“எதுவும் பண்ணாம பார்த்து இருக்கச் சொல்லு. என்ன பண்ணுவேன்னு தெரியாது எனக்கு, முன்ன நடந்ததெல்லாம் அவளுக்கு மறந்து போச்சாமா” என்று அவர் கோபமாய் பேச…
“அவ எதையுமே மறக்கலையே. அது தானுங்களே பிரச்சனை” என்று வாய் வரை வார்த்தைகள் வந்த போதும் அமைதியாய் நின்றான்
“பெரியவர் நாளைக்கு வந்துடுவார்றா காசிலயிருந்து, வந்து இதெல்லாம் தெரிஞ்சா ரொம்ப கலவரமாகிடும்டா, பார்த்துக்கோ” என்றார் கண்டிப்பாக.
தமிழ் செல்வனுக்கு என்னவோ இந்த தீ பற்றியது மிகவும் கெட்ட சகுனமாகப்பட்டது.
பின் தீ சற்று மட்டுப் பட்டதும் “பெட்ரோல் டாங்க் லீக் ஆகி பத்திக்கிச்சு. மத்த வண்டியேல்லாம் கவனமா பார்த்துக்கோங்க” என்று அவனாய் ஒரு காரணம் சொல்லி ஆட்களை களைந்து போக வைத்தவன், அவனின் வீட்டினுள் விரைந்தான்.
அதனைப் பார்த்த ராஜ் “என்னைக் கூட்டிட்டுப் போயிருந்தா ஆகுமா? இப்போ பைக் எரிஞ்சு போச்சு எதுல கத்துக் குடுப்பார்” என்றான் நக்கலாய்.
கேசவ நாராயணனுக்கு மகனின் அறிவை நினைத்து எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாமா என்று இருந்தது.
ஒரு வேலை அவள் தான் செய்திருந்தாள் என்றால் இன்னும் சற்று நேரத்தில் புது பைக் வந்து வாயிலில் நிற்கும்.
மக்களிடம் தனியாக பேச வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டார்.
அவளின்னும் மாடியில் இருக்க, வேகமாக அவளின் முன் சென்று நின்றவன், “என்ன கண்ணு இப்படி பண்ற?” என்றான் கோபமாக.
பதில் பேசாது பார்த்து நின்றாள்.
“சரி கிடையாது, அதுவும் எரிக்கிறது எல்லாம் என்ன வேலை? அது பொருள்னாலும் வாழற வீட்ல இப்படி செய்யறது சரி கிடையாது” என்று அவனாய் கண்டிப்பது போல கண்டித்தான்.
மறந்தும் கேசவ நாராயணனின் பெயரை எடுக்கவில்லை. எடுத்தால், இன்னும் விளைவுகள் அதிகமாய் இருக்கும் என்று தெரியும்.
“ஏங்கண்ணு?” என்றான் சோர்வாக.
எதற்குமே பதில் பேசவில்லை.
“அவன் ஏதோ சின்ன பையன் விவரம் புரியாம பேசறான், அதுக்காக பைக்கை எரிப்பியா?”
“நான் கூட சின்ன பொண்ணு தான் அப்போ அவனை விட, ஆனா நான் விவரம் புரியாம பண்ணினேன்னு யாரும் நினைக்கலையே?”
“கண்ணு” என்று பெரிதாக அதட்டலிட்டவன்…
“பழசை மற, அதை நினைவு வெச்சா யாருக்கும் எதுவுமில்லை, நமக்கு தான் மனக் கஷ்டம் புரிஞ்சிக்கோ” என்று சொல்ல…
‘அவ்வளவு நல்லவனா நீ’ என்ற பார்வை பார்த்தவள்… “எனக்கு இந்த மனக் கஷ்டம் பிடிச்சிருக்கு” என்றாள்.
“பைத்தியாமா நீ” என்று அவளை முறைத்தான்.
“யார் என்னை எப்படி பார்க்கறாங்களோ அப்படித் தான் நான்” என்றாள் அலட்சியமாய்.
அவன் ஒரு இயலாமையோடு பார்த்து நின்றான்.
“மதியம் போல ஒரு புது பைக் வந்துடும். அதுல கத்துக் குடுத்தா போதும்” என்று சொல்லி எதுவுமே நடக்காதது போல கீழே சென்றுவிட்டாள்.
மதியத்திற்கு பிரியாணி செய்ய நின்று கொண்டவள் மகன்களை அழைத்து, தனக்கு தெரியாமல் எதிர் வீடு செல்லவே கூடாது என்று எச்சரிக்கை செய்தாள்.
மகன்களுக்கு என்ன நடந்தது என்று கூடத் தெரியாது, இதில் அம்மா எதுவும் செய்திருப்பார் என்று எப்படி தெரியும்?
“மா, என்ன நடந்தது? அங்கே தீ பிடிச்சு, ஒரே புகையாய் இருந்தது. மேல இருந்து பார்த்திருப்பீங்கள்ள? அப்பா அங்கே போனார் இல்லையா அது தான் போனோம்”
“அப்பா அவரைப் பார்த்துக்குவார். என்னவோ நடக்கட்டும் நமக்கு என்ன? போங்க போய்ப் படிக்கற வேலையை பாருங்க” என்றவள் ஸ்டடி டேபிள் முன் அமர்ந்திருந்த மகளிடம் சென்றாள்.
“மா, நீங்க சொன்ன மாதிரி எல்லாம் கலர் பண்ணிட்டேன்” என்று மகள் அவளிடம் கொடுத்திருந்த டிராயிங் புக் காண்பித்தாள்.
“குட் கேர்ள், அம்மா சமையல் முடிக்கற வரை கார்ட்டூன் பாருங்க” என்று ‘டேப்’ பில் கார்டூன் போட்டு ஹெட் போன் மாட்டி விட…
அப்போது வேகமாய் வந்த வேலை செய்யும் பெண்மணி “அம்மணி அமைச்சர் ஊட்ல பைக் க்கு எரிஞ்சு போச்சாம். அதும் நம்ம அய்யா ஓட்டுற பைக்காம்” என்று பதைத்து சொன்னார்.
அவளுக்கு எதுவுமே தெரியாதது போல “எப்படி எரிஞ்சிச்சாம்” என்று அவருடன் அரட்டை அடித்துக் கொண்டே பிரியாணி செய்ய ஆரம்பித்தாள்.
தமிழ்செல்வனோ மிகுந்த யோசனையிலிருந்தான். மங்கம்மா என்ற ஒருவர் மட்டுமே அவளை அன்பால் அடக்கும் வழி தெரிந்தவர். அவர் இறந்ததும் அவரின் இறப்பின் இழப்பு, ஸ்ராவணி பிறந்து ஒரு வருடமே ஆகியிருக்க, மகளின் பால் அவள் கொண்டிருந்த அன்பு, அதனால் அவளுடனே பெரும்பான்மையான நேரம் சென்று விட… எதையுமே கவனிக்கவில்லை.
இதோ இப்போது சுற்றத்தை கவனித்து பார்க்க, சிறு வார்த்தையும் அவளை அதீதமாய் செயல் பட வைக்கிறது.
மனதில் ஒரு .பயம் வந்தது எப்படி இவளை கையாளப் போகிறோம் என்று.
ஒன்று மட்டும் புரிந்தது, இவள் வேண்டுமென்றே செய்கிறாள் என்று.
நாளை பெரியவர் வந்து விடுவார், எப்படியும் அவரின் காதுகளுக்கு விஷயம் சென்று விடுவது திண்ணம்.
இவளுக்கு எப்படி அங்கே நடப்பது காதுகளுக்கு வந்து விடுமோ அப்படி அவருக்கும் அவரில்லாத போது நடப்பதும் அவருக்கு சென்று விடும்.
நடந்தது நிச்சயம் தெரிய வரும், ஆனால் இவள் என்பது தெரிவதற்கு வாய்ப்புகள் குறைவு பார்ப்போம். எது வந்தாலும் பார்த்து தானே ஆகவேண்டும்.
மனதை பிசைந்தது.
மெதுவாக கீழிறங்கினான்.
மக்கள் அவரவர் வேலையில் இருக்க, சமையலறையில் அவள் மட்டுமே.
உள்ளே சென்றான், நிலா திரும்பி பார்க்கவும், திரும்பவும் ஒரு முயற்சியாக, “சரி கிடையாதுங்க கண்ணு இது” என்றான் அவளை நேராய் பார்த்து.
பார்வையில் அவ்வளவு அலட்சியம் கொண்டு பார்த்து நின்றாள்.
“பிரச்னையை கிளப்பலாம்னு முடிவோட இருக்கீங்க போல”
நிலா அவனுக்கு பதில் சொல்லாது பார்த்து நிற்க…
“நம்ம மனசு அமைதிதாங்க போகும், நடந்ததை நினைச்சு இருக்குறதை தொலைக்கறீங்க. இருக்குறது ஒரு வாழ்க்கை. அதை வாழ்ந்து பாருங்க” என்றான் அக்கறையாக.
அவனை தீவிரமாக பார்த்து நின்றாள், அதுவே சொன்னது செய்ய மாட்டேன் என்று.
“எதுக்கு கண்ணு இவ்வளவு பிடிவாதம்” என்றான் நிராசையாக.
“வாழ்ந்து பார்க்கறதுன்னா என்ன? எனக்குப் புரியலை, இப்போவே வாழ்ந்துட்டு தானே இருக்கேன், இன்னும் என்ன வாழணும்?”
இப்படி பேசுபவளிடம் என்ன சொல்லுவான்?
அவன் நிராசையாய் பார்த்து நிற்க…
“உங்களுக்கு எங்களோட இருக்க விருப்பமில்லைன்னா எப்போனாலும் கிளம்பலாம். உங்களுக்கு வாழ்க்கை அமைச்சுக்கலாம்” என்றாள் நிஷ்டூரமாய்.
“ஏய் பைத்தியமாடி நீ. நான் என்ன பேசறேன், நீ என்ன சொல்ற! எனக்கு வாழ்க்கை உன்னோட மட்டும் தான். என்னோட உயிர் இருக்குறவரை! போவேன்னு மட்டும் நினைக்காத” என்று அவனையும் மீறி கத்தியவன், பிள்ளைகளின் காதில் விழுந்துவிட்டால் என்ன செய்வது என்று அமைதியாக விலகி வெளியே வந்தான்.
உண்மையில் பிரச்சனை செய்வது மட்டுமே தற்போதைய அவளின் எண்ணமாய் இருந்தது. எதையும் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.
கோபத்தை கட்டுப்படுத்தி சோபாவில் அமர்ந்து தலையை சாய்த்து கண்களை மூடி கொண்டான், கைகளையும் கட்டிக் கொண்டான்.
வாழ்க்கை சில கடினமான காலங்களை மீண்டும் காண்பிக்க இருக்கிறது என்று புரிந்தது.
மெதுவாக கண் திறந்து பார்க்க, எந்த பிரதிபளிப்புமின்றி சமையலில் ஆழ்ந்திருந்தாள்.
நீங்காத பாரம் என் நெஞ்சோடுதான்… நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா…