நெஞ்சை கொய்தாள் வஞ்சி -18

அத்தியாயம் -18

கனி தன் கணவனுடனே இருக்க போகும் முடிவை எடுத்து விட்டாள், ஆனால் தன் அத்தையிடம் இன்னும் சொல்லியிருக்கவில்லை. கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள மாட்டார் என தெரியும். அவரை சமாளிக்கும் வழியும் இவளுக்கு தெரியவில்லை. ஆகவே தெளிவின்றி  சுற்றிக் கொண்டிருந்தாள்.

மனைவியின் மனம் அறிந்த தர்மாவே அன்னலக்ஷ்மி  பாட்டியிடம் விஷயத்தை சொல்லி விட்டான். அவர் மூலமாக தாமரைக்கும் தெரிந்து போனது. உடனே கனிக்கு அழைத்து கேட்டு விஷயத்தை ஊர்ஜிதம் செய்து கொண்டவர், அவளை திட்ட ஆரம்பித்து விட்டார்.

எதிர்த்து பேசாமல் அனைத்து திட்டுக்களையும்  வாங்கிக் கொண்டாள் கனி. அவளின் அமைதியில் தாமரையும் நிதானமாகி, “நீ கூட இருந்தா அவன் மாறவே மாட்டான்னு உனக்கு தெரியாதாடி, நான் டிக்கெட் போடுறேன், உன்னை அழைச்சிட்டு வர ஆசைத்தம்பிய அனுப்பி வைக்கிறேன், ஒழுங்கா இங்க வந்து சேரு” என்றார்.

“உங்களை மதிக்கலைன்னு மட்டும் நினைச்சிடாதீங்க அத்தை. மாமாவும் ஆசைப்பட்டு ஒன்னும் இங்க இல்லை, நான் கூட இல்லாம ரொம்ப கஷ்ட படுது. நான் அது கூட இருந்தாலும் இல்லைன்னாலும் இதையெல்லாம் விடத்தான் போகுது, எதுக்காக அத்தை நாங்க பிரிஞ்சி இருக்கணும்? அதிக்குட்டிக்கும் அப்பா பக்கத்துல வேணும்ல அத்தை?” என தயக்கம் துறந்து பேசி விட்டாள்.

அவளின் பேச்சை ஏற்றுக் கொள்ளவே இல்லை தாமரை. ஏதேதோ பேசி உன்னை நம்ப வைத்திருக்கிறான் அவன், ஒரு நாள் அழுது கொண்டே என்னிடம் வந்து நிற்பாய், அன்று வைத்துக் கொள்கிறேன் என கோவமாகவே பேச்சை முடித்துக் கொண்டார்.

“உன் அத்தை கோவ படலைன்னாதான் ஆச்சரிய படணும். நான்தான் அம்மாக்கு ஆகாத விரோதி, நீ இல்லை, கொஞ்ச நாள் போனா தானா உன்கிட்ட பேசும்” என மனைவிக்கு ஆறுதல் சொன்னான் தர்மா.

பாட்டியும் “அவ கெடக்குறா விட்டுத் தள்ளு. நீ இன்னொன்னு பெத்துகிட்டா பேரப் புள்ளைய பார்க்கன்னு முத ஆளா வந்து நிப்பா”  என்றார்.

“உனக்கு வேற வேலை இல்லை அப்பத்தா!” என சிடு சிடுத்தாள் கனிஹா.

“ஆமாம் டி, அதுக்குத்தான் ஒன்ன பெத்து போட்டா அதை கவனிக்கிற வேலைய பார்ப்பேன்னு சொல்றேன்” என்றார் பாட்டி.

“அதான் இவன் இருக்கானே, இவனை கவனி” என அதியனை சுட்டிக் காட்டி சொன்னாள்.

“மண்டிக்கா போடும் போதே ஒரு இடத்துல உட்கார மாட்டேங்குறான் இந்தப் பய.  நடக்க ஆரம்பிச்சிட்டா கேட்கவே வேணாம். இவன் வேகத்துக்கு என்னால ஓட முடியுமாடி? கைக்குழந்தையா இருந்தாதான் எனக்கு வசதி” என பாட்டி சொல்ல, ‘இவரை ஒன்றும் கேட்க மாட்டாயா?’ என கணவனை முறைத்தாள் கனி.

“சரி சரி அம்மாச்சி, வேற பேசு, அவ வெட்க படுறா” என்றான் தர்மா.

“எது வெட்க பட்டேனா? ஓடிப் போயிருங்க ரெண்டு பேரும்” என கடிந்தவள் பொய்யான கோவத்தோடு மாடியேறி விட்டாள்.

சிரித்த பாட்டி, “இப்பதான்டா நிம்மதியா இருக்கு. இதை தக்க வச்சுக்க வேண்டியது உன் பொறுப்பு, சொல்லிட்டேன்” என்றார்.

“நீ சும்மா இன்னொன்னு இன்னொன்னுன்னு அவளை வெறுப்பேத்தாத, தானா வர்றப்பதான் எல்லாம். இப்ப மருந்து சாப்பிட்டியா? காலைல சர்க்கரை போட்டு காபி வேணும்னு கேட்டு குடிச்சியாம்? என்ன அம்மாச்சி?” என கடிந்தான் தர்மா.

“இதுக்கு மேல வாயை கட்டி வயித்த கட்டி என்னத்துக்குடா உசுர காபந்து பண்ணனும்? நான் இருக்கையிலேயே மருமக மருமவன் எல்லாம் போய் சேர கடைசியா எம்புள்ளயும் போயிட்டானே! எனக்கும் நேரம் வரப் போவுதுடா” என அங்கலாய்ப்பாக சொன்னார்.

பாட்டியை அதட்டி அவரின் கொள்ளு பேரன் மேல் கவனத்தை திசை திருப்பிய தர்மா, மனைவியை காண சென்றான்.

வெகு நாட்களுக்கு பின் எதையோ வரைந்து கொண்டிருந்தாள் கனி. மெதுவாக நடந்து சென்று அவன் பார்க்க, திரும்பாமலே, “என்ன மாம்ஸ், கேட் வாக்லாம் பண்ற?” எனக் கேட்டாள் அவள்.

பூக்கள் வரைகிறாள் என்பதை கண்டவன், “என்ன கனி… கோச்சுக்கிட்டு வந்தவளை சமாதானம் செய்யலாம்னு வந்தா நல்லாதான் இருக்க நீ?” என்றான்.

“இவங்க என்ன சொல்வாங்க, அவங்க என்ன நினைப்பாங்க, ஐயோ கோச்சுக்கிட்டாங்களேன்னு நிறைய யோசிச்சு யோசிச்சு என் வாழ்க்கைய வாழவே முடியலை. எல்லாத்தையும் மறந்திட்டு ஒரு ஃப்ரெஷ் ஸ்டார்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.

“அப்ப உன்னை கட்டி புடிச்சு முத்தம் வச்செல்லாம் சமாதானம் செய்ய வேணாமா?” என கிண்டலாக கேட்டான்.

வரைவதை தள்ளி வைத்தவள் அவனை தன்னருகில் இழுத்துக் கொண்டாள். என்னவென அவன் பார்க்க, அவன் கிண்டலாக சொன்னதையெல்லாம் அவனுக்கு செய்தாள்.

“கனி…” என தாபமாக அவன் அழைக்க, “மிச்சமெல்லாம் நைட்டுக்கு. போ மாமா” என்றாள்.

“சரி சரி, உடனே விரட்டாத” என்றவன் படுத்துக் கொண்டு அவளையும் தன் மார்பில் போட்டுக் கொண்டான்.

அந்த தருணத்தை உள் வாங்கிக் கொண்டே கண்களை மூடிக் கொண்டாள் கனி. அப்படியே உறங்கியும் விட்டாள். அவனுக்கும் அவளை விலக்க மனமில்லை. மகனை பார்க்க வேண்டுமே என்றெண்ணித்தான் கீழே சென்றான்.

மாலையில் மனைவி மகனோடு கோயிலுக்கு சென்றான். இந்தக் கோயிலுக்குத்தான் மஹாவும் அடிக்கடி வருவாள் என்ற நினைவில் பார்வையை சுழல விட்டாள் கனி.

அவளை உணர்ந்து அவளின் கையை பற்றிக் கொண்டான்.

தன்னைத் தானே கடிவது போல முகத்தை வைத்தவள், “அவ அப்ராட் போயிட்டான்னு சொன்னீல்ல? ஸாரி மாமா… என்னவோ இங்க வரவும் அவ நெனப்பு வந்திடுச்சு” என்றாள்.

அவன் ஏதும் சொல்லாமல் முன்னே நடக்க, “மனசுல தோன்றத எப்பவும் உன்கிட்ட சொல்லித்தானே பழக்கம், இப்படி கேட்கிறேன்னு கோச்சுக்காத மாமா… இந்த இடத்துல உனக்கு வரலையா அவ நெனப்பு?” எனத் தயங்காமல் கேட்டு விட்டாள் கனி.

“அம்னீஷியா வந்தாதான் பழசையெல்லாம் மறக்க முடியும் கனி” என அவன் சொல்ல, அவன் பிடியிலிருந்த தன் கையை விலக்கி அவனது உள்ளங்கையில் கிள்ளினாள்.