மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்தான் தர்மா. எட்டு இடங்களில் தையல் போடப் பட்டிருந்தது. வலது காலிலும், கையிலும் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதும் மோசமான காயங்கள்தான்.
இன்னும் கனிஹாவின் நெஞ்சத்தில் பதற்றம் தணிந்திருக்கவில்லை. இரத்தக் காயங்களோடு தூணில் சாய்ந்து கிடந்த கணவனை கண்ட காட்சி ஆயுளுக்கும் அவளுக்கு மறக்க போவதில்லை.
தர்மாவை தாக்க வந்தவர்களில் யாருமே பெண்கள் இல்லை, அத்தனை அற்புதமாக பெண் வேடமிட்டிருக்கிறார்கள். இருவர் தப்பித்து சென்றிருக்க மிச்சமிருந்த மூவரும் கூட ஆபத்தான நிலையில் போலீசாரல் மீட்கப் பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தர்மாவுக்கு முதலுதவி சிகிச்சை எல்லாம் புதுக்கோட்டையில் வழங்கப்பட்டிருந்தது. அஜய்தான் அங்கு வசதிகள் போதாது என சொல்லி அண்ணனை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து வந்து விட்டான்.
இன்னும் சற்று நேரம் சென்றால் விடிந்து விடும், ஆனால் கனிக்கும் அஜய்க்கும் சொட்டு உறக்கமில்லை. தங்கவென மருத்துவமனையிலேயே இன்னொரு அறை எடுத்திருந்தான் அஜய். வேலைக்கார பெண்ணுடன் அதியனும் பாட்டியும் அங்குதான் இருந்தனர்.
“நான் இங்க இருக்கேன் அண்ணி, நீ கொஞ்ச நேரம் படுத்து எந்திரிச்சு வா” என கனியிடம் சொன்னான் அஜய்.
அவனது கைகளை பிடித்துக்கொண்ட கனிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது.
“அண்ணனுக்கு பயப்படற மாதிரி ஒன்னும் இல்லைன்னு எத்தன தடவ சொல்றது அண்ணி? ஆபரேசன் நடந்ததால மயக்கத்துல இருக்கார், நீயும் போய் பார்த்திட்டு வந்ததானே? நாளைக்கு ரூமுக்கு மாத்திட்டா அவர் கூடவே இருக்கலாம் நீ” என சமாதானம் சொன்னான் அஜய்.
“நீ மட்டும் இல்லைனா நான் என்ன பண்ணியிருப்பேன் அஜய்?” என பயத்தோடு கேட்டாள்.
ஆமாம் கனிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. தர்மா மூச்சு விடுகிறானா என கூட அவளுக்கு தெரியவில்லை. மயக்கத்தில் இருந்தவன் தன்னை விட்டு சென்று விட்டான் என்றே நினைத்து விட்டாள். அஜய்தான் அண்ணனை பரிசோதித்து உயிர் இருப்பதை சொன்னான்.
நம்பியால் வளர்க்க பட்ட நாய் தர்மவுக்காக தன் இன்னுயிரை நீத்திருந்தது.
தர்மாவின் ஆட்கள் இருவருக்கும் பெரிய காயங்கள் இல்லை, சுய நினைவில்தான் இருந்தனர். அவர்களும் தர்மாவுக்கு ஏதோ ஆகி விட்டது என்றே பயந்து போயிருக்க, அஜய் சொன்ன செய்தியில் உடனே செயல்பட்டனர். தர்மாவுக்கு இரத்த இழப்பு ஏற்பாடாமல் இருக்கும் படி செய்து விட்டுத்தான் காரில் ஏற்றினான் அஜய்.
போலீஸ் வந்து சேர்வதற்குள் தர்மாவை வீட்டிலிருந்து அழைத்து சென்று விட்டனர். அவர்கள் வந்து சோதித்துதான் தாக்க வந்தவர்களை உயிரோடு மீட்டது.
இப்படி அழுது கொண்டே இருப்பதால் ஆகப் போவது ஒன்றுமில்லை, அதியனை எப்படி கவனிப்பாய்? அறைக்கு மாறிய பிறகு உன் அழுத முகத்தை கண்டால் அண்ணனுக்கும் இரத்த அழுத்தம் அதிகமாகும் என எடுத்து சொல்லித்தான் கனியின் அழுகையை அடக்கினான்.
அதியன் தேடுவதாக வேலை செய்யும் பெண் வந்து சொல்லவும்தான் எழுந்து சென்றாள் கனி.
அம்மாவிடம் சொல்ல வேண்டாம் என அஜய் அறிவுறுத்தியதை மீறி தாமரையிடம் சொல்லி விட்டார் வேலம்மாள் பாட்டி. மகன் மீது அவ்வளவு கோவம் இருந்தாலும் இந்த நிலையில் தள்ளியிருக்க முடியாமல் மகளையும் மாமியாரையும் சேர்த்து அழைத்துக் கொண்டு ஆசைத்தம்பியோடு காரிலேயே புறப்பட்டு விட்டார் தாமரை.
இரண்டு காவலர்கள் பாதுகாப்புக்கு என இருந்தனர், கட்சியின் ஆட்கள் பலரும் மருத்துவமனையில் குவிந்திருந்தனர்.
தர்மா மதியம் போலத்தான் கண் விழித்தான். முதலில் அஜய் சென்று பார்த்து விட்டு, பின்னர் கனியை அனுப்பினான். முகமெல்லாம் வீங்கிப் போய் கட்டுக்களோடு கணவனை பார்க்க பார்க்க, ‘அழக் கூடாது’ என அஜய் சொன்னதையெல்லாம் அவளால் கடைபிடிக்கவே முடியவில்லை.
தர்மா உள்ளங்கையை விரிக்க, அதை பிடித்துக்கொண்டவள் “எப்படியிருக்க மாமா?” என கர கரத்த குரலில் கேட்டாள்.
தாடையில் தையல் போடப் பட்டிருக்க அவனால் பேசவே முடியவில்லை. குரலை செருமி நன்றாக இருப்பதை சொன்னான். அப்படி செய்யும் போது அசைபட்ட தசைகள் வலியை கொடுக்க கண்களை மூடிக் கொண்டான்.
தர்மாவை முதன்மையாக தாக்க வந்தவன் மீது பாய்ந்து விட்டது நாய், அந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்டு சுதாரித்து விட்டான் தர்மா. இல்லையென்றால் அவனால் உயிர் பிழைத்திருக்கவே முடியாது. அந்த நொடிகளை அசை போட்டுப் பார்த்தான் தர்மா, எதிர் பார்த்திராத வேளையில் நடந்த தாக்குதல், சாவை சமீபத்தில் பார்த்து விட்டுத்தான் திரும்பியிருக்கிறான்.
“வலிக்குதா மாமா?” என கனி கேட்டதில் கண்களை திறந்தான். அவளது கையை இறுகப் பற்றிக் கொண்டவன், அழக் கூடாது என பார்வையால் சொன்னான். ஆனால் அவனுக்கும் கண்கள் கலங்கித்தான் போயின.
மகனை பற்றி நினைப்பான் என கருதி இவளே “அதி நல்லாருக்கான் எல்லாரும் நல்லாருக்கோம் நீ தைரியமா இரு மாமா” என்றாள்.
அவன் தலையசைத்துக் கொள்ள, அவனது கன்னத்தை விரல்களால் வருடிக் கொடுத்து விட்டு வெளியே வந்து விட்டாள்.
மாலையில் அறைக்கு மாற்றப் பட்டு விட்டான். நள்ளிரவில் தாமரை வந்து சேர்ந்தார். மகனை நேரில் பார்த்த பிறகுதான் அவருக்கும் ஆறுதலாக இருந்தது. எத்தனை முறை சொன்னேன் கேட்டாயா என அவனை போட்டு உலுக்கும் அளவுக்கு அவருள் ஆவேசம், ஆனால் காட்டக் கூடிய நிலையில் இல்லையே அவன்.
அடுத்த நாள் விடியவும் மகள், அம்மா, மாமியார் மூவரையும் ஊருக்கு கிளம்ப சொன்ன தாமரை கனியையும் பார்த்தார். அவளோ கணவன் டிஸ்சார்ஜ் ஆகும் வரை இங்குதான் இருப்பேன் என அடமாக சொன்னாள்.
சோர்வாக காணப்பட்ட அதியனை காரணம் காட்டி கனியை கிளம்ப சொன்னார் தாமரை. மகனை நினைத்தும் வருத்தம் கணவனை விட்டுச் செல்லவும் மனமில்லை, என்ன செய்வதென மருகிப் போனாள் கனி.
தர்மாதான், “எப்படியும் நாலைஞ்சு நாள்ல வீட்டுக்கு வந்திடுவேன், இங்க இருந்து நீ கஷ்ட படலாம், அதி பாவம் கனி. நான் நல்லாருக்கேன், கிளம்பு கனி” என தன்மையாக எடுத்து சொல்லி அவளை சம்மதிக்க வைத்தான்.
அஜய்யும் தாமரையும் மருத்துவமனையில் இருந்து தர்மாவை பார்த்துக் கொண்டனர்.
ஒரு வாரத்தில் வீடு வந்து சேர்ந்தான் தர்மா. நான்கு வாரங்கள் முழு ஓய்வில் இருக்க அறிவுறுத்தியிருந்தனர் மருத்துவர்கள். நாய் கட்டப் பட்டிருந்த இடத்தை பார்க்கவும் அவனுக்கு வேதனை. தன் மாமன் வளர்த்த நாய் அவரில்லாத போதும் தன் கடமையை செய்து விட்டு அவரிடமே சென்று விட்டதாக உணர்ந்தான்.
கீழேயே ஒரு அறையை அவனுக்காக ஏற்பாடு செய்திருந்தாள் கனி. அதியன் அப்பாவை கண்டு மிரண்டு போக, தர்மாவும் கலங்கினான். பாட்டிகள் இருவரும் வேறு ஒரே அழகை. தாமரைதான் சத்தம் போட்டு அவர்களை அமைதி படுத்தினார்.
நிதிலாவும் மிகவும் பயந்து போயிருந்தாள். ஆரவாரம் ஓயவும் அண்ணனை காண சென்றவள், “எல்லாரையும் ரொம்ப பயமுறுதிட்ட ண்ணா, ஏன் ண்ணா இப்படி?” எனக் கேட்டாள்.
“அதான் வந்திட்டேனே நிதி, உனக்கு கல்யாணம் நடக்கிறதுக்குள்ள எந்திரிச்சிடுவேன்” என சொல்லி புன்னகைக்க முயன்றான்.
“கனி பாவம் ண்ணா. இனியாவது அமைதியான வாழ்க்கை அவளுக்கு கிடைக்கணும்” என்றாள்.