்பிக்கையை நான் எப்பவும் பொய்யாக்க மாட்டேன். பிராமிஸ் ஆன்ட்டி” என்றான்.
அவனின் வார்த்தைகளை கேட்ட காதம்பரியின் முகம் ஒளிர்ந்தது. அது அணையப் போகும் ஜோதியின் ஒளிர்வாகக் கூட இருக்கலாம்.
“எனக்கு வேதாவை பார்க்கணும் தம்பி. நீங்க தாலி கட்டுறதை பார்க்கணும். கடைசியா என் பொண்ணு முகத்தை பார்க்கணும்..” என்று அவரின் ஆசைகள்,ஏக்கங்கள் அனைத்தும் வார்த்தை வடிவம் பெற,
“ஓகே ஆன்ட்டி. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்..” என்றபடி வெளியில் வந்தான்.
அவன் வெளியே வந்தது தான் மாயம்..
“என்னாச்சு விஜய்?” என்றான் சரண்.
“தாலி ரெடி பண்ணு. நான் டாக்டரை பார்த்துட்டு வரேன்.” என்ற விஜய் தன்னுடைய கார்டைக் கொடுத்தான்.
“நிஜமாவாடா..” என்ற சரண் துரிதமாக வேலையில் இறங்கினான். கீர்த்தனாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. சந்தியா நடப்பதை விசித்திரமாக பார்த்துவிட்டு சென்று மனோகரனிடம் நடப்பதை கூறியிருந்தாள்.
“நல்ல விஷயம் தானே சந்தியா. என் அம்மா எது செஞ்சாலும் அதுல ஒரு காரணம் இருக்கும். அது புரியாம நான் தான் சில நேரம் அடமென்ட்டா நடந்துக்குவேன். விஜய் மாதிரி ஒரு மாப்பிள்ளை தேடுனாலும் நமக்குக் கிடைக்காது. இன்னைக்கு அவர் இல்லைன்னா, நாங்க இருந்திருப்போமான்னு தெரியாது.” என்றவன்,
“இப்போ உங்களை கூட்டிட்டு போகலாமான்னு தெரியலை. கால்ல கட்டுப் போட்டிருக்காங்க. நான் கேட்டுட்டு வர்றேங்க” என்ற படி வெளியே வந்த சந்தியாவுக்கு, விஜய் அந்த வீட்டு மாப்பிள்ளையாய் வருவதில் துளியும் விருப்பமில்லை. நடப்பதை தடுக்கவும் முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.
இவர்கள் அனைவரும் காதம்பரியின் அறையின் முன்பு இருக்க, லேசாக மயக்கம் தெளிந்திருந்த வேதாவைப் பார்க்க சென்றிருந்தான் நந்தகுமார். அவன் அம்மாவின் கண்ணில் படாமல் செல்வதற்குள் பெரும்பாடு பட்டுப் போனான்.
வாடிய கொடியாய் படுத்திருந்தவளை பார்த்தவனுக்கு விழியோரம் ஈரம் கசிந்தது. விபத்து நடந்ததில் இருந்து இப்போது தான் பார்க்கிறான். அவளின் அருகில் சென்றவன், சில நிமிடங்கள் அவளையே பார்த்திருந்தான்.
“இந்த ஆக்சிடென்ட் மட்டும் நடக்காம இருந்திருந்தா, இந்நேரம் நமக்கு மேரேஜ் முடிஞ்சு என்னோட மனைவியா இருந்திருப்ப வேதா… இப்படியெல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. என் அம்மா சொல்றாங்க நீ எனக்கு வேண்டாம்னு. ஆனா நான் சொல்றேன், எனக்கு நீ வேணும். கண்டிப்பா வேணும். யார் எதிர்த்தாலும் நான் உன்னைத் தான் கல்யாணம் பண்ணுவேன். அவங்களுக்குத் தெரியாம தாலி கட்டிட்டா, அப்பறம் அவங்களால ஒன்னும் செய்ய முடியாது. என் அம்மாவையும், அப்பாவையும் நான் அப்பறம் சமாதானப் படுத்திடுவேன். உனக்கு நான் பேசுறது எல்லாம் கேட்குதா வேதா?” என்று நந்தகுமார் தன் போக்கில் பேசிக் கொண்டு போக, சிறிது சிறிதாக மயக்கம் தெளிய ஆரம்பித்திருந்தவளின் காதுகளில் அவன் பேசிய அனைத்தும் ஏதோ கிணற்றுக்குள் இருந்து பேசுவதைப் போல் விழுந்து வைத்தது.
“சார்..! இங்கல்லாம் வரக் கூடாது. பேஷண்ட்டை டிஸ்டர்ப் பண்ணாதிங்க” என்று நர்ஸ் சொல்ல,
“சாரி சிஸ்டர்..!” என்று கண்களைத் துடைத்துக் கொண்டு வெளியே சென்றான்.
“இங்க என்னடா பண்ற? உன்னை மெடிசன் வாங்கிட்டு வர சொன்னா இவளைப் பார்க்க வந்துட்டியா? நீ திருந்தவே மாட்டியா? முதல்ல உன் அக்காவை வேற ஹாஸ்பிட்டல் மாத்தணும். இங்க வச்சு நான் உன்னை கண்காணிச்சுகிட்டே இருக்க முடியாது.” என்று அவனின் அம்மா பின்னோடு வந்து கத்த, அவரின் சத்தத்தில் வேதா குடும்பத்தினர் அங்கு வந்தனர்.
“என்னம்மா ஆச்சு? ஏன் கத்துறிங்க?” என்றார் மைதிலி.
“இன்னும் என்ன ஆகணும்? முடியாம படுத்திருந்தாலும், என் பையனை அவ பின்னாடியே அலைய விடுறாளே உங்க பொண்ணு.” என்றார் வெடுக்கென்று.
“வார்த்தையை அளந்து பேசுங்க..! உங்க பையனை நாங்க வர சொல்லலை. இனி நீங்களே கேட்டாலும், வேதாவை உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணி குடுக்குற எண்ணம் எங்களுக்கு இல்லை” என்றார் மைதிலி.
“ஆன்ட்டி பிளீஸ்..! அம்மா ஏதோ புரியாம பேசுறாங்க. நீங்களும் பதிலுக்கு வார்த்தையை விடாதிங்க. என்னைக்கா இருந்தாலும் வேதா எனக்குத் தான்” என்றான் நந்த குமார்.