“என்ன டாக்டர் சொல்றிங்க? காயம் அதிகம் இல்லாத மாதிரி இருந்தாளே..!” என்றவனின் பேச்சு அவனுக்கே அதிகமாய் பட்டிருக்க வேண்டும். என்ன நினைத்தானோ

“எதுன்னாலும் உடனடியா பண்ணுங்க டாக்டர். இல்ல, வேற ஸ்பெஷலிஸ்ட் யாரையாவது வர வைக்கணுமா?” என்றான் விடாமல்.

“அதெல்லாம் எக்ஸ்பீரியன்ஸ்ட் டாக்டர்ஸ் இங்கயே இருக்காங்க. இங்கயே பண்ணிடலாம். ஆப்ரேஷன் பார்மல சைன் பண்ணிட்டு, ஆப்ரேஷனுக்கான அமௌன்ட்ட கௌண்ட்டர்ல கட்டிடுங்க..” என்றவர்,

“நர்ஸ்..! ஆப்ரேஷனுக்கு ரெடி பண்ணுங்க” என்று சொல்லி விட்டு சென்றார்.

“என்னடா நந்தா சொல்றாங்க? பார்வை இனி வராதா?” என்று வாயைத் திறந்தார் நந்த குமாரின் அம்மா.

அவர்களை தீர்க்கமாய் ஒரு பார்வை பார்த்த விஜய்,

“அங்கிள் இந்த பார்மல ஒரு சைன் பண்ணுங்க” என்றான்.

 ஏற்கனவே மருத்துவரின் வார்த்தைகளில் அதிர்ந்து போயிருந்தார் அவர். 

“என் பொண்ணுக்கு இனி பார்வை வராதா தம்பி” என்றார், கண்ணீருடன்.

“அப்படியெல்லாம் இல்லை அங்கிள். பிப்டி பிப்டி சான்ஸ் இருக்குன்னு டாக்டர் சொன்னாரே. நம்பிக்கையா இருங்க. வேதாவுக்கு ஒன்னும் ஆகாது” என்றான்.

“என்னால முடியாது தம்பி..! சரண்கிட்ட போட சொல்லுங்க” என்றார்.

“டேய் சரண் நீயாவது சைன் பண்ணேண்டா..” என்றான் விஜய்.

“எனக்கு பயமா இருக்கு விஜய். என்னால முடியாது. வேதாவுக்கு ஏதாவது ஒண்ணுன்னா சத்தியமா என்னால தாங்க முடியாது..” என்று அவன் கதற,

“சரண்..! நீயே இப்படி இருந்தா இங்க இருக்குறவங்களை யார் பார்க்குறது? கொஞ்சமாவது தைரியமா இரு” என்றான் விஜய்.

“பார்ம் குடுங்க சார். நான் சைன் பண்றேன்..” என்றான் நந்த குமார். அவனை விஜய் யோசனையுடன் பார்க்க,

“என்னடா பண்ணிட்டு இருக்க நந்தா? நீ எதுக்காக சைன் பண்ணனும்?” என்றனர் அவனின் பெற்றோர்.

“என்ன பேசுறிங்க? இதே ஆக்சிடென்ட் நாளைக்கு மேரேஜ் முடிஞ்சதுக்கு பிறகு நடந்திருந்தா நான் தானே பண்ணியிருக்கணும். அதான் இப்ப பண்ண போறேன்” என்றான்.

“வாயை மூடு நந்தா..! அதான் கல்யாணம் நடக்கலையே. பார்வை இல்லாத ஒருத்தியை கட்டி காலம் முழுக்க கஷ்ட்டப் படனும்னு உனக்கு என்ன தலையெழுத்தா?” என்றார் அவனின் அம்மா.

அவர்களின் பேச்சில் ராமச்சந்திரன் மேலும் துவண்டு போனார். அவர்கள் வாக்கு வாதத்தை கேட்க விஜய்க்கு நேரமில்லை. என்ன நினைத்தானோ, அவனே கையெழுத்தும் போட்டு, பணத்தையும் கட்டி விட்டிருந்தான்.

பாலச்சந்திரன்,மைதிலி என்று ஒவ்வொருவராய் வர, யாருக்கும் பதில் சொல்ல விரும்பாமல், அமைதியாய் நின்றுகொண்டான்.

நந்தகுமார் குடும்பம், அவர்கள் வீட்டுப் பெண்ணை பார்க்க போயிருந்தனர். அந்த பெண்ணின் உயிருக்கு ஆபத்து இல்லையென்றாலும், காயம் அதிகமாக இருந்தது.

“காதம்பரி அக்காவுக்கு எப்படி இருக்கு சரண்?” என்றார் மைதிலி.

“இன்னும் ஒன்னும் சொல்லலைம்மா..! அப்சர்வேஷன்ல வச்சிருக்காங்க. கொஞ்சம் கிரிட்டிகல் ஸ்டேஜ்னு தான் சொன்னாங்க” என்றான் சரண் உணர்வுகளற்று.

“இதெல்லாம் வேத வர்ஷினியோட திங்க்ஸ்” என்று ஒரு நர்ஸ் விஜய்யின் கையில் ஒரு துணியை கொடுத்துவிட்டு செல்ல, அதில் அவள் அணிந்திருந்த நகைகள், ரத்தம் தோய்ந்த புடவை என அனைத்தும் இருக்க, அதை வாங்கிய விஜய்யின் கைகள் நடுங்கத் தொடங்கியது. எண்ணங்களில் ஏதேதோ உலாப் போகத் தொடங்கியது. 

சில மணி நேரங்களுக்கு முன்பு அந்த புடவையில் தேவதையாய் காட்சியளித்தவளின் முகம் கண் முன் வந்து போக, உள்ளுக்குள் முழுமையாய் உடைந்து போனான். விரல்கள் அந்த புடவையை வருட, இத்தனை நாள் ஏதோ சின்னப் பெண்ணின் மீதானா ஈர்ப்பு என்று அவன் நினைத்திருந்த உணர்விற்கு என்ன பெயர் என்று முழுமையாக உணர்ந்து கொண்ட அந்த தருணத்தை அறவே வெறுத்தான் விஜய ரகு நந்தன்.

‘இல்ல.. இது அது இல்ல..’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அவன் மனதுடன் அவனால் போராட முடியவில்லை. அவளுடைய பொருட்கள் தன் கையில் இருக்கும் வரை தன்னால் ஒரு நிலையில் இருக்க முடியாது என்று உணர்வுப் பூர்வமாக உணர்ந்தான். அதை அப்படியே கீர்த்தனாவிடம் கொடுத்தவன், அவர்களின் பார்வையில் படாதவாறு அங்கிருந்து வெளியே சென்றான்.

வெளிக் காற்றை சுவாசித்தவனுக்கு எப்போதும் கிடைக்கும் ஆசுவாசம் கிடைக்கவில்லை. அவன் சட்டையில் இருந்த அவளின் ரத்தத் துளிகள் அவளின் இருப்ப மீண்டும் ஞாபகப் படுத்த,

முதன் முதலில் பார்த்த வேதா, சரணின் திருமணத்தில் மண்டப்பத்தில் பார்த்த வேதா, அவர்கள் வீட்டில் பார்த்த வேதா, இந்த இரண்டு நாட்களில் பார்த்த வேதா என வேதாவின் அனைத்து சிரித்த முகங்களும் அவன் மனக்கண்ணில் வந்து வந்து போக, இறுதியாக சாலையில் ஓரத்தில் கிடந்த வேதாவின் முகம் கண்முன் வர,

“நோஓஓ..!!!” என்று அலறியவன்,

“ஐ கான்ட்… ஐ கான்ட்.. ஐ கான்ட் வேதா ” என்று அலற்றியவன் ஒரு கையை மடக்கி அங்கிருந்த சுவற்றில் குத்த,  அவனை கடந்து சென்றவர்கள் வித்யாசமாய் பார்த்து சென்றனர். தன்னையறியாமல் அழுது கொண்டிருந்தான்.

‘ஒரு சின்ன பொண்ணு..! இன்னைக்கு எத்தனை முறை என்னை அழ வச்சுட்டா..’ என்று எண்ணி கண்களைத் துடைக்க,

“ரகு அண்ணா..” என்ற அகரனின் குரலில், வேகமாய் கண்களைத் துடைத்தபடி திரும்பினான் விஜய்.

“சொல்லு அகரா” என்றான்.

“எனக்கு பயமா இருக்கு. அந்த ஆன்ட்டி சொல்ற மாதிரி வேதாவுக்கு ஒன்னும் ஆகாதுல. அக்கா நல்லாகி வந்துடுவா தான. காதும்மாக்கு நல்லாகிடும் தான” என்றான்.

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது அகரா. ரெண்டு பேரும் சீக்கிரம் சரியாகி வந்துடுவாங்க. எந்த ஆன்ட்டி சொன்னாங்க?” என்றான்.

“அதான், நந்தகுமார் மாமாவோட அம்மா..!  மறுபடியும் வந்திருக்காங்க..” என்றான்.

“வா போகலாம்..” என்று அவனை இழுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றான் விஜய்.

“இந்த மாதிரி நேரத்துல இதைப் பேசுறது தப்புத்தான். ஆனா, பேசாம இருக்க முடியாது. இந்த கல்யாணம் இனியும் நடக்காது. வேதாவுக்கு சரியாகுமா ஆகாதான்னு தெரியலை. எங்களுக்கு இருக்குறது ஒரே பையன். அவன் வாழ்க்கையையும் நாங்க யோசிக்கணும். எங்க சொந்தக்காரங்களுக்கு வேற பதில் சொல்லணும்.” என்று நந்தகுமாரின் அம்மா, ராமச்சந்திரனிடம் சொல்லிக் கொண்டிருக்க, அதை எல்லாம் அவர் கேட்கிறாரா இல்லையா என்று கூட தெரியவில்லை. பிரம்மை பிடித்தவர் போல் அமர்ந்திருந்தவருக்கு எங்கிருந்து மற்ற வார்த்தைகள் எல்லாம் காதில் விழும்.

“அதைத்தான் ஏற்கனவே சொல்லிட்டு போயிட்டிங்களே! மறுபடியும் அதையே ஏன் சொல்ல வந்திருக்கிங்க?” என்றாள் கீர்த்தனா.

“அம்மா..! நீங்க என்ன சொன்னாலும் வேதா தான் என் மனைவி. அதை யாராலும் மாத்த முடியாது. நான் அவளை விரும்புறேன். அவளும் என்னை விரும்புறா. இந்த மாதிரி நேரத்துல விட்டுட்டு போனா, என்னை மாதிரி ஒரு ஈனப் பிறவி இந்த உலகத்துலையே இருக்க முடியாது” என்றான் நந்த குமார். 

“அப்படியாப்பா ரொம்ப சந்தோசம். அப்படியே எங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் விஷத்தை கொடுத்து கொன்னுடு. அப்பறம் உன் இஷ்ட்டப்படி என்ன வேணும்னாலும் பண்ணிக்க. அங்க உங்க அக்காகாரி வேற ஆக்சிடென்ட் ஆகி படுத்திருக்கா. இவளை கூப்பிட அனுப்பின கொடுமைக்கு தான் அவளுக்கு இப்படி ஆகியிருக்கு. ஏற்கனவே நம்ம வீட்டு டிரைவர் போய் சேர்ந்துட்டார். வீட்டுக்குள்ள கால் வைக்கறதுக்கு முன்னமே இவ்வளவு நடந்திடுச்சு. கால் வச்சா இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ?” என்று அவனின் அம்மா பேச ஆரம்பிக்க,

“கொஞ்சம் வாயை மூடுறிங்களா? உங்களுக்கெல்லாம் மனசாட்சின்னு ஒன்னு இருக்கா இல்லையா?இங்க எல்லாரும் என்ன நிலமையில இருக்கோம். நீங்க என்ன பேசிட்டு இருக்கீங்க?” என்று கீர்த்தனா பொறுக்க மாட்டாமல் பேசிவிட்டாள். விஜய்யோ விட்டால் அவர்களை அடித்து துவைத்து விடும் ஆக்ரோஷத்துடன் நின்றிருந்தான்.

“சாரி சிஸ்டர். அவங்க பேசுறதுக்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்.  நாங்களும் இங்க தான் அக்காவை அட்மிட் பண்ணியிருக்குற பக்கம் தான் இருப்போம். எதுன்னாலும் கூப்பிடுங்க..” என்ற நந்தகுமார், அவர்களை இழுத்துக் கொண்டு சென்றான்.

சந்தியாவும் அவள் அம்மாவுடன் வந்து சேர்ந்தாள். ஏற்கனவே கோபத்தில் வந்தவள் அங்கிருந்த அனைவரும் பார்த்து கத்த ஆரம்பித்தாள்.

“என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லனும்னு உங்களுக்கெல்லாம் தோணவே இல்லையா? என் புருஷனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கு. இப்ப வரைக்கும் நீங்க யாரும் சொல்லலை.என்ன நடந்தாலும் இப்படித்தான இருந்திருப்பிங்க?” என்றாள் அழுகையுடன். அவள் கேள்விக்கு ஒருத்தரும் பதில் சொல்லாமல் நிற்க,

“அவருக்கு இப்போ எப்படி இருக்கு?” என்றாள் குரலைத் தணித்து.

“அண்ணாவுக்கு நல்லாயிருக்கு. பார்த்துட்டு இருக்காங்க. அங்க அங்க சின்ன சின்ன அடிதான் அண்ணி” என்றான் சரண். 

பனிரெண்டு மணி நேரங்கள் கடந்திருந்தது. அன்னம், தண்ணி, தூக்கமின்றி அனைவரும் அங்கேயே இருக்க, வேதாவிற்கு ஆப்ரேஷனும் முடிந்திருந்தது. மயக்கத்தில் தான் இருந்தாள்.

“ஆப்ரேஷன் முடிஞ்சது. அவங்க கண் கட்டை அவிழ்க்க பத்து நாள் ஆகும். அதுக்கப்பறம் தான் தெரியும் அவங்களுக்கு பார்வை எப்படி இருக்குன்னு. ஒரு கண்ணோட பார்வை மங்கலாகவும் வாய்ப்பிருக்கு. இல்லை, தெரியாமப் போகவும் வாய்ப்பிருக்கு.கால்ல சின்ன இஞ்சுரி தான். எழுந்து நடக்க ஒரு மாசம் ஆகும்..” என்றார் டாக்டர்.

“வேற எந்த பிரச்சனையும் இல்லையே டாக்டர்” என்றான் சரண்.

“அவங்களுக்கு கண்ல இருந்து மூளைக்கு போற நரம்பு பாதிக்கப்பட்டிருக்கு. கொஞ்ச நாளைக்கு ரொம்ப அதிர்ச்சியான விஷயம் எதையும் சொல்ல வேண்டாம். அவங்க ஹெல்த்க்கு நல்லதில்லை. பிட்ஸ் வரவும் வாய்ப்பிருக்கு. அது இன்னொரு கண்ணோட பார்வையையும் பாதிக்கும்.அவங்களை கொஞ்ச நாளைக்கு நீங்க பார்த்து தான் ஹேண்டில் பண்ணனும்..” என்று கூறி விட்டு சென்றிருந்தார். மனோகரனும் கண் முழித்திருந்தான். காதம்பரியின் நிலை கவலைக்கிடமாக இருந்தது.

அந்த நாள் அவர்களுக்கு இன்னமும் என்னென்ன வைத்திருக்கிறதோ?